|
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் |
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அறிமுகம்: எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் அவர்களின் சொந்த ஊர் கும்பகோணம் அருகிலுள்ள விஷ்ணுபுரம் ஆகும். தொடக்கத்தில் கவிதைகள் எழுதிய இவர் சிறிது சிறிதாகக் குழந்தைகள் இலக்கியங்களை நோக்கி நகர்ந்தார். சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதில் அலாதியான ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். அந்த வாசிப்பு பழக்கமே எழுதுவதற்கு அவரைத் தூண்டியதாகக் குறிப்பிடுகிறார். குழந்தைகளுக்கான துவக்கப்பணிகள்: திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் மற்றும் அவர்கள் கொண்ட குழு முதலில் தங்கள் ஊரில் இருக்கும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்காகப் பிரபல எழுத்தாளர்களை வரவைப்பது, காகிதங்களில் கலைநயம் செய்யும் கலைஞர்களை வரவைப்பது, நாடகப்பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் இவர் அழைத்ததன் பேரில் திரு. வேலு சரவணன் அவர்கள் அப்பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு நாடகப்பயிற்சி அளித்தார். அதன் மூலம் கதையை எப்படி நாடகமாக மாற்றுவது எனக் கற்றுக் கொண்டார் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள். இவர் முதன்முதலில் எழுதிய கதையை எழுத்தாளர் யூமாவாசுகி அவர்கள் தான் பணிபுரிந்த இதழில் அப்படியே பிரசுரித்தார். இதுவே குழந்தைகளுக்கான தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை இவருக்கு விதைத்ததாகக் குறிப்பிடுகிறார். குழந்தைகளிடம் நேரடியாகச் சொல்லும் கதைகள்: குழந்தைகளுக்கு முதலில் கதை சொல்பவராகவே திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் விளங்கியுள்ளார். கதை கேட்கும் குழந்தைகளின் ஆர்வத்தையும், கதையும் பல சைகைகளுடன் சொல்லும் போது குழந்தைகள் மேற்கொள்கின்ற ஈடுபாட்டையும் நேரடியாகக் கண்டிருக்கிறார். இதனால் தானும் குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என்ற எண்ணம் பிறந்ததாகக் குறிப்பிடுகிறார். அவ்வகையில் எந்த ஒரு கதை எழுதினாலும் அதை முதலில் குழந்தைகளிடம் சொல்லி அவர்களின் பிரதிபலிப்பு எவ்வாறு உள்ளது எனக் கண்டுகொண்டே பிரசுரத்திற்கு அனுப்புகிறார். குழந்தைகளிடம் கதைகளை வாசிக்கச் சொல்லும் போது, அவர்கள் எந்த இடத்தில் தடுமாறுகிறார்கள், எந்த இடத்தில் சிரிக்கிறார்கள் போன்றவற்றை இவர் உட்கொள்கிறார். இதனால் குழந்தைகளின் ஏக்கம் எதில் உள்ளது என்பதைக் கண்டறிய முடிகிறது எனக் கூறுகிறார். குழந்தைகளிடம் நேரடியாகக் கதை சொல்லும் வசதி போன தலைமுறை எழுத்தாளர்களுக்கு இல்லை. இந்த தலைமுறை எழுத்தாளர்கள் அதைப் பெற்றுள்ளனர். எனவே அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கூறுகிறார். மேலும் குழந்தைகளிடம் நேரடியாகக் கதை சொல்லும் போது ஒரு புது விதமான ஆற்றல் தனக்குக் கிடைப்பதாகவும் கூறுகிறார். குழந்தைகளிடம் நாமும் அதிகம் கற்றுக்கொள்ளலாம் என்றும் கூறுகிறார். குழந்தை எழுத்தாளர்கள் கவனத்திற்கு.. குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என நினைத்தால் முதலில் நீதிக்கதைகளை எழுத வேண்டும் எனப் பல எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள். தமிழில் குறிப்பிடத்தகுந்த 50 நீதிகள் உள்ளன. குழந்தை எழுத்தாளர்கள் இந்த 50 நீதிகளில் ஒவ்வொரு கதையாக எழுதி, மீண்டும் மீண்டும் இந்த நீதிகளில் கதை எழுதுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் இதைத் தொடர்ந்து படிக்கும் குழந்தைகள் ஒரு கதையைப் படிக்கத் தொடங்கிய 10 வரிகளில் அதன் முடிவு என்னவென்பதை கூறி விடுகின்றனர். இது அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. எனவே குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் நீதியை வைத்துக்கொண்டு பின் அதை உணர்த்துவதற்காகக் கதையை உருவாக்கக் கூடாது. எழுதுகின்ற கதையில் நீதி வரலாம். ஆனால் நீதிக்காக மட்டுமே கதையை எழுதக் கூடாது. முதலில் குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தைத் தூண்ட வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஆர்வமுள்ள கதைகளை எழுத வேண்டும். கதைகளை வாசிப்பதன் மூலம் குழந்தைகள் சந்தோஷத்தைப் பெற வேண்டும். அந்த சந்தோஷம் அவர்களை ‘வாசிப்பு’ நோக்கி நகர்த்த வேண்டும் என்கிறார். ஒரு சாதாரண எழுத்தாளர் தன்னுடைய வாசகர்களை மனதில் வைத்துக் கொண்டு எழுத வேண்டிய அவசியமில்லை. ஆனால் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் குழந்தைகளை மனதில் கொண்டு எழுத வேண்டும். எந்த வயது குழந்தைகளுக்கு எழுதுகிறோம், அவர்களின் வார்த்தை வங்கியில் நாம் எழுதும் கதை அடங்குமா என்பனவற்றை யோசித்து எழுத வேண்டும் என்கிறார் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள். பெற்றோர்களின் கவனத்திற்கு: பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் நீதியை மட்டுமே வலியுறுத்தக் கூடிய புத்தகங்களை வாங்கிக் கொடுக்கக் கூடாது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் குழந்தைகளின் நல்லதுக்காகவே எழுதுகின்றனர். எனவே குழந்தைகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும் வண்ணம் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் வாசிப்பு பழக்கத்தில் குழந்தைகள் வசப்படுவர். எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை முதலில் தூண்ட வேண்டும் என்கிறார். படைப்புகள்: வித்தைக்காரச் சிறுமி, குறுங்கதைகள், வாத்து ராஜா, ஒற்றைச்சிறகு ஓவியா போன்ற கதைகள் மற்றும் புதினங்களை இயற்றியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் விருது, விகடன் விருது, வாசகர் சாலை விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இளையோர்களுக்கான நூல்கள்: 16 வயது முதல் 19 வயது வரை உள்ள இளையோர்களுக்கான புத்தகங்கள் இந்திய அளவிலேயே மிகக் குறைவுதான். எனவே அவர்களுக்கான நூல்கள் எழுதப்பட வேண்டும் எனத் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் கேட்டுக்கொண்டார். |
||||||||
by Lakshmi G on 25 Nov 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|