LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

மதுரைக் காஞ்சி - ஒரு பண்பாட்டுக் கருவூலம் - சு.வேணுகோபால் !

சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான மதுரைக் காஞ்சி தனித்த சிறப்புடையது. மதுரைக் காஞ்சியைப் போன்று மற்ற எந்த சங்க இலக்கிய நூற்களும் வரலாற்று நூலாக அமைய வில்லை. எந்தவிதப் புனைவும் இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் சாராம்சத்தைச் சொன்ன முதல் நூல் மதுரைக்காஞ்சிதான்.

 

இந்த நூலுக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று நம்பகத் தன்மைக்கு இலக்கியச் சான்றாதாரங்கள் இருக்கின்றன. மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன். தலையாலங்கானம் திருவாதவூருக்கு அருகில் இருக்கிறது. சேர, சோழரோடு ஐம்பெரும் குறுநில வேளிரையும் சேர்த்து வென்றதாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.

 

பாண்டிய நெடுஞ்செழியனே வஞ்சினம் கொண்டு தலை யாலங்கானத்தை வெல்வேன் என்று பாடிய புறநானூற்றுப்பாடல் இருக்கிறது. இவன் பாடிய ஒரே பாடல் இதுதான். அக்காலத்தில் பெரும்புலவராக விளங்கிய மாங்குடி மருதனாரைச் சாட்சிக்கு வைத்திருக்கிறான் பாண்டியன்; மட்டுமல்லாது மாங்குடியாரை 'அரசவைப் புலவர்” எனத் தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகக் குறிப்பிடப்படுவதையும் அறியமுடிகிறது.

 

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

 

மாங்குடி மருதன் தலைவன் ஆக

 

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

 

புலவர் பாடாது வரைக என் நிலவரை

 

பாண்டியன் சொன்னபடியே வெல்கிறான். பாண்டியனின் வஞ்சினம் நிறைவேறியபின் ‘மதுரைக்காஞ்சி’யை மாங்குடிமருதனார் பாடியிருக்கிறார். பத்துப்பாட்டிலேயே மிக நீண்ட அடிகளை உடையதாக மதுரைக்காஞ்சி எழுதப்பட்டிருக்கிறது. 782 அடிகள். இதற்கு இலக்கியக் காரணங்களும் வரலாற்றுக் காரணங்களும் இருக்கின்றன.

 

மதுரைக்காஞ்சியின் முதற்படி என்று சொல்லத்தக்க சுருக்கமான பாடல் ஒன்றும் புறநானூற்றில் இருக்கிறது. அதனை எழுதியவரும் மாங்குடி மருதனாரே.

 

“நின்னோடு தொன்று மூத்த உயிரினும் உயிரோடு” என்று தொடங்கும் பாடல் பாண்டியன் நெடுஞ்செழியனின் குலச்சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும் கூறுகிறது. இதனைப் புள்ளிவிவரங்களோடு மதுரைக் காஞ்சி பேசுகிறது. உதாரணமாக, நெடுஞ்செழியனின் முன்னோர்களாக முந்நீர்வடிம்பலம்ப நின்ற பாண்டியன், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, நிலந்தருதிருவிற் பாண்டியன் ஆகிய மூவர் வழிவந்த பாண்டியன் என்று தன் மரபைக் கூறுகிறது.

 

எப்படி மக்கள் மனங்களில் இருந்த கண்ணகி கதை, சிலப்பதிகாரக் காப்பியமாக மலர்ந்ததோ அதைப்போல, பாண்டிய நெடுஞ்செழியனின் ஆட்சிக்காலம் சிறப்புற்றதால் சிறு காப்பியம் என்று சொல்லத்தக்க வகையில் மதுரைக் காஞ்சியாக மலர்ந்திருக்கிறது எனலாம்.

 

மதுரை மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட நெடுஞ்செழியனுக்கு நிலையாமைக் கருத்தை வலியுறுத்த, பாடப்பட்டதால் இதற்கு ‘மதுரைக் காஞ்சி’ என்று பெயரிடப் பட்டதாகத் தமிழறிஞர்கள் கூறுகின்றனர். இக்கருத்து அவ்வளவு பொருத்தமாக அமையவில்லை. தொல்காப்பியம், ‘மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை’ என்று வஞ்சினக் காஞ்சித்துறையைப் பற்றிக் கூறுகிறது. பகைவரின் படையெடுப்பை எதிர்த்துப் போர்செய்து, முறியடிக்கிற வெற்றி என்பதாகும். மதுரைக்காஞ்சி, போர் வெற்றி யோடு பண்பாட்டு இயக்கத்தைத்தான் அதிகமாக விவரிக்கின்றது.

 

‘ஒண்பெண் அவிர் இழை தெழிப்ப இயலி’, ‘திண்சுவர் நல் இல்’ ‘நல்இல் கதவம் கரைதல்’, ‘வானம் நீங்கிய நீல் நிற விசும்பு’ ‘திரையிடு மணலினும் பலரே உரைசெய/மலர்தலை உலகம் ஆண்டு அழிந்தோரே’ என்பன போன்ற சொற்றொடர்களில் நிலையில்லாது அழிந்துவிடும் நிலத்தியல் வாழ்க்கை பற்றியும் நிலைத்து நிற்கக்கூடியதாக நம்பப்படும் மேல்உலகு வாழ்க்கையின் வீடுபேறு பற்றியும் சொல்லப் பட்டிருந்தாலும் நிலையாமையை வலியுறுத்துவதற்காகவே பாடப் பட்டதன்று. உண்மையில் வாழ்க்கையின் பல்வேறு விதமான அம்சங்களை ஒருங்குதிரட்டி முன்வைப்பது நோக்கமாக இருக்கிறது. மனித வாழ்க்கையின் அகம், புறம் இரண்டையும் முழுமையாகத் திரட்டி வைக்கிறது எனலாம்.

 

கொடை, ஆட்சித்திறம், உண்மை, நீதி, வணிகம், விவசாயம், தொழில் இவற்றிற்கான வளத்தைப் பெருக்கும் தன்மைகள், நீடித்த நிலைபேறுக்கு உரியவை என்ற அடிப்படையில்தான் ‘காஞ்சி’ என்ற கருத்தியல் ‘மதுரைக் காஞ்சி’ முழுமைக்கும் ஊடாடி வருகின்றது.

 

பத்துப்பாட்டு வெண்பா இதனை ‘பெருகு வள மதுரைக் காஞ்சி’ என்று சரியாகக் குறிப்பிடுகின்றது. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட மதுரையை ஒரு நாள் முழுக்கச் சுற்றிவரும் அனுபவத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் மாங்குடிமருதனார். 346ஆவது அடி முதல் 699ஆவது அடிவரை 354 அடிகளில் முதல்நாள் காலை தொடங்கி அடுத்த நாள் காலை வரை நடைபெறும் நிகழ்ச்சியைத் தொகுத்து முறைப்படி கூறுகிறார். பாதி மதுரை நகரைப் பற்றிப் பேசுவதால் இதனை ‘மாநகர்ப் பாட்டு’ என்று குறிப்பிடுகின்றனர்.

 

புத்தேள் உலகம் கவினிக் காண்வர

 

மிக்க புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை (698, 699)

 

என்ற வரியோடு நகர்ச் சிறப்பு முடிகிறது.

 

மதுரையில் நாளங்காடி என்ற பகல் நேரத்துக் கடைகளிலும், அல்லங்காடி என்ற இரவு நேரத்துக் கடைகளிலும் மக்கள், பொருட்களை வாங்கிச் செல்வதைப் பார்க்கமுடிகிறது. மதுரையின் தெருக்கள், ‘ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவாக’ அமைந்திருப்பதைச் சொல்கிறது. இக்கடைத் தெருவிலேயே பாண்டிய நாட்டின் அறங் கூறவையத்தைக் காணலாம்.

 

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்

 

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

 

நெமன் கோலன்ன செம்மைத்தாகிச்

 

சிறந்த கொள்கை அறங்கூறு அவையம்

 

என்கிறது.

 

வழக்கிட்டவர்களுக்கு உண்டாகும் அச்சத்தையும் வருத்தத் தையும் பற்றுள்ளத்தையும் நீக்கி, ஒரு பக்கத்தில் கோபமும் மற்றொரு பக்கத்தில் மகிழ்ச்சியும் செய்யாமல், தம் மனத்தைக் காத்து நடுவு நிலைமையோடு இயங்கும் அவையம் என்கிறார். இருசாரரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்ப்பு வழங்கும் அறிஞர் காவிரி என்னும் பட்டத்தால் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

தொடர்ந்து அந்தணர், தூதுவர், ஒற்றர் இயல்புகள் சொல்லப் படுகின்றன. ‘நாற்பெருங்குழு’, ‘ஐம்பெருங்குழு’ என்று கூட்டமைப்புகள் பிரச்சினைகளைத் தீர்த்து வந்துள்ளன. ‘அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி’ வணிகம் செய்வோரையும், முதுமகளிர் தட்டில் பொருட்களை ஏந்தி விற்பதையும் அருகருகே காட்டுகிறார். இன்றும் மதுரை ‘தூங்கா நகரமாக’ விளங்கிவருவதைச் சென்றுகாண முடியும். ‘அந்திக் கடைப் பொட்டல்’, ‘புட்டுத்தோப்பு’ ‘பொன்னகரம்’ ‘கோவலன் பொட்டல்’ என்ற பகுதிகள் இன்றும் அதே பெயரிலேயே மதுரையில் வழங்கி வருகின்றன.

 

மாலைக் காலத்தில் மங்கையர் ஒழுக்கமும், பரத்தையர் இயல்பும், இராக் காலத்தில் கள்வர் செயலும், ஊர்க்காவலர் காக்கும் திறமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

 

பல்வேறு கோயில்கள், பௌத்தப் பள்ளிகள், சமணப்பள்ளிகள் ஆகிய பல சமயங்களுக்கு உரிய நிலையங்கள் மதுரையில் இருந் துள்ளன. சிவபெருமான் முழுமுதற் கடவுளாகச் சிறப்புற்றிருந் தமையை ‘தெள் அரிப்பொற்சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் தா அறி விளங்கிய ஆய்பெண் அவிர் இழை’ என்ற வரிகளில் அறியலாம்.

 

இன்று கேரளாவில் மட்டும் கொண்டாடப்படும் ‘திருவோணநாள்விழா’ மதுரை நகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்ததை, ‘மாயோன் மேய ஓணநல்நாள்’ என்ற வரியால் அறியமுடிகிறது.

 

திருப்பரங்குன்றவிழா, மன்னன் பிறந்தநாள்விழா, அந்திவிழா என்று பல்வேறு விழாக்களையும் கூறுகிறது. வறியவர்களுக்கு உணவு வழங்க அறக்கூழ்ச்சாலை இருந்ததையும் மதுரைக் காஞ்சி சிறப் பித்துக் கூறுகின்றது. தொடர்ந்து வந்த இவ்வழக்கத்தை மதுரை நகரைச் சுற்றியுள்ள பழைய சத்திரங்கள் காட்டுகின்றன. ‘தண்ணீர்ப் பந்தல்’, ‘கூழ்ப்பந்தல்’ என்று அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை நிலவுநாளில் இன்றும் வழங்கி, மதுரை தன் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து வருகிறது.

 

மதுரைக்காஞ்சியில் மதுரை நகர் மட்டும் அல்லாமல் மதுரை மன்னனின் ஆளுகைக்குட்பட்ட நிலத்தியல்பையெல்லாம் ஒருங்குசேரச் சொல்கிறது. பாண்டி நாட்டின் ஐவகை நிலவளங் களையும், அந்த நில மக்களின் வாழ்க்கை முறைகளையும், காட்சிகளையும், நிகழ்வுகளையும், வையை ஆற்றின் கோலங்களையும் சொல்கிறது.

 

நெய்தல் நிலம் பற்றிய பகுதி வெளிநாட்டு வாணிபம்பற்றி விரிவாகப் பேசுகிறது. கொற்கைத் துறைமுகத்தில் முத்துக்குளிக்கும் தொழில் நடைபெற்றதற்குரிய சான்றும் இப்பாட்டில் காணப்படுகிறது.

 

திணைக்குள் ஒரு துறை என்னும்போது மன்னனின் நாட்டுச் சிறப்போ, வீரமோ, கொடையோ, புகழோ பாடலின் பொருளாக அமையும். மதுரைக் காஞ்சி அவ்வாறல்; பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. அகத்திணையின் பல துறைகளும் புறத் திணையின் பல துறைகளும் இணைந்த நெடும்பாடல் எனக் கொள்ளலாம். அதைவிட பாண்டிய நாட்டின் அக்காலப் பண்பாட்டை ஒருசேரக் காட்டிய முதல் வரைபடம் மதுரைக்காஞ்சி எனலாம். இதனால் தான் தனிப்பாடல் ஒன்று இதனைக் ‘கூடற் றமிழ்’ என்று கூறுகிறது. அனைத்து மக்களும் இங்குச் சந்திக்கின்றனர்.

 

சேர வேந்தர் பேரவையில் எல்லாக் கலைகளையும் உணர்ந்த ‘சீனயோர்’ கூடிக் கலைஆராய்ச்சி செய்தனர் என்பது பற்றிய குறிப்பு இப்பாட்டில் ஒரு உவமை வாயிலாக அறியமுடிகிறது. அகத்தியர், இராவணனைத் தமிழ்நாட்டுப் பக்கம் வராது தடுத்த செய்தியும் வருகிறது.

 

பாண்டியனின் படையெடுப்பு, போர் நிகழ்ச்சிகள், பகை நாடுகளைப் பாழாக்குதல், வேந்தர் எழுவரை வெற்றிகொள்ளல் என நெடுஞ்செழியனின் வீரதீரச் செயல்கள் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. வேற்று நாட்டிலிருந்து கவர்ந்து வந்த பொருள்களைக் குடிமக்களுக்குக் கொடுக்கின்றான். நல்ல நூல்களைக் கற்று, கடலின் நடுவில் தோன்றுகின்ற ஞாயிற்றைப் போலவும், நட்சத்திரங்களுக்கு நடுவில் துலங்கும் நிறைமதி போலவும் பொலிவு பெற்றுப் புகழோடு வாழ்வாயாக என்று அறிவுறுத்துகிறார் புலவர்.

 

நிலவுடைமைச் சமூகம் மன்னராட்சிக்கு மாறுவதை மதுரைக் காஞ்சி தெளிவாகக் காட்டுகிறது. குறுநில மன்னர்மரபு முடிவுற்றுப் பெருமன்னர் மரபு தொடங்குவதைத் தலையாலங்கானத்துப் போர்ச் சூழல் வழிகாணலாம்.

 

மதுரைக் காஞ்சியில் அரசமரபும், பட்டினப் பாலையில் வணிக மரபும் சிறப்பாகப் பேசப்படுகின்றன. இந்த இரண்டு மரபுகளும் மோதிக் கொள்ளும் இலக்கியமாக ‘சிலப்பதிகாரம்’ தோன்றுகிறது. இதற்கான வரலாற்றுக் காரணங்களை மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை கொண்டு அறியமுடிகிறது.

 

அதேபோலச் சடங்குகள் சமய வழிபாட்டம்சமாக மாற்றமுறுவதை அறியமுடிகிறது.

 

“ஒண்சுடர் விளக்கம் முந்துற

 

மடையடு. . . . மயிலின் மென்மெல இயலி

 

கடுஞ்சூல் மகளிர் பேணி கை தொழுது”

 

என்ற வரிகளில் சூலுற்ற மகளிர் விளக்கேந்தி கோயிலை நோக்கி ஊர்வலமாகச் செல்கின்றனர். யாழ், முழவு, ஆகுளி முதலான கருவிகள் இசைக்க ஊர்வலம் நகர்கிறது. கடவுளைத் தொழுது சாலினி என்ற தேவராட்டி முன் பலி கொடுக்கின்றனர். சூல் உற்றதற்குப் பலிச்சோறு படைத்த இனக்குழுச் சடங்கு, இங்கு சமய வழிபாடு கலந்ததொரு வழக்கமாக மாறுவதைப் பார்க்க முடிகிறது.

 

துடியில் கோல்கொண்டு அடிக்கிற இழுசுபவன் இழிசினனாகப் பின்னாளில் அழைக்கப்படுதலையும் அறியமுடிகிறது. சாதி உருவாக்கம் மதுரைக் காஞ்சியில் இல்லை. முருகனின் இருபுறமும் ஆண்களும் பெண்களும் சூழக் குரவைக் கூத்து ஆடிவந்த செய்தி வருகிறது. பிற்காலத்தில் முருகன் உயர் நிலையடைய, மக்கள் மட்டும் ஆடிப்பாடிச் செல்லத் தொடங்கி யிருப்பதை அறியமுடிகிறது. இவ்விதமாக தமிழ்ச் சமூகம் பெரிய கடவுள், பேரரசன் என்ற கருத்தியலின்கீழ் உருமாறத் தொடங்குவதை மதுரைக் காஞ்சி முதன் முதல் தெளிவாகக் காட்டுகிறது.

 

by Swathi   on 11 Apr 2013  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிலேடை-பகடி சிலேடை-பகடி
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
கருத்துகள்
18-Mar-2019 13:18:07 சூர்யாஞானேஸ்வர் said : Report Abuse
சிலப்பதிகாரம் சௌராஷ்ட்ரா மொழியில் மொழி பெயர்ப்பாகி உள்ளது. புகார் மற்றும் மதுரை காண்டம் இதுவரை வெளிவந்துள்ளது. வஞ்சி காண்டம் விரைவில் வெளிவருகிறது. மொழி பெயர்ப்பு செய்தவர் மதுரையை சேர்ந்த சூர்யாஞானேஸ்வர். இவர் சௌராஷ்ட்ரா டைம் என்ற பெயரில் இ-பத்திரிக்கை நடத்தி வருகிறார். தமிழறிஞர் பெருமக்கள் பாராட்டுகிறார்கள். சௌராஷ்ட்ரர்கள் மத்தியில் நல்லதோர் வரவேற்பும் பெற்றுள்ளது. தமிழ் இலக்கிய உலகம் இந்த செய்தியினை அறியவேண்டும் என்பதால் இப்பதிவினை செய்துள்ளேன்.
 
09-Mar-2017 11:21:44 M.Thayanithy said : Report Abuse
உண்மையாக ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. நிலையாமைக் கருத்தைத்தான் கூறுகின்றது என்பதில் நானும் உடன்படவில்லை. அதில் கல்வி பற்றிய கருத்துக்களும் வருகின்றது. அவை பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதுகின்றேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.