LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF

தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

அறிமுகம்:

    பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் மூத்த தமிழறிஞர் இலக்குவனார் அவர்களின் மகன் ஆவார். சென்னை மாநிலக்கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நூலாசிரியர், எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர், ஆய்வு பொழிவாளர், இணையதள வல்லுநர், அயலகத்திலும் தமிழ் தொண்டாற்றி தமிழைப் பரப்பி வருபவர்.

    அமெரிக்காவில் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு தென் கிழக்காசியவியல் ஆய்வுத் துறையின் தமிழ் புலத்தில் சிறப்பு வருகை பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் விருந்தியல் விரிவுரையாளராக பணியாற்றியிருக்கிறார். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று விருந்தியல் பொழிவு ஆற்றியிருக்கிறார். இவரது Cluster of Stars எனும் நூல் அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தின் ஆசியவியல் பயிலும் மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது. மொரீஷியஸ் நாட்டின் மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் அரசுடன் இணைந்து நடத்திய திருவள்ளுவர் திருநாளில் சிறப்பு விருந்தினராக 2010ம் ஆண்டு அழைக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். 20க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். 400க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வழங்கியுள்ளார். இந்தியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் மற்றும் அயர்லாந்து போன்ற பல நாடுகளில் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். 50க்கும் மேற்பட்ட வலைப்பூக்களை உருவாக்கி அவற்றில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

    திருக்குறள் மாமணி விருது, பெரியார் விருது, திருவள்ளுவர் விருது, தமிழ் பரப்புநர் விருது, தமிழக அரசின் திரு.வி.க. விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ‘Blog King’ என்று அழைக்கப்படுபவர். தொடர்ந்து ஆற்றல்மிகு இயங்கி வரும் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார் அவர்களை நேர்காணல் செய்யும் முதல் நிகழ்வாக ‘தகைமை சால் தமிழறிஞர்கள்’ என்ற நிகழ்வு அமைகிறது.

தமிழ் மறத்தின் மொத்த வடிவம் பேராசிரியர் இலக்குவனார்

    தன் தந்தை இலக்குவனார் அவர்களைப்  பற்றிக் கூறும் வாய்ப்பு தனக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் அளிப்பதாகப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் கூறுகிறார். ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று கூறிய நக்கீரரை நாம் கண்டதில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்தார் என்று சொன்னால் அவர் இலக்குவனார் அவர்கள் தான் என்று கூறலாம். இலக்குவனார் அவர்கள் மாணவராக இருந்த போது கல்லூரி முதல்வர் அவர்கள் கூறிய கூற்றிலிருந்த தவறினைச் சுட்டிக்காட்டினார். தமிழுக்கு ஒரு தீங்கு நிகழும் போது கிளர்ந்து எழும் மறவராக இலக்குவனார் அவர்கள் விளங்கினார். 

    சென்னை வரலாற்றில் ‘கலைகளின் ஆர்வலர்’ என்று குறிப்பிடப்படும் ஆளுநர் ஒருமுறை ‘தமிழ் பெண்கள் தாராளமனம் கொண்டவர்கள்’ என்று தரக்குறைவாகப் பேசினார். சொன்னவர் ஆளுநர் என்பதால் அதனை எதிர்த்து யாரும் கேள்வி கேட்காத நிலையில் இலக்குவனார் அவர்கள், தான் நடத்திய ‘திராவிட கூட்டரசு’ என்ற பத்திரிக்கையில் ஆளுநரைக் கடுமையாகக் கண்டித்து தலையங்கமும் எழுதி, சிறப்புக் கட்டுரையும் எழுதி, அதை ஆளுநருக்கும் அனுப்பினார்.

    அப்போது கல்வி அமைச்சராக இருந்த சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவதற்குத் தகுந்த ஆதாரம் காட்டுங்கள், இலக்கியங்களில் எங்கே தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது? என்று கேட்க. இலக்குவனார் அவர்கள், தமிழ் கூறும் நல்லுலகம் தொடங்கிப் பல சான்றுகளை மடலாக எழுதி அக்கல்வி அமைச்சருக்கு அனுப்பினார். அதன் பிறகே அக்கல்வி அமைச்சர் காமராசரின் வழி ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டினர்.

    அதுமட்டுமில்லாமல் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் குமரி முதல் சென்னை வரை ‘தமிழ் உரிமை பெருநடை பயணம்’ என்ற ஒன்றை அறிவிக்கிறார். தமிழ் பயிற்று மொழியாகக் கல்லூரிகளில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக அப்பயணம் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு 49 இளைஞர்கள் இசைவு தந்து இரத்தத்தால் கையெழுத்திட்டனர். ஆனால் அப்பயணம் தொடங்குவதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டார். இரண்டரை மாதம் சிறைத்தண்டனை கிடைத்ததோடு, கல்லூரி பேராசிரிய பணிநீக்க ஆணையும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இருந்தும் சிரித்த முகத்தினுடனே வெளிவந்தார். அவரை ஊதியம் அதிகம் தருவதாகக் கூறி  பணிமாற்ற ஆணை வழங்கினார்கள். அதற்கு அவர், 

‘ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே  

 கெட்டான் எனப்படுதல் நன்று’ என்று கூறி அவ்வாணையை அப்போதே கிழித்துப் போடச் சொன்னார். மேலும். ‘விலைபேசுகின்ற வாய்ப்புகள் உனக்கும் வரும், மயங்கி விடாதே’ என்று தன் மகனுக்கு அறிவுரையும் கூறினார். ‘நான் அவர் மகன் மட்டுமல்ல, ஒரு மாணாக்கன், ஒரு ஊழியன்’ என்று திரு. மறைமலை இலக்குவனார் அவர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றார். சுருக்கமாகத் தமிழ் மறத்தின் மொத்த வடிவம் என்று பேராசிரியர் இலக்குவனார் அவர்களைக் கூறலாம்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களின் இளமைக்காலம்:

    தன் தந்தை அடிக்கடி பணி மாறுதல் பெறுதலால் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் விருதுநகர், அரியமங்கலம், புதுக்கோட்டை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிப்படிப்பைப் படித்தார். பிறகு இளங்கலை விலங்கியல் பிரிவும், முதுகலைத் தமிழ் பிரிவும் தியாகராசர் கல்லூரியில் படித்தார். 1969ல் அரசுப்பணியில் சேர்ந்தார். 1974ல் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. 2005ல் ஓய்வு பெற்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் தன் ஆசிரியர்களிடம் பெருமதிப்பு வைத்து தொடர்பில் இருப்பது போல, இவரது மாணவர்களும் இவரிடம் தொடர்பில் உள்ளனர்.

நூலாசிரியராக மறைமலை இலக்குவனார் அவர்களின் பணி

    திறனாய்வுக் கோட்பாடுகளில் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். இலக்கியத்தை ஓர் உளவியல் ஆவணமாக, சமூகவியல் ஆவணமாக, வரலாற்று ஆவணமாகக் கருதுவது, பல்வேறு மானிடவியல்களின் திறவுகோலாகப் பார்ப்பது இவையனைத்தும் சிறப்பு வாய்ந்த திறனாய்வு அணுகுமுறைகள். இவ்வாறு பலதுறை சார் அணுகுமுறையில் இலக்கியத்தைப் பார்க்கும் போது அதன் நயமும், மென்மையும், மேன்மையும், ஆழமும், பொருள் விரிவும் மிகச்சிறப்பாகத் தெரியும் என்று கூறுகிறார்.

    உளவியல் பேரறிஞர் சிக்மண்ட் பிராய்டு அவர்கள் ‘ஈகோ ஒருவனைச் சராசரி மனிதனாக்கும், சூப்பர் ஈகோ அவனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும்’ என்கிறார். இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர், ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே..’ என்று கூறினார். இதனை உளவியல் ரீதியாகக் காணும் போது தான் கண்டறிய முடிகின்றது என்று  மறைமலை இலக்குவனார் அவர்கள் கூறுகிறார். மேலும் பெண் மயிலானது பல ஆராய்ச்சிகள் செய்து தான் தனக்குரிய ஆண்மயிலைத் தேர்ந்தெடுக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை ஆகும். இதனையறிந்த திருவள்ளுவர் ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ..’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். இவையனைத்தும் இலக்கியத்தைத் திறனாய்வு நோக்கில் அணுகும் போது வெளிப்படும் என்றும் கூறுகிறார்.

புதுக்கவிதையின் தேக்கநிலை

    புதுக்கவிதைகள் எழுச்சி பெற்ற காலத்தில் பலரும் புதுக்கவிதை எழுத முனைப்பட்டனர்.  வரம்பு மீறியும் எழுதத் தொடங்கினர். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் ‘புதுக்கவிதையின் தேக்கநிலை’ என்றொரு நூலை இயற்றினார். மூன்று அத்தியாயங்களைக் கொண்ட அப்புத்தகம் கடும் எதிர்ப்பினையும் பெற்றதாக மறைமலை இலக்குவனார் அவர்கள் குறிப்பிடுகிறார். கிழி நாக்குகள் என்ற முதல் பகுதியில் அருமையான படிமக் கவிதைகளையும், அவற்றின் நகல்களைப் போன்றே எழுதப்பட்ட கவிதைகளையும் சுட்டிக்காட்டினார். காகித முரசுகள் என்ற இரண்டாவது பகுதியில் வெற்று முழக்கங்களாக எழுதப்பட்ட கவிதைகளைச் சுட்டிக்காட்டினார். பால் வணிகம் என்ற மூன்றாவது பகுதியில் பால் உணர்வைத் தூண்டும் விதமாக எழுதப்படும் கவிதைகளைச் சுட்டிக்காட்டினார்.

    மேலும், முப்பெரும் உத்திகள், இலக்கியமும் உளவியலும், இலக்கியமும் சமூகமும், அங்கதத்திற்கொரு தமிழன்பன், வைரமுத்துவின் வைகறை மேகங்கள், மந்திர சிற்பியின் செந்தமிழ் விருந்து, கலையுலக போராளி மணிவண்ணன் போன்ற பல புத்தகங்களை இயற்றியுள்ளார். அண்மைக் காலங்களில் மின்னூலாகவும் வெளியிட்டு வருகிறார்.

நிலைத்து நிற்கும் கவிதைகள்:

    ஒரு கதை எழுதவேண்டும் என்றால் அந்த நேரத்தில் தோன்றுவதை எழுதிவிடலாம். ஆனால் ஒரு கவிதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல. சொல்லாடல் மட்டுமே  கவிதை என்பது கிடையாது.

1. அழகியல் அனுபவத்தின் வழியாக கவிதை பிறக்கலாம்  

2. வாழ்வில் உரைக்கின்ற உண்மைகள் வழியாக கவிதை பிறக்கலாம்  

3. இயக்கம் சார்ந்த சிந்தனையால் கவிதை பிறக்கலாம்.

இப்படி பிறக்கின்ற கவிதைகள் எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கும் என்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

சிறந்த மொழிபெயர்ப்பாளர்

    பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் ஆங்கிலத்தில் பாரதிதாசன் கவிதைகள் சரியாக மொழிபெயர்க்கப்படாததை உணர்ந்தார். எனவே தானே அவரது கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினார். How to succeed with a second wife, love is powerful weapon போன்ற கவிதைகளையும் எழுதியுள்ளார்.

    அப்போதிருந்த சிங்கப்பூர் அதிபர் லீக் வான்யூ அவர்கள் ஆவார்.  சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழியாக வருவதற்கு முழுமுதல் காரணமே அந்த அதிபர் தான் என்பதால் அவர்களின் பிறந்த நாள் விழாவை எழுத்தாளர்கள் இணைந்து கொண்டாடிட விரும்பினர். இதனால் அவர்கள் ஆளுக்கு ஒரு கவிதையாக 90 கவிதைகள் இயற்றி அவற்றை மொழிபெயர்க்கும் பொறுப்பைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனாரிடம் தந்தனர். மூன்று வாரங்கள் மட்டுமே இருந்த அந்த குறுகிய காலத்தில் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் அக்கவிதைகளைச் சிறப்பாக மொழிபெயர்த்ததோடு அதற்காக எந்த பணமும் வாங்கவில்லை. இதற்காக அவர் விழாவிற்கு அழைக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். மேலும் S.N..நாதன் அவர்கள் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுக்காக எழுதிய கடிதத்தில் ‘மறைமலை செய்த மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைந்திருந்தது, மிகக் குறுகிய காலத்தில் அவர் முடித்தது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று’ என்று குறிப்பிட்டார். இதனை மிகப்பெரிய விருதாகப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் கருதுகிறார்.

அயலகப்பணி்:

    1987ல் அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் மொழியியல் மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதற்குச் செல்லும் வாய்ப்பு பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்குக் கிடைத்தது. மேலும் 1997் கலிஃபோர்னியாவில் தமிழியல் இருக்கை ஒன்றை ஏற்படுத்தினர். அதற்காக இவர் நியமிக்கப்பட்டார். அந்த பல்கலைக்கழகம் ‘வார இறுதியில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நீங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும், வார நாட்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும், விமானச் செலவை பல்கலைக்கழகமே ஏற்கும்’ என்று கூறியது. இதனால் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்குப் பல நாடுகளுக்குச் சென்றதோடு தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பும் வாய்ப்பும் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். ‘இப்போது வந்த பணி இனி எப்போதும் இல்லை’ என்ற கோட்பாட்டுடன் தான் செயல்பட்டதாகவும். செயல்படுவதாகவும் கூறுகிறார்.

இக்கால இளைஞர்களுக்கு

    இக்கால இளைஞர்கள் தமிழுக்காகப் பல செயலிகளை உருவாக்கலாம். ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒரு செயலியை உருவாக்கலாம். ஒவ்வொரு தமிழறிஞர் குறித்தும் ஒரு செயலியை உருவாக்கலாம். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் தற்போது kuralvirtual.com என்ற இணையதளத்தைத் திருக்குறளுக்காக உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இதுபோல் இன்றைய தலைமுறையினர் தமிழைத் தற்கால தொழில்நுட்பத்துடன் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். பல ஆக்கப்பூர்வமான பணிகள் செய்தும் வெளியில் தெரியாத கவிஞர்கள் எராளமாகக் காணப்படுகின்றனர். மணிமண்டபம் கட்டுவதால் பயனில்லை. அதற்கு பதிலாக செயலியை உருவாக்கலாம். உலகிலேயே 48 மொழிகள் தெரிந்த நபர் அப்பாதுரை அவர்கள் மட்டுமே. அவரைப் பற்றி வெளியில் தெரியாமலே போனது. இன்று நோபல் பரிசு பலருக்கும் கிடைக்காததற்குக் காரணம் அவர்களின் படைப்புகளும், பணிகளும் அனைத்து மொழிகளிலும் பிரபலமடையவில்லை என்பதே. எனவே தமிழைக் கூடுமானவரை எங்கெல்லாம் கொண்டு செல்ல முடியுமோ அங்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்று இக்கால இளைஞர்களுக்கு அறிவுரைக் கூறுகிறார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள்.

ஊக்கமருந்தாக நினைத்த விருது:

    உலகிலேயே தன்னுடைய பேச்சிற்கு Disclimer (பொறுப்புத்துறப்பு) கொடுத்த ஒரே அறிஞர் பெரியார் மட்டுமே ஆவார். 2மணி நேரம் வரை ஆற்றல்மிகு பேசிவிட்டு ‘ஏதோ என்னுடைய அறிவிற்கு எட்டியதைக் கூறினேன், உங்கள் அறிவிற்குச் சரியெனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல் விட்டுவிடுங்கள்’ என்று கூறுவார். அப்படிப்பட்ட ஆன்றோர் பெயரால் கொடுத்த பெரியார் விருதைப் பெரிய ஊக்க மருந்தாகப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் கருதுகிறார். சிங்கப்பூரில் நாதன் அவர்கள் நூலில் குறிப்பிட்ட பாராட்டை மிகப்பெரிய விருதாக இவர் கருதுகிறார். ‘குறள்நெறி’ என்ற பத்திரிக்கையை மாணவர் ஏடாகப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் எடுத்து நடத்திய போது, பெருஞ்சித்திரனார் கூறிய இரண்டு விருத்தங்களையும் இன்றுவரை பெரிய ஊக்கமருந்தாக இவர் கருதுகிறார். விருதுகள் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும், விருதுகள் கிடைக்கவில்லையென்றாலும் அதனை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும் என்றும் கூறுகிறார்.

சொற்பொழிவாளர்களுக்கு

    இன்றைய சொற்பொழிவாளர்கள் தங்களது நாட்டம் எதில் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தனக்குப் பேசத் தெரியும் என்பதற்காகப் பேசக் கூடாது. தனக்கு எதில் விருப்பம் அதிகமோ, ஈடுபாடு அதிகமோ அதனை வரையறை செய்ய வேண்டும். இந்த வரையறை ஆழமான பொழிவிற்கு அடிப்படையாக அமையும். அதுமட்டுமில்லாமல் தமிழைத் தமிழாக ஒலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிடக் கூடாது. மீதமுள்ளவற்றை இந்தக் கட்டுரையில் எழுதியுள்ளேன், இந்த நூலில் உள்ளது எனக் கேட்பவர்களைப் படிக்கத் தூண்ட வேண்டும் என்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

மறைமலை என்ற பெயர்:

    பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களின் தந்தை இலக்குவனார் அவர்கள் மொழிக்கு மறைமலையடிகளையும், சமூகத்திற்குப் பெரியாரையும் வழிகாட்டியாகக் கொண்டவர்.  இதனால் தன் குழந்தைக்கு ‘மறைமலை’ என பெயர் வைத்ததாகக் குறிப்பிடுகிறார்.    தமிழ் செம்மொழித் தகுதியை அடைவதற்கு முக்கியக் காரணமே மறைமலை இலக்குவனார் அவர்கள் தான் என்று கூறலாம். ஆயிரம் காரணங்கள் கூறியும் அரசு அதை ஏற்காத போது மறைமலை இலக்குவனார் தான் ‘ஜார்ஜ் ஹார்ட்’ அவர்களை அணுகி, அரசுக்குக் கடிதம் அனுப்பச் சொன்னார். அதனை ஏற்று அவரும் இரண்டு பக்க அளவில் கடிதம் அனுப்பினார். அதன் பிறகே இ.ந்திய அரசு தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை வழங்கியது. 

    சீரிய பணிகளைச் சிறப்பாக ஆற்றிவரும் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறது வலைத்தமிழ்.

 

 

by Lakshmi G   on 01 Feb 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.