தமிழகத்தின் நம்பிக்கை தாய்த் தமிழ்ப்பள்ளி – திருப்பூர்.
தமிழ் வெற்றி நடைபோடும், மரியாதையோடு கோலோச்சும் ஒரு மனித நேய நேர்மைச் சமூகத்தைக் கனவு காணும் நல்ல உள்ளங்களுக்கு தமிழகத்தில் இன்னும் எஞ்சியிருக்கின்றன சில ஆக்கபூர்வமான நம்பிக்கைகள், அதில் முதன்மையாகக் குறிப்பிடவேண்டியது திருப்பூர் தாய்த் தமிழ்ப்பள்ளியைத்தான்.
திருப்பூர் தாய்த் தமிழ்ப்பள்ளி :
இப்பள்ளி பல அணுகுமுறைகளில் தமிழ்நாடு, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒரு மாதிரிப்பள்ளி எனில் அதுமிகையாகாது..
உலகத்தின் மிகச்சிறந்த சுயசிந்தனையும் ஆளுமையும், தயக்கமின்மையும் கொண்ட குழந்தைகளை தமிழகத்தின் மூலையில் உள்ள தாய்த்தமிழ்ப்பள்ளி உருவாக்கிறது என்றால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப்போவீர்கள்.
கல்விக்கான சமூகப் போராளியாக முனைப்புடன் இருவது ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றிய ந.தங்கராசு அய்யாவின் அயராது உழைப்பு இன்று அறிவுமிளிரும் தமிழ்மொட்டுக்களாய், தளிர்களாய் ,துளிர்களாய் மலர்ந்து நம்பிக்கையளிக்கிறது.
முழுமையாக சுய சிந்தனையை விரிவாக்கும் அணுகுமுறைகளைஒ வ்வொரு வகுப்பிலும் காணலாம். உள்ளூர் மற்றும் உலக செய்திகளை வாசித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ பலரும் சில நிமிடங்கள் அதனை கூறவேண்டும். புத்தகக் கல்வியை கரைத்து மதிப்பெண் இயந்திரங்களாக மாற்றுவதனாலேயே சமூகத்தின் மீது பெரிதும் அக்கரையற்ற குடிமக்கள் உருவாகும் இன்றைய நாளில் உள்ளூர், உலக நிகழ்வுகளோடு கல்வியை தொடர்புபடுத்தி சமூகத்தோடு இளையோருக்குண்டான பிணைப்பை, கடமையை உணர்த்துவது கல்வியாளர்களால் மிகவும் போற்றப்படும் அணுகுமுறை.
ஒவ்வொரு குழந்தையும் வருவோரிடம் அறிவியல், மொழிதொடர்பான கேள்விகளைக் கேட்கத்தூண்டுவது எங்கும் காணாத புதிய யுக்தி.
அதற்காக அவர்களை கட்டற்றுப் படிக்கத் தூண்டுவதும், கற்கின்ற ஆர்வத்திற்கு நல்ல நூற்களை வைத்திருப்பதும் பெரும் பள்ளிகளில் கிடைக்காத கல்வி வாய்ப்பு.
மாணவ விமர்சகர்கள்:
தாய்த் தமிழ்ப்பள்ளிக்கு வரும் விருந்தினர் பேசியபின்போ அல்லது பாடகர் பாடிய பின்போ மாணவர்கள் அவர்களைப் பற்றி மேடைக்கு வந்து உடனே அதில் தங்களுக்குப்பிடித்தவற்றை மட்டுமல்ல குறைநிறைகளை தயக்கமின்றி சொல்வது இதுவரை எங்கும் காணாத புதுமை.
அதில் சில மாணவிகள் பேச்சிலிருந்த கருத்து,”ழ” கர உச்சரிப்பு, ஆங்கிலக்கலப்பு, பாடலின் இனிமை என குட்டிசுப்புடுக்களாய் விமர்சித்து வியப்பிலாழ்த்தினர்.
மரபுக்கலைகள், நவீனநாடகத்திறன்:
கலை நிகழ்ச்சி என்ற ஈழச்சிக்கலை கண் முன் நிறுத்தி உணர்வு பொங்க இளம்பிஞ்சுகள் உறுதியேற்க ஒரு இனமாக வீழ்ச்சிற்ற நினைவுகள் மீண்டும் நெஞ்சை பிசைந்து கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் வழிந்தது.
அந்தக்கண்மனிகள் எடுத்துக் கொண்ட உறுதியோடு நாமும் உரிமையற்ற தமிழர்களின் நிலைமாற அடுத்ததலை முறை இந்தியாவையும் உலகையும் ஆளவேண்டிய அவசியத்தை முன் வைத்தேன்.
மனவளக் கலையிலும் வல்லமை:
ஆளுமைத்திறன் உள்ளிட்ட பலதிறன்களோடு மனத்தை ஒருமைப்படுத்தி, உலக நன்மையை விதைக்கும் மனவளக்கலையை மாணவ மாணவியர் பயிற்சி செய்து மன ஆற்றலைப் பெருக்க பழக்கியுள்ளது கூடுதல் பலம்.
நம்பிக்கை நாற்றங் கால்கள்:
நல்ல கல்வி, உலக அறிவு, அறிவியல் அறிவு இவற்றோடு கூடிய கூர்மதி படைத்த இளம்பிஞ்சுகளை ஆக்க பூர்வமான சிந்தனைகளோடு, சுய மரியாதை உணர்வோடு, உருவாக்கும் அருமையான கல்வி அமைப்பாக திருப்பூர் தாய்த் தமிழ்ப்பள்ளியைக்கருதலாம்.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது தமிழ்மொழி, தமிழினம் குறித்த வரலாற்றுத் தெளிவு. தமிழகத்தில் நம்பிக்கை நாற்றங்கால்களைத் தேடிக் கொண்டிருப்போர் அனைவருக்குமான ஒரு பதியத் தோட்டம் தான் தாய்த் தமிழ்ப்பள்ளிகள். கல்விக் களப் பணியாளர்கள்:
திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியை வழி நடத்தும் கு.ந.தங்கராசு அய்யா அவர்களையும் அரும்பணிக்காக, அவருக்குத் துணை நிற்கும் அவரின் துணைவியார் விஜயலக்குமி அம்மா அவர்களையும் இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.
அத்தோடு அந்த நோக்கத்தை புரிந்து கொண்டு இளந்தளிர்களை செம்மைப்படுத்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் ஊக்கத்துடன், புதுப்புது. நுட்பங்களைப் பயன்படுத்தி உண்மை அறிவு புகட்டும் ஆசிரியப் பெருந்தகைகள்
விஜயலக்குமி அம்மையார் பு அ எஸ்தர் உ க திரிபுரசுந்தரி ஜெ க ராஜலக்குமி பா ச சத்தியா ஆ ம கீதாஞ்சலி தா உ தமிழரசி முமுஅனுசூயா இல த தங்கமணி செ செ சிவசக்தி
ஆகியோருக்கு நன்றி சொல்வதுடன் அவர்கள் ஈடுபாட்டையும், அர்ப்பணிப்பையும் எண்ணி வியக்கிறேன். இவர்களுடன் தங்கராசு அய்யாவின் மகள் தமிழினியும் அவர் கணவரும், மகன் ஜீவபாரதியும் மற்றும் பலநண்பர்களும் உதவியாக உள்ளனர்.
சிறந்த பள்ளிக்கான மக்கள் விருது பெற்ற இப்பள்ளி பற்றிய கூடுதல் செய்திகள்:
ஆசிரியரும் மாணவரும் உற்ற தோழராய் பழகுவது. நண்பர்கள் போல் சேர்ந்து பகிர்ந்து உண்ணும் பழக்கம். கை, கட்டி வாய் பொத்தாமல் ஏன், எதற்கு என வினா எழுப்புவது. ஆசிரியர் முதலில் வகுப்பறைக்கு வந்து மாணவர்களை வரவேற்பது. வணக்கம், வெற்றி உறுதி என ஒருவரையொருவர் வணங்குவது. என சிறப்புக்களை எழுதிக் கொண்டே போகலாம்.
எனவே வருங்கால தமிழ் சமூகத்தைப் பற்றி கவலைப்படுவதை விட்டு இது போன்ற பள்ளிகளை ஆதரிப்பது அவசியம் வலுவான இளைய சமூகத்தை உருவாக்க உதவும். மிகக் கடினமான சூழலில் உயர் நிலைப் பள்ளிக்கும் திட்டமிடப்படுகிறது. அதற்கான முயற்சியில் அனைவரும் துணைநிற்போம். இங்கு வழங்கப்படும் கல்வியின் தனித்தன்மை, உயர்வு இவற்றின் பெருமிதம் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
இதனால் தாய்த் தமிழ் மாணவ மணிகளுக்கு ஏற்படும் அளவிட முடியாத தன்னம்பிக்கை அவர்கள் உலகத்தின் சிகரங்களைத் தொடவும், தலைமைப் பண்புகளோடு பலதுறைகளில் சாதிக்கவும் உதவும்.
தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் இது போல் சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்களால் தாய்த் தமிழ்ப்பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தாய்த் தமிழ்ப்பள்ளிகளை தாங்கி உயர்த்த வேண்டியது தமிழுள்ளம் படைத்த அனைவரது கடமையாகும்.
|