|
||||||||
நற்றிணைப் பாடல்களில் பெண் மனதின் ஆணியச் சார்பு - சக்தி ஜோதி |
||||||||
(02-03-2014, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேசிய கட்டுரை ) - சக்தி ஜோதி
பெண்கள் தனித்தியங்க இயலாதவர்களாகவும் பெற்றோரையோ கணவனையோ உறவினர்களையோ சார்ந்திருக்க வேண்டியவர்களாகவே காணப்படுகிறார்கள். ஏனெனில் அடிப்படையில் இந்தியச்சமூகம், ஒரு ஆண் மைய சமூகம் ஆகும். ஆணியச் சமூகப் பின்புலத்தில் பெண் அடிமையான வரலாறென்பது தனித்து விவாதிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அது போல பெண்ணின் தன்னிலையானது ஆணியச் சார்புடன் கட்டமைக்கப்பட ஏதுவான சூழமைவுகளை எங்கனம் சங்கப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன என்பதை நற்றிணையின் பாடல்கள் கொண்டு விளக்க இக்கட்டுரை முயல்கிறது.
சங்க இலக்கியங்களால் புலனாகும் சமூகமும் ஒரு முதிர்ச்சியான நிலவுடைமைச் சமூகம் ஆகும் என கார்த்திகேசு சிவத்தம்பி முதலானோர் ஒப்புகின்றனர். சங்கப் பாடல்களில் கிழான் கிழவன் என்கிற சொற்கள் உடைமையைக் குறிப்பனவாக உள்ளன. ”பொதுவாகக் காதற் பாடல்களில் காதல் தலைவனைக் குறிக்க கிழவன், கிழான் என்னும் சொற்கள் அடிக்கடிப் பயன்படுத்தப்படுவதாகும். அதன் பொருள் உடைமையாளர், ஆள்பவர், கணவர்” (க.கைலாசபதி, தமிழ் வீரநிலைக் கவிதை, ப.21) என்ற கைலாசபதியின் கூற்று இதனை மெய்ப்பிக்கிறது.
இத்தகைய உடைமைச் சமூகத்தில் பெண் பாலியல் மட்டுப்பாடு என்பது ஆணின் பாலியல் மட்டுப்பாட்டுடன் தொடர்புடையதாகும் என ராஜ்கௌதமன் குறிக்கிறார் ”இத்தகைய உடைமைகள் தோன்றி ஆண்கள் ஆள்வினைகள் காரணமாக நிலைத்து விட்டபின்னர், அந்த ஆள்வினைகள் காரணமணாக வீர்ர், மன்னர், வேந்தர் உடைப்பெருஞ்செல்வர், பெரியோர், சான்றோர் என்று மாறிய ஆண்கள் இயற்கையான பாலியல் வேட்கையை, அதன் அளவை மட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதன் காரணமாகப் பெண்ணும் தனது பாலியல் வேட்கையை அடக்கி, அடங்கிய பாலியல் பாத்திரமாக வாழும் நிர்பந்தத்தை அடைந்தாள்” (ராஜ்கௌதமன், பா.தொகை, தொல்.தமிழ்ச்சமூக உருவாக்கமும், ப.14) என்பதால் பெண் குடும்பத்திற்குள் செறித்துக் கொள்ளப்படும் தன்னிலையாக ஆனாள். பெண்ணின் செயல் அவள் கருத்தரித்தல், பிள்ளைப்பேறு அடைதல் என்பவற்றாலும் பின்பு பிள்ளை பராமரித்தல் என்ற செயல்களாலும் குடும்பத்திற்குள்ளேயே நிகழ்வதாக இருந்தது. ஆதலின் உடல் ரீதியிலும் அவளுக்கு வெளிச்சென்று பொருள் ஈட்டுதலோ பிற நடவடிக்கைகளுக்கோ செல்வதென்பது இயலாத நிலையில் அவளுக்கான செயலிடம் குடும்பம் எனவும் ஆணிற்கான செயல்தளம் குடும்பத்திற்கு வெளியே பரந்துபட்டதாகவும் இருந்தது. பெண்ணின் தன்னிலையானது ஆணின் தன்னிலைக்குள் கரைந்து போகும் வகையில் குடும்ப அமைப்பு அவளுக்கு அறக்கட்டுப்பாடுகளை விதித்தது என்பதை சங்கப் பாடல்களில் காணமுடியும். இற்செரித்தல், அறத்தொடு நிற்றல், வரைவு கடாதல் முதலான துறைகளின் பாடல்கள் பெண் ஆணினால் கைக்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைபவை. ஓர் ஆணிற்கு கையளிக்கப்படுவதற்காக அவள் கண்காணிப்புடன் வளர்க்கப்படுகிறாள். அவ்வாறு வளர்க்கப்படும் பெண்ணின் மனம் ஆணின் தன்னிலைக்குள் கரைந்து போகும் வகையில் கட்டமைகிறது. தலைவனை போற்றுதல் அவன் பிரிவை அஞ்சுதல், பிரிந்த தலைவனின் வருகைக்காக காத்திருத்தல், ஆற்றியிருத்தல் என்பன போன்ற சங்கப் பாடல்களில் தலைவனை அடியொற்றித் தன்னை தகவமைத்துக் கொண்ட பெண் காட்டப்படுகிறாள். இதுதான் ஆணின் சார்புள்ள பெண் மனமாகும். இதை வலியுறுத்தும் பாடல்கள் பல நற்றிணையில் காணப்படுகின்றன.
தலைவன் உயர்ந்தவன், வலிமையானவன் , தவறாத வாய்மையுடையவன், இனிமையானவன் என்றவாறெல்லாம் புகழப்பட்டு அவன் தன்னிலையின் ஒருபகுதியாக ஆக்கிக் கொள்ளும் பெண்களையே பெரும்பாலும் பாடல்களில் காணமுடிகிறது.
குறிஞ்சி நிலத்தில் வாழ்கிற தலைவன் ஒருவன் தலைவியை வினை நிமித்தமாக பிரியக் கருதுவதாக தோழி நினைக்கிறாள் . அதை தலைவியிடம் கூறுகிறாள் . மறுமொழியாக தலைவி என் தலைவன் சொல் தவறாதவன், இனியவன் என் தோளைப் பிரியமாட்டான் என்றெல்லாம் கூறி நீர் இல்லாது எப்படி உலகம் அமைய இயலாதோ அது போல அவனின்றி அமைதல் இல்லை என்று ”நறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை உறுபவோ செய்பு அறியலரே” என்று கூறுகிறாள். தனக்கு பசலை படரும்படி அவர் நோக வைக்க மாட்டார் என்று கூறும் தலைவியின் கூற்றில் தலைவனை விட்டுப் பிரிதல் என்பது நோய்க்கும் தன் துயருக்கும் காரணமாகும் என்பதாகக் கூறுகிறாள்.
"நின்ற சொல்லர்; நீடு தோறு இனியர்; என்றும் என் தோள் பிரிபு அறியலரே; தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத் தம் இன்று அமையா நம் நயந்தருளி நறு நுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே ! (1: கபிலர்)
இப்பாடல் திருமணத்திற்கு பின் இல்லறம் நடத்தும் கற்பொழுக்கக் கைக்கோளுக்கு உரியது . தலைவன் உயர்ந்தவன் , தன்னை சிறுமை அடையும் படி செய்ய மாட்டான் என்கிறாள் .இங்கு "சிறுமை" என்பது நோய் . பிரிவின்கண் ஏற்படுகிற பசலை நோய் படர விட மாட்டான் என்று கூறுகிறாள் ."நின்ற சொல்லர்" என்று சொல்வதன் மூலம் தலைவன் தடுமாற்றம் அடையாத உயர்ந்த சொல்லுடையவன் எனவும் "நீடு தோறு இனியர்"என்று தலைவனைக் குறிப்பிடுவதை 'நீடு தோன்றினியர் " என்ப பாடம் கொண்ட பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இடையீடின்றி நெடுங்காலம் தலைவன் இனியவனாக ஒழுகியமை பற்றியே தலைவி குறிப்பிடுகிறாள் என்று உரை குறிப்பிடுகிறார்.
இது போல் நற்.5 இல் தலைவனைப் பிரிதல் தலைவிக்கு துயராகும் என்பது ”அரிதே காதலர்ப் பிரிதல்” என்று சுட்டப்படுகிறது. மேலும்,இவ்விதம் தலைவி நம்புகிற தலைவன் வினைவயின் பிரிகிறான் . அறத்தொடு நிற்றலில் முதலில் தலைவன் பிரிந்தமை காரணமாக தலைவன் தன்னை கைவிட்டான் என வருந்தி புலம்பினாள். இதனைக் கேட்ட தோழி அப்படி தலைவன் கைவிட்டானாயின் அவன் இயல்பு தவறு என்று இயற்பலித்த தோழிக்கு தலைவி இயற்பட மொழிந்த பாலைநிலப் பாடல் ஒன்றில்,
“தொல் கவின் தொலைய, தோள் நலம் சாஅய, நல்கார் நீத்தனர் ஆயினும், நல்குவீர்; நட்டனர், வாழி! - தோழி - (நற்.14 )
காந்தள் பூத்து செழித்த சாரலில் வலிமைமிக்க ஆண் யானை பெரிய பாம்பின் வயப்பட்டது . அதனால் அடங்காத துயரத்தோடு அச்சமும் கொண்ட பெண் யானை பேரொலி உண்டாகப் பிளிரும் .அந்த காட்டில் சென்றிருக்கும் தலைவன் என்னைக் கைவிட்டு சென்றான் என கூறுகிறாய் தோழி, என் தோளின் அழகு கெட்டு பழைய நலன் தொலையுமாறு நீங்கினார் எனினும் அவனே நல்குவான் இன்பம் செய்குவான். சேரனுடைய மதில் அழியுமாறு சோழவேந்தன் ஒரு பகலில் அவ்வூரைத் தீப்படுத்தியதைக் காட்டிலும் பெரிய பழியுண்டாக நம்மை நீங்கினான். ஆயினும் என் பால் நட்பு வைத்தவன். ஆதலால் குறித்த பருவத்தே வந்து என்னிடத்து அன்பு செய்வர், எனவே அவர் நீடு வாழ்வாராக என்கிறாள். தலைவன் எத்தகைய துன்பம் தரத்தக்க செயலைச் செய்தாலும் அவனை விடத் தன்னை அன்பு செய்வார் யாருமிலர் என்று கூறுவதாகும். இதுவும் தன்னை தனித் தன்னிலையாக உணராமல் தலைவனின் பிற்சேர்க்கையாக இருக்கும் விரும்பும் பெண்ணின் மன வெளிப்பாடாகும். இதைப் போல் ”நோகோயானே நெகிழ்ந்தன வளையே” (நற்.26) ஆம் பாடலும் வினைவயிற் பிரிவதைக் கேட்டதும் வளையல் நெகிழத் தொடங்கியது ஆதலால் பிரிவை ஆற்ற மாட்டாள் என தோழி கூறுவதும் இங்கு பிரிவினால் தலைவி உறும் துயரைச் சுட்டுவதாக உள்ளது. ஓர் ஆணின் மூலமான காதல், காமம் இவற்றிற்காக மட்டுமே பெண் இயங்குகிறாள் என்பதையும் இது சுட்டுகிறது. ஆண் பிரிதல் என்பது ஆள்வினையோடும் பெண் அவனது வினைநீங்கி வரும் காலத்தை எதிர்நோக்கியிருப்பது அவளது அடங்கிய தன்மையையும் காட்டுகிறது.
பரத்தையரிடம் சென்று வந்த தலைமகன் ஒருவனுக்கு மருத நிலத்தின் தலைவி ஒருத்தி கூறும் பதில் ஒன்று ;
ஐய! குறுமகட் கண்டிகும்; வைகி, மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த் தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர, செறிதொடி தெளிர்ப்ப வீசி , மறுகில், பூப் போல உண்கண் பெயர்ப்ப நோக்கி , சென்றனள்- வாழிய, மடந்தை ! - (20 :ஓரம்போகியார் )
‘யாரையும் அறியேன் ' எனக் கூறிய தலைவனுக்கு , ஐயனே உன்னுடைய காதலுக்குரிய இளைய பரத்தை நேற்று உன்னோடு தங்கி உன் மார்பிலே தூங்கி இப்போது அவ்வின்பத்தைப் பெறாத நிலையில் தெருவழியே சென்றதைப் பார்த்தேன். உன்னைப் பிரிந்மையால் விளங்கிய பூண்களோடும் நுண்ணிய பலவாகிய தேமல் அணியபெற்றும் நின் மார்போடு முயக்கத்தில் நெரிப்பு அடைந்த குழையினோடும் சென்றாள். அவள் நின்னொடு நீடு வாழ்வாளாக எனக்கூறுகிறாள். பரத்தைக்கு காவிற் பூச்சூடி விழாவயர்ந்தான் தலைவன் என்பதை அறிந்த தலைவி அவனை சினந்து கூறுவது போலத் துவங்கி பரத்தையை நீடு வாழ்க என்கிறாள் . மருதநிலம் நல் விளைச்சலால் செழிப்பாய் விளங்குவது இயல்பே. பெரும்பாலும் செழிப்பான பகுதிகளில் மக்கள் கேளிக்கைக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். பரத்தையரிடம் செல்வதும் செல்வ செழிப்பின் அடையாளமாகவே காணப்படுகிறது. அதையே மேற்கண்ட பாடல் காட்டுகிறது. அவ்வாறு பரத்தையரிடம் செல்லும் ஆணின் தகுதி மேம்பட்டது என்பதால் அது அங்கீகாரம் உடையதாக இருந்தது. தலைவியும் பரத்தையரிடம் சென்று வந்த ஆணின் மேல் கோபம் கொள்வது போல் பேசி பின் அவனை ஏற்றுக் கொள்வாள். ஏனெனில் அவள் தலைவனைக் கோவித்துத் தனித்து வாழ முடியாது என்பதால்தான். நெய்தல் நிலத்தின் பாடல் ஒன்று ;
”அறிதலும் அறிதியோ பாக ! ...”.
என்றழைத்து தேர்பாகனுக்கு தலைவன் கூறுவது , பெருங்கடலில் வீசுகின்ற அலைகள் கொண்டுவந்து குவிக்கும் புலவு நாற்றம் மிக்க மணல்மேடு , அங்கு புல்லிகையுடைய நண்டினைப் பிடிக்கச் சென்று , அது இயலாது களைப்புற்று அம்முயற்சியைக் கைவிட்ட குற்றமற்ற இளையோளாகிய என் காதலியிடத்துத் தற்போது பிரிவினால் வருந்தியிருக்கும் நான் வினைவயிற் செல்கின்ற வருத்தத்தை உரைத்தேன்;
“.......................................... உள் நோய் உரைப்ப, மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர் ஞாழல் அம் சினைத் தாழ் இணர் கொழுதி, முறி திமிர்ந்து உதிர்ந்த கையள் அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே ?” ( 106 : தொண்டைமான் இளந்திரையன் )
கடற்கரையிடத்து நண்டைப் பிடிக்க ஆற்றாது தளரும் இளமையும் பேதமையும் உடையவள் தலைவி. அவள் மறுமொழி எதுவும் சொல்லத் தெரியாதவள் . தன் நெஞ்சுறு துயரைச் சொல்லால் வெளிப்படுத்த இயலாத மடவோள் எனப்பட்டனள். ஞாழல் மரத்தின் மலரையும் தளிரையும் உதிர்த்தவாறு தன் மனநிலையைக் காட்டினாள் .அவளுக்கான சொல் என்பது எதுவென்று அறியாத பேதைமையுடனேயே இருக்கிறாள் . அவளின் மன உணர்வினையும் அவனே உணர்ந்து சொல்கிறவனாகவும் இருக்கிறான். எனில் பெண்ணின் மனம் ஆணின் வயப்பட்டு தன்னை உணர்த்துவதாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது .
முல்லை நிலத்தின் பாடல் ஒன்றில் பிரிவிடை மெலிந்த தலைமகளுக்குத் தோழி, “ .............. தம் நசை வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக் கல்மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, தனி தரு தண் கார் தலைஇ விளி இசைந்தென்றால், வியல் இடத்தானே.” (316 : இடைக்காடனார் )
தலைவியின் பற்களைப் போல இந்த முல்லை அரும்புகள் தோன்றும் காலத்துத் தாம் வருவதாக தலைவன் கூறிச் சென்றார். இன்னும் வரவில்லை .தம்முடைய விருப்பத்தை உண்மையாகக் கொண்டு தலைவன் வினை முடித்துதிரும்பி வராதிருக்கும் பொழுது சுரத்து நெறியையுடைய மலை மேலே அதன் பக்கமெல்லாம் மாறுமாறு நீர்க்கால் இறங்கி , மழையைப் பொழிந்து , அகன்ற ஆகாயத்திலே இடியை இடிக்கத் தொடங்கிற்று. ஆனால் தலைவன் சொல் தவறாதவர். இந்த மேகம் தன் அறியாமையால் இச்செயல் புரிகிறது என தோழி தலைவிக்குக் கூறுகிறாள். வானம் இது பருவம் என்று கூறினாலும் தலைவன் சொன்னபடி அவன் வராமையால் இது பருவமல்ல என இயற்கையையும் மாறாக நினைக்கத் தூண்டப் படுகிறாள்.
தலைவி அழகும் இளமையும் மிக்கவள் என்பது திரும்பத் திரும்ப சொல்லப் படுகிறது போலவே தலைவன் உயர்ந்தவன் எனவும் நல்லவன் எனவும் வலிமையானவன் எனவும் சொல்லப் படுகிறது . தன்னிலையில் சொல்லிக் கொண்டாலும் பிறர்க்கு சொன்னாலும் பிறர் கூற்றாக இருந்தாலும் இவை வேறு வேறு விதத்தில் சொல்லி தலைவி தலைவனைச் சார்ந்திருக்கும் ஒன்றை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
தன்னைத் தான் ஆளுதல் என்பது பாலியல் கட்டுப்பாடு என்கிற கருத்து இருக்கிறது . அப்படி சுய கட்டுப்பாடு வழியாக தன்னை ஆள்வினை செய்கிறவனே பெண்ணை ஆள முடியும் எனவும் பிறரை ஆளமுடியும் எனவும் இந்த மண்ணை ஆளமுடியும் எனவும் திடமான கருத்து இருக்கிறது . பெண் என்பவள் ஆணைச் சார்ந்து அறக்கட்டுப்பாடுடன் அவனுக்கு இசைவாக இருக்க வேண்டும் என்பது செவிலித் தாய் , தோழி , பாடினி , பாணன் என பிறர் கூற்று வழியாகவும் வலியுறுத்தப் படுகிறது . இதன் வழியே இந்த ஆணின் செயலூக்கத் தன்மை மேலோங்கி இருப்பதாகவும் அவனைச் சார்ந்து வாழும் பெண்ணின் மனமும் உடலும் ஒடுங்கிய தன்மையுடன் இருப்பதாகவும் அறிய முடிகிறது .
தலைவன் தலைவி இருவரிடையே நிகழும் காதல் ஒழுக்கங்களைப் பற்றிய பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ள சங்கப் பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் (பெண்பாற்புலவர்களது பாடல்கள் தவிர்த்து) ஆணின் தன்னிலையை உயர்வாகப் பேசுகின்றன. அது போல பெண்ணின் தகவமைப்பு ஆணைச் சார்ந்து அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. கரணமொடு புணர வலியுறுத்தும் தொல்காப்பிய நூற்பாவும் இதை அடியொற்றியதே. ஆணின் தன்னிலையில் தன்னைக் கரைத்துக் கொள்பவளே கற்புடை மகளிர் என்றும் போற்றப்பட்டனர் என்பது மேலே கண்ட நற்றிணையின் சிற்சிலவான பாடல்கள் புலப்படுத்துகின்றன.
|
||||||||
by Swathi on 12 Mar 2014 1 Comments | ||||||||
Tags: Natrinai Man Dependency of Female Female Naṟṟiṇai நற்றிணை சக்தி ஜோதி | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|