|
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி |
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி இளமைப் பருவம்: திரு. யெஸ். பாலபாரதி அவர்களுக்குச் சிறுவயதில் திக்குவாய் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதனால் பிற மாணவர்கள் கேலி செய்யத் தனிமையை நோக்கித் தான் ஓடியதாகக் குறிப்பிடுகிறார். அவ்வாறு தனிமையில் இருக்கும் போது இவருக்குத் துணை நின்றவை புத்தகங்களே ஆகும். தன்னை கேலி செய்யாத, தனக்குத் துணையாக இருக்கின்ற புத்தகங்கள் இவருக்கு இனிமையைத் தந்தது. எனவே புத்தகங்களுடன் பயணிக்கத் தொடங்கினார். வீட்டில் பெற்றோர் கொடுக்கும் காலணா, அரையணா போன்ற பணத்தைச் சேர்த்து வைத்து சிறுவர் இதழ்கள் வாங்கும் பழக்கம் இவரிடம் இருந்தது. கல்கி கோபால கிருஷ்ணனின் கதைகள், வாண்டு மாமா கதைகள், தம்பி சீனிவாசன் கதைகள் போன்றவை இவருக்கு என்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவன என்று கூறுகிறார். மாற்றுத் திறனாளிகளுடன் கொண்ட உறவு: திரு. யெஸ். பாலபாரதி அவர்களுக்குச் சிறு வயதிலேயே மாற்றுத்திறனாளி நண்பன் ஒருவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஊரில் உள்ள அனைவரும் அந்த நபரைக் கிண்டல் செய்யும் போது, இவர் மட்டும் அவரின்மேல் அன்பு கொண்டார். ஒரு குறையைச் சொல்லிக் காயப்படுத்தும் போது அது எந்த அளவிற்கு வலியை ஏற்படுத்தும் என்றும் உணர்ந்திருந்தார். அது மட்டுமில்லாமல் திரு. யெஸ் பாலபாரதி அவர்கள் ஊடகத்துறைக்கு வந்த பிறகு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. மேலும் இவருக்குப் பிறந்த குழந்தை ஆட்டிசம் உள்ள குழந்தை என்பதால் சிறப்புக்குழந்தைகள் மேல் முழுவதுமாக கவனம் திரும்பியது என்கிறார். ஆட்டிசக் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு அக்குழந்தைகளை எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரையும் கூறி வருகிறார். விழிப்புணர்வு: ஆட்டிசக் குறைபாடு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாகவேக் காணப்படுகிறது. விழிப்புணர்வு என்பது எப்போதுமே அரசுக்கு வேண்டும். அரசு தான் மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளைச் சார்ந்தும் அவர்களது உரிமைகளைச் சார்ந்தும் முதலில் அரசே வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அதை உணர்ந்து கடைப்பிடிப்பார்கள். மரப்பாச்சி சொன்ன இரகசியம்: திரு. யெஸ் பாலபாரதி அவர்கள் ஊடகத்துறையில் பணியாற்றுவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் வன்முறை பற்றி அவருக்கு அதிகம் தெரியும். எனவே குழந்தைகளிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவரால் எழுதப்பட்டதே ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ ஆகும். புனைவு இலக்கியமாகச் சொல்ல வேண்டும் என்று இதை எழுதினார். இந்தக் கதையில் வரும் மரப்பாச்சியானது பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்றத் தொடுதல் ஆகியவற்றைக் குறித்து குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் கூறுகிறது. எனவே குழந்தைகளிடையே மட்டுமில்லாமல், பெற்றோர்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பெற்றோரின் பங்கு: தற்போது வளரும் இளைய தலைமுறையை வாசிப்பு இல்லாத ஒரு தலைமுறையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் குழந்தைகள் நேரடியாகக் கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கும் நிலை இருந்தது. இந்தக் காலத்தில் அப்படி இல்லை. குழந்தைகள் கடைக்குச் செல்லப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. பெற்றோர் தான் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற சூழல் இன்று காணப்படுகிறது. புத்தகக் கண்காட்சிக்கு வரும் 60 சதவீத பெற்றோர் குழந்தைகளுக்கு அவர்கள் கேட்கும் கதை புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது இல்லை. அவர்கள் பயிலும் பாடத்திற்குத் தொடர்பான புத்தகங்களையே வாங்கிக் கொடுக்கின்றனர். குழந்தைகளுக்கு நீதியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உள்ளது. கதைகளும் அவற்றைக் கற்றுக் கொடுக்கின்றன. நலிந்தோருக்கு உதவ வேண்டும், நேரடியாகச் சென்று உதவ வேண்டும், சட்டங்களை மதிக்க வேண்டும், தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும், ஒருவரின் குறையை வைத்து கேலி செய்யக் கூடாது போன்ற விழுமியங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே ‘ரோல் மாடல்’. எனவே பெற்றோர்கள் முதலில் நீதியின் வழி நடக்க வேண்டும். பெற்றோரைப் பார்த்து வளரும் குழந்தைகள் தானாகப் பழகிவிடுவர். சூழல் மட்டுமே ஒருவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் அடையாளப்படுத்துகிறது. இதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. சிறுசிறு கதைகளின் வழி குழந்தைகள் பெறக்கூடிய அனுபவங்களே அவர்களைக் கட்டமைக்கின்றன. எனவே பெற்றோர் புத்தகங்களுக்காகச் செலவிடுவதை ‘உபயோகமற்றது’ என நினைக்கக் கூடாது. எந்த எழுத்தாளனின் புத்தகங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கிறதோ, அந்த எழுத்தாளனின் மற்ற புத்தகங்களையும் அக்குழந்தைக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். பதின்ம வயதுக் குழந்தைகளுக்குத் துப்பறியும் நாவல்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கலாம். காலம் நடந்து நிற்கும் எழுத்தாளன்: இன்றைய சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் முதலில் பெற்றோரை திருப்திப்படுத்த வேண்டிய நிலை இன்று காணப்படுகிறது. பெற்றோரை திருப்திப்படுத்தினால் மட்டுமே அதைக் குழந்தைகளிடம் படிக்கக் கொடுக்கின்றனர். எனவே இன்றைய எழுத்தாளர்கள் பெற்றோர்களையும் கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இன்று ஒரு சிறுகதையைப் படிக்கும் குழந்தை 20 ஆண்டுகள் கழித்தும் அக்கதையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு சிந்தித்தால் அதுவே அந்த எழுத்தாளனின் வெற்றி ஆகும். காலம் கடந்தும் ஒரு எழுத்தாளனின் படைப்புகள் நிற்க வேண்டும். அவ்வாறு படைக்க வேண்டும். |
||||||||
by Lakshmi G on 26 Aug 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|