LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

அறியாத குறள்கள் 13

கோவிலுக்குப் போகிறோம். அங்கே கோபுர வாசலில் அல்லது படிக்கட்டுகளில் நாம் தவறாது காணும் காட்சி ஒன்றுண்டு. இரவலர்கள் வரிசையாய் அமர்ந்திருப்பார்கள். நைந்த பழந்துணி அணிந்து, உழைக்கும் திறனிழந்த உடலுடன் திருவோட்டையோ அல்லது தட்டு போன்ற பாத்திரத்தையோ ஏந்தியிருப்பார்கள். மலைப்படிக்கட்டுகளில் அமர்ந்து இரந்துண்டு வாழும் சாதுக்கள் தமக்குள் நன்றாகக் கதைபேசிக்கொண்டு களித்திருப்பதுமுண்டு. மாறாக, கோவில் வாசலில் அமர்ந்துள்ள இரவலர்களுக்குள் பேச்சுவார்த்தை உள்ளதுபோலவே ஒருவருக்கொருவர் வசைமாரி பொழிந்து வைதுகொள்வதும் உண்டு. இடப்பற்றாக்குறை முதலான காரணங்கள் இவற்றை உள்ளிருந்து இயக்கும். அவர்களும் மனிதர்கள்தாமே, மனித இனத்தின் தொல்பெரும் பண்பொன்று அவர்களையும் பாடாய்ப் படுத்துவதுண்டு.

பிச்சைக்காரர்கள் இருவர் கோவில் வாசலில் அமர்ந்து திருவோடு ஏந்தி வருவோர் போவோரிடம் இரந்துகொண்டிருக்கிறார்கள் எனக் கொள்வோம். இருவரும் நேற்றுவரை ஒரே மாதிரி இருந்தவர்கள்தாம். ஏறத்தாழ ஒரே வகையான நைந்து கிழிந்த துறவாடை அணிந்திருந்தவர்கள்தாம். இருவரும் நன்றாக ஒடுங்கிய அலுமினியத் தட்டை ஏந்தியிருந்தவர்கள்தாம். இருவருக்கும் ஒரே பரதேசிக் கோலம். ஆனால் இன்று, முதலாமவரைவிட இரண்டாமவர் வைத்திருக்கும் ஒன்று, முதலாமவரை நிம்மதியிழக்கச் செய்துவிட்டது.

இத்தனை நாளாகத் தன்னோடு அமர்ந்திருந்தவனுக்கு இப்படியொன்று கிடைத்துவிட்டதா என்று எண்ண எண்ண முதலாமவருக்கு உடலும் குடலும் பற்றி எரிகிறது. நானும்தான் அவனைப்போலவே இருந்தேன், அவனைவிட ஓங்கிக் குரலெடுத்து இரந்தேன், அவன் எழுந்துசென்ற பின்பும் கோவில் நடை சாத்தும்வரை கையேந்திக் கரைந்தேன், ஆனால் இன்று அவனுக்கு இப்படியொன்று கிடைத்திருக்கிறதே, அது எப்படி ? எவ்வாறு ? ஐயோ, என்னால் பொறுக்க முடியவில்லையே.

அப்படி என்ன இரண்டாமவருக்குக் கிடைத்துவிட்டது என்கிறீர்களா ? நேற்றுவரை ஒரே வகையான, ஒடுக்கங்கள் நிறைந்த அலுமினியத் தட்டை இருவரும் வைத்திரந்தார்கள் அல்லவா... இன்று அதில் ஒரு மாற்றம். இரண்டாமவர் எங்கோ கடைவீதியில் இரந்து நின்றபோது, யாரோ பாத்திரக் கடைக்காரர் புத்தம் புதிய அலுமினியத் தட்டு ஒன்றைக் கொடுத்துவிட்டார்.

இரண்டாமவர் புத்தம் புதிய தட்டுடன் இரந்துகொண்டிருக்கிறார். முதலாமவர் அதே பழைய அலுமினியத் தட்டோடு இருக்கிறார். முதலாமவரால் பொறுக்க முடியுமா ? முடியவில்லை. தன்னுடைய தட்டு இத்தனை பழையதாக இருக்கிறதே, இவனுக்குப் புதிதாக ஒன்று கிடைத்துவிட்டதே, அதில் ஒடுக்கங்களே இல்லையே, என்னுடையது ஒடுங்கி நசுங்கி ஒன்றுக்கும் உதவாததுபோல் உள்ளதே... பொறுக்க முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பொறாமை ! அழுக்காறு !

அந்தப் பொறாமையைத்தான் மனித இனத்தின் தொல்பெரும் பண்பு என்று குறிப்பிட்டேன். அந்தப் பிச்சைக்காரன் எதைப் பார்த்துப் பொறாமைப்பட்டான் ? தன்னோடு நேற்றுவரை ஒன்றாக அமர்ந்திருந்து, தன்னைப்போலவே உடைமையோடு இருந்த ஒருவனுக்குப் புத்தம் புதிதாக ஒரு பிச்சைப் பாத்திரம் கிடைத்துவிட்டதே என்று பொறாமைப்பட்டான். தன் தட்டைவிட அடுத்தவன் தட்டு ஒடுக்கங்கள் குறைவாக உள்ளதே என்று பொறாமைப்பட்டான்.

பொறாமை ஆதி குணம் என்றால், அந்தப் பிச்சைக்காரன் நியாயமாக யாரைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும் ? கோவிலுக்குப் பொன்னும் மணியும் பட்டும் அணிந்து வரும் செல்வந்தர்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும். தன்னெதிரே விண்ணளாவ எழுந்து நிற்கும் மாட மாளிகைகளைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும். விலையுயர்ந்த மகிழுந்துகளில் குளிர்காற்றுரச கோவில் வாசலில் வந்திறங்குபவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பார்த்து பொறாமைப் படவில்லை. செல்வந்தர்களைக் கண்டதும் ‘ஈ’ என்று இரப்பதற்குத்தான் அவன் மனம் பழகியிருக்கிறது. ஆனால் இத்தனை காலம் தன்னோடு இருந்த ஒருவனுக்குச் சற்றே மேன்மையாக ஒன்று கிடைத்துவிட்டால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பிச்சைக்காரனின் பொறாமை திருவோட்டின்மீது. நம்முடைய பொறாமை எதன்மீது ? அண்டை அயலான் மீது. உற்றார் உறவினர் மீது. நண்பர் தோழர் மீது. ஏனென்றால் அவர்கள்தாம் நம்மோடு நம்மைப் போலவே இருந்துவிட்டு இப்போது முன்னேறுகிறார்கள். அவர்கள் முன்னேற்றம் நம்மை ஒருபடி கீழிழுக்கிறது. அது பொறுக்க முடியவில்லை. டாடா பிர்லாக்கள் மீதோ முகேஷ் அனில் அம்பானிகள் மீதோ நமக்குப் பொறாமையே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கும் நமக்கும்தான் எந்தத் தொடர்பும் இல்லையே.

பொறாமையைப் பற்றிக் கூறவேண்டிய கட்டாயத்திற்கு வள்ளுவரே ஆளாகியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவர் காலத்திலும் இது பெரும் மனிதக் கீழ்மையாக இருந்திருக்கிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் வெந்து புழுங்கியிருக்கின்றனர். எளிமையான பழங்கால வாழ்க்கையிலேயே பொறாமை புகுந்து விளையாடியிருக்கிறது என்றால் நம் காலத்தில் சொல்லவா வேண்டும் ?

இரக்கத்திற்கும் கருணைக்கும் எதிரான உணர்ச்சி சினம் அன்று, பொறாமைதான். ஏனென்றால் சினம் தீர்வது, பொறாமை தீராது. அது சினத்தைவிடவும் கொடியது. பொறாமை தோன்றிவிட்டால் முதலில் மனத்தில் நுழைவது தாழ்வு மனப்பான்மை. தாழ்வு மனப்பான்மை வேரூன்றியதும் உடனடியாக ஆக்கம் கெடும். அது நம் செயலாற்றலை மெல்ல மெல்ல முடக்கும். கைப்பொருள் அழியும். இந்த நிலைகுலைவு மேலும் மேலும் மூர்க்கத்தைத் தோற்றுவிக்கும். இறுதியில் எதையும் செய்யும் மனப்பாங்கை உருவாக்கித் தீச்செயல்கள் செய்யத் தூண்டும். தீமைகள் உங்களை அழித்துப் புதைக்கும் கடமையைச் செவ்வனே நிறைவேற்றும். வள்ளுவர் மொழியில் சொன்னால்...

அழுக்கா(று) எனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

(அதிகாரம் 17 : அழுக்காறாமை, குறள் எண் : 168)

பொறாமை என்னும் பெருந்தீயவன் செல்வத்தை அழித்து வறுமையென்னும் நரகத்திற்குக் கொண்டு செல்வான்.


- கவிஞர் மகுடேசுவரன்


by Swathi   on 20 Dec 2014  4 Comments
Tags: அறியாத குறள்கள்   Ariyatha Kuralkal                 
 தொடர்புடையவை-Related Articles
அறியாத குறள்கள் 13 அறியாத குறள்கள் 13
கருத்துகள்
20-Feb-2017 10:05:03 srinivasan said : Report Abuse
தங்களுடைய (திரு. மகுடேஸ்வரன்)தொடர்பு எண் தெரியப்படுத்தவும். தங்களுடன் பேச விழைகிறேன். எனது எண்:9962490108
 
23-Sep-2016 23:46:53 aruna said : Report Abuse
மிகவும் அருமை , வாழ்துக்கள்
 
06-Sep-2015 04:07:50 kathirvel said : Report Abuse
வணக்கம்.எம் கல்லூரியில் ஒப்படைப்பு ஒன்று இந்ணயம் பற்றி எழுத கொடுக்கபட்டது .அதற்கு தங்கள் தளம் உதவியது.மிக நன்றி.
 
18-Jul-2015 07:32:38 எ.lakshmanaiah said : Report Abuse
தோன்றின் புகழோக தோன்றுக பற்றி katturai
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.