தென்றலுடன் பிறந்த பாஷை
பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரைகுறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு மேலிட்டவர்களாகித் தமிழ்மொழியே இறந்து போய்விட வேண்டுமென்றும் கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிறோம். இவர்கள் கிடக்க, மற்றபடிப் பொதுவாக இந்நாட்டில் ஆங்கிலம் கற்றோரெல்லாம் சுபாஷாபிமானம் என்பது மிகவும் குன்றியிருப்பது அன்றி, அதன் நயமறியாது திட்டுவதை நினைக்கும்பொழுது நமக்கு வருத்தமுண்டாகிறது. இதன் சம்பந்தமாகச் சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய மஹா வித்வான் ஸ்வாமிநாதையர் சொல்லிய வார்த்தையொன்று நமது நெஞ்சை விட்டு ஒருபோதும் அகலமாட்டாது. மேற்படி காலேஜ் தமிழ்ச் சங்கத்தில் ஒரு “மீட்டிங்’ நடந்தது. தமிழ் பாஷையின் அருமையைப் பற்றி ஏதோ பிரஸ்தாபம் வந்தது.
அப்போது ஸ்வாமிநாத ஐயரவர்கள் எழுந்து பின்வருமாறு பேசினார்: ஆங்கிலேய பாஷையின் இலக்கிய நூல்களில் எத்தனையோ அருமையான கருத்துக்கள் ததும்பிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். அந்தப் பாஷை எனக்குத் தெரியாது. அதனால் அவ்விஷயத்தில் ஒருவிதமான அபிப்பிராயமும் என்னால் கொடுக்கமுடியாது என்றபோதிலும் மேற்கண்டவாறு சொல்வோர் தமிழ் பாஷையிலே அவ்விதமான அருமையான விஷயங்கள் கிடையாவென்று சொல்லும்போது உடன் எனக்கு வருத்தமுண்டாகிறது. இவ்வகுப்பினர்களுடன் நான் எத்தனை முறையோ சம்பாஷணை செய்திருக்கிறேன். அந்தச் சமயங்களிலே நான் இவர்களது தமிழ் வன்மையைப் பரிசோதனை புரிந்திருக்கிறேன். இவர்கள் அத்தனை சிறந்த பண்டிதர்களென்று எனக்குப் புலப்படவில்லை. பழங்காலத்துத் தமிழ் நூல்களிற் பயிற்சியில்லாத இவர்கள் அவற்றைப்பற்றி இழிவான அபிப்பிராயம் கொடுப்பதுதான் வெறுக்கத் தக்கதாக இருக்கின்றது” என்று அப்பண்டிதர் முறையிட்டார். வாஸ்தவந்தானே? ஆனையையே பார்த்திராத குருடனா அதன் நிறம் முதலியவற்றைப் பற்றி ஓர் அபிப்பிராயம் கொடுக்க முடியும்? “”போப் முதலான விற்பன்னர்கள் இவர்கள் இருக்கும் திசை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக நம்மவர்களிற் சிலர் நடந்து கொள்கிறார்களென்று மேற்கூறப்பட்ட மித்திரன் குறிப்பிலே எழுதப்பட்டிருப்பதை நாம் முற்றும் அங்கீகாரம் செய்கிறோம் (இந்தியா-29-9-1906).
தமிழ் பாஷையின் இனிமை
பாற்கடலிலே பிறந்த மீன்கள் பாலைப் பெரிதாகப் பாராட்டுவது வழக்கமே கிடையாதென்பது நெடுங்காலமாக வழங்கிவரும் உண்மையாகும். அவ்வசனக் கருத்து முற்றும் மெய்யென்பதற்குச் சிறிது காலத்தின் முன்பு டாக்டர் போப்பையர் லண்டனில் ராயல் ஏஷியாடிக் சபையார் முன்பு செய்த உபந்நியாசத்திலே நல்லதோர் திருஷ்டாந்தம் அகப்பட்டது. திருக்குறள், திருவாசகம் என்னும் தெய்வீக நூல்களை பிரசுரித்திருப்பவரும் ஆகிய டாக்டர் போப்பைத் தமிழ்நாட்டாரில் பெரும்பான்மையோர் நன்கு அறிவார்கள். இவர் சொல்கிறார்: “”அநேகர் (அதாவது அநேக ஆங்கிலேயர்கள்) பிரெஞ்சு, ஜெர்மன், இடாலியன் முதலிய பாஷைகளைப் போய்ப் படித்துக்கொண்டு இடர்ப்படுகிறார்கள். இப்படிச் செலவிடப்படும் காலத்தைத் தமிழ் கற்பதில் செலவிட்டால் எவ்வளவோ விசேஷமாகும். நான் அநேக ஆங்கில மாதர்களுக்குத் தமிழ் கற்பித்திருக்கிறேன். அவர்களுடைய இதழ் நயத்திற்கும், செவிநுட்பத்திற்கும் அபிருசிக்கும் அந்தப் பாஷையைப்போல் எந்தப் பாஷையும் ஒத்துவருவதில்லை” என்கிறார். இவர் தமிழ் பாஷையின் இனிமையையும் பெருமையையும் குறித்து எவ்வளவோ சிலாக்கியமாகப் பேசியிருக்கிறார். ஆனால், தமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்த நம்மவர்களோ அந்தப் பாஷையின் இனிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றேனும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்றேனும் சிறிதும் முயல்வதில்லை.
÷தமிழ் மட்டும் தெரிந்த ஜனங்களின் சிறுபாலார் தமிழ் விஷயத்தில் ஒருவிதமான மூடபக்தியாவது வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆங்கிலம் கற்றுணர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் நமது கடமையை முற்றும் மறந்து விடுகிறார்கள். இவர்கள் தமிழ்ப்பாஷை விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தையும் இவ்விஷயத்திலே இவர்கள் வகிக்கும் அசிரத்தையையும் டாக்டர் போப்பைப் போன்ற ஆங்கிலேயர்கள் அறியும் பக்ஷத்தில் இவர்கள் இருக்கும் திசையை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக நம்மவர்கள் நடந்து கொள்கிறார்கள். (சுதேசமித்திரன், செப்.1906)
தமிழ்
கல்கத்தாவிலிருந்து வெளிப்படும் “மாடன் ரெவ்யூ’ என்ற மாதப் பத்திரிகையின் தை-மாசி ஸஞ்சிகையை நேற்றுப் பொழுதுபோக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ் சரித்திர பண்டிதர் ஸ்ரீநீலகண்டையர் ஒரு சிறிய கடிதமெழுதியிருக்கிறார். ஏற்கனவே மேற்படி பத்திரிகையில் ஸ்ரீ யது நாத ஸர்க்கார் என்ற வித்வான் எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து ஸ்ரீஐயர் தமது கருத்துக்களை வெளியிடுகிறார்.
÷கலாசாலையிலே சரித்திரப் பாடங்களை இங்கிலீஷில் கற்றுக் கொடுப்பது பயனில்லாத வீண்தொல்லையாக முடிகிறதென்றும், தேச பாஷைகளிலே கற்றுக்கொடுத்தால் நல்ல பயன் விளையுமென்றும் ஸ்ரீ ஸர்க்கார் தமது அனுபவத்திலே கண்ட செய்தியைச் சொன்னார். அதற்கு நமது திருநெல்வேலிப் பண்டிதர் சொல்கிறார்: “”பாஷைத் தொல்லை பெருந்தொல்லையாகவே இருக்கிறது. ஆனால் எனது ஜில்லா, எனது காலேஜ் சம்பந்தப்பட்ட வரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷிலே கற்றுக்கொடுப்பதைக் காட்டிலும் தேச பாஷையில் கற்றுக்கொடுப்பது அதிகப் பயன்படுமென்று சொல்வதற்கில்லை. எனது மாணாக்கர்களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும் வழக்குப் பிழைகளும் நிறையச் செய்தபோதிலும் மொத்தத்திலே தமிழைக் காட்டிலும் இங்கிலீஷை நன்றாக எழுதுகிறார்கள். சரித்திர விஷயங்களை வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலீஷ்தான் தமிழைக் காட்டிலும் நன்றாகச் சொல்ல வருகிறது”.
÷இங்ஙனம் எழுதுகிற ஸ்ரீநீலகண்டையரின் நிலைமையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள், சாஸ்திரப் பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை!! புதுமை!!!
÷மேலும், இவர் தமக்குத் தாய்மொழி தெரியாதென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப்போனார் என்பது எனக்கு அர்த்தமாகவில்லை. ஜப்பானியர், சீனர், நார்வேக்காரர், ஸ்விஸ் ஜாதியார், இத்தாலி தேசத்தார், ஹாலந்துக்காரர் முதலிய உலகத்து ஜாதியாரெல்லாம் நம்மை அறிவிலும் சாஸ்திரங்களிலும் பாஷைத் திறமையிலும் தாழ்வென்று நினைத்து வந்தார்கள். இப்போதுதான் ஹிந்துஜாதியாராகிய நாம் காட்டு மனிதரில்லை, வாலில்லாத குரங்குகளில்லை, நமக்குப் பாஷைகள் இருக்கின்றன; நமக்குள் சாஸ்திர விற்பன்னர்கள் இருக்கிறார்கள்; கவிகள் இருக்கிறார்கள் என்று நம்மவரிலே சிலர் வெளியுலகத்தார் தெரிந்துகொள்ளும்படி செய்து வருகிறார்கள். இதற்குள்ளே தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தானத்து வகுப்புக்களைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மிலே சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்புண்டாக்குகிறது. என்னுடைய சொந்த அபிப்பிராயத்தைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.
÷உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையிலே மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம் போல் விளங்குகிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும், திறமையும், உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமில்லை.
÷இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால், போன நிமிஷம் போய்த்தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலகம் முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அதுவரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச் சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்.
|