எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் மரகதாம்பிகை, விநாயகர் சித்தி, புத்தி, சாஸ்தா பூரணை, புஷ்கலை, குபேரன் கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்.
தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக் கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளது. |