தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கத்தால், பலதரப்பு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெளிநாடுகளில் குறட்டை சத்தத்தால் பலரின் திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளதாக பல்வேறு செய்திகளை நாம் தினமும் பார்க்கிறோம். தூங்கும் போது சரியான கோணத்தில் படுக்காமல் மூச்சுவிடுவதில் தடை ஏற்பட்டு, குறட்டை ஒலி எழும்புவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், குறட்டை விடும் நபர்கள் குறட்டை ஒலி எழும்பும் போது, அவர்கள் உறங்கும் நிலையை மாற்றிக் கொண்டால், குறட்டை ஒலி ஏற்படுவதை தவிர்க்கலாம். எனினும், ஆழ்ந்த உறக்கத்தின் போது தன்னிலை மறந்து குறட்டை ஒலி எழும்புவதால், எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம், நவீன தலையணையை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறிய ரக, "மைக்ரோபோன்' கருவிகள் பொருத்தப்பட்ட இந்த தலையைணை, சென்சார் கருவிகளின் மூலம், குறட்டை ஒலி ஏற்படுவதை உடனே அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தலையணையை பயன்படுத்துவதன் மூலம் குறட்டை ஒலி ஏற்பட்ட உடனேயே, தலையணையில் உள்ள வைப்ரேட்டர் கருவி, அசைவின் மூலம் உறங்கும் நபரை எழுப்பி விடுகிறது. உடனே, இதில் உறங்குவோர் தாங்கள் உறங்கும் நிலையை மாற்றிக் கொள்வதின் மூலம் குறட்டை ஒலி ஏற்படுவது தவிர்க்கப்படும். முதல் குறட்டை எழும்பிய உடனேயே இந்த தலையணை செயல்படத் துவங்கிவிடுவதால், உடனடியாக குறட்டை விடுவதை தவிர்க்க முடியும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதின் மூலம், சில நாட்களுக்குப் பின், தலையணை இல்லாமலேயே குறட்டை விடும் பழக்கம் நின்றுவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, இதை வடிவமைத்துள்ள நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நவீன தலையணை சந்தையில், 9 முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
|