LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

பண்டைத்தமிழ் இலக்கியங்களில் கரும்பு - வெ.பெருமாள்சாமி

உலகமெங்கும் வெப்ப நாடுகளில் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சங்க காலத்திலேயே கரும்பு பயிரிடப்பட்டு வந்துள்ளது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்களில் ஒருவன் கடல் கடந்த நாடு ஒன்றில் இருந்து கரும்பைக் கொண்டுவந்து தமிழ் நாட்டில் பயிரிடுவதற்கு ஏற்பாடு செய்தான் என்று புறநானூறு(99) கூறுகிறது.

“அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்

அரும்பெறல் மரபிற் கரும்பி வட்டந்தும்

நீரக விருக்கை யாழி சூட்டிய

தொன்னிலை மரபின் நின் முன்னோர்”

(தேவர்களைப் போற்றியும் வேள்விக்கண் ஆவுதியை அருந்துவித்தும் பெறுதற்கரிய கரும்பை விண்ணுலகத்தில் இருந்து இவ்வுலகத்துக்குக் கொண்டுவந்தும் நிலவுலகத்தில் சக்கரத்தை (ஆட்சியை) நடத்திய நின்முன்னோர்) என்றும்,

`அந்தரத்

தரும்பெறல் அமிழ்தமன்ன

கரும்பி வட்டந்த பெரும் பிறங் கடையே”

கடலுக்கு அப்பால் உள்ள நாட்டினின்றும் அமிழ்தம் போன்ற கரும்பை இந்நாட்டுக்குக் கொண்டுவந்தவனது வழித்தோன்றல்) என்றும் புறநானூறு ( 392) கூறுகிறது.

கரும்பை அரைத்துச் சாறு பிழிந்தெடுக்கும் ஆலைகளும் சங்ககாலத்தில் செயல்பட்டன. கரும்புச் சாற்றில் இருந்து கருப்புக்கட்டி, சர்க்கரை, கற்கண்டு முதலியனவும் செய்யப்பட்டன. இது குறித்து ஏராளமான செய்திகளைச் சங்க நூல்கள் கூறுகின்றன.

“மழை விளையாடும் கழை வளரடுக்கத்து

அணங்குடை யாழி தாக்கலிற் பலவுடன்

கணஞ்சால் வேழம் கதழ்வுற்றா அங்கு

எந்திரஞ்சிலைக்கும் துஞ்சாக் கம்பலை

கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்”

(யாழி தாக்கியதால் யானைகள் அச்சமுற்றுப் பிளிறியதுபோலக் கரும்பு அறைக்கும் இயந்திரங்கள் இரைச்சலிடுகின்றன. இயந்திரங்களால் பிழியப்பட்ட கரும்புச்சாற்றை மிகுதியாகக் குடித்து, பின் ஆலைகளில் காய்ச்சிக் கட்டியாக செய்த கருப்புக் கட்டியை மிகுதியாகத் தின்பீராக) என்று, தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று மீளும் பாணன் ஒருவன், அவனிடம் பரிசில் பெறச் செல்லும் மற்றொரு பாணனிடம் கூறினான் என்று பெரும்பாணாற்றுப்படை (257-62) கூறுகிறது.

“வான் பொய்ப்பினும் தான்பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி

புனல்பரந்து பொன் கொழிக்கும்

விளைவறா வியன் கழனிக்

கார்க் கரும்பின் கமழாலைத்

தீத்தெறுவிற் கவின்வாடி

நீர்ச்செறுவின் நீள் நெய்தல்

பூச்சாம்பும்”

(மேகம் பொய்த்து வற்கடமாயினும் பஞ்சமாயினும் தான் பொய்யாமல் காலம் தோறும் வருகின்ற, குடகுமலையிடத்தே தலையினையுடையதும் கடலிடத்தே செல்கின்றதுமான காவிரியாறு நீர் பரந்து கரையிலே பொன்னைப் போடுகின்ற சோழ நாட்டில் விளைதல் தொழில் மாறாத அகற்சியையுடைய கழனியிடத்தில் பசிய கரும்பின் கமழும் பாகை அடுகின்ற கொதிக்க வைக்கின்ற கொட்டிலில் நெருப்பிற்புகை சுடுகையினாலே நீரையுடைய வயலில் பூத்த நீண்ட நெய்தற்பூ அழகுகெட்டுவிடும்) என்று பட்டினப்பாலை ( 5-12) கூறுகிறது.

“கரும் பின் எந்திரஞ் சிலைப்பின் அயலது

இருஞ்சுவல்வாளை பிறழுமாங்கண்

கண்பணை”

(கரும்பு ஆட்டும் ஆலை ஒலிக்குமாயின் அயலதாகிய நீர்நிலையில் உள்ள பெரிய பிடரையுடைய வாளை மீன்கள் துள்ளிப்பாயும் அழகிய ஊர்) என்று நீர் வளம் மிக்க மருத நிலத்தில் கரும்பு விளைவிக்கப்பட்டதுடன் ஆலைகளில் அரைக்கப்பட்ட செய்தியையும் புறநானூறு (322) கூறுகிறது.

“கரும்பின் எந்திரம் களிற்றொடு பிளிறும்”

என்று கரும்பு ஆலையில் இட்டு அரைக்கப்பட்டமை குறித்தும் அரைக்கும் எந்திரங்கள் களிற்றின் பிளிறல் போல ஒலி எழுப்பின என்றும் ஐங்குறு நூறு (55) கூறுகிறது.

“கரும்பிற் bறுாடுத்த பெருந்தேன் சிதைந்து

சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்” என்றும்

“கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கு” என்றும் வயல்களில் கரும்பும் நெல்லும் பயிரிடப்பட்டமை குறித்துக் கூறிய சிலப்பதிகாரம்,

“பொங்கழி யாலைப் புகையொடு பரந்து

மங்குல் வானத்து மலையிற் றோன்றும்”

(தூற்றித் தூய்மை செய்யப்படாத நெற்பொலியானது உயரமாகக் குவிக்கப்பட்டிருக்கும். கரும்பாலைகளில் கரும்புப் பாகைக் காய்ச்சுகின்ற புகை வெளிப்பட்டுப் பரவி அருகில் உள்ள நெற்பொலியைச் சூழும். புகையால் சூழப்பட்ட நெற்பொலியானது, மேகம் சூழ்ந்துள்ள மலைபோலத் தோன்றும்) என்று, கழனிகளில் விளைந்த கரும்பு ஆலைகளில் ஆட்டிக்காய்ச்சப்பட்ட நிகழ்வைச் சுவைபடக் கூறுகிறது.

by Swathi   on 10 Apr 2013  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
21-Apr-2019 17:20:35 SARAVANAN R said : Report Abuse
நான் தங்கள் பணிழை மனமார பாராட்டுகிறேன். உங்கள் சேவை தமிழ் சமுதாயத்திற்கு மிக மிக அவசியம். உங்களை போன்றோர் உள்ளவரை தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. அது மென்மேலும் வளர்ந்து ஆலமரம் போல் விழுதுகள் விட்டு புது ஆலமரம் தோன்றுமே தவிர அப்படியே அழிந்து போகாது. உங்கள் சேவையும் அர்ப்பணிப்பும் என்றென்றும் தொடரட்டும். வாழ்க உமது சேவை. வளர்க தமிழ் மொழி.
 
13-Dec-2018 11:13:47 அத்தீஸ்வரன் said : Report Abuse
ENAKKU BHARATHIYAAR KANDA PUDHUMAI PENGAL KATTURAI VENDUM
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.