LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

பாவேந்தரின் பாக்களில் வள்ளுவம் - புலவர் மருதவாணன். பூங்குன்றன் பதிப்பகம்

"பாவேந்தரின்பாக்களில் வள்ளுவம் " புலவர் மருதவாணன். பூங்குன்றன் பதிப்பகம் முதல் பதிப்பு 1998. விலை ரூபாய் 24 மொத்த பக்கங்கள் 130.
# இது ஒரு பாரதிதாசன் குறித்த புத்தகம்.
உலகப் பேரறிவாளர் பலராலும் பாராட்டப்படுள்ளது எனினும் அது மற்ற இனத்தாருக்கெல்லாம் அறிவுக்கு விருந்து, தமிழ் இனப் பெருமைக்குச் சான்று: தமிழ் இனத்திற்கோ ஆரியப் பிணிக்கு மருந்து; வாழ்வுக்கு வழி: உரிமைக்கு ஒளி!
வள்ளுவரின் திருக்குறள்தான் தமிழர் இன வாழ்வின் மீட்சிக்குத் துணையாக வல்லது என்பதை மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் உணர்ந்து, பல்லாற்றாலும் உலகிற்கு உரைத்த பெருமை புரட்சிக் கவிஞர் அவர்களுக்கு உண்டு.
அவரது கவிதைகளிலும், நாடகங்களிலும் கட்டுரைகளிலும் வாய்ப்பான இடங்களில் எல்லாம் வள்ளுவர்தம் வாய்மொழியை வகைவகையாய் விளக்கி உரைத்தவர் அவர்.
வள்ளுவரின் வழிபட்ட சிந்தனை உடையவரே புரட்சிக் கவிஞர் என்றாலும், வள்ளுவரின் குறட்பாக்களை அவர் எடுத்தாண்டுள்ள வகையும், அதை படிப்பவர் உளங்கொள்ளச் செய்யும் திறனும், குறளின் பொருள் நுட்பங்களைப் புரிய வைத்திடும் பாங்கும், உணர்வார் தம்மைக் கொள்கைத் தெளிவு கொள்ள வைத்திடும் என்பதில் ஐயமில்லை.
அப்படிப்பட்ட உயர்ந்த பண்பாட்டு வழிப்பட்ட கொள்கைகளைப் பரப்பும் ஆர்வத்தினரான புலவர் அவர்கள், ஈரோட்டில் திருக்குறள் பேரவை சார்பில் நிகழ்த்தியதொரு பேருரையே “பாவேந்தரின் பாக்களில் வள்ளுவம்" என்னும் தலைப்புடைய நூலாக வடிவெடுத்துள்ளது.
வையகத்தில் தோன்றிய மக்களை வாழ்வாங்கு வாழவைப்பதே வள்ளுவம். ஆனால், வள்ளுவர் வழிவந்த வண்டமிழ் மக்கள் வந்தேறிகளால் வள்ளுவத்தையே மறந்தார்கள். அயலவர்களின் சீரந்த பண்பாட்டுப்படை எடுப்பால் நன்னெறி தவறினர் - நற்பண்பிழந்தனர். நல்லறிவு மழுங்கினர் நடைப்பிணமாயினர் - நல்லிலக்கியங்களைத் துறந்தனர் - தாய்மொழியாம் தமிழையே மறந்தனர். தாங்கள் தமிழர்கள் என்பதையே உணராமல் அடிமைப்பட்டனர்- ஆண்மை இழந்தனர் அறியாமையில் உழன்றனர். இக்கேடுகெட்ட இழிநிலையை மாற்றுவதற்குப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், புரட்சிப் பாவலன் பாரதிதாசனும் அரை நூற்றாண்டுக்குமேலாக அயராப்பணி ஆற்றினார்கள். அச்சான்றோர்கள் இன்றேல் தமிழரும் இல்லை, தமிழும் இல்லை. ஆதலின், அப்பெருமக்களை என்றும் நினைந்து போற்றுவதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
பாரதிதாசன் திருவள்ளுவரை படித்து முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தான் எழுதும் எழுத்துக்களில் எல்லாம் அவரது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
வெகுளி மகிழ்வைக்கெடுக்கும்; மனஅமைதியைச் சிதைக்கும்; தம்மையே அழிக்கும்; தடுமாற்றத்திற்கு வழி கோலும்; இல்லத்தையே போர்க்களமாக்கி இடர் பல தந்து நிற்கும்; அறிவை விலக்கி அழிவில் அழ வைக்கும்;
இனிய சொற்களை விடுத்து இன்னாத சொற்களைப் பேசச் செய்து இழிவை உண்டாக்கும். இத்தகைய கொடுமைகளைச் செய்யும் சினத்தின் சீர்கெட்ட நிலையைக் குழந்தைகள் உணர்ந்தால் "ஆறுவது சினம்" என்ற அவ்வையின் மொழி விளங்கினால் வருங்காலச் குமுகாயம் வாழத் தெரிந்த குமுகாயமாக மாற்றமடையும். இனிமை தவழும் என்ற உணர்வோடு, புரட்சிப்பாவலர் அவர்கள்
சினத்தை அடக்குதல் வேண்டும். சினம் உனக்கே கெடுதியைத் தூண்டும்! வலிவுள்ளவன் என்று கண்டு, சினம் வராமலே அடக்கல் உண்டு வலிவிலான்மேல் அன்பு கொண்டு சினம் மாற்றாதான் பெரியமண்டு! நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும் நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும் கடிதில் சுடும் இரும்பைத் தூக்கவும் வைக்கும் கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும்”
என்று இசைப்பாடலை நயமுறப் பாடியுள்ளார். இப்பாடலில்,
தன்னைத்தான் காக்கின் கினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்”.
"சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனமென்னும் ஏமப்புணையைச் சுடும்"
வலியார்முன் தன்னை நினைக்க தான்தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து"
என்ற திருக்குறட்பாக்களின் கருத்துத் தேக்கி வைக்கப்பெற்றிருப்பதைக் காணலாம்.
ஒழுக்கமும் வாய்மையும் உயர்ந்தோங்கு செல்வங்கள். ஒரு நல்ல குடிமகன் என்றாலே ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதே. ஒழுக்கமுடையவர் சொற்களே பிறர்க்கு வாழ்வளிக்கும் சொற்களாகும். ஒழுக்கமுடையவர்களின் அறிவே வையத்திற்கு வழிகாட்டும். வாய்மையே தூய்மையை வெளிப்படுத்தும். வாய்மையைக் காட்டிலும் சிறந்த அறம் இல்லை என்பது வள்ளுவம்.
"வாழ்தல் வேண்டி பொய் கூறேன் மெய் கூறுவல்"
என்பது புறநானூறு காட்டும் சால்பு நெறியாகும்.
நாட்டில் அறநெறி வளர்ந்தால் ஆகாநெறிகள் ஒழிந்துபோகும். உள்ளத் தூய்மை இருந்தால் ஊரார் பொருளைச் சுருட்ட எண்ணுவரோ? நாட்டுப் பொருளை வீட்டிற்குக் கொள்ளையடித்துச் செல்ல வெட்கப்பட மாட்டார்களா? அரசுச் செயலகங்களில் அமர்ந்திருப்போர் கையூட்டுப் பெற விழைவாரா? கல்வி நிலையங்களை நடத்துவோர் வணிகவல்லூறுகளாக வாய்பிளப்பார்களா? 'அறக்கட்டளை என்ற பெயரில் அடாச்செயல் புரிவார்களா? மருத்துவமனைகள் என்ற பெயரில் மாபாதகச் செயல்களை நடத்துவார்களா? வெகுளி மிகுந்து வெந்தழிவார்களா? சிந்தியுங்கள் இளைஞர் உள்ளங்களில் அறநெறியை விதைக்க வேண்டும் என்ற ஆவலில், நமது புரட்சிப்பாவலர்,
அறத்தான் வருவதே இன்பம் - அப்பா அதுவலால் பிறவெலாம் துன்பம் திறத்தால் அறிந்திடுக அறம் இன்னதென்று செப்பும்நூல் அந்தந்த நாளுக்கு நன்று. மனுவின் மொழி அறமான தொருநாள் அதை மாற்றுவதே தமிழர் திருநாள்!
"சினம், அவா, சாதி, மதம், புலைநாறும் யாகம் தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்: என்று பாடினார். இப்பாடலில்,
“அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம் புறத்த புகழும் இல"
என்னும் திருக்குறளும்.
புரட்சிப்பாவலர் பாக்களில் வள்ளுவம் இடம் பெறுவதோடு வள்ளுவரையே இடம் பெறச் செய்து வள்ளுவரின் சிறப்பை விளக்குகின்றார்.
"துள்ளி ஆடுவோம் வாரீர் பள்ளுப்பாடுவோம்! - - வாரீர் வள்ளுவன் இரண்டு திருவடி - இந்த வையம் அளந்ததை எண்ணி எண்ணி நாம்
துள்ளி ஆடுவோம் வாரீர் வள்என்று சொல்வது வண்மையாம் - அந்த வண்மை படைத்தவன் வள்ளுவனாம் - மன்னர் உள்படு கருமத் தலைமை அலுவல் ஒன்றுக்கு வள்ளுவம் என்றது கண்டு
துள்ளி ஆடுவோம் வாரீர் அமைச்சர் அவையின் தலைவன் அகம்புறம் காணும் வலவன் தமிழ் மக்களின் பகைவரும் - தம் தலையில் தூக்கி ஆடும்புலவன்
துள்ளி ஆடுவோம் வாரீர். வானுக்குச் செங்கதிர் ஒன்று புனல் வண்மைக்குக் காவிரி ஒன்று - நல்ல மானத்தைக் காத்து வாழஎண்ணும் இந்த வையத்துக் கொன்று திருக்குறள் என்று துள்ளி ஆடுவோம் வாரீர்:"
இப்பாடலில் வள்ளுவரைப் பற்றிச் சொல்லாராய்ச்சியே செய்துள்ளார். திருவள்ளுவர் பாண்டிய மன்னன் அவையில் உள்படு கருமத் தலைவராய் அமர்ந்து நல்லாட்சி நடத்தியவர் என்பதைப் பலர் அறியார். ஆதலின் உண்மை அறிந்தவர்கள் அறியாதார்க்கு அறிவித்துத் தெளிவை உண்டாக்க வேண்டும். காரணம், இடைக்காலத்தில் சில எத்தர்கள். பொல்லாத கதைகளை - தமிழில் இல்லாத கதைகளைக் கட்டி வள்ளுவருக்கு மாசு கற்பிக்கும் மானங்கெட்ட செயலைச் செய்தார்கள். ஆதி என்ற பறைச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவரே.
நாம் சிந்தனையைத் தூண்டும் சீரிய நூல்களைப் படிப்பதில்லை. பகுத்தறிவை வளர்க்கும் பண்பட்ட நூல்களைப் படிப்பதில்லை. திருக்குறளைப் படிப்பதில்லை திருவளர்க்கும் நூல்களைப் படிப்பதில்லை. தமிழ் வரலாற்று நுல்களைப் படிப்பதில்லை. தன் மானமுடைய தமிழறிஞர்களின் நூல்களைப் படிப்பதில்லை. தமிழ்க்கடல் மறைமலை அடிகளின் நூல்களைப் படிப்பதில்லை.
தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் நூல்களைப் படிப்பதில்லை. மொழிஞாயிறு பாவாணரின் நூல்களைப் படிப்பதில்லை. நாவலர் பாரதியாரின் நூல்களைப் படிப்பதில்லை. தந்தை பெரியாரின் நூல்களைப் படிப்பதில்லை. பேரறிஞர் அண்ணாவின் நூல்களை,கலைஞர் கருணாநிதியின் நூல்களை,
பேராசிரியர் இலக்குவனாரின் நூல்களை ,தன்மானம் மிகுந்த தமிழ்ப்பேரறிஞர்களின் ஆய்வு நூல்களைப் படிப்பதில்லை. நலிவகற்றும் நற்றமிழ் ஏடுகளைப் படிப்பதில்லை. விழிப்பூட்டும் நூல்களை விரும்பிப் படிப்பதில்லை. தெளிவளிக்கும் தெள்ளுதமிழ் ஏடுகளைப் படிப்பதில்லை. புதுமைப் படைப்பிற்கு வழிகாட்டும் புகழ் நூல்களைப் படிப்பதில்லை.
இனியாவது, தமிழர்கள் கற்க வேண்டிய நூல்கள் எவை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு திருத்தமாகக் கற்கவேண்டும். பிழைகளை விலக்கிக் கற்க வேண்டும். தங்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆக்குகின்ற ஏடுகளைத் திரிபின்றிக் கற்கவேண்டும். உண்மை வரலாற்றை உவப்போடு கற்க வேண்டும். அறியாமையை அகற்றும் ஏடுகளை ஆர்வத்தோடுகற்க வேண்டும். முறையாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் அகம்புறம்பற்றிய நூல்களையும் ஆழமாகக்கற்க வேண்டும் என்னும் பொருளில் புரட்சிப்பாவலர் இசைப்பாடலை வழங்கியிருப்பதைக் காண்போம்!
எடுப்பு
நூலைப்படி- சங்கத்தமிழ்
நூலைப்படி- முறைப்படி
நூலைப்படி
உடனெடுப்பு
காலையில் படி கடும்பகல்படி மாலை இரவு பொருள்படும்படி நூலைப்படி
அடிகள்
கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் .அப்படிக் கல்லாதவர்கள் வாழ்வதெப்படி நூலைப்படி அறம்படி பொருளைப்படி அப்படியே இன்பம்படி இறந்த தமிழ்நான்மறை பிறந்த தென்று சொல்லும்படி நூலைப்படி.
இப்பாடலில்,
"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்"
என்ற குறட்பாக்களின் கருத்துச்சிறப்பாகவும் முழுமையாகவும் விளக்கப்பெற்றுள்ளது.
குடும்பவிளக்கில் பிறிதோரிடத்தில் மணவழகர் மணிமொழியாரிடம் தாம் வாழ்ந்த வாழ்க்கையை எடுத்துரைக்கும் இனிய பகுதியில் பாவேந்தர்,
மனதில் மாசு வராமையே அறம் என்னும் வள்ளுவர் வாய்மொழி மறந்தறியேன் நான் அறம் எனல் இல்லறம் துறவறம் ஆக இருவகை என்பதை ஒருகாலும் ஒப்பேன் அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றார் வள்ளுவர் .ஆதலால் நவையறு கல்வியில் நன்மக்கள் தமை அவையில் முதன்மை அடையச் செய்தேன் அறவழியாலே நிறைபொருள் ஆக்கினேன்"
என்று பாடியுள்ளார்.
இப்பகுதியில்
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்ற குறட் கருத்தும்
"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்"
என்ற குறட்பாக்களின் கருத்தும் இடம்பெற்றுள்ளன. இவற்றால் நாம் உணர்வதென்ன? சிந்தியுங்கள்! இல்வாழ்க்கைதான் நல்வாழ்க்கை. வாழ்க்கைத் துணைவியாகிய மனைவி நற்பண்பும் நல்லறிவும் மனையற மாண்பும் உடையவராக அமைந்துவிட்டால் அதுதான் உண்மையான உயர்ந்த இன்ப உலகமாகும். இல்லறத்தில் நின்று பிறர்க்குதவி வாழ்வதைக் காட்டிலும் சிறந்த வாழ்வு வேறு எதுவுமே இல்லை. இதற்கு மாறாகத் தனித்து வாழ்தல் என்பது தற்கொலைக்கு ஒப்பானதே. அறிவும் அழகும் இளமையும் உடையவர்கள் தமக்குப் பொருத்தமானவர்களோடு இணைந்து வாழ்வதே இயல்பான வாழ்வாகும் என்பதை அறிதல் வேண்டும்.
ஒருதாய் மகிழ்ச்சி அடைவதைப் பாடும் பொழுது பாவேந்தர், வள்ளுவத்தை மறவாமல் இசைப்பாடலில் பாடுவதைப் பார்ப்போம்!
எடுப்பு
பேறெல்லாம் பெற்றேன் மகளே - உன்னைப் பெற்றதால் பெறாப் பேறெல்லாம் பெற்றேன்
தொடுப்பு
சீரெல்லாம் பெற்றேன் மகளே, உன்னைப் பெற்றதால் செந்தமிழ்ச் சீரெல்லாம் பெற்றேன்.
அடிகள்
வள்ளுவர் இரண்டடி எம்இரு பிள்ளை வாழ்வார்க்கு இலக்கணம் கற்பிக்கும் கிள்ளை! அள்ளூறிப் போகின்றேன் மக்களால் யானே அன்பினர் வழியினர் அமிழ்திவர் தேனே!
இப்பாடலில் "ஈன்ற பொழுதின் பெரிதுக்கும்” என்ற குறட்பாவின் கருத்து இடம்பெற்றுள்ளது. மற்றும் மக்கட்பேறு மட்டாக இருக்கவேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப் பெற்றுள்ளது. மக்கள் அறிவு நிரம்பி மக்களாக ஆற்றல் வாய்ந்த மக்களாக பண்பாட்டில் சிறந்த மக்களாக - வளர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் அறியலாம்.
முடிவாகக் குறளின் சிறப்பையும் குறள் கற்றதால் அடைந்த பயனையும் பாவேந்தர் இசைப்பாடலாகப் பாடியுள்ளதைக் காண்போம்!
குறள் படித்தேன் குறள்படித்தேன் குணமடைந்தேன் நான் - தூய குருதி கொண்டேன் நான் - உயிர் உறுதி கொண்டேன் நான்!
குறள் படித்தேன் குறள் படித்தேன். குறைகளைந்தேன் நான் - மனக் கொழுமை கொண்டேன் நான் - உயிர்ச் செழுமை பெற்றேன் நான்/
அறம் படித்தேன் பொருள் படித்தேன் இன்பம் படித்தேன் அறிவு இன்பம் குடித்தேன் உலகத் துயர் துடைத்தேன்!
திறம் படைத்தேன் உரன்படைத்தேன் திருக்குற ளாலே - முப்பால் திருக்குற ளாலே - உலகு ஒழுங்குறலாலே!
இப்பாடலில் குறள் படித்தால் அடையும் நற்பேறுகளை நயம்பட நவின்றுள்ளார்.
புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசனாரின் பாக்களில் வள்ளுவம் வனப்புற இடம்பெற்றிருப்பதை
வள்ளுவம் பதிந்து கிடப்பதை - படிந்து கிடப்பதைப் பார்த்தோம். பார்த்தால் போதுமா? தமிழர்களாகிய நம் வாழ்விலும் பதியவேண்டாமா? தமிழர்களின் உள்ளங்களில் படியவேண்டாமா? பதியவேண்டும் என்பதே பாவேந்தரின் நோக்கமாகும்.
புரட்சிப்பாவலர் அவர்கள் திருக்குறளை ஆழ்ந்தும் ஆய்ந்தும் கற்ற அருந்திறலாளர். பரிமேலழகரின் உரைகளைப் பலசான்றுகள் காட்டி மறுத்தவர் திருக்குறளுக்குப் புதிய உரையையே எழுதியவர்.
தமிழ் நெறி எது? என்பதை எல்லார்க்கும் விளங்கவைத்தவர். குறள்நெறி ஒழுகினால் உலகில் குறைகள் தீரும் என்பதை உணர்த்தியவர். அதன் ஏதுவால் பலபாக்களைப் பாடித் தமிழர்களை விழிப்புறச் செய்தவர்.
***
இந்நூலினைப் பயில்வோர் புரட்சிப் பாவலரைப் பற்றியும் திருக்குறள் பற்றியும் திருத்தமாய் உணர்வர். தமிழ்நெறியின் சிறப்பை அறிவர். வள்ளுவத்தின் வனப்பைத் தெரிந்து தெளிவர். அந்த அளவில் நில்லாது வள்ளுவத்தை வாழ்வியலாகக் கொண்டு ஒழுகுவர்.
 
-திரு.நா.கருணாமூர்த்தி , (முகநூல் பதிவு )
by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.