LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

சிலம்பு காட்டும் தமிழர் சிறப்பு - புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்

முன்னுரை 

 

இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகும்.அந்தக் கண்ணாடியின் வழி, அவ்விலக்கியம் எழுதப்பட்ட காலத்தின் நிகழ்ச்சிகளைக் காணலாம்.  இலக்கியம் படைக்கும் கவிஞன் தன்னைச் சூழ்ந்த சமுதாயத்தினைக்  கண்டு, அச்சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தைப் புகுத்திச் சீர்மை பெற்ற சமுதாயமாக விளங்க வேண்டும் என முயல்வான்.

 

இளங்கோவடிகள், நாட்டை ஆட்சி செய்யும் குடும்ப உறுப்பினராக இருந்தாலும், உண்மைக் கவிஞனாக இருந்ததால் நாட்டின் நிலையை மிகத் தெளிவாக அறிந்திருந்தார்.  தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய உயர்ந்த நோக்கினைக்  கைக்கொண்டிருந்தாரோ அதேபோல் சமுதாயமும் உயர்ந்த கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என நினைத்தார்.  அதனால்தான் தன்னுடைய காப்பியத்தில் மக்களுக்கு நலம் பயக்கும் நெறிகள் பலவற்றை எடுத்துரைத்தார்.  முத்தமிழைத் துணையாகக் கொண்டு , முந்நாட்டை வலம் வந்து, மூவரசர் நலன் கண்டு முக்காலத்தும்உணரும் வகையில் சிலப்பதிகாரத்தைப்  படைத்தார்.  அதனால்தான் அவர் வாழ்ந்த காலத்தின் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ஆடியாக சிலப்பதிகாரக் காப்பியம் திகழ்கிறது.

 

சேர, சோழ, பாண்டிய நாடுகளெனத் தனித்தனியாக இருந்து  மக்களின் மனப்பான்மையும் வேறுபட்டிருந்த அக்காலத்தில் மூன்று தனிநாடுகளையும் தமிழ் வழங்கும் ஒரு நாடாகக் கொண்டு போற்றிப் புகழ்ந்தார்.  அவற்றை ஆண்ட மூவேந்தர்களையும் ஒருங்கே மதித்துப் போற்றும் நெஞ்சம் கொண்டிருந்தததால் புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று நாடுகளின் தலைநகர்களையும் தம் காப்பியத்தில் மூன்று பகுதிகளின் தலைப்புகளாக்கினார். மூன்று நாடுகளில் பாயும் ஆறுகளையும்  வருணித்துப் பாடினார்.

 

தமிழகம் ஆட்சியால் மூன்றாகப் பிரிவுற்றிருந்த போதிலும் பண்பாட்டால், மொழி வகையால் தமிழர் என்று ஓர் இனம் வாழும் நாடே என்ற கொள்கையை வலியுறுத்திக் காப்பியத்தைப் படைத்தார்.  ஒரு வேந்தன் மற்றொரு வேந்தனை

 

வெறுக்காத வகையில் பல நிகழ்ச்சிகளை அமைத்துத் தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்டவர் இளங்கோவடிகள்.  அவர்தம் காப்பியத்தில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், கலைகள், வாணிகம், பழக்க வழக்கங்கள், சமயம், திருமணம், பெண்கள் நிலை, நகர அமைப்பு, அரசியல், போர்முறை போன்றவற்றால் தமிழர் தம் சிறப்பினை அறியலாம்.


புகார் நகரம்


தமிழர் தாம் வாழும் நகரங்களை எவ்வாறு அமைத்திருந்தனர் என்பதைச் சிலம்பு மிகத் தெளிவாகக் காட்டுகிறது.புகார் நகரம் உள் அமைப்பு, வெளி அமைப்பு என இருவகையாகப் பிரித்து நிர்மானிக்கப் பட்டிருந்தது.நகர அமைப்பில் தமிழர்தம் கலையுணர்ச்சியையும், தொழில்நுட்பத்தையும் காணுந்தோறும் வியப்பே மேலிடுகிறது.  புகார் நகரின் உள் அமைப்பைப்  பட்டினப்பாக்கம் எனவும், வெளி அமைப்பை மருவூர்ப்பாக்கம் எனவும் பெயரிட்டு அமைத்தனர்.


பட்டினப்பாக்கம்


அகநகராகிய பட்டினப்பாக்கம் பெரிதான இராசவீதியும், பெரிய தேர்கள் செல்கின்ற தேர்வீதியும், கடைத்தெருவும், பெருங்குடி வாணிகரின் மாடமாளிகைகள் விளங்குகின்ற தெருவும், மறையோர்கள் இடங்களும், உழவர்கள், மருத்துவர்கள், காலக்கணிதர்கள் ஆகியோர் பகுதி பகுதியாக வாழும் இடங்களும்,  திருமணிகளைக் குற்றுவோர், அழகாக வளைகளை அறுத்து இயற்றுவோர் வாழும் அகன்ற பெருவீதிகளும், சூதர், மாகதர், வேதாளிகர், நாழிகைக் கணக்கர், கூத்தர், கணிகையர், கூத்தியர், ஏவற்றொழில் செய்வோர், வீட்டு வேலை செய்யும் பெண்கள் ஆகியோர் வாழும் இடங்களும், தமக்குரிய தொழில் பயின்ற குயிலுவக் கருவியாளர், பன்முறையான வாத்தியம் வாசிப்பவர், விதூசகர் ஆகியோர் தனித்தனியே வசிக்கின்ற இடங்களும், குதிரை, யானை, தேர் ஆகியவற்றை இயக்குபவர், தறுகண்மையுடைய மறவர் ஆகியோர் வதியும் இடங்களும்  அமைந்து பாதுகாப்பான கோட்டை சூழ்ந்து பட்டினப்பாக்கம் அமைந்திருந்தது.

       கோவியர் வீதியும் கொடித்தேர் வீதியும் 

          ……………………………………………

          நெடுந்தேர் ஊருளர் கடுங்கன் மறவர் 

          இருந்து புறம்சுற்றிய பெரும்பாய்  இருக்கையும்   (இந்திர விழா காதை40-58 )

மருவூர்ப்பாக்கம்


புறநகராகிய மருவூர்ப்பாக்கத்தில்  நிலாமுற்றங்கள் அமைந்த பெரிய மாளிகைகள், மானின் கண்கள் போல் துளைசெய்த காற்றியங்கும் சாளரங்களையுடைய மாளிகைகள், காண்போரை வியக்கவைக்கும் யவனர்களின்

 

இருப்பிடங்கள், கடலோடிகள் பலப்பல  நாட்டினருமாகத் தம்முள் கலந்து வாழும் கடற்கரையோரக்  குடியிருப்புகள், வண்ணக்குழம்பும், சுண்ணப்பொடியும், மணச்சாந்தமும், பூவும், நறும்புகைப் பொருள்களும் விற்பவர் திரிந்து கொண்டிருக்கிற நகர வீதி. பட்டினும் மயிரினும், பருத்தி நூலினும் அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநர்களான காருகர் வாழும் இடம், முத்தும் மணியும் பொன்னும் குவிந்து கிடக்கும் பெரிய வணிக வீதிகள்.  எண்வகைக்  கூலமும் குவிந்து கிடக்கும் கூலக் கடைத் தெரு. பிட்டு, அப்பம், கள், மீன்,உப்பு, வெற்றிலை, பஞ்சவாசம், பல்வகை ஊன், எண்ணெய் விற்பவர் மலிந்த கடைத் தெருக்கள்.  வெண்கலக் கன்னர், செம்பிலே பாத்திரம் செய்பவர், தச்சர், கொல்லர், தட்டார், தையற்காரர், செம்மார் ஆகியோர் தொழில் செய்யும் வீதிகள்.குழல், யாழ் கருவிகளால் ஏழிசைகளை இசைக்கும் பாணர்களின் இடங்கள் நிறைந்து அழகுற விளங்கியது மருவூர்ப்பாக்கம்.

            வேய  மாடமும்  வியன்கல  இருக்கையும் 

          ………………………………………………

          குழலினும்  யாழினும்  குரல்முதல்  ஏழும் 

          வழுவின்றி  இசைத்து  வழித்திறம்  காட்டும்  (இந்திர விழா காதை7-38)


மதுரை நகர்


பாண்டியரின் தலைநகராகிய மதுரை அகமதில், புறமதில் அகழி, காவற்காடு முதலிய அரண்களை உடையதாய் விளங்கிற்று.


            நுதழ்விழி  நாட்டத்து  இறையோன்  கோயிலும் 

          ……………………………………………………..

          அறத்துறை  விளங்கிய   அறவோர்  பள்ளியும் 

          மறத்துறை   விளங்கிய  மன்னவன்   கோயிலும் (ஊர்காண் காதை7-14)


எனத் தவப்பள்ளிகள், இடையர் சேரிகள்,  பாண்சேரிகள்  ஆகியன  புறமதிலுக்கு வெளியே அமைந்திருந்தன.  கட்டுவேலி சூழ்ந்த காவற்காட்டுடன் நகரைச்சுற்றி நீர்ப்பரப்பினையுடைய அகழியும் இருந்தது.  யானைத்திரள் செல்வதற்கான நிலத்துட்பாதையான சுருங்கை வழியும்  அமைந்திருந்தது. மதிலின்  மீது பகைவரைத் தடுக்கும் பல்வகைப் பொறிகள் அமைந்திருந்தன.  நகரின் உள்ளே போர்க்கருவிகள், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள், நறுமணப்பொருள்கள், பல்வகைப்பூக்கள் விற்பனை செய்யும் கடை வீதிகள்  தனித்தனியாக அமைந்திருந்தன.


பன்னிருவகைக் குற்றங்களும் மிகவும் தீயனவான காகபாதம் களங்கம் விந்து ஏகை இல்லாமலும், நுண்மையான கோடியினையும், நால்வகை நிறத்தினையும் உடையதாக

 

நன்மை தரும் ஒளியுடைய  வைரங்கள் நிறைந்திருக்கும் இடமும், ஏகையும் தாரும் இருளும் எனும் குற்றங்களில்லாத பசுமை ஒளிவீசும் மரகதக்கற்கள் நிறைந்த இடமும், பூனைக் கண் போன்ற பொன்னைத் தேய்த்தாற் போன்ற புருடராகக் கற்கள், வயிடூரிய வருக்கம் கோமேதகங்கள் நிறைந்த இடமும் ஆக ஒன்பது வகைப்பட்ட மணிகள் நிறைந்த இரத்தினக் கடைத்தெரு கண்ணையும் கருத்தையும் பறிக்கின்ற வகையில் அமைந்திருந்தது.


இளங்கோவடிகள் காட்டிய இந்நகர அமைப்புகளின் வாயிலாகக் கட்டடங்கள் அமைப்பதிலும், தெருக்கள் அமைப்பதிலும், அங்காடி வீதிகள் அமைப்பதிலும் தமிழர்கள் நுட்பமான அறிவும் கலையுணர்வும் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.


செங்கோலாட்சி


சிலப்பதிகாரக் காலத்தில் மன்னராட்சியாகிய முடியாட்சி நடைப்பெற்றாலும் அது குடியாட்சியாகவே திகழ்ந்தது.குடிதழீஇக் கோலோட்சுபவராகவே மன்னர்கள் இருந்தனர்.  அருள்மிகுந்த சோழனின் வெண்கொற்றக் குடையினைப் போன்று நிலவு தண்ணொளியைப் பரப்பியது எனச் சோழனின் ஆட்சி  மக்களைக் குளிர்வித்தது என்கிறார் இளங்கோவடிகள்.  சோழனின் ஆணைச்சக்கரம் போல ஞாயிறு ஒளிவீசி சுற்றி வந்து மக்களின் வாழ்வில் இன்பவொளியைப்  பாய்ச்சியது என்கிறார்.  சோழனின் கருணையைப் போல மழை பொழிந்தது எனக் கூறுவதன் வாயிலாய் மன்னர் செங்கோலாட்சி நடத்தினார் என்பதை மங்கல வாழ்த்திலேயே கூறிவிடுகிறார்.


            கொடுங்கோல்  வேந்தன்  குடிகள்  போலப் 

          படுங்கதிர்  அமையப்  பார்த்திருந்தோர்  (புறஞ்சேரி இறுத்த காதை 15-16 )


கொடுங்கோல் மன்னனை மக்கள் வெறுப்பர், அவனின் ஆட்சிமறைவை எதிர்நோக்கி மக்கள் பார்த்திருப்பர் என்ற வரிகளால் மக்களின் கருத்திற்கு மாறாக, தன்னலத்தோடு ஆட்சி செய்யும் மன்னர்களை மக்களே தூக்கி எறிவார்கள் என்பதைச் சுட்டுகிறார்.


காந்தியடிகள் காண விரும்பிய இராம ராஜ்ஜியமான நடு இரவில் ஒரு பெண் நகைகளுடன் தன்னந்தனியாக யாதொரு அச்சமும், துன்பமும் இல்லாமல் செல்லும் சுதந்திர நிலை பாண்டியன் நாட்டிலே இருந்தது என்பதை இளங்கோ காட்டுகிறார்.


        கோள்வல்  உளியமும்  கொடும்புற்  றகழா 

          வாள்வரி  வேங்கையும்  மான்கணம்  மறலா 

          அரவும்  சூரும்  இரைதேர்  முதலையும் 

          உருமும்  சார்ந்தவர்க்  குறுகண்  செய்யா 

          செங்கோல்  தென்னவர்  காக்கும்  நாடுஎன 

எங்கணும்  போகிய  இசையோ  பெரிதே  (புறஞ்சேரி இறுத்த காதை5-10 )


பாண்டியன் ஆட்சி செய்யும் நாடு மட்டுமன்று அவனின் ஆட்சியின் கீழுள்ள காடும் அறநெறி தவறாமல் இருந்தது.எதிர்த்த விலங்கினைக் கொல்ல வல்ல கரடியும் வளைந்த புற்றினைத் தோண்டி உயிர்க்கு ஊறு செய்யவில்லை.ஒளி வரியுடைய வேங்கையும் மானினத்தோடு மாறுபடவில்லை. பாம்பும், சூர்த் தெய்வமும், இரைதேடும் முதலையும், இடியும் தம்மைச் சார்ந்தர்களுக்குக் கூடத் துன்பம் செய்யாது  வாளாவிருக்கின்றன.  இதற்குக் காரணம் செங்கோல் வழுவாத தென்னவனின் ஆட்சித்திறனே எனக் காட்டுகிறார் அடிகளார்.


அக்கால மன்னர்களின் ஆட்சியில் மக்களுக்குச் சுதந்திரமான பேச்சுரிமை இருந்தது.  தவறு செய்தான் மன்னன் என்றால் நேரில் இடித்துக் கூறவும் உரிமை பெற்றிருந்தனர் என்பதை

            தேரா  மன்னா  செப்புவது  உடையேன் 

என்ற வரிகளில் மன்னனையே நேரில் இடித்துக் கூறும் பேச்சுரிமையைக் காட்டுகிறார்.


கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று எனக் கூறிய மன்னன், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்தவுடன் தான் இட்ட தீர்ப்பு சரியானது என வாதிடாமல், நீதியினை  வளைக்க முயலாமல் தான் தவறு செய்து விட்டதை எந்தவித ஒளிவு மறைவு மின்றி ஒப்புக்கொள்கிறான்.


         யானோ  அரசன்  யானே  கள்வன் 

          மன்பதை  காக்கும்  தென்புலம்  காவல் 

          என்முதல்  பிழைத்தது கெடுகஎன் ஆயுள் (வழக்குரை காதை75-77)


தவறு செய்த நான் மன்னன் அல்லன்.  கள்வன் நானே குடிமக்களைக் காத்துப் பேணுகின்ற இத் தென்னாட்டின் பாண்டியராட்சி என் காரணமாகப் பிழைத்து விட்டதே !என் ஆயுள் அழிக எனத் தன்னுயிரையே மன்னன் விடுகிறான்.நீதியை நிலைநாட்ட உயிரையே கொடுத்த உன்னத மன்னர்கள் ஆட்சி செய்த நாடு தமிழ்நாடு என்பதை அடிகளார் பெருமிதமாகக் கூறுகிறார்.


அற்றைய நாளில் ஆட்சியின் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருந்தவரின் மனநிலையைச் சேரன் செங்குட்டுவன் வாயிலாகக் காட்டுவதைப் பாருங்கள்.


         எம்மோ  ரன்ன  வேந்தர்க்  குற்ற  

          செம்மையின்   இகந்தசொற்  செவிப்புலம்  படாமுன் 

          உயிர்ப்பதிப்  பெயர்ந்தமை  உறுக  என  …………

          மன்பதை  காக்கும்  நன்குடிப்  பிறத்தல் 

          துன்பம்  அல்லது  தொழுதகவு   இல் (காட்சிக் காதை95-104)

               

எம்போன்ற வேந்தர்க்கு, உற்ற அரசியல் நெறியினின்றும் வழுவியதான சொல் சென்று செவிக்கண் படுவதன் முன்னரே இவ்வுலகினின்றும்  உயிரினைத் துறக்கம்  நோக்கிப்  போக்கிவிட்ட செய்தி சென்றடையவதாக என்பது போல வல்வினை வளைத்த கோலை மன்னவனின் போகிய உயிர் நிமிர்த்திச் செங்கோலாகச் செய்துவிட்டது.  கொடுங்கோன்மை தவறியும் நடந்துவிடாதவாறு அஞ்சி மக்களைக்  காக்கும் பொறுப்பு மன்னர்களைச் சார்ந்தது என்று கூறுவதன் மூலம் அரசாட்சி அறத்தோடு நடைபெற்றதை அறியலாம்.

 

அன்றைய மன்னர்கள் தன்னிச்சையாக எந்த முடிவினையும் மேற்கொள்ளாமல், ஐம்பெருங்குழு, எண்பேர் ஆயம் என்னும் சான்றோர்தம் அறிவுரையை ஏற்று ஆட்சி செய்தனர்.  இன்றைய குடியாட்சியிலும் இல்லாத  அரசியல் சுதந்திரமும், கருத்துரைக்கும் சுதந்திரமும் அதை ஏற்று மதித்து நடக்கும் ஆட்சியுமாக சிலப்பதிகார ஆட்சியாளர்கள் இருந்தார்கள்.


சமயக்கோட்பாடு

 

சிலம்பில் பல்வேறு சமயங்கள், கடவுள்கள் வழிபாட்டு முறைகள் கூறப்பட்டுள்ளன.திருமால், செவ்வேள், முருகன், சிவபிரான், இந்திரன், புத்தன், கொற்றவை முதலிய பெருந்தெய்வங்களும். இயக்கி, ஐயை, மணிமேகலை, தீக்கடவுள்,  கடல்தெய்வம், மதுராபதித்தெய்வம், நால்வகைப்பூதம் முதலிய சிறு தெய்வங்களும்  கூறப்பட்டுள்ளன.

 

அக்காலத்தமிழர் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும், பல்வேறு சமயக்கோட்பாடுகளைப் பின்பற்றினாலும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.ஞாயிறு, திங்கள், மழை ஆகியவற்றைப் போற்றியதால் இயற்கை வழிபாடும் செய்யப்பட்டது.அதுமட்டுமின்றி இளங்கோவடிகள் பத்தினி வழிபாடு என்னும் புதிய வழிபபாட்டையும் புகுத்திக் காட்டியுள்ளார்.

 

இந்திர விழாபற்றி விளக்கமாகக் கூறப்பட்டிருப்பதில் இந்திரவழிப்பாட்டையும், மதுரையிலும், புகாரிலும் திருமால் கோயில் அமைந்திருந்ததையும், செந்தில், செங்கோட்டில் செவ்வேள் கோயிலும், சிவபிரானைப் பிறவாயாக்கைப் பெரியோன் என்றும் கூறுகிறார். குன்றக்குரவையில் வேலனையும், கவுந்தியடிகள் வாயிலாக  அருகச்சமயக் கோட்பாட்டையும், மதுரை, புகாரில் புத்ததேவன் பள்ளி இருந்ததையும் காட்டுகிறார்.  இதன் மூலம் சமயப் பொதுமை திகழ்ந்த பாங்கினையும், சமயக் காழ்ப்பற்றிருந்த சீர்மையினையும் அடிகளார் எடுத்துக்காட்டித் தமிழரின் சிறப்பினைச் சொல்கிறார்.

 

தொழில்கள்

 

தமிழர்கள் பல்வேறு தொழில்களில் சிறப்புற்றிருந்தனர் என்பதை இளங்கோவடிகள் புகார் நகரச் சிறப்பில்  தெளிவாகக் கூறியுள்ளார். மருவூர்ப் பாக்கத்தில் வாழ்ந்த தொழிலாளர்களை வரிசைப்படுத்துகிறார். காருகர், சஞ்சகார், தச்சர், கொல்லர், கண்ணுள் வினைஞர், தட்டார், பண்ணிட்டு ஆளர், செம்மார் என்றும் கடற்கரைப்பகுதியில் மீன்பிடித்தல், படகு செய்வது, உப்பு விளைத்தல் தொழில் செய்பவர் பற்றியும் கூறியுள்ளார்.

 

ஆடுவதையும் பாடுவதையும் தொழிலாகக் கொண்டவர், தோரிய மடந்தையர், தலைப்பாட்டு இடைப்பாட்டுக் கூத்தியர், பால் வெண்ணெய் விற்கும் கோவலர், தேன் எடுத்தல், தினை குற்றுதல், தினைப்புனம் காத்தல் போன்ற தொழில் செய்பவர் பற்றியும் கூறியுள்ளார்.

 

காவிரிப்பூம்பட்டினம் வணிகச் சிறப்புடைய நகராகத் திகழ்ந்தது.அந்நகரில் மணப்பொருள்கள், பட்டு, பவளம், முத்து, எண்வகைக் கூலம், மரப்பொருள்கள், வெண்களப்பொருள்கள் குவித்து விற்பனைத் தொழில் செய்பவர் கணக்கற்றோர் இருந்தனர்.

 

நாளங்காடி, அல்லங்காடி என எப்பொழுதும் இரவு பகல் இடையறாது  வணிகம் நடைபெற்றது. வெளிநாட்டவர் வந்து குவிந்திருந்தனர்.இறக்குமதி, ஏற்றுமதி வணிகம் சிறப்புற நடைபெற்றது.வகை  தெரிவு  அறியா  வளந்தலை மயங்கிய  அரசுவிழை  திருவின்   என்ற வரிகளால் தந்தப்பொருள்கள், போர்க்கருவிகள் குவிந்திருந்த தன்மையை அறியலாம்.

 

தமிழர்களின் தொழில், வணிகச் சிறப்பினை மிக அருமையாக புகார், மதுரை, வஞ்சி நகர வருணனைகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.


கலைச்சிறப்பு

 
            ஆயகலைகள் அறுபத்து நான்கும் சிலப்பதிகாரக் காலத்தில் சிறப்புற்றிருந்தன.

            இருவகை  கூத்தின்  இலக்கணம்  அறிந்து 

          ……………………………………………………

          ஆடலும்  பாடலும்  பாணியும்  தூக்கும் 

          …………………………………………….

          ஆடற்  கமைந்த  ஆசான்….(அரங்கேற்று காதை12-25 )

பதினான்கு கூத்துகள், பதினோர் ஆடல்களில் சிறப்புற்றிருந்தனர் என்பதை இப் பாடல் வரிகளால் அறியலாம்.

 

            யாழும்  குழலும்  சீரும்  மிடரும் 

          …………………………………

          அசையா  மரபின்  இசையோன்  (அரங்கேற்று காதை26-36 )

பெரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டுயாழ் என நான்கு வகை யாழ், மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி ஆகிய வற்றால் ஆன ஐந்துவகைக் குழல்களில் இசையமைத்துப் பாடும் திறம் பெற்றிருந்தனர்.  கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை போன்றவைகளில் இசைக்கலையின் மேன்மையினை அறியலாம்.

 

ஓவியஎழினி, ஓவியவிதானம், பூதரை எழுதி, சித்திரப் படத்துள் புக்கு செழுங்கோட்டின் சித்திரச் சிலம்பு, சித்திரக் கம்மி என்ற பாடல் வரிகளால் ஓவியக்கலை உன்னதநிலையில்  இருந்ததை அறியலாம்.  ஆடல் அரங்கத்தில் பல்வேறு வகையான  ஓவியங்கள், வண்ணந்தீட்டிய தீரைச் சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

 

கட்டடக்கலையிலும் ஓங்கியிருந்தமை கோவலனின் எழுநிலை மாடம், காற்றைப் பதப்படுத்தும் சாளரங்கள் அமைந்த அரண்மனைக் கட்டடம், நிலாமுற்றத்துடன்  கூடிய செல்வர் மாளிகைகள், கலங்கரை விளக்கம், இந்திர விகாரம் ஆகியன கட்டடக் கலையில் தமிழர் சிறப்புற்றிருந்தனர் என்பதைப் பறை சாற்றுகிறது.


பழக்கவழக்கங்கள் 

 

இறைநம்பிக்கையுடன் மக்கள் வாழ்ந்தனர்.ஊழ்வினை வலிது என நம்பினர்.செயல் செய்யும் முன்னர் நிமித்தம் பார்த்தனர்.நல்ல நேரம் பார்த்து தொடங்கினர்.தீய சகுணங்கள் கண்டு கலங்கினர். கோவலன் சிலம்பை விற்கப் புறப்படும் பொழுது ஆயர்களின் வீட்டில் குடத்துப்பால்  உறையவில்லை, மறிகளின் கழுத்துமணிகள் அற்றுவீழ்ந்தன, இமிலேறு எதிர் வருதல் ஆகியன தீ நிமித்தமாக எண்ணி அச்சம் கொண்டனர்.

 

நகரினைப் பூதங்கள் காப்பதாகவும், தவறு செய்பவர்களைப் பூதங்கள் விழுங்கிவிடும் என்றும் நம்பினர்.கனவுகள் பின்னால் நடக்கும் நிகழ்வுகளுக்கு முன்னோட்டம் என்று கூறினர்.பெண்களுக்கு வலக்கண் துடித்தால் நன்மையெனவும், இடக்கண் துடித்தால் தீமை எனவும் கருதினர்.

 யானை  எருத்தந்து  அணி  இழையார்  மேல்  இரீஇ  மாநகர்க்கு  ஈந்தனர்  மணம்   என்று திருமண நிகழ்ச்சியால் பெண்களை யானை மீது ஏற்றி வலம் வரச்செய்து ஊரார்க்கு அறிவித்தனர்.

 

மாமுது  பார்ப்பான்  மறைவழி  காட்டிடத்  தீவலஞ்  செய்து   மணவிழா நடைபெற்றது. குலமகளிர் தனிக்குடித்தனமாக இல்லறம் நடத்த பெரியோர்கள் அனுமதி அளித்திருந்தனர்.விருந்தினரை உபசரித்தல், அறவோர்க்களித்தல், அந்தனர் ஓம்பல் போன்றவை இல்லறத்தார் கமமையெனக் கொண்டிருந்கனர்.  கணவன்மார்களுடன்  துணைவியர் புனல் விளையாட்டு, பொழில் விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.

 

விழாக்களின் போது  தம்முடைய வீடுகளை மட்டுமன்றி தாம் வாழும் தெருக்களையும் ஊரையும் தோரணம், கும்பம், பாலிகை, பாவை விளக்கு போன்றவைகளால் அலங்கரித்தனர்.  மக்கள் அனைவரும் ஒன்று கூடி விழாக்களைச் சிறப்புறக் கோண்டாடினர்.


முடிவுரை


தமிழர்கள்  நாகரீகத்தில்  உயர்ந்தவர்களாகவும், பண்பாட்டில்  சிறந்தவர்களாகவும், பல்வகைக் கலைகளில் திறன் பெற்றுப் போற்றியவர்களாகவும், தொழில் வளத்தில் மேன்மையுற்றவர்களாகவும், கடல்கடந்தும் வாணிபம் செய்தவர்களாகவும் இருந்தனர்.   பல்வேறு சமயப் பற்றுடையவர்களாக இருந்தாலும் சமயக்காழ்ப்பின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.பெண்கள் சமவுரிமை பெற்றவர்களாக இருந்தனர்.   மன்னர்கள்  செங்கோல் வழுவாமல் ஆட்சி செய்து மக்கள் நலனே தம் நலனாகப் பேணினர். 

 

சிலப்பதிகாரக் காப்பியம் தமிழரின் செம்மையான வளமான பண்பாட்டின் கருவூலமாகவும், சிறந்த வாழ்வியலின் காட்டாகவும் திகழ்கிறது என்றால் அது மிகையன்று.


- புலவர் பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

 

by Swathi   on 25 Nov 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.