|
||||||||
திருக்குறள் ஐம்பெரும் விழா - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி உரை |
||||||||
![]() சென்னை திருவள்ளுவர் அரங்கத்தில் பிப்ரவரி 11 -2024-ம் தேதி உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பில்
விழாவுக்குத் தலைமை தாங்கி, உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் நோக்கம் மற்றும் Thirukkral Translations in world Languages என்ற புத்தகத்தின் சிறப்பு குறித்து உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், வலைத்தமிழ் ஆசிரியருமான ச.பார்த்தசாரதி பேசும்போது, "அன்பார்ந்த தமிழ் உறவுகளே உங்கள் அனைவரையும் இந்த அருமையான நிகழ்விலே சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு வித்தியாசமான நிகழ்வு இதை ஒரு 80 அல்லது 100 பேரை வைத்து எளிமையாக நடத்திவிடலாம் என்றுதான் முடிவு செய்தோம். ஆனால், தமிழ் அதற்கான வடிவமைப்பை அதுவே உருவாக்கிக்கொள்ளும். யாரையெல்லாம் இதில் இணைத்துக்கொள்ள வேண்டுமோ அவர்களைத் தானாகவே இணைத்துக்கொள்ளும். அந்த அற்புத உணர்வை நான் ஒவ்வொரு நிகழ்விலும் உணர்ந்திருக்கிறேன். அப்படித்தான் இந்த நிகழ்விலும் நடந்துள்ளது. கிட்டத்தட்ட எங்கள் குழு இந்த நிகழ்வுக்காகக் கடந்த ஒரு வாரமாக இரவு பகல் உழைத்துள்ளது. இந்தப் புத்தகம் 98 பக்கங்கள் என முடிவு செய்து அச்சுப் பணி, பிழை திருத்தம் அனைத்தையும் முடித்துவிட்டோம். ஆனால், ஏதோ ஓர் உணர்வு இன்னும் வேண்டும் என எங்களுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதன் வானளாவிய எண்ண ஓட்டங்களால் 98 பக்கங்களிலிருந்து தற்போது 210 க்கும் மேலான பக்கங்களுடன் புத்தகம் இறுதி வடிவை எட்டியுள்ளது. அவ்வளவு தரவுகளைத் திரட்டி இதில் சேர்த்துள்ளோம். இந்த நிகழ்வின் சிறப்பு என்னவென்றால் இதற்குத் தலைவர் இல்லை, செயலாளர் இல்லை, பொருளாளர் இல்லை, பொருள் இல்லை, பெருமை இல்லை, வங்கிக் கணக்கு இல்லை, வசூல் இல்லை, பொன்னாடை இல்லை என்பதே சிறப்பு. அதனால், இங்கு வள்ளுவர்தான் தலைவர். நாங்கள் எல்லாம் கொள்கை பரப்புச் செயலாளர்கள். அதை வாழ்ந்து வாழ்க்கையின் வழியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தக்கூடிய வாழ்வியல் மனிதர்கள் நாங்கள். தமிழ் கடத்தல்காரர்கள். திருக்குறள் கடத்தல்காரர்கள். நம் படிப்பு, உயரம், பதவி, வயது, பொருளாதாரம் என எல்லாவற்றையும் தூக்கித் வைத்துவிட்டு திருக்குறளுக்காய் ஒன்றிணைந்துள்ளோம். பல மொழிபெயர்ப்புகளையும் வைத்துக்கொண்டு மீண்டும் திருக்குறளைப் படிக்கும் மாணவனாக மாறிவிட்டேன். தொழில்நுட்பத்துறையில் Vertical -Horizontal எனத் தொழில்நுட்பத்தைச் சொல்வார்கள். அதாவது அனைத்தையும் குறுக்கும் நெடுக்குமாகப் பிரிப்பது. அப்படியே இந்தத் திருக்குறளை ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்து உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் முதுநிலை கற்கும் மாணவர்களுக்கு வகைப்படுத்தி வருகிறோம். இது தலைவனுக்கானது, இது குழந்தைகளுக்கானது, இது பெரியவர்களுக்கானது, இது அரசியல்வாதிக்கானது எனத் தனித்தனியாகப் பிரித்து அதைக் கோர்வையாக்கி வருகிறோம். உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் நோக்கம் என்பது 1330 குறளை சொன்னால் தமிழக அரசு ரூ.15000 ஆயிரத்தையும், ஒரு விருதையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறது. இந்தச் செய்தியை நாம் தமிழ்ச் சமூகத்துக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். ஒரு மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் செய்யும் 2 பேருக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும் என்பதை இந்த புதிய அரசு பொறுப்பேற்றபின் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் முற்றோதல் பரிசு பெறலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. அது முதல்வரின் பெரிய மனதைக் காட்டுகிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கொடுங்கள் எங்களுக்கு அதைப்பறியெல்லாம் கவலை இல்லை என சில பெற்றோர் இருக்கிறார்கள். அதுதான் எங்களின் கவலை. நானும் என்னுடைய பணி, குடும்பம் எனச் சென்றிருக்கலாம். ஆனால், எனக்குத் தமிழ்ச் சமூகத்தை குறித்த அக்கறையும், கவலையும் உள்ளதால் என்னை இதுவரை பயணப்படுத்தி இருக்கிறது. நான் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மாணவன், அவருடனே பயணப்பட்டவன். எனவே சமூகத்திற்கு புரியவைத்து அவர்களுக்கு திருக்குறள் கருத்துகளை கொண்டுசேர்க்கவேண்டியதை நம் கடமையாகக் கருதுகிறேன். காந்தியடிகள் வந்தபோது கோடிக்கணக்கான மக்களா? அவர் பின் சென்று நின்றார்கள். இல்லையே. அவர் வந்தபோது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே அவருக்கு முன் வைக்கப்பட்டது. ஒன்று இருக்கிற அமைப்புகளில் அவர் இணைந்துகொள்ளலாம் அல்லது தனியாக ஆரம்பிக்கலாம். ஆனால், அவர் மக்களிடம் சென்றார், மக்களிடம் கற்றார். மொழி, உடை, பாதை எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டார். அதன் பின் மக்கள் அவர் பின்னால் சென்றார்கள். மக்களுக்கான தன்னுடைய கொள்கையைப் பாதையை அவர் வகுத்துக்கொண்டார். அந்த நம்பிக்கையில்தான் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் 8-ம் வகுப்பிலேயே மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்றுக்கொடுத்துவிட வேண்டும். அதன்பிறகு மேல் படிப்புகளுக்கு மாணவர்கள் சென்றுவிடுவதால் திருக்குறளுக்கு அவர்களால் நேரம் ஒதுக்க முடியாது. அதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு முடிப்பதற்குள்ளாகவே திருக்குறள் முற்றோதலுக்கு அவர்களைத் தயார் படுத்திவிடவேண்டும். திருக்குறளை கற்பவர்களை இளநிலை, முதுநிலை என இரண்டாகப் பிரித்துள்ளோம். அதாவது, இளநிலை என்பது குறளை மனப்பாடம் செய்பவர்கள், முதுநிலை என்பது பொருள் உணர்ந்தவர்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்புக்குள் குறளை மனப்பாடம் செய்பவர்களுக்கு உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் இளநிலை என்ற சான்றிதழ் கொடுக்கிறது. திருக்குறளை நன்றாகப் படித்து பொருள் உணர்ந்து, அவர்களிடம் நேர்காணல் செய்தபிறகு அவர்களுக்கு முதுநிலை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் கல்விக்கூடங்கள் மற்றும் கிராமங்களில் திருவள்ளுவரின் சிலையை நிறுவ வேண்டும் எனத் திட்டமிட்டோம். இதுவரை திருக்குறள் முற்றோதல் செய்தவர்கள் எத்தனைப்பேர். திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முற்றோதல் முடித்தவர்களின் இன்றைய நிலை என்ன, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என நாங்கள் சிந்திக்கத் தொடங்கினோம். திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களுக்கு இன்றைய சூழலில் அது எவ்வாறு உதவுகிறது, உதவியது என்பதையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அந்த ஆய்வின் அடிப்படையில் உலகம் முழுவதும் திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களைக் கணக்கெடுத்துக் கிட்டத்தட்ட 1200 பேரை இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளோம். உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜேந்திரன் IRS திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களில் இதுவரை 400 பேரைக் கண்டுபிடித்து அவர்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்றிவிட்டோம். கிட்டத்தட்ட இன்னும் 700 பேர் விவரங்களைத் திரட்ட வேண்டியுள்ளது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளோம். ஐயா மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்தான் இந்த இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்கள். தமிழ்நாடு முழுக்க 38 மாவட்டங்களில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி, காரைக்கால் உட்பட 40 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களைப் பகுதிநேரப் பணியாக நியமிக்காமல் அவர்களை முழுநேர ஊழியர்களாகச் சம்பளத்துடன் பணியமர்த்த முடிவு செய்துள்ளோம். அதற்காக அந்தந்த மாவட்டங்களில் திருக்குறள் தற்சார்பு என்ற நிலையை ஏற்படுத்தி அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடமும், புரவலர்களிடமும் திருக்குறள் முற்றோதல் பயிற்சி ஆசிரியர்களுக்குச் ஒரு ஊக்கத்தொகை, சிறு ஊதியம் கொடுக்க அறிவுறுத்தி வருகிறோம். திருக்குறள் புத்தகம் வழங்குவதைக் கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழகக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கிவைத்தார்கள். வானதி பதிப்பகத்தின் திரு.இராமநாதன் இங்கு வந்துள்ளார்கள். மருத்துவர் ஜானகிராமன் அவர்கள் பொறுப்பேற்று ஐயா சம்பந்தம் உள்ளிட்ட பல அமெரிக்கவாழ் நண்பர்களுடன் இணைந்து புரவலர்களைத் திரட்டி கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு ரூ.2 கோடி மதிப்பில் ஒரு மாவட்டத்துக்கு 2000 புத்தகங்கள் வீதம் ஆண்டுக்கு 80 ஆயிரம் திருக்குறள் புத்தகங்களை அச்சிட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளனர். இதைச் செய்ய முன்வந்துள்ள அவர்கள் நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வளர உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களை ஒருங்கிணைத்து அமைச்சர் மூலம் அவர்களைக் சிறப்புசெய்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை பயிற்சியாளர்கள், மாவட்ட பயிற்சியாளர்கள் என 2 வகைப் பயிற்றுநர்கள் உள்ளனர். திருக்குறள் முற்றோதல் இயக்கத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறையும் திருக்குறளைக் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபடும் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். வானதி பதிப்பகத்திலிருந்து 80 ஆயிரம் திருக்குறள் புத்தகங்களை 38 மாவட்டங்களுக்குக் கொண்டுசேர்த்த பெருமை திரு.ஜானகிராமன் அவர்களுக்கும் அவருடன் இணைந்து ஒத்துழைத்த அனைவரையும் சாரும். அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வலைத்தமிழில் ஒரு குறிக்கோளாக நான் பின்பற்றுவது எது செய்யப்படாமல் இருக்கிறதோ அதைச் செய்வதும், இருப்பதைப் பரப்புவதும், இல்லாததை உருவாக்குவதுமே எங்களது நோக்கம் . எது உருவாக்கவில்லையோ, எது தொடரவில்லையோ, தமிழ்ச் சமூகம் எதற்காகக் காத்திருக்கிறதோ அந்தப் பணியைச் செய்வதே என் குறிக்கோளாக ஓடிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் திருக்குறள் முற்றோதல் செய்பவர்களுக்கு அரசு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்குவதைப்போல பாண்டிச்சேரி அரசும் வழங்க வலியுறுத்தி பாண்டிச்சேரி முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுக்கச் செல்லும் பணிகள் அடுத்த நகர்வாக உள்ளது. எத்தனை மாவட்டங்களில் திருக்குறள் முற்றோதல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம், இன்னும் இதை அதிகமாகச் செய்யவேண்டிய மாவட்டம் எது உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்திருக்கிறோம். திருக்குறளுக்காக இன்று தரமான ஒரு மத இதழாக வெளிவரும் "குறள் வழி" மாத இதழ் கொண்டுவந்திருக்கிறோம். இந்த ஆசிரியர் குழுவுக்கு நன்றி. இந்த ஊடகப்பணியைத் தொடர்ச்சியாகச் செய்யும் வகையில் மாணவர்களைத் தயார்ப்படுத்தி பயிற்சி வழங்கி வருகிறோம். உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் அரசுடன் இணைந்து அனைத்துப் பணிகளையும் செய்கிறது என்பது கூடுதல் சிறப்பு. அரசுடன் இணைந்தே இப்பணிகளைச் செய்யவேண்டும் என அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறோம். மாவட்டம்தோறும் திருக்குறள் முற்றோதல் பயிற்சி வழங்க வேலைவாய்ப்பு தயாராக உள்ளது. பயிற்சியாளர்கள் இருந்தால் அவர்களுக்கு வேலை தயாராக உள்ளது. இந்த விழாவில் இருவருக்கு விருது வழங்க உள்ளோம். அதில், திருக்குறள் நூல்களைத் தொகுத்து வைத்திருக்கக் கூடிய கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகத்தினுடைய பேராசிரியர் பாஸ்கரன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு.பிரேமா அவர்கள் 35 மாணவர்களை திருக்குறளை படிக்கவைத்துள்ளார்கள். அவர்களுக்குத் திருக்குறள் முன்னோடி என்கிற விருதும் வழங்கப்பட உள்ளது. மாவட்டம்தோறும் உள்ள அமைப்புகளுக்கு உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் திருக்குறள் பரப்பும் பணிக்கு அனைத்து உதவிகளையும் செய்யும். 2024ம் ஆண்டுக்கான இலக்குகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. திருக்குறளுக்கு மறையோதல் என 133 காணொளிகளை வெளியிட்டு, பயிற்சியாளர்கள் ஒரே மாதிரி உச்சரிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். உங்களுடைய அன்பானவர்களின் நினைவாக உங்கள் கிராமத்துக்கு, மாவட்டத்துக்கு ஏதாவது செய்ய விரும்பினால் புரவலர்களாக இணைந்து திருக்குறளுக்குத் தொண்டு செய்யுங்கள். உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். மதிப்பிற்குரிய நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்கள் என்னிடம் கூறியதை நான் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதுகிறேன். திருக்குறள் குறித்த நிகழ்ச்சிகளுக்கு என்னிடம் நேரம் வாங்கவேண்டாம். என்னுடைய உதவியாளரை அழைத்து அதற்கான நாள், நேரம் குறித்துக் கேட்டறியுங்கள் நான் வந்துவிடுகிறேன் என்றார். இதுதான் அவர் திருக்குறளுக்குச் செய்யும் பெருமதிப்பு என நான் கருதுகிறேன். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
|
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 14 Mar 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|