|
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன் |
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன் எழுத்துப் பயணம்: திருமதி கலையரசி பாண்டியன் அவர்கள் பிறந்த ஊர் காரைக்கால் ஆகும். தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார். தன்னுடைய 5ம் வகுப்பில் ‘கருப்புக் கண்ணாடி’ என்ற புத்தகத்தைப் படித்தார். அதன் பிறகு பரமார்த்த குரு கதைகள், தெனாலிராமன் கதைகள், நீதிக் கதைகள், கல்கி, சாண்டில்யன் ஆகியோர் எழுதிய கதைகள் போன்றவற்றைப் படித்துள்ளார். தன்னுடைய தம்பி நடத்திய ‘முத்துச் சிப்பி’ என்ற கையெழுத்துப் பிரதியில் விளையாட்டாக எழுதிய மர்மக்கதை வரவேற்பைப் பெறவே, தன்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை இவருக்குள் பிறந்ததாகக் குறிப்பிடுகிறார். பிறகு வாழ்க்கையின் கால சக்கரத்திற்குள் நுழைந்த இவர் கதைகள் எழுதுவதிலிருந்து சற்று தூரமானார். இணையத்தில் எழுதுதல்: திருமணமான பின்பு தன்னுடைய குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் மீண்டும் கதைகளை எழுதத் தொடங்கினார். ஆனால் அப்போது கணினி வசதி இல்லாததால் அவற்றைப் பதிவேற்றாமல் விட்டுவிட்டார். 2008ம் ஆண்டுக்கு பிறகே கணினி, இணையம் குறித்த பரிச்சயம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘நிலாச்சாரல்’ என்ற இணையதளத்தில் தொடர்ச்சியாக எழுதத் தொடங்கினார். அதில் நல்ல வரவேற்பு இருந்ததைத் தொடர்ந்து ‘தமிழ் மன்றம்’ என்ற இணையதளத்தில் எழுதத் தொடங்கினார். மேலும் ஐரோப்பா சென்று வந்த இவர் தன்னுடைய அனுபவத்தை ஒரு பயணக் கட்டுரையாக எழுதினார். ‘புதிய வேர்கள்’ என்ற நூல் வெளியிட்டார். பிறகு பேரக் குழந்தைகளுக்காக மீண்டும் எழுதத் தொடங்கினார். சிறுவர் இலக்கிய எழுத்தாளர்: அண்ணா நினைவு சிறார் சிறுகதைப் போட்டியில் தன்னுடைய கதைகளை எல்லாம் தொகுத்து ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற மின்னூலாக வெளியிட்டார். இதில் சிறுவர் இலக்கியம் எழுதுவதற்காக ஒரு குழு தொடங்கப்பட்டது. இந்த குழுவின் பயனாக ‘பூஞ்சிட்டு’ என்ற மின்னிதழ் சிறுவர்களுக்காகத் தொடங்கப்பட்டது. தற்போது அதன் ஆசிரியராகத் திகழும் இவர் குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் வரும் வகையில் எழுதி வருகிறார். ‘பறவை கூர் நோக்கல்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பறவையினைக் குறித்து, சிறுவர்களுக்கேற்ற முறையில் எழுதி வருகிறார். பெற்றோர்களின் பங்கு: பெற்றோர்கள் முதலில் வாசிக்க வேண்டும். பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் தானாக வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்வர். புத்தகங்களுக்காகச் செலவு செய்வதை ‘செலவு’ என நினைக்கக் கூடாது. குழந்தைகளின் பாடப் புத்தகங்களைத் தவிர்த்து, கதை புத்தகங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் பார்க்கும் இடங்களெல்லாம் புத்தகங்களால் நிரம்பியிருக்க வேண்டும். சிறுவயது வாசிப்பு தான் பிற்காலத்தில் குழந்தைகளை மனிதத் தன்மையுடன் மெருகேற்றும். குழந்தைகளைப் பன்முகத் திறமை கொண்டவர்களாக, இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதல் கொண்டவர்களாக மாற்றும். எனவே குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். சவால்களாக இருக்கும் பாடல்கள்: சிறுவர் இலக்கியம் என்று எடுத்துக் கொள்ளும் போது, சிறுவர் இலக்கிய கதைகளை எழுதுவோர் அதிகம் இருக்கின்றனர். புதிதாகச் சிறுவர் இலக்கியத்திற்குள் வருவோரும் கதைகளையே எழுதுகின்றனர். சிறுவர்களுக்கான பாடல்கள் என்பது மிகக் குறைவாகவேக் காணப்படுகிறது. அந்த காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களே இன்றும் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகின்றது. மிக எளிமையான சொற்களைப் பயன்படுத்தி, ஓசை நயத்துடன் குழந்தைகளுக்கான பாடல்கள் இயற்ற வேண்டும் என்பதால் சிறுவர் இலக்கிய பாடல்கள் சவால்கள் நிறைந்ததாகக் காணப்படுகின்றன. ஆனால் சிறுவர்களுக்கான பாடல்களையும் இயற்ற எழுத்தாளர்கள் முன்வர வேண்டும் என்று திருமதி கலையரசி பாண்டியன் கேட்டுக் கொண்டார். சிறுவர் இலக்கிய பெண் எழுத்தாளர்கள்: சிறுவர் இலக்கிய பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவாகவேக் காணப்படுகின்றனர். இரண்டு தலைமுறைகளாகத் தான் பெண்களுக்குக் கல்வி கிடைத்திருக்கிறது. பெண்களுக்கு எழுதுவதற்கான சுதந்திரம் இருந்தாலும் நேரம் கிடைப்பதில்லை. பெண்களுக்கான பணிச்சுமை அதிகம். ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு கிடையாது. பெண்கள் எழுத வேண்டுமென்றால் குடும்பத்தின் அனுமதியைப் பெற வேண்டும். வளமான பொருளாதாரத்தைப் பெற்றுத் தந்தால் மட்டுமே பெண்கள் எழுதுவதற்கு குடும்பத்தில் அனுமதி கிடைக்கும். குடும்ப ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பெண்களால் எழுத முடியும். இவற்றையெல்லாம் மீறி எழுத வரும் பெண் எழுத்தாளர்கள் கூட தங்களுடைய கோபத்தையும், ஆற்றாமையையும் மட்டுமே எழுத விழைகின்றனர். குழந்தைகளுடன் அதிகம் நேரம் செலவிடுவது பெண்கள் தான் என்பதால் இனி வரும் காலங்களில் சிறார் இலக்கியம் எழுத அதிகம் பெண்கள் முன்வருவார்கள் என்று நம்புவதாகத் திருமதி கலையரசி பாண்டியன் அவர்கள் கூறினார். நிரப்பப்படாத பக்கங்கள்: சிறார் இலக்கியத்தைப் பொருத்தவரை அறிவியல் சிந்தனைகளும், இயற்கைக் குறித்த தகவல்களும் அதிகமாக வெளிவர வேண்டும் என்று கலையரசி பாண்டியன் அவர்கள் கூறினார். சிறுவயதில் விதைக்கும் விதையே பிற்காலத்தில் பூமியைப் பாதுகாப்பவர்களாக அவர்களை வளர்க்கும். எனவே சிறுவர் இலக்கியத்தில் கதைகள் மட்டுமல்லாது, பாடல்கள், அறிவியல் செய்திகள், இயற்கை குறித்த செய்திகளும் வெளிவர வேண்டும். காலத்திற்கு ஏற்ப கதைகள்: நடைமுறை காலத்திற்கு ஏற்ப கதைகளானது கட்டமைக்கப்பட வேண்டும். குழந்தைகளின் போக்கிற்குத் தான் நாம் போக வேண்டும். மற்ற மொழியைப் பார்த்து நம்மொழியை இன்னும் மெருகேற்ற வேண்டும். வெளிநாட்டில் குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க ‘சான்றிதழ் வழங்குதல்’ போன்ற பல செயல்களைச் செய்கின்றனர். நாமும் நம்மால் முடிந்த அளவு எந்தெந்த வகையில் குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க முடியுமோ அந்த அளவிற்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இலாபத்தைப் பார்க்காமல் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும். கூட்டு முயற்சியால் மட்டுமே குழந்தைகளிடையே வாசிப்பைக் கொண்டு வர முடியம். எனவே அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். |
||||||||
by Lakshmi G on 08 Sep 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|