|
||||||||||||||||||
குளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி |
||||||||||||||||||
![]() "தமிழில் உரைநடை நூல்கள் இல்லை எனும் குறையை நீக்கும் நோக்கத்துடனும், நீதி நூல், பெண்மதி மாலை, சமரசக் கீர்த்தனம் என ஏற்கெனவே வெளிவந்துள்ள எனது நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறநெறிக் கொள்கைகளுக்கு உதாரணங்களைக் காட்டவும் இந்த நவீனத்தை எழுதினேன்" என்ற முன்னுரையுடன் தமிழின் முதல் புதினத்தை (நாவல்) எழுதிய பெருமை ‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ அவர்களையேச் சாரும். அவர் 1826ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திருச்சி குளத்தூரில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மேரி அம்மையார். அவர் தனது தொடக்கக் கல்வியைத் தந்தை சவரி முத்துப்பிள்ளையிடமும், தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையைத் தியாகராச பிள்ளையிடமும் பெற்றார். படித்து முடித்து நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வந்தார். பிறகு சுமார் 13 ஆண்டு காலம் தரங்கம்பாடி நகராட்சி அதிகாரியாகப் பணியாற்றியதால் இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.. நீதிமன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த பெருமையும் இவரையே சேரும். கி பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து 'சித்தாந்த சங்கிரகம்' என்ற நூலாக 1862ல் வெளியிட்டார். பிறகு 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். சட்ட நுணுக்கங்களைப் பற்றித் தமிழிலே வெளிவந்த ஆதி நூல்கள் இவை. இப்படிப்பட்ட சட்ட நூல்கள் அதற்கு முன்பு வெளிவந்ததுமில்லை; அதற்குப் பிறகு வெளிவரவுமில்லை. இவருடைய " பிரதாப முதலியார் சரித்திரம்" என்பதே தமிழின் முதல் நாவல் ஆகும். அது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவனைக் கதாநாயகனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவல் இன்றும் எவ்விதத் தங்குதடையில்லாமல் வாசிக்கக் கூடியதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது என்பதே இந்த நாவலுக்குக் கிடைத்த வெற்றி. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும்போதும் நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற அனுபவத்தை படிப்பது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டே இருக்கும் . அதுபோலத் தமிழின் உரைநடை, தமிழில் எழுதிவந்த எழுத்தாளர்களால் எத்தனைத் தூரம் மாறியுள்ளது, மேன்மை பெற்றுள்ளது என்பதை அறியவும், புனைவு என்பது யதார்த்தத்தின் அடுக்குகளில் இருப்பதுதானன்றி வேறில்லை என்கிற எண்ணம் கொண்ட இக்கால எழுத்துக்கும், புனைவு என்பது முழுக்க புனைவே என்கிற அக்கால எழுத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றி ஆலோசிக்கவும் பிரதாப முதலியார் சரித்திரம் ஓர் ஆவணமாகிறது.இதில் அறநெறி தொடர்பான கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. சிறந்த வீணை இசைக் கலைஞரான பிள்ளை அவர்கள் 16 புத்தகங்களை எழுதியிருக்கிறார். வெண்மதி மாலை, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி, சர்வ சமயக் கீர்த்தனை, சுகுணசுந்தரி, சத்திய வேத கீர்த்தனை, பொம்மைக் கல்யாணம், பெரியநாயகியம்மன் போன்ற நூல்கள், நாவல்கள், கீர்த்தனைகள் மற்றும் பல தனிப்பாடல்களை எழுதித் தமிழின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். 19ஆம் நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளராக வலம் வந்திருக்கிறார்.இறுதியாக 1889ம் ஆண்டு சுகுண சுந்திரி என்ற புதினத்தையும் எழுதியிருக்கிறார். அந்த ஆண்டே ஜூலை மாதம் 21ஆம் தேதி இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் அவர் வடித்த புத்தகத்தால் நம் அகத்தில் என்றும் நிலைத்திருப்பார். |
||||||||||||||||||
by Swathi on 06 Nov 2019 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|