LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

திருஅருட்பா பதிப்புகள் விரிந்த தளத்தை நோக்கிய சிறுகுறிப்பு - ப. சரவணன்

திருஅருட்பா என்று பெயரிட்டு வள்ளலாரின் பாடல்களை வெளியிடுவதற்கு முன்பே அவை மக்களிடத்தில் ஆகப் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தன. பாடல்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்து முறைப்படி வெளியிட்டபோது அதன் செல்வாக்கு உச்சத்தை அடைந்தது.
'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' என்ற திருவருட்பாப் பாடலைப் பாடிப் பரமனைத் துதித்த பக்தர்கள், 'அம்பலத்து அரசே அருமருந்தே' என்னும் பாடலைப் பாடிப் பிச்சையெடுத்த பண்டாரங்கள், 'கொம்மியடிப் பெண்கள் கொம்மியடி' என்னும் பாடலைப் பாடி வீடுகளைக் கோயிலாக்கிய பெண்கள், 'தெண்டனிட்டேன் என்று சொல்லடி' என்னும் பாடலைப் பாடி இசையரங்குகளை மகிழ்வித்த இசைவாணர்கள், 'அருட்சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்' என்னும் பாடலைச் சங்கு முழங்கிச் சேமக்கலம் கொட்டிப் பிண ஊர்வலத்தின்போது பாடிய பணியாளர்கள், சைவ-வைணவ அருளாளர்கள் என ஆளாளுக்குத் தமது நிலையில் திருவருட்பாவின் புகழைப் பரப்பிக் கொண்டிருந்தனர். அகச் சான்றுகள் மட்டுமின்றிப் புறச் சான்றுகளும் திருவருட்பாவிற்கு இருந்த செல்வாக்கைப் பறைசாற்றுகின்றன.2
 திருஅருட்பா எனப் பெயர் சூட்டப்பட்டு முறையான பதிப்பு ஒன்று வெளியாவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் செல்வாக்கின் காரணமாகத் திருவருட்பாப் பதிப்பு தொடங்கிவிட்டது. அதாவது வள்ளலார் பாடிய முதல் பாடலாகக் கருதப்பட்டு,3 தற்போது ஊரன் அடிகள் பதிப்பில் (1972) உள்ள 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' என்னும் புகழ்பெற்ற பாடல் இடம்பெறும் 'தெய்வமணிமாலை' நூல்பதிப்பு 1851இல் வெளிவந்தது4. எனினும் முறையான பதிப்பு வெளிவர வேண்டும் என்னும் எண்ணம் வள்ளலாரின் சீடர் இறுக்கம் இரத்தின முதலியாருக்கே முதலில் உதித்தது.
இராமலிங்க அடிகளார் சென்னையை விட்டு வடலூர் சென்ற பின்பு (1857) அடிகளின் பாடல் ஏடுகளைத் தொகுக்கும் முயற்சியில் இரத்தின முதலியார் ஈடுபட்டார். இப்பணி 1860களில் மும்முரமானது. காரணம், சென்னையிலிருந்த சிலர் பாடல்களை வணிக நோக்கோடு அச்சுப் பிழையுடன் வெளியிட்டதேயாகும். அவ்வாறு வெளியிட்டவர்களை இரத்தின முதலியாரும் செல்வராய முதலியாரும் அணுகி, அடிகளது பாடல்களைத் தாங்கள் முறையாக வெளியிட இருப்பதால் இது தகாதெனக் கூறித் தடுத்தனர்; இழப்பீடாகப் பொருளும் தந்தனர். ஆயினும் அவர்கள் அச்சிடுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் இறுக்கம் இரத்தினம் பாடல்களைத் தொகுப்பதிலும் அவற்றை வெளியிட அடிகளின் இசைவைப் பெறுவதிலும் தீவிரமாக முனைந்தார்.
திருவருட்பா ஏடுகளைத் தொகுத்தல், அச்சிடுதல் என இவை தொடர்பாக 1860 முதலே இறுக்கம் இரத்தின முதலியாருக்கும் அடிகளுக்குமிடையே கடிதத் தொடர்பு தொடங்கிற்று. திருவருட்பாவை வெளியிட இரத்தின முதலியார் ஏழு ஆண்டுகள் முயன்றார். அச்சுக்கு அனுமதி கோரியும் (வள்ளலாரிடமுள்ள) பாடல் ஏடுகளைத் தம்மிடம் அனுப்பிவைக்குமாறும் இறுக்கம் இரத்தினம் தொடர்ந்து கடிதம் எழுதிவந்தார். எனினும் அடிகள் பாராமுகமாகவே இருந்தார். தமது பாடல்கள் வெளியாவதில் அவருக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை. எனவே, இறுக்கம் இரத்தின முதலியார் ஒரு உபாயத்தைக் கையாண்டார். அதாவது "பாடல் ஏடுகள் தம்மிடம் வந்து சேரும்வரை தாம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளப் போவ''தாக அடிகளுக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைக் கண்ணுற்ற அடிகள் திடுக்கிட்டுப் பாடல் ஏடுகளை இரண்டு திங்களில் அனுப்புவதாகவும் ஒரு வேளை உணவு மட்டுமே கொள்வதென்ற நிர்ப்பந்த ஏற்பாட்டைத் தவிர்க்கும்படியும் அதைத் தமக்குத் தபாலில் தெரிவிக்கும்வரை தாமும் ஒரு வேளையே உண்ணப்போவதாகவும் பதில் மடல் ஒன்றை (30.12.1860) இரத்தின முதலியாருக்கு வரைந்தார்.5
இறுக்கம் இரத்தின முதலியார், அடிகளின் பாடல்களைத் திரட்டும்போது ஐந்து ஆண்டுகள் கடந்தன. எனினும் பாடல்கள் முழுவதும் ஒன்றுசேரவில்லை. அச்சுக்கு அடிகளின் இசைவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இனியும் தாமதிக்க இயலாதென்றும் அச்சுக்கு இசைவளித்தே ஆக வேண்டுமென்றும் விண்ணப்பித்து 13.11.1865 அன்று பதிவுத் தபாலில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதைக் கண்ட அடிகள், ''.... அக்கடிதத்தில் குறித்த விஷயம் எனக்கத்துணை அவசியமின்றாயினுந் தங்கள் கருத்தின்படி இறைவன் என்னுள்ளிருந்து பாடுவித்தவைகளை மாத்திரம் தாங்களாயினும், மகா. ராஜ. ராஜ. ஸ்ரீ செல்வராய முதலியாரவர்களாயினும் தாங்கள் வரைந்தபடி செய்துகொள்ளலாம்"6 என்று பதில் மடல் எழுதிப் பாக்களை அச்சிட இசைவளித்தார்.
II
பாடல்களை வெளியிட அடிகளின் இசைவைப் பெற்ற இறுக்கம் இரத்தின முதலியார், புதுவை வேலு முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், தொழுவூர் வேலாயுத முதலியார் ஆகியோருடன் இணைந்து அருட்பாவை வெளிக்கொணர்வதில் முனைப்புடன் செயல்பட்டார். அத்துடன் நூலின் தலைப்பேட்டில் வெறுமனே இராமலிங்கப் பிள்ளை என்று பொறிப்பதைக் காட்டிலும் இராமலிங்க சாமி என்று பொறிக்கக் கருதி அதற்கான அனுமதி வேண்டி அடிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் சிதம்பரம் பொருளாக அண்மையில் பாடிய பாடல்களையும் பாயிரத்தையும் அச்சுக்கு அனுப்புமாறு குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தைக் கண்டு பதில் எழுதிய அடிகள், "... நான் இங்கு வந்த பின்னர் சிதம்பர விஷயத்தில் தோத்திர மாலைகளும் சாத்திர மாலைகளுமாகச் சுமார் இருநூறு மாலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவைகள் வெளிப்படும்போது வெளிப்படுத்திக் கொள்ளலாம். இது நிற்க... 'இராமலிங்க சாமி'யென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும். ஜீவகாருண்ணியமும் சிவானுபவமும் அன்றி மற்றவைகளை மனத்தின்கண் மதியாதிருத்தல் வேண்டும்"7 என்று எழுதியிருந்தார்.
o o o
அடிகளின் இசைவு, பாடல்களின் தொகுப்பு என எல்லாம் முடிந்த பிறகு நூலுக்குப் பெயரிட வேண்டிய தருணம் வந்தது. அப்போது 'திருஅருட்பா' என்று பெயரிடப்பட்டது. பெயரை இட்டவர் அடிகளின் தலைமை மாணாக்கர் 'உபயகலாநிதிப் பெரும்புலவர்' தொழுவூர் வேலாயுத முதலியார். 1867இல் திருவருட் பாவினை முதன்முதலில் இவர் பதிப்பித்த காலத்தில் நூலுக்குப் பெயரிடுவதில் அடிகள் எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாடல்களைப் பதிப்பித்த தொழுவூராரே இதனைத் தெரிவுசெய்தார்.8 அதேபோலப் பாடல்களை வகைதொகைப்படுத்தி ஆறு திருமுறைகளாக வகுத்தவரும் அவரே.
திருமுறைகளும் அவற்றின் பதிகங்களும் அவை பாடப்பெற்ற கால வரிசையில் வகுக்கப்படவும் அடைவு செய்யப்பெறவும் இல்லை. பொருளமைதி கருதியும் வகுத்திருப்பதாகக் கூறுவதற்கில்லை. திருவெழுத்து ஆறு, சமயம் ஆறு, அத்துவா (கதியடைவிக்கும் வழி) ஆறு என்பவற்றை உட்கொண்டு திருமுறைகளை வகுத்துள்ளார் தொழுவூரார்.
தமது பாடல்களை வெளியிட முதலில் இசைவளிக்க மறுத்துவந்த அடிகள், பின்பு ஒற்றியூர், சிதம்பரப் பாடல்களை வெளிப்படுத்த இசைந்தார். அப்போது, அண்மையில் பாடிய அதிதீவிரக் கருத்துக்கள் கொண்ட பாடல்களைப் பின்பு வெளியிட்டுக்கொள்ளலாம் எனவும் தற்போது வெளியிட வேண்டாம் எனவும் அடிகள் கட்டளையிட்டதால் அதனையும் இனி அவர் பாடக் கூடியவற்றையும் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆறாம் திருமுறையாக வகுத்தார் (126 பதிகங்களும் 172 தனிப்பாடல்களும் அவர் வகுத்துவைத்திருந்த ஆறாம் திருமுறையில் அப்போது இருந்தன). ஆறாம் திருமுறையாக நிறுத்திக்கொண்டவை தவிர, எஞ்சியதை ஐந்து திருமுறைகளாக வகுத்தார். இளமையில் சென்னையில் வசித்த காலத்தில் (1823-1855) பாடப்பெற்ற திருத் தணிகைப் பதிகங்கள் கைக்குக் கிடைக்கப்பெறாது அச்சுக்குச் சித்தமாகாமையின் அவற்றையும் பின்னர் வெளியிடக் கருதி ஐந்தாம் திருமுறையாகக் கொண்டார். இவ்வாறு நிறுத்திவைத்த ஆறாம் திருமுறையும் சித்தமாகாத ஐந்தாம் திருமுறையும் நிற்க, எஞ்சியவை முதல் நான்கு திருமுறைகளாக வகுக்கப்பட்டன.9
திருவடிப் புகழ்ச்சி (128 அடி விருத்தப்பா), விண்ணப்பக் கலிவெண்பா (417 கண்ணிகள்), நெஞ்சறிவுறுத்தல் (703 கண்ணிகள்), சிவநேச வெண்பா (104 வெண்பாக்கள்), மகாதேவ மாலை (100 எண்சீர் விருத்தம்), திருவருள் முறையீடு (232 கட்டளைக் கலித்துறை), வடிவுடை மாணிக்கமாலை (101 கட்டளைக் கலித்துறை), இங்கிதமாலை (167 அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) ஆகிய எட்டும் முதல் திருமுறையாக வகுக்கப் பெற்றன.
சென்னையிலிருந்தபோது, திருவொற்றியூர் குறித்தும் தில்லையைக் குறித்தும் பாடிய பதிகங்களும், திருமுல்லை வாயில், திருவலிதாயம், புள்ளிருக்கு வேளூர் (வைதீஸ்வரன் கோவில்), திரு ஆரூர், திரு அண்ணா மலைப் பதிகங்களும் பொதுப் பதிகங்களும் கீர்த்தனைகளும் இரண்டாம் திருமுறையாக வகுக்கப்பெற்றன.
திருவொற்றியூரைக் குறித்துப் பாடப்பெற்ற அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான அகத்துறைப் பதிகங்கள் பத்தொன்பது மட்டும் மூன்றாம் திருமுறையாக வகுக்கப்பட்டன.
கருங்குழிக்கு வந்தபின் சிதம்பர வழிபாட்டுக் காலத்தில் சிதம்பரத்தைக் குறித்துப் பாடப்பெற்ற எட்டு மாலைகள், ஆளுடைய நால்வர் அருள்மாலைகள் நான்கு ஆகப் பன்னிரண்டு நூற்பகுதிகளைக் கொண்ட 238 பாடல்கள் அடங்கியன நான்காம் திருமுறையாக வகுக்கப்பெற்றன.
திருத்தணிகைப் பாடல்கள் ஐந்தாம் திருமுறையாக வகுக்கப்பெற்றன. 'முருகன் பாசுரங்கள்' என்னும் வேறு பெயரும் இத்திருமுறைக்கு உண்டு. 604 பாடல்களைக்கொண்ட 56 பதிகங்கள் இத்திருமுறையில் உள்ளன.
அடிகளின் ஆணைப்படி தற்போது வெளியிட வேண்டாமென வைக்கப்பட்ட பாடல்கள் ஆறாம் திருமுறையின்பாற்பட்டன. இது மூன்று பகுதிகளையுடையது. முதல் பகுதி 'கருங்குழிப் பாசுரங்கள்' என்றும் 'பூர்வஞான சிதம்பரப் பகுதி' என்றும் அழைக்கப்படும். இது 476 பாடல்களைக் கொண்ட 24 நூல் பகுதிகளைக் கொண்டது. இரண்டாம் பகுதி 'வடலூர் பகுதி' என்றும் 'உத்தரஞான சிதம்பரப் பகுதி' என்றும் அழைக்கப்பெறும். இதில் 635 பாடல்களைக் கொண்ட 40 நூல்கள் உள்ளன. மூன்றாம் பகுதி 'சித்திவளாகப் பகுதி' என்று அழைக்கப்படும். இதில் 44 நூற்பகுதிகள் உள்ளன.10
திருவொற்றியூர் பற்றிய பாடல்கள் அனைத்தும் 1, 3 ஆகிய திருமுறைகளிலும் தில்லை பற்றிய பாடல்கள் முறையே 4, 6 திருமுறைகளிலும் தில்லை மற்றும் திருவொற்றியூர் பற்றிக் கலந்து பாடிய பாடல்கள் 2ஆம் திருமுறையிலும் முருகன் பற்றிய பாடல்கள் 5ஆம் திருமுறையிலும் அடங்குமாறு பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.
o o o
திருவருட்பா முதல் வெளியீட்டுப் பணி 1860இல் தொடங்கி 1867இல் முடிவடைகிறது. இக்காலகட்டத்தில் முதல் நான்கு திருமுறைகள் மட்டுமே அச்சுக்குத் தயார் நிலையில் இருந்தன. மட்டுமின்றி, அது வள்ளலாரின் நேரடி மேற்பார்வையில் உருவானது குறிப்பிடத்தக்கது. இதனை, "ஒற்றியூர் பாடல்களையும் மற்றவைகளையும் அச்சிடத் தொடங்குகிறதாய்க் கேள்விப்படுகிறேன். அவைகளைத் தற்காலம் நிறுத்திவைத்தால் நான் அவ்விடம் வந்தவுடன் இவ்விடத்தில் இருக்கின்ற இன்னுஞ் சில பாடல்களையும் சேர்த்து அச்சிட்டுக் கொள்ளலாம்"11 என்று இறுக்கம் இரத்தின முதலியாருக்கும் "செட்டியாரவர்கட்குத் தாங்கள் வரைந்த கடிதத்திற் குறித்த வண்ணம் சிதம்பர விஷயமான பாடல்களைத் தங்கள் கருத்தின்படி அச்சிட்டுக்கொள்ளுங்கள்"12 என்று கூடலூர் அப்பாசாமி செட்டியாருக்கும் எழுதிய கடிதங்கள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் தான் இன்னும் சில நூல்களை வெளியிடப்போவதாக அறிவித்து, அப்புத்தகத்தின் இறுதியில் 43 நூல்கள் கொண்ட பெயர்ப் பட்டியலில் குறிப்பிட்டபடி எந்த நூலும் வரவில்லை என்பர்.13 இது தவறு. 'உலகெலாம் என்னும் மெய்மொழிப் பொருள் விளக்கம்', 'குடும்பகோரம்' ஆகிய இரு நூல்கள் மட்டும் வெளிவந்துள்ளன.
தொழுவூரார் பதிப்பில் பாடல்கள் அச்சாகியுள்ள அமைப்பு முறையை நோக்கும்போது பத்திபோல் அமைத்தல், இலக்கண முறையில் அமைத்தல், தடித்த தொடர்களில் அமைத்தல் எனச் சில நுணுக்கங்கள் கையாளப்பட்டுள்ளமை தெரிகிறது. மேலும், சில பாடல்கள் சீர்பிரித்து அச்சிடப்பட்டுள்ளன. சில பதிகங்கள் ஓலைச் சுவடியில் உள்ளவாறே பத்தி பத்தியாகக் காணப்படுகின்றன. சீர்களுக்கிடையே இடைவெளியும் அதிகம் இல்லை. மேலும் உடுக்குறி, பிறைக்குறி, வாட்குறி, வட்டக்குறி போன்ற குறியீடுகளைப் பயன்படுத்திச் சிறப்பான விளக்கங்களை அடிக்குறிப்பாகத் தந்துள்ளார் (இவ்வகையில் ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளைக்கு இவர் முன்னோடியாகத் திகழ்கிறார்). அவர் தமது பதிப்பின் முதல் திருமுறையில் 91 அடிக்குறிப்புகளையும் இரண்டாம் திருமுறையில் 4 அடிக்குறிப்புகளையும் ஐந்தாம் திருமுறையில் 15 அடிக்குறிப்புகளையும் தந்துள்ளார். மூன்றாம், நான்காம் திருமுறைகளில் எவ்வித அடிக் குறிப்பும் இல்லை.
அடிகளின் அனுமதியும் ஒத்துழைப்பும் சரிவரக் கிடைத்த பின்பு, திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகள் அடங்கிய ஒரே நூல் 1867இல் தொழுவூர் வேலாயுத முதலியாரால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. வெளியீட்டிற்குப் பொருளுதவி அளித்தவர் மயிலை சிக்கிட்டி சோமசுந்தரம் செட்டியார் (இதன் இரண்டாம் பதிப்பை மீண்டும் தொழுவூராரே 1887இல் பதிப்பித்தார்). நூலின் முகப்பேடு பின்வருமாறு அமைந்திருந்தது. (காண்க: படம்) அத்துடன் நூலினுள் இப்புத்தகம் வேண்டுவோர்க்கான விளம்பரமும்14 தொழுவூரார் பாடிய திருவருட்பா வரலாறும் இணைக் கப்பட்டிருந்தன.
'இராமலிங்க சுவாமிகள்' என்று வழங்கப்படாமை வேண்டும் என்று அடிகள் தடுத்துவிட்டபடியால் முகப்பில் 'அருட்பிரகாச வள்ளலார்' என்று பொறிக்கப்பட்டிருந்தது. அடிகளுக்கு இப்பெயரைச் சூட்டியவர் தொழுவூராரே யாவார்.
நூலைக் கண்ட அடிகள் அதில் தமது பெயருக்கு முன் 'திருவருட்பிரகாச வள்ளலார்' என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதில் உபயகலாநிதிப் பெரும்புலவரை நோக்கி 'பிச்! ஏங்காணும்! திருவருட்பிரகாச வள்ளலார் என்று உம்மை யார் போடச் சொன்னது?' என்று அதட்டிக் கேட்க, முதலியார் நடுநடுங்கியவராய் வாய்புதைத்து, வள்ளலாரது திருவடிகளைச் சிந்தித்த வண்ணமாய் நின்றிருந்தார். சிறிது நேர மௌனத்திற்குப் பின்னர் நமது அடிகளாரே உண்மை விளக்கம் தந்து அமைதி பெறச் செய்தார். அதாவது திருவருட் பிரகாச வள்ளலார் என்ற பெயரைத் 'திருவருள் பிரகாச வள்ளல் - ஆர்?' எனப் பிரித்து வினாவாகக் கொண்டு, அதற்கு விடையாகக் கடவுள் அல்லது பதியேதான் திருவருட் பிரகாச வள்ளல் என்று உண்மையைச் சுட்டுவதாகக் கூறிவிட்டுத் தன்னை அப்பதியின் திருவடியிற் கிடக்கும் சிற்றணுவாகக் குறித்திட்டார். யாதெனில் திருவருட் பிரகாச வள்ளல் ஆர் என்ற சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை எனக் குறித்திட்டார்.15 தமது மாணவர் தமக்குச் சூட்டியபட்டப் பெயரைத் தம் புலமைத் திறம் கொண்டு தெய்வத்துக்குச் சூட்டினார் அடிகள். அத்துடன் தமது பாடல்களில் பலவிடங்களில் இறைவனை 'வள்ளல்' என்று குறித்திருப்பதும் அவதானிக்கத்தக்கது.
திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் வெளியான 13 ஆண்டுகள் கழித்து 1880இல் (வள்ளலாரின் மறைவுக்குப் பின்) ஐந்தாம் திருமுறை வெளிவந்தது. அடிகள் கருங்குழியிலிருந்த காலத்தில் பாடிய மூத்த பிள்ளையார் திருப்பதிகங்கள் 4, சென்னையிலிருந்தபோது ஒற்றியூர் வழிபாட்டுக் காலத்தில் பாடிய திருத்தணிகைப் பதிகங்கள் 47, இளம்போதில் ஏழு, எட்டாண்டுப் பருவத்தில் பாடிய கந்தகோட்டப் பதிகங்கள் 2 ஆகியவற்றையும் ஐந்தாம் திருமுறையாகத் தொகுத்துத் தொழுவூர் வேலாயுத முதலியார் வெளியிட்டார். இது, திருவருட்பா - திருத்தணிகைப் பதிகம் - இரண்டாம் புத்தகம் எனப் பெயரிடப்பெற்றது16. இந்நூலும் சோமசுந்தரச் செட்டியாரின் பொருளுதவியாலேயே வெளிவந்தது. இந்நூலைப் பதிப்பித்தவர் தொழுவூர் வேலாயுத முதலியாரேயாவார் (இதன் இரண்டாம் பதிப்பை 1882இல் வெளியிட்டவரும் அவரே). இது சென்னை தம்புச் செட்டித் தெருவிலிருந்த மெமோரியல் அச்சகத்தில் அச்சிடப்பெற்றது.
முதல் நான்கு திருமுறைகளையும் அடுத்து ஐந்தாம் திருமுறையையும் பதிப்பித்து வெளியிட்ட தொழுவூர் வேலாயுதம் ஆறாம் திருமுறையைப் பகுத்துவைத்திருந்தாரேயன்றி, வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை. ஏனெனில் வள்ளலாரின் ஆறாம் திருமுறைப் பாடல்கள் சமயம் கடந்த புரட்சிகரமான சமூகச் சீர்திருத்தப் பாடல்கள். இவரோ சைவத்தில் ஆழ்ந்த புலமையும் பற்றும் உடையவர். முதல் நூலை வெளியிட மிகுந்த ஆர்வம் காட்டிய இறுக்கம் இரத்தினம் போன்றவர்களும் பொருளுதவி செய்த சோமசுந்தரச் செட்டியாரும் அமைதியாகவே இருந்தனர். இவர்கள் அனைவரும் சைவத்தில் மிக்க ஈடுபாடுடைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அடிகளாரின் ஆணைக்கு அஞ்சித் தொழுவூரார் தம் வாழ்நாளில் ஆறாம் திருமுறையை வெளியிடவில்லை; அவரது காலத்திற்குப் பிறகே அச்சிடப்பட்டது என்று கூறுவார் ம.பொ.சி.17 இக்கருத்து உண்மையன்று. தொழுவூராரின் காலகட்டம் 1832-1889. திருஅருட்பா ஆறாம் திருமுறை வெளியானதோ 1885இல். எனவே தொழுவூராரின் மறைவுக்கு முன்பே ஆறாம் திருமுறை வெளியானது என்பதும் சைவப் பற்றே அவரை ஆறாம் திருமுறையை வெளியிடாது தடுத்தது என்பதும் வெளிப்படை.
திருவருட்பாவின் தொடக்கக் காலப் பதிப்பாளர்கள் அமைதியாக இருந்ததனால், இனியும் காலம் தாழ்த்தாது ஆறாம் திருமுறையை அச்சிட வேண்டும் என்ற எண்ணம் உடையவராய் வேலூர் பத்மநாப முதலியார் அச்சிட முன்வந்தார். பெங்களூர் இராகவலு நாயக்கர் அவருக்குத் துணைநின்றார். இவ்விருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சென்னை மாநகர் அரசாங்க நார்மல் பாடசாலைத் தமிழ்ப் புலவர் சோடசாவதானம் தி.க. சுப்பராய செட்டியாரின் பொருளுதவியால் 1885ஆம் ஆண்டு ஆதி கலாநிதி அச்சகத்தில் ஆறாம் திருமுறை அச்சிட்டு வெளியிடப்பெற்றது.
'அருட்பெருஞ்ஜோதி அகவல்' தொடங்கி 'அம்பலவர்' ஈறாக 126 பதிகங்களும் 'கள்ளத்தை' என்னும் பாடல் தொடங்கி 'ஒன்றுமுன்' என்னும் பாடல் ஈறாக அமைந்த 172 தனிப்பாடல்களையும் தொழுவூரார் ஆறாம் திருமுறையாக வகுத்துவைத்திருந்தார். இவற்றோடு இவ்வாறாம் திருமுறையின் முன்பகுதியில் சீவகாருணிய ஒழுக்கத்தின் முதற்பகுதியும் பின்பகுதியில் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம், ச.சு.ச. சத்தியப் பெரு விண்ணப்பம், ச.சு.ச. சத்திய விண்ணப்பம், அற்புதப் பத்திரிகை, திருவருட்பா உட்கிடை ஆகிய உரைநடைகளையும் சேர்த்து இந்த ஆறாம் திருமுறை வெளியிடப்பட்டது (முதன்முதலில் திருவருட்பாவில் உரைநடை பதிப்பிக்கப்பெற்ற பதிப்பு இந்த ஆறாம் திருமுறைப் பதிப்பே).
இதுவரை விவாதித்த தகவல்களின் அடிப்படையிலிருந்து திருவருட்பா திருமுறைகள் ஆறும் ஒன்றாகச் சேர்த்துப் பதிப்பிக்கப்பெறவில்லை என்பது தெளிவு. எனவே ஆறு திருமுறைகளையும் ஒருங்கே சேர்த்து ஒரே நூலாக வெளியிட ஒரு குழு முடிவுசெய்தது. முன் பதிப்புகளில் சேராத சில பாடல்களெல்லாம் பொன்னேரி சுந்தரம் பிள்ளையால் திரட்டப்பெற்றுப் பூவை கலியாண சுந்தர முதலியாரால் பார்வையிடப் பெற்று பிருங்கி மாநகரம் இராமசாமி முதலியாரால் 1892இல் ஆறு திருமுறைகளும் சேர்ந்த முதல் பதிப்பை அக்குழு வெளியிட்டது.
இப்பதிப்பில்தான் அடிகளின் திருவுருவப் படமும் பிருங்கியார் 26 பக்கங்களில் எழுதிய வள்ளலாரின் வரலாறும் முதன்முதலில் அச்சிடப்பெற்றன (இவ்வரலாறு பின்னர் வெளிவந்த பி.வே. நமசிவாய முதலியார், ஓ. ஆதிமூல முதலியார் ஆகியோர் பதிப்பித்த பதிப்புகளில் தொடர்ந்து இடம்பெற்றது). இவற்றுடன் தொழுவூரார் பாடிய திருவருட்பா வரலாறு, பொன்னேரியார் பாடிய திருவருட்பிரகாச வள்ளல் ஞான சிங்காதன பீடத் திருவருட் செங்கோலாட்சி, தண்டபாணி சுவாமிகள் பாடிய அனுவப்பதிகம் மற்றும் வினாப்பதிகம், பிருங்கியார் எழுதிய திருவருட் பிரகாச வள்ளல் திருவுருத்தன்மை விண்ணப்பம் ஆகியவை நூலிறுதியில் சேர்க்கப்பட்டன.18 1891இல் ஆடூர் சபாபதி சிவா சாரியாரால் பதிப்பிக்கப்பட்ட வள்ளலாரின் குடும்பகோரம் என்னும் சிறு பிரசுரமும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரி சுந்தரம் பிள்ளையின் பதிப்பைத் தொடர்ந்து பிருங்கியார், முன்பதிப்புகளில் விடுபட்ட சில பாடல்களைச் சேர்த்து தமது சொந்த அச்சகமான இந்து யூனியன் அச்சியந்திரசாலையில் 1896இல் ஒரு பதிப்பை வெளியிட்டார். இதே ஆண்டில் ஆறு திருமுறைகளும் சேர்ந்த ஒரு பதிப்பை வே. நமசிவாய முதலியார் தமது சொந்த அச்சகமான நிரஞ்சனி விலாச அச்சியந்திர சாலையிலிருந்து வெளியிட்டார். இது பொன்னேரியாரின் பதிப்பை அப்படியே வழிமொழிதலாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆநூர் எதிராஜ முதலியார் 1903இல் தனது பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அச்சியந்திர சாலையில் திருவருட்பா ஆறு திருமுறைகளையும் (998 பக்கங்களில்) பதிப்பித்தார்.
1906இல் திருப்போரூர் துளசிங்க நாயகர் குமாரர் கோபால் நாயகர் தமது சூளை கோல்டன் அச்சியந்திர சாலையில் திருஅருட்பாத் திருமுறை மூலப்பதிப்பு என்னும் பெயரில் ஆறு திருமுறைகளையும் பதிப்பித்தார். இதே ஆண்டில் வாணியம்பாடி கோவிந்தபுரம் கு. அக்கீம் அப்துல் வக்காப் சாயபு என்பவர் ஆறாவது திருமுறையை மட்டும் உரையுடன் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருவருட்பா சமயம் கடந்து திகழ்வதற்கு இது நல்ல உதாரணம்.
அடுத்து 1908இல் திருவேங்கட முதலியார் திருவருட்பா திருமுறை என்னும் பெயரில் ஒரு பதிப்பை வெளியிட்டார். இது வே. நமசிவாய முதலியாரின் அச்சகத்திலிருந்து வெளிவந்தது. பிருங்கியாரின் திருவருட்பா திருமுறையும் இதே ஆண்டில் மறுபதிப்பைக் கண்டது.
அதன் பின்பு, 1929இல் ஓ. ஆதிமூலம் என்பவர் ஆறு திருமுறைகளும் சேர்ந்த ஒரு பதிப்பைக் கொண்டு வந்தார். இதனுள் பற்பல பதிகங்களும் நித்தியவிதி என்னும் உலகியல் நாமாவளிகளும் அடிகளின் சரித்திரச் சுருக்கமும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பிருங்கியார் பதிப்பில் கண்ட பதிகங்கள், உரைநடைகள், விண்ணப்பங்கள், நாமாவளிகள் போன்றவை அப்படியே அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களைத் தொடர்ந்து 1924இல் புதுக்கோட்டை தி.நா. முத்தையா செட்டியார் என்பவர் 1924இல் வள்ளலாரின் மாணவர்களில் ஒருவரான ச.மு. கந்தசாமிப் பிள்ளையைக் கொண்டு ஆறு திருமுறைகளும் அடங்கிய ஓர் இலவசப் பதிப்பை வெளியிட்டார். வள்ளலாரோடு பழகிய அன்பர்கள் பலரை நேரில் சந்தித்து வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இப்பதிப்பில் சேர்த்தார் ச.மு.க. (இதுவே இன்றளவும் உண்மையான வரலாறாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது). சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் மோசூர் கந்தசாமி முதலியார் இப்பதிப்புக்கு ஒரு முன்னுரை வரைந்துள்ளார். ஆறாம் திருமுறை முதல் பதிப்பில் (1885) நூலின் முன்பகுதியில் 'சீவகாருணிய ஒழுக்கம்' சேர்க்கப்பட்டு, பின்வந்த எல்லாப் பதிப்புகளிலும் இம்முறையே பின்பற்றப்பட்டது. ஆனால் இந்த இலவசப் பதிப்பில் சீவகாருணிய ஒழுக்கத்துடன் மநுமுறைக்கண்ட வாசகம் ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்தி, தொண்டமண்டல சதகத்தின் நூற்பெயர் இலக்கணம், வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை, தமிழ் என்பதன் உரை, அடிகள் உபதேசித் தருளிய உண்மை நெறி ஆகியனவும் நூலின் முன்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்பதிப்புகளில் சேராது விடுபட்ட பாடல்கள் சிலவும் குடும்பகோரம், ஓஷதியின் குணாநுபவம், சில கடிதங்கள் முதலியனவும் இப்பதிப்பில் புதியனவாகச் சேர்க்கப்பெற்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக 'சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை' என்பதை நீக்கி 'சிதம்பரம் இராமலிங்க சுவாமி' என்று முதன்முதலில் இப்பதிப்பில்தான் காணப்படுகிறது. வடலூர் சத்தியஞான சபையின் படமும் முதன்முதலாக இதில் அச்சிடப்பெற்றது.
இவற்றைத் தொடர்ந்து, 1925இல் எஸ். கூடலிங்கம் பிள்ளை பதிப்பித்த திருவருட்பா ஆறு திருமுறைகளும் 1928இல் முறையே மணி. திருநாவுக்கரசு முதலியார் (1212 பக்கங்களில்) பதிப்பித்த 'திருவருட்பா மூலம் - ஆறு திருமுறைகள்' என்னும் நூலும் இராகவலு நாயுடு (1167 பக்கங்களில்) பதிப்பித்த 'ஆறு திருமுறைகளுடன் கூடிய திருவருட்பா திருமுறை' என்னும் நூலும் முக்கியமானவை.
னீனீனீ
இதுவரை வெளிவந்த பதிப்புகளில் பொருள் குறித்தோ வைப்புமுறை குறித்தோ எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. ஆனால் திருவருட்பா பதிப்பு வரலாற்றில் இவற்றையெல்லாம் அமைத்து விரிவான ஆய்வுக் கூறுகளுடன் ஒரு செம்பதிப்பைக் கொண்டுவந்த பெருமை ஆ. பாலகிருஷ்ண பிள்ளையை (1890-1960) சாரும். திருவருட்பா கொடுமுடிப் பதிப்பு என்று ஆ.ப.ரா.வின் பதிப்பைச் சுட்டலாம். எனவேதான், "அருட்பாவின் பிழையற்ற வெளியீட்டுக்கென்றே கடவுள் உங்களை இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளார்"19 எனத் தணிகைமணி வ.சு. செங்கல்வராயப் பிள்ளை இவரைப் பாராட்டுகிறார்.
பல்வேறு பதவிகளோடு இந்து அறநிலையத் துறை ஆணையராகவும் பதவி வகித்த ஆ.பா. தனது உத்தியோகச் செல்வாக்கைப் பயன்படுத்தியும் நட்பு பூண்டும் வடலூர் சத்தியஞான சபையின் பூசகராயிருந்த உ.ப. பாலசுப்பிரமணிய சிவாசாரியரிடமிருந்து திருவருட்பா மூல ஏடுகள், வள்ளலாரின் அன்பர்கள் நேரிடையாக எழுதிவைத்த நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி எழுத்தெண்ணிப் பதிப்பித்தார் (இப்பதிப்பிற்காக ஆ.பா.வும் சிவாசாரியாரும் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்று உண்டு. எனினும் சிவாசாரி யாரின் பெயரைத் தமது பதிப்பின் ஓரிடத்திலும் ஆ.பா. குறிக்காமல் இருட்டடிப்பு செய்தது தனிக்கதை).
1931இல் தொடங்கி 1958 வரை திருவருட்பா பதிப்பிற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மொத்தம் பன்னிரண்டு நூல்களை பகுதிப் பகுதியாக, ஆனால், முழுமையாக வெளியிட்டவர் ஆ.பா. திருமுறைகள் பன்னிரண்டு என்பதை மனத்தில் கொண்டே அவர் இவ்வாறு வெளியிட்டார்போலும். அவை:
கீர்த்தனைப் பகுதி (1.2.1931), வசனப்பகுதி (23.5.1931), வியாக்கியானப் பகுதி (9.10.1931), உபதேசப் பகுதி (23.1.1932), திருமுகப்பகுதி (12.5.1932), தனிப்பாசுரப் பகுதி (2.2.1933), முதல் திருமுறை அல்லது பெருநூல் பகுதி (13.1.1956), இரண்டாம் திருமுறையும் மூன்றாம் திருமுறையும் அல்லது திருஒற்றியூர்ப்பகுதி (28.12.1956), ஐந்தாம் திருமுறை அல்லது திருத்தணிகைப் பகுதி (25.9.1957), நான்காம் திருமுறையும் ஆறாம் திருமுறை முன்பகுதியும் அல்லது பூர்வஞான சிதம்பரப் பகுதி (5.1.1958), ஆறாம் திருமறை இடைப்பகுதி அல்லது உத்தரஞான சிதம்பரப் பகுதி (14.7.1958), ஆறாம் திருமுறை முடிந்த பகுதி அல்லது சித்திவளாகப் பகுதி (20.10.1958).
ஆ.பா.வின் பன்னிரண்டு புத்தகங்களில் முதல் ஆறு புத்தகங்கள் மட்டுமே அடுத்தடுத்து ஓரிரு பதிப்புகளைக் கண்டன. அதிலும் அதிகப் பதிப்புகளைக் கண்டது வசனப்பகுதி மட்டுமே (ஐந்து பதிப்புகள்). அடுத்த ஆறு புத்தகங்கள் முதல் பதிப்போடு நின்றுவிட்டன. இவை மறுபதிப்பு காணாதது தமிழர்களுக்குப் பெருத்த இழப்பே.
தொழுவூராரின் பதிப்பை அடுத்து சில புதிய செய்திகளைச் சேர்த்துப் பதிப்பித்தவர் ச.மு. கந்தசாமி பிள்ளை. ஆனால் அதையும் தாண்டி வள்ளலாரின் கடிதங்கள், வள்ளலார் தமது அன்பர்கட்கு இட்ட கட்டளைகள், அழைப்பிதழ்கள், உபதேசங்கள், உரைகள் மற்றும் சிறுகுறிப்புகள் என்று அரிய பல செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் ஆ.பா. அத்துடன் பதிப்பு விடயங்களிலும் பல நுணுக்கங்களைக் கையாண்டவர் அவர். 1867-1824 வரை வெளிவந்த திருவருட்பா பதிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இப்பதிப்பு. அதனைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார்.
- தலைப்பின்றி இருந்த திருமுறைகளுக்குத் தலைப்புகள் இட்டமை.
- தலைப்புகள் இல்லாத பதிகங்கள் சிலவற்றிற்குத் தலைப்புகள் கொடுத்தும் சில தலைப்புகளை மாற்றியும் பதிப்பித்தமை.
- நான்காம் திருமுறையை ஆறாம் திருமுறையுடன் சேர்த்துப் பதிப்பித்தமை.
- ஆறாம் திருமுறையை மூன்று நூல்களாகப் பகுத்துப் பதிப்பித்தமை. பொருளடிப்படையிலும் கால அடிப்படையிலும் நுணுகி ஆய்ந்து பதிப்பித்தமை.
- ஏறக்குறைய 3443க்கும் மேற்பட்ட அடிக்குறிப்புகளைத் தந்துள்ளமை.
ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளையின் பதிப்புப் பணி நடைபெற்றுவந்த அதே நேரத்தில் இராசமாணிக்கம் பிள்ளை என்பவர் சென்னை சமசர சுத்த சன்மார்க்கத்தின் வாயிலாக 1932இல் திருவருட்பா முதல் ஐந்து திருமுறைகளை ஒரு நூலாகவும் ஆறாம் திருமுறையை ஒரு நூலாகவும் தனித்தனியே வெளியிட்டார் (இதன் அடுத்த பதிப்பு 1942இல் வெளிவந்தது). இதே காலகட்டத்தில் 'திருவருட்பா திரு ஆயிரம்' என்னும் நூலையும் (24.1.1932) இச்சங்கம் வெளியிட்டது. இதன் மறுபதிப்பு 1969இல் வெளிவந்தது. இந்த வரிசையில் திருவொற்றியூர் இராமலிங்கசாமி மடாலயம் 1964இல் வேப்பேரி அச்சகத்திலிருந்து வெளியிட்ட திருவருட்பா நூலும் குறிப்பிடத்தக்கது. இது முதல் ஐந்து திருமுறைகள் ஒரு நூலாகவும் ஆறாம் திருமுறை ஒரு நூலாகவும் தனித்தனியே வெளியானது.
ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளையின் பதிப்பை அடியொற்றி 1972இல் வரலாற்று முறைப் பதிப்பாக திருவருட்பா ஆறு திருமுறைகளையும் ஒரே நூலாகப் பதிப்பித்தவர் ஊரன் அடிகளார். ஆ.பா.விற்குக் கிடைக்காத மூல ஏடுகள் சில இவருக்குக் கிடைத்ததால் மேலும் 29 பாடல்களைச் சேர்த்து 5818 பாடல்களை அவர் வெளியிட்டார். சன்மார்க்க உலகிலும் ஆய்வுலகிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவது இவரது பதிப்பே. இப்பதிப்பில் நான்கு உரைநடை விண்ணப்பங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்றவை இடம்பெறாமைக்குக் காரணம், திருவருட்பா - உரைநடைப்பகுதி (1978) என்னும் நூலைத் தனியே வெளியிட்டதே (ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை வெளியிட்ட வசனபாகம், வியாக்கியானப் பகுதி, உபதேசப் பகுதி, திருமுகப் பகுதி ஆகிய நான்கு நூல்களையும் ஒன்று சேர்த்து இவ்வுரைநடைப் பகுதி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மறுபதிப்புகள் 1981இல் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தாலும் 1977இல் சென்னை வர்த்தமானன் பதிப்பகத்தாலும் 2001இல் வடலூர் தெய்வ நிலையத்தாலும் வெளியிடப்பட்டுள்ளன).
பதிப்பில் ஊரன் அடிகள் செய்துள்ள மாற்றங்களாகப் பின்வருவனவற்றைச் சுட்டலாம்.
- திருவருட்பாவின் பாடல்தொகை இதுவரை சரியாகக் கணிக்கப்படாதபோதும் அதனை 5818 எனக் காரணத்தோடு நிறுவியமை.
- பாடல்களுக்குத் தொடர் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளமை.
- திருமுறைகளும் பதிகங்களும் அவை எழுதப்பட்ட கால அடிப்படையில் வரிசையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளமை.
- நூல் முழுவதும் பாவினம் குறித்தும் சந்தி பிரித்தும் பதிப்பித்துள்ளமை.
- பாட்டுமுதற்குறிப்பு அகராதி தந்துள்ளமை.
வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டுள்ள திருவருட்பா பதிப்புகளும் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவை. இப்பதிப்பை மரபு முறைப் பதிப்பு என்பர்.
தொழுவூர் வேலாயுத முதலியார் 1867இல் பதிப்பித்த முதல் பதிப்பை அடியொற்றி அதில் உள்ளவாறே முதல் நான்கு திருமுறைகளை ஒரு நூலாகவும் (23.1.1997), அவரே 1885இல் பதிப்பித்த திருத்தணிகைப் பதிகத்தை அடியொற்றி ஐந்தாம் திருமுறையையும் (10.2.1998), ஊரன் அடிகள் பதிப்பை அடியொற்றி ஆறாம் திரு முறையையும் (5.10.1999) இந்நிலையம் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர்கள் யார் என்பது நூலில் இல்லையாயினும் சீனி. சட்டையப்பன், இராம. பாண்டுரங்கன் ஆகியோர் முதன்மைப் பதிப்பாசிரியர்கள் என்பது கள ஆய்வில் தெரியவந்தது.
o o o
திருவருட்பா மூலப் பதிப்பு மட்டுமின்றி அவற்றின் உரைப் பதிப்புகளும் கவனத்தில் கொள்ளத்தக்கன. அந்த வகையில் உரைவேந்தர் ஔவை. துரைசாமிப் பிள்ளை உரை எழுதிப் பதிப்பித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த திருவருட்பா பத்துத் தொகுதிகள் தனிமுத்திரை இதுவே (இவ்வுரைப் பதிப்பை அடியொற்றிப் பேரா. சு. மாணிக்கம் வர்த்தமானன் பதிப்பகத்தின் வாயிலாக 'திருவருட்பா மூலமும் உரையும்' என்னும் நூலை எட்டுத் தொகுதிகளில் இதுவரை வெளியிட்டுள்ளார்).
இதுவரை சுட்டிக்காட்டப்பட்ட பதிப்புகள் தவிரச் சில தனிநபர்களும் நிறுவனங்களும் திருவருட்பாவை முழுவதுமாக/பகுதியாக வெளியிட்டுள்ளனர். அவை யெல்லாம் மறு அச்சுகளாகவே பெரும்பாலும் உள்ளன. எனினும் அவை குறித்துத் தனி ஆய்வு தேவை. அப்போதுதான் சமூகம் சார்ந்த வெளிப்பாடு புலப்படும்.
படைப்பாளர் ஒருவரின் படைப்பு, இருக்கிற சமூகத்தை அப்படியே அடியோடு புரட்டிப்போடும் வல்லமையுடன் திகழுமானால் அது குறித்த பதிவுகள் வரலாற்றில் மிக முக்கியம். அந்த வகையில் தமிழ்ச் சிந்தனை மரபில் வள்ளலாரின் பாடல்களுக்குத் தனியொரு இடம் உண்டு என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எனவேதான் மதம் கடந்தும் அவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. படைப்பாளனின் படைப்புப் பணியைவிட பதிப்பாளரின் பதிப்புப் பணி அதி சிரமத்தைக் கொண்டது. அவன் தனக்கான அடையாளத்தை விட்டுச் செல்வதும் இதனூடேதான் நிகழ்கிறது. திருவருட்பா பதிப்பாசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடையாளத்தை இவ்வாறுதான் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால் நிலைநிறுத்தப்பட வேண்டிய அடையாளங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. எந்த ஒரு முழுமையான பதிப்பும் அடுத்த பதிப்புக்குத் தொடக்கமே!

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.