சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தி, சாந்தமாக காட்சியளிக்கிறது. எனவே மூக்கணாங்கயிறு இல்லை. மன்னன் இங்கு கோயில் திருப்பணியைத் துவங்கியபோது, இங்கிருந்த பூந்தோட்டத்தில் அம்பாள் சிலை கிடைக்கப்பெற்றான். பூங்குழலி என பெயர் சூட்டி அம்பாளுக்கு சன்னதி எழுப்பினான். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலம் இது. திருக்கார்த்திகை, ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். திருக்கார்த்திகையன்று சிவன் சன்னதியில் 27 நட்சத்திரங்களுக்கும் தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர். மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும். திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த திருமணத்தைக் கண்டவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை. |