LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

தாயுமானவர் சமரச நெறி  -முனைவர்.மு. வள்ளியம்மை

-முனைவர்.மு. வள்ளியம்மை                  

சோழ நாட்டுத் திருத்தலங்களுள் திருச்சிராப்பள்ளி சிறப்புடையது. அத்தலத்துக் குன்றுடைய பெருமானை ‘நன்றுடையான்’ என்றும் ,’தீயதில்லான்’ என்றும் கூறி உள்ளங் குளிர்ந்தார் திருஞான சம்பந்தர். அத்திருமலை தந்த ஒரு தவச் செல்வர் தாயுமான  அடிகள்.இவரது காலம் இன்றைக்கு ஏறக் குறைய முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டது எனலாம்.

             தமிழ் அறிந்தவரில் தாயுமானவரை அறியாதார் ஒருவரும் இரார்.அடிகளது பாடல் பக்தியும் ஞானமும் நிரம்பி வழிவன;பக்தி ஞானம் என்ற இரு துறையிலும் நிற்போர் அடிகளது பாடலை உணர்ச்சி பெருக ஓதி ,உள்ளம் உருகி நிற்பர்.

                அடிகள் பாடலைச் சிலர்’பக்தி வெள்ளம்’ எனப் பாராட்டி மகிழ்வர்.சிலர் ’வேதாந்தம்’ எனப் புகழ்வர்;சிலர் ’சித்தாந்தம்’ எனப் போற்றிப் பயன் கொள்வர். சிலர் ’வேதாந்த சித்தாந்த சமரச நெறி’எனக் கொண்டாடுவர்.எனவே தாயுமானவரது நெறி பற்றிச் சிறிது நோக்குதல் இன்றியமையாதது.

                  “வேதாந்தம் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும்

                   நாதாந்தமோன நலமே!பராபரமே”      ----தாயுமானவர்

எது சமரசம்?

               சத்தத்தால் மட்டும் மக்களைக் கவரும் சொற்கள் சில உண்டு.அவற்றின் உண்மையான பொருள் என்ன என்பது பற்றிச் சிறிதும் சிந்தனை இல்லாமலேயே மக்கள் அச் சொற்களில் ஈடுபடுவார்கள்.அத்தகைய சொற்களில் ’சமரசம்’ என்பதும் ஒன்று.

               ’சமரசம்’ என்றால் அனைத்துப் பொருள்களையும் ஒரே வகையாக வேறுபாடின்றி,அஃதாவது உயர்வு ,தாழ்வு பாராட்டாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது எனப் பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள்.சமரசம் என்பதன் உண்மைப் பொருள் இதுவா எனச் சிந்திக்க வேண்டும்.’விலங்கொடு மக்கள் அனையர் ‘என்றும் ‘பொன்னொடு இரும்பனையர்’ என்றும் ‘வேம்பினோடு தீங்கரும்பு விரவி’என்றும் மற்றும் இவ்வாறு சொல்லப்படுவன பலவும் பொருள்களின் தரம் அறிந்து அவற்றைக் கொள்ளல் வேண்டும் என்பதையே வலியுறுத்தி நிற்கின்றன.

               அவற்றிற்கு மாறாக ‘விலங்கும் மக்களும் ஒரு தன்மையரே’ என்றும் ,’பொன்னும் இரும்பும் ஒரு தரத்தனவே’ என்றும்,’வேம்பும் கரும்பும்’ஒரே சுவையுடையன என்றும் கூறுபவரோ,அல்லது கொள்பவரோ ஒருவரும் இலர்.ஆனால் மக்களும் ,பொன்னும் கரும்புந்தான் உலகத்தில் இருத்தல் வேண்டும்;மற்றைய விலங்கு,இரும்பு, வேம்பு இவை உலகத்தில் இருத்தல் கூடாது என்பதும் இல்லை. ’சிறு துரும்பும் பல்குத்த உதவும் ‘என்பது போல எல்லாப் பொருளும் தேவைதான். ஆனால் தேவையே பொருளின் தரத்தை மாற்றி விடாது என்பதைச் சமரசம் பேசுகின்றவர்கள் நினைவில் வைக்க வேண்டும்.

                ’சமரசம் ‘என்பது தாயுமானவர் பாடல்களில் ஆங்காங்கு பரவலாகவே காணப்படுகிறது.சமய நெறியில் சமரசத்தை முதற்கண் காட்டியவர் தாயுமானவரே ஆவர். ஆயினும் அவரது சமரசம் சிந்தனைக்கு வேலைதரும் ஒரு சமரசம் ஆகும்.

உண்மைச் சமரசம்:

                சமரசம் ஒரு நல்ல பண்பே;ஆனால் அத்ற்குத் தவறான பொருள் கொண்டுவிடக் கூடாது.ஒரு குடும்பத் தலைவனுக்குக் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் சம்மாகப் பாவிக்கும் பண்பு வேண்டுவதுதான் .ஆனால் தந்தை ,மகன்,அண்ணன், தம்பி, தாய், மனைவி,தமக்கை ,தங்கை,என்ற எல்லாரிடத்தும் ஒரேவகையாக அவன் இருத்தல் வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது.அதுபோலத்தான் எல்லாப் பொருளிலும் கொள்ளவேண்டும்.அதாவது எந்தப் பொருளிலும் காய்தல்,உவத்தல் கொண்டு அதன் தரத்தைக் குறைத்தோ ,அல்லது உயர்த்தியோ மதித்தல் கூடாது.அதனதன் தரத்திற்குரிய மதிப்பை அவற்றிற்குத்தரல் வேண்டும் .அதோடு எந்தப்பொருளையும் தனது விருப்பு வெறுப்பினால் அழிக்கவோ ஆக்கவோ கூடாது.அதனதன் தரத்தில் அதையதை வாழவிடவேண்டும்.இதுதான் உண்மைச் சமரசம்.

தாயுமானவரது நெறியும் சித்தாந்த நெறியே

                திருவள்ளுவர் பொதுவாகப் பலர் நினைக்கின்ற சமரசத்தை ‘பொது நோக்கு ‘என்றும் உண்மைச் சமரசத்தை ‘வரிசை நோக்கு’ என்றும் வைத்து,அரசனுக்கு பொதுநோக்கு மட்டும் இருந்து வரிசை நோக்கு இல்லாவிடின் அவன் நாட்டில் உயர்ந்தோரும் ,நல்லோரும்,திறமை மிக்கவர்களும் இருக்க மாட்டார்கள் என்றும் வரிசை நோக்கு இருந்தால் எல்லாரும் அவனைச் சேர்ந்து வாழ்வர்; ஒருவரும் அவனை விட்டு நீங்க மாட்டார்கள் என்றும் கூறுகிறார்.

                      “பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

                       அது நோக்கி வாழ்வார் பலர்”

 

என்பது அக்குறள்.இக்குறளின் கருத்தைப் புலவர் ஒருவர் ,

                       ”தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரைச்

                        சார்ந்தென்ன நீங்கில் என்ன”

என்று எளிய நடையில் கூறினார். இம்முறை எல்லாவற்றிலும் வேண்டுவதாயினும்,மிக உயர்ந்த பயனாகிய ஆன்மிக லாபம் தருகின்ற சமயத்துறைக்கு இது மிக மிக இன்றியமையாதது. சமயக் காழ்ப்புக் கூடாது;ஆனால் அதனதன் நிலைமைகளை உள்ளவாறு மக்கட்கு எடுத்துக் காட்டவே வேண்டும்.’சமரசம்,’ சமரசம்’ என்று பல இடங்களில் கூறுகின்ற தாயுமானவர் இவ்வாறு சமயத்தின் உண்மை நிலைகளையும் எடுத்துக் காட்டுகின்றார்.

               தாயுமானவர் காலத்தில் தமிழ் நாட்டில் மேலோங்கியிருந்த சில சமய வேறுபாடுகள் வேதாந்தம் ,சித்தாந்தம், சைவம் மற்றும் பிற சமயங்களும் ஆகும். ஆனால் தாயுமானவரது நெறி மரபு சித்தாந்த நெறி மரபே என்பது தெளிவாகையால்,அவரது நெறியும் சித்தாந்த நெறியே என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

வேதாந்த சித்தாந்த சமரசம்

              வேதாந்த சித்தாந்தங்களைப் பற்றி நன்கு உணராமலே தம்மை ’வேதாந்திகள்’,

என்றும் ‘சித்தாந்திகள்’ என்றும் சொல்லிக் கொண்ட பலர் ‘வேதாந்தமாவது ஏகான்ம வாதமே ‘ என்றும் ‘அத்துவிதம் ‘ என்பது கேவலாத்துவிதமே என்றும் ‘சித்தாந்தமாவது துவைதமே’ என்றும் கொண்டு இருந்தனர். அவற்றுள் வேதாந்திகள் என்போர்  சித்தாந்தம் ஒரு பக்தி நெறியே;அதில் அத்துவித ஞானம் இல்லை என்றும் ,’சித்தாந்திகள் என்போர் வேதாந்தம் மாயா வாதமாய் இம்மை மறுமை நலங்களைத் தராததோடு ஆன்ம லாபமாகிய மோட்சத்தையும் தர மாட்டாது எனவும் பலவாறாக தம்முள் மாறுபட்டு வாதங்கள் பல செய்து வந்தனர். இதற்கு முடிவாகத் தாயுமானவ அடிகள் வேதாந்தம் சித்தாந்தம் இரண்டும் பொருளால்

 

 ஒன்றே;அதைக் கூறும் முறைதான் வேறு;உண்மையை வேதாந்தம் பொதுவாகச் சுட்டுகிறது.சித்தாந்தம் அதனைச் சிறப்பாக விளக்குகிறது.இதனை அறிந்தவரே உண்மை வேதாந்திகளும் ,உண்மைச் சித்தாந்திகளும் ஆவார்;அவர் தமக்குள் முரண்பட்டு நில்லார். எனவே வேதாந்த,சித்தாந்த சமரசம் காண்பவரது நிலையே நன்னிலையாகுமென விளக்கி வந்தார்.

                 “ வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற

                         வித்தகச் சித்தர் கணமே”

                               “……………..வேதாந்த சித்தாந்த

                       சமரச சிவானுபூதி மன்ன”

என்பன போன்ற வரிகள் நினைவில் கொள்ளத்தக்கன.

அனைத்துச் சமயங்களும் ஒன்றே:

                     ” சித்தாந்தத்தை ‘துவிதமே’என்று கொண்ட அந்த வேதாந்திகளில் சிலர் ,பொதுவாகச்சித்தாந்தத்தைப் புறக்கணித்ததோடுஅதில் சொல்லப்பட்ட சரியை முதலிய டவ நெறிகளையும் புறக்கணித்து ஒதுக்குவாராயினர்.இது தாயுமானவர்க்குப் பெரிதும் வருத்த்த்தை அளித்திருக்கிறது.துவைத்த்திலிருந்துதான் அத்வைத்த்திற்குச் செல்ல வேண்டும் என்பது எல்லோர்க்கும் ஒத்த முடிபு. இதை வேறொரு கருத்தில் வேதாந்திகளும் சொல்லளவில் உடன்பட்டே வந்தனர்” என்பார் சண்முக தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் .

           அதனால்தாயுமானவர், ’எத்தகையோரும் சரியையாதி தவங்களைப் புறக்கணிக்காது கைக் கொள்ளல் வேண்டும்

 

என்றுஇருசாரார்க்கும் பொதுப்பட ,சமரச நிலையில் நயம்பட விளக்குகிறார்.அவைகளில்,

            ”வேதமுடன் ஆகம புராண இதிகாச முதல்

                   வேறுமுள கலைகள் எல்லாம்

              மிக்காக அத்துவித துவிதமார்க் கத்தையே

                     விரிவாய் எடுத்துரைக்கும்

              ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை

                       உண்டுபண்ணும் ஞானமாகும்

              ஊகம் அனுபவம் வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது

                        உபயவாதிகள் சம்மதம்

              ஆதலின் எனக்கினிச் சரியையா திகள் போதும்

                         யாதொன்று பாவிக்க நான்

               அது ஆதலால்,உன்னை நான் என்று பாவிக்கின்

                          அத்துவித மார்க்கம் உறலாம்  

                ஏது பாவித்திடினும் அதுவாகி வந்தருள்செய்

                          எந்தை நீ குறையும் உண்டோ

                இகபரம் இரண்டிலும் உயிரினுக் குயிராகி

                            எங்கும் நிறைகின்ற பொருளே!

என்ற பாடல் சிறப்பாகக் குறிப்பிட த்தக்கது.

          ” பஞ்சசுத்தி செய்து நின்னைப் பாவித்துப் பூசை செய்தால்

             விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே”

                     ”விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்

            அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே”

                     ” மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்

              வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே”

என்பன போன்றவற்றால் அடிகள் தவநெறியைப் பலர்க்கும் வலியுறுத்தினார்.

              சைவம் முதலாம் அளவில் சமயமும் வகுத்து,மேல்

                       சமயம் கடந்த மோன

               சமரசம் வகுத்த நீ,உன்னை நான் அணுகவுந்

                       தண்ணருள் வகுக்க இலையோ”

என்னும் பாடல் வரிகளால் ,அனைத்துச் சமயங்களும் உயிர்கள் பக்குவ பேதம் நோக்கி இறைவனால் வகுக்கப்பட்டவை என்பதே அடிகள் கருத்து என்பது நன்கு விளங்கும் .ஆதலால் அவரது சமரச நெறியின் தன்மையும் இனிது விளங்கும்.

 

 

        

                 

             

                

                  

by Swathi   on 07 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிலேடை-பகடி சிலேடை-பகடி
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.