LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

திருவள்ளுவர் ஓவியம் உருவானது எப்படி? - ஓவியர் வேணுகோபால் சர்மாவின் நாற்பதாண்டுப் போராட்டம்

திருக்குறள் தமிழர்களின் அடையாளங்களில் முதன்மையானது. மதத்தையோ, சமயத்தையோ தழுவிய வார்த்தைகள் திருக்குறளில் எங்கும் தென்பட்டதில்லை. அதனால்தான் அதை மத, தேச வேறுபாடுகளின்றி எல்லோரும் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறார்கள்.


இத்தகு விளக்கங்கண்ட திருவள்ளுவருக்குத் திருமுடி எவ்வாறு அமைந்திருக்கக்கூடும் சிறிதே முன் வழித்துப் பின்வளர்த்த பெருங்குடுமியா? நாகரிக ஒப்பனையுடன் வெட்டப் பட்ட சிகையா? இவையனைத்தும் தனித்தனிக் குழுவாரின் அடையாளமாக ஆகி விட்டமையின், திருவள்ளுரின் கருத்துக்குப் பொருந்துவன ஆகாவாதலின், திருவள்ளுவருக்குத் திருமுடியும் நீவப்படாத தாடியும் இருத்தல் நன்று என்று கருதப்பட்டது. ஓவிய இலக்கண முறைப்படி உயர்ந்த மதி படைத்தோருக்கு நெற்றி பரந்தும் உயர்ந்தும் இருக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் நாசியின் நீளத்திற்கொப்பாகவோ அல்லது சற்று அதிகமாகவோ அது இருத்தல் வேண்டுமென்பதால், அதற்கொப்ப திருவள்ளுவரின் நெற்றி அமைக்கப்பட்டது.
அதே முறைப்படி நாசி, ஓணான் முதுகில் எவ்வளவு நுண்ணிய வளைவு தென்படுகிறதோ அவ்வளவு வளைந்திருக்க வேண்டுமென்பதோடு, நாசியின் நுனி மழுங்கியிராமல், அதன் பருமனுக்கேற்ற கூர்மையுடனிருந்தால் புத்திக் கூர்மையும், உண்மையை உய்த்துணரும் ஆற்றலும் உண்டு என்பதோடு, நாசித் துவாரத்தின் இரு பக்கத்து மேல் மூடிகளும் சற்று மேல் நோக்கி அகன்றிருக்க வேண்டும்.


அப்படி இருந்தால் நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் உண்டாகிறது என்பதால் திருவள்ளுவரின் நாசி அதற்கொப்ப அமைக்கப்பட்டது. வாய் அகன்றிருக்கக் கூடாது; குறுகியும் இருக்கக் கூடாது; மெல்லியதாய் இருத்தலும் கூடாது. அப்படி இருந்தால் வாய்மைத்திறன் வாய்க்காது. ஆகையால், தமக்கென்று ஏற்படுத்திக்கொண்ட பெரும் பணியை நிறைவேற்றுவதற்கான உறுதியைத் தெளிவாகக் காட்டுமாறு திருவள்ளுவரின் உதடுகள் அமைக்கப்பட்டன. உலகின் மீதுள்ள பெருங் கருணையால்தான் திருவள்ளுவர் திருக்குறள் இயற்றித் தந்தார் என்று கருதப்பட்டதால் ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி, பொதுநோக்கு இவை நிரம்பிய கண்கள் படைக்கப்பட்டன. சிந்தனையிலுள்ளபோது திருவள்ளுவரின் வலது புருவம் சற்றே உயர்ந்து, உள்ளம் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.


மனிதன் உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால், திருவள்ளுவருக்குச் சமயக்குறிகள், மதச்சின்னங்கள் முதலியவை இல்லாமல் ஆயின.


அவரது நீண்டகன்ற காதுகள் பல ஆண்டுகாலமாக அவர் பெற்ற கல்வியினாலும் உலகியல் பயிற்சியினாலும் அவர் எய்திய அறிவுத் திறனையும், தேர்ந்த செவிச் செல்வத்தையும் காட்டுவனவாக உள்ளன. உண்பதை அளவறிந்து உண்டால் நோய் வராமல் தடுக்கலாம் என்றும், மருந்தே தேவையில்லை என்றும், குறைவாக உண்பவனிடத்து இன்பம் போல் நிறைவாக உண்பவனிடத்துத் துன்பமிருக்கும் என்பது போன்ற நல்வழிகளைக் கூறிய திருவள்ளுவர், தானும் அவற்றைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு நேர்ந்திருக்காது. அக்காரணத்தால், உடல் தன் ஊட்டத்தினின்றும் இளைத்திருக்காது என்பதாலும், திருவள்ளுவர் உட்பகையை வென்ற பேராண்மை மிக்கவர் என்பதாலும் அவரது திருமேனி நல்ல ரத்தத்துடனும், கட்டுக்கோப்புடனும் பண்பட்டிருத்தலை அமைத்துக் காட்ட தூண்டுதலாயிற்று. உலகப் பற்று, சமயப் பற்று இவற்றிலிருந்து திருவள்ளுவர் விலகித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதேனெனில், ஏதாவது மதத்தையோ, சமயத்தையோ தழுவிய நன்மொழிகள் திருக்குறளில் எங்கும் தென்படவில்லை. அப்படியிருந்தால் மத, தேச வேறுபாடுகளின்றி, எல்லோரும் அதைத் தத்தம் மொழியில் மொழி பெயர்த்து வருவதும் நிகழாது. மேலும் அந்நாள்களில் வாழ்ந்திருக்கக் கூடிய மத, சமய வெறியர்களிடமாவது கருத்து மாறுபாட்டினையும் கண்டனங்களையும் எழுப்பத் தவறியிருக்காது என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் மனிதன் உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால், திருவள்ளுவருக்குச் சமயக் குறிகள், மதச் சின்னங்கள் முதலியவை இல்லாமல் ஆயின.


வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் வலிய ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும்.


மார்பிலும், முன்கையிலும் அமைந்துள்ள ரோம வரிசைகள், தாம் ஏற்ற பணியை நிறைவேற்றிக்கொள்ளும் ஆண்மையைக் குறிப்பன. தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு, தூய்மை பெற்ற உடல், தூய்மையான குறிக்கோள். இவையிருப்பதால், திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடை புனைந்திருத்தல் நன்று என்று கருதப்பட்டது. வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும்.


கலை நலம் நிரம்பப் பெற்று காண்போரின் அழகுணர்ச்சிக்கு விருந்தாகப் பொலியும் இடது கை, உலகப் பொதுப் பணியை ஈடேற்றி வைக்கும் பொறுப்புடன் ஓலையைத் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டது. வலதுகால் பெருவிரல் மட்டும் சற்று முன் வளைந்திருப்பது ஏனெனில், கால் பெருவிரல் அற்ப ஆசைகளைக் குறிப்பது. அந்த ஆசை வெளியில் தூக்கி எறியப்பட்டு விட்டது என்பதை வற்புறுத்த என்றால் நிராசையோடு உலகத்தினிடம் பயனேதும் கருதாது பணி செய்து கிடப்பதே தன் கடனென்று நினைத்தார் என்க. அல்லாமலும், எல்லோருக்குமே சிந்தனை தீவிரமாக இருக்கும் பொழுது கால் பெருவிரல் அடுத்த விரலுடன் நெண்டிக்கொண்டேயிருக்கும். சிந்தனை சீர்பெற முடிந்ததும் ஒரு நிலையில் நின்று விடும். ஆகையால், அதற்கும் ஒப்ப அமைக்கப்பட்டது. ஏற்கனவே எழுதப்பட்ட திருக்குறளின் பல அதிகாரங்கள் அவருக்கு வலப்புறம் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து, அப்பாலும் பல அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன என்று ஊகித்துக் கொள்ளும் பொருட்டு, சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே தெரிவாக வரையப்பட்டுள்ளன.


கையில் பிடித்துள்ள ஓலையில் ஒன்றும் எழுதாததற்குக் காரணம் தமிழில் இலக்கிய வரம்பிற்குட்பட்டு நயம்பெற மிகச் சுருக்கமாக எப்படி எழுத வேண்டுமென்ற சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்க முடியாது. அப்படி சிந்தித்திருந்தால் திருக்குறளில் அவ்வளவு நீரோட்டமும், தெளிவும் இருக்க முடியாது. ஆகவே குறள்களை எழுத அவர் தம் விரல்களுக்கே தெரியும். ஓலையில் எழுத்தாணியை ஊன்றி விட்டால், குறள் முடிந்துதான் எழுத்தாணி இடம் விட்டுப் பெயறும். இந்நிலையில் மக்களுக்கு அடுத்து சொல்லப்பட வேண்டியது யாது என்னும் சிந்தனையிலிருக்கும் நிலையாக உருவகம் செய்து, கண்களை சிந்தனையில் ஆழ்ந்திருக்கச் செய்திருப்பதால், இந்த ஓலையில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது.திருவள்ளுவர் தமக்கென வாழாதவர் என ஊகிக்கப்பட்டதால், அவர் ஆசையற்று இருந்திருக்க முடியும். ஆசையற்ற இடத்தில் துக்கம் இருக்க முடியாது. அவர் தூய கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவராதலால், அவரது சூழ்நிலையும் தூய்மை என்பதைக் குறிக்கவே பின்புறம் - இருபக்கங்கள் - இவற்றில் மரம், செடி, கொடிகளோடு - வீடு வாசலோ எவற்றையும் அமைக்காமல், அவரது உருவத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி நிற்கும் அறிவுச்சுடர் ஒன்று மட்டுமே இடம் பெறலாயிற்று.


அநேகமாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி உள்ளவர்களுக்கு சிரத்தைச் சுற்றிலும் ஒளிவட்டம் ஒன்று சித்திரத்தில் அமைப்பது மரபாக இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களிடத்தில் பேரறிவின் ஒளி வீசுகிறது என்பதைக் காண்பிக்க. ஆனால், திருவள்ளுவருக்கு அந்த ஒளியை வட்டமாக அமைக்காமல் தலையைச் சுற்றிலும் தூய நிறம் ஆரம்பித்து, அது எங்கு போய் முடிகிறது என்பதைக் காட்டாமல், சுற்றிம் உள்ள மங்கலான இடங்களில் சென்று பாய்ந்து முடிவு தெரியாமல் விடப்பட்டிருப்பதற்குக் காரணம், வள்ளுவரின் ஒளி மற்றையோர் போல வட்டமாகத் தனக்கு மட்டும் நின்று விடாமல் வெளி உலகிற்கு ஊடுருவிப் பாய்கிறதைக் காட்டுகிறது. மண் தரையில் மரப் பலகையின் மீது வள்ளுவர் அமர்ந்திருத்தல் ஏனெனில், எதையும் உயராது இழுக்கும் பூமியின் ஆற்றலும் அவரது சிந்தனை உயர்வதைத் தடுப்பதற்கில்லை. அத்துடன் உலகத்தோடு ஒட்ட ஒழுகியும், உலகியலுக்குத் தாம் அடிமையாகாமல் தனித்து நின்று தனிப்பெரும் அறநெறியை வகுத்துத் தந்த தனிப்பெருந்தகையான அவர்தம் தூய்மையுற்ற உணர்வு செயல், ஆடை முதலியனவற்றை எந்த வகையிலும் அழுக்கு தீண்ட இடந்தருவது இழுக்காகுமெனக் கருதியதாகும்.


நம் நாட்டின் ஒப்பற்ற அறிவுச் செல்வமாகிய பெருந்தகை திருவள்ளுவரின் ஒளி வடிவம் இந்த ஓவியன் உள்ளத்தில் கொண்ட வகையிலேயே நீர்க் கலவை வண்ணக் குழம்பு கலந்து தீட்டிய இந்த வடிவிலும் நிலைபெற்று அமைவதாகும். வாழ்க வள்ளுவரின் அறிவுப்பேரொளி" என்று எழுதி வைத்திருக்கிறார் ஆர்.கே.வேணுகோபால் சர்மா.

by Swathi   on 08 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.