|
||||||||||||||||||
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''! |
||||||||||||||||||
இரட்டை வழக்குமொழியாகிய தமிழ் - எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்ற இரண்டு இரட்டைக் குழந்தைகளின் தாயாகிய தமிழ்மொழியானது , வரலாற்றுத் தொன்மை, வரலாற்றில் தொடர்ச்சி, தொடர்ந்த வளர்ச்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளையும் உடைய மொழி என்பதில் ஐயமே இருக்கமுடியாது!
ஆனாலும் சிலர் பேச்சுத் தமிழைக் ''கொச்சைத்தமிழ்'' என்று கருதுகிற நிலைபாடு இன்று நீடிக்கிறது!
இந்தப் பதிவில் எந்தவகையிலும் நான் எழுத்துத்தமிழின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் குறைத்து மதிப்பிடவில்லை . . . மதிப்பிடமாட்டேன் என்பதை இங்குத் தெளிவாகக் குறிப்பிடுகிறேன்!
தமிழர்கள் காலையில் எழுந்ததுமுதல் . . . இரவு படுக்கைக்குச் செல்கிற வரை ... தங்கள் உரையாடல்களுக்குப் பயன்படுத்துகிற வழக்கு பேச்சுத்தமிழ்!
ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாளில் எழுத்துத்தமிழைப் பயன்படுத்தாமல்கூட தனது அன்றாட அலுவல்களை மேற்கொண்டிருக்கமுடியும்! அன்று அவருக்கு எழுத்துத்தமிழைப் பயன்படுத்தும் செயல்கள் - மடல்கள், கட்டுரைகள், நூல்கள் எழுதுவது, மேடைகளில் சொற்பொழிவு ஆற்றுவது போன்ற செயல்கள் - தேவையில்லாமல் இருந்திருக்கலாம்! ஆனால் பேச்சுத்தமிழைப் பயன்படுத்தாமல் இருந்திருக்க முடியாது ( அன்று அவர் பேசா நோன்பு கடைபிடித்தாலொழிய!) !
தமிழகத்தில் பேச்சுத்தமிழைத் தெரிந்திராத ஒரு தமிழர் ( ஆங்கிலப் பிரியர்களை விட்டுவிடுங்கள்!) இருக்கவேமுடியாது! ஏனென்றால் குழந்தைகள் பிறந்து வளரும்போதே, மற்ற உடல் வளர்ச்சிகளைப்போன்று, இயற்கையாகவே பேச்சுத்தமிழைப் ''பெற்றுக்கொள்கிறார்கள்''!
ஆனால் எழுத்துத்தமிழைப் பள்ளிகளிலோ அல்லது வேறு வகையான முறைசார் கல்விமூலமாகவோத்தான் ஒருவர் ''கற்றுக்கொள்ளமுடியும்'' ! இன்றும் 100 விழுக்காடு மக்களுக்கும் முழுமையாக ''எழுத்தறிவைக் '' கொடுக்கக்கூடிய அடிப்படை கல்வி வளர்ச்சி தமிழகத்தில் நீடிக்கவில்லை! எழுத்துத்தமிழ்க் கல்வியைப் பெறமுடியாத சூழல்களில் இன்றும் தமிழகத்தில் பத்தாயிரக்கணாக்கானோர் - ஏன் இலட்சக்கணக்கானோர் - நீடித்துவருகின்றனர்!
தொன்மைவாய்ந்த தமிழ்மொழி தனது வரலாற்று வளர்ச்சியில் எந்தவித இடைவெளியும் இல்லாமல் இன்றும் தொடர்ந்து நீடிப்பதற்கு அடிப்படைக் காரணமே ... பொதுமக்களின் கருத்தாடல் மொழியாகப் பேச்சுத்தமிழ் நீடித்ததே காரணம் ! இதை நம்மால் மறுக்கமுடியாது!
செவ்விலக்கியங்களையும் செவ்விலக்கணங்களையும் உருவாக்குவதற்கு உதவிய எழுத்துத்தமிழும் வரலாற்றில் இடைவெளி இல்லாமல் நீடித்தது என்பது உண்மை! ஆனால் அது கற்றறிந்த புலவர்களின் ஊடகமொழியாகத்தான் நீடித்தது!
தமிழ் இனத்தின் நீடிப்புக்கும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் உலக அளவில் தமிழ்மொழியின் சிறப்புக்கும் . . . புலவர்களின் வாயில் தவழ்ந்த எழுத்துவழக்கு ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், பொதுமக்களின் வாயில் தவழ்ந்த பேச்சுத்தமிழே உயிர்நாடி என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை! தமிழகத்தின் பொருளாதார உற்பத்தியில் - விவசாய உற்பத்தியில் - பயன்படுத்தப்பட்ட வழக்கு பேச்சுத்தமிழேயாகும்! இன்றும்கூட தமிழ் பயன்படுகிற உற்பத்தி, வணிகத் துறைகளில் பேச்சுத்தமிழே கருத்தாடல்மொழியாக நீடிக்கிறது!
பண்டைத் தமிழகத்தில் ''செவ்விலக்கியப் படைப்புக்களுக்கு'' எழுத்துவழக்கே பயன்பட்டதுபோல, தமிழ்ச்சமுதாயத்தின் அடிப்படை பொருள் உற்பத்திக்குப் பேச்சுவழக்கே பயன்பட்டது என்பதை மறுக்கமுடியாது! மேலும் பொதுமக்களுக்கான கலை இலக்கியங்களில் பேச்சுவழக்கே பயன்பட்டுள்ளது !
பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் கிடையாது என்றும் ஒரு சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்! இது தவறான ஒரு கருத்து! கருத்தாடலுக்கான கட்டமைப்பே இலக்கணம்! இந்தக் கட்டமைப்பு . . . இலக்கணம் . . . பேச்சுத்தமிழில் இல்லை என்றால், ஒருவர் பேசுவது மற்றொருவருக்கு எவ்வாறு புரியும்? ஒருவர் '' நாளய்க்கு நான் அதெப் படிச்சேன்'' என்று கூறுவாரா? உறுதியாகக் கூறமாட்டார்! 'நாளய்க்கு நான் அதெப் படிக்குறேன் / படிப்பேன்'' என்றுதான் கூறுவார்! ( வேறொரு சூழலில் 'நான் நாளய்க்கு வந்தேன்னு வச்சுக்கோங்க'' என்றும் சொல்லலாம்! அது வேறு!)
பேச்சுத்தமிழுக்கான இலக்கணம் மிகத் தெளிவான இலக்கணம்! எழுத்துத்தமிழுக்கு உள்ள கட்டமைப்பு அதற்கும் உண்டு! சொற்களின், இலக்கணவிகுதிகளின் எழுத்துவடிவங்கள் (ஒலியன் வடிவங்கள்) மாறியிருக்கலாம்! அவ்வளவுதான்!
மேலும் எழுத்துத்தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகளும் குறிப்பிட்ட . . . தெளிவான விதிகளின் அடிப்படையில்தான் நீடிக்கின்றன!
எனவே, பேச்சுத்தமிழை . . . மக்கள் வட்டார வழக்குகளை . . . ''கொச்சை வழக்கு'' என்று கூறுவது உண்மையில் தமிழ்மொழியின் உயிர்நாடியைப் புறக்கணிப்பதே ஆகும்! பேச்சு வழக்கு ''கொச்சைத் தமிழ்'' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
எழுத்து வழக்கை அதற்குரிய கருத்தாடல் செயல்களுக்குப் பயன்படுத்துவோம்! பேச்சுவழக்கை அதற்குரிய கருத்தாடல் செயல்களுக்குப் பயன்படுத்துவோம்! ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்று கருதுவதற்கு எவ்வித மொழியியல் அடிப்படையும் கிடையாது !
-தெய்வ சுந்தரம் நயினார்
|
||||||||||||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|