|
||||||||||||||||||
“தமிழ் நிலத்தின் பெருமை” -சிவக்குமார் கணேசன் , மிச்சிகன் |
||||||||||||||||||
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்றார் முண்டாசுக்கவி பாரதி பழந்தமிழ் நாட்டின் நாகரிக வளர்ச்சி எவ்வளவு உச்சத்தில் இருந்தது என்பதை நாம் உணர்ந்தால் நம் முன்னோர்களின் மீது நமக்கு பொறாமை ஏற்பட்டு நமக்குள் ஒரு உன்னத ஆற்றல் பிறக்கும் என்பது மிகையல்ல. அதெப்படி என்று தானே கேட்கிறீர்கள். மெகசுதனிசு என்ற வரலாற்றுக் குறிப்பாசிரியர் தான் எழுதிய "இண்டிகா" என்னும் நூலில் பழந்தமிழர்கள் இரவில் தங்கள் வீட்டுக் கதவுகளை அடைக்காமலே உறங்கினர் எனக் குறிப்பிடுகின்றார். கள்வர் பயமே துளியும் இல்லை. சேர சோழ பாண்டிய மன்னர்களின் செங்கோல் ஆட்சி செய்தது. தற்காலத்தில் வெளிநாட்டிலிருந்து நம் ஊருக்கு வந்திருக்கும் பல்பொருள் அங்காடிகள் (supermarket) நாமே வேண்டிய பொருட்களை எடுத்து நாமே பட்டியலிட்டுப் பணம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டன. ஆங்காங்கே கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, கடைக்கு வரும் வாடிக்கையாளரைக் கண்காணிப்பதை நாம் பார்க்கிறோம். இதெல்லாம் ஏதோ விஞ்ஞான வளர்ச்சியின் விளைவு என நாம் எண்ணுவது இயற்கை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் தமிழ் வாழ்வியலில் நாம் இதுபோன்று ஏன் இல்லை? நாம் வெறும் வடை, போண்டா, இட்லிதான் போட்டுக் கொண்டிருந்தோமா எனப் பலர் கிண்டலும் கேலியுமாக விளையாட்டாக ஏளனம் செய்வதையும் கண்டிருப்போம். நம் வரலாற்றை உணர்ந்தால் இந்த நிலை மாறி உயர்ந்த எண்ணங்கள் எழும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சோழநாட்டின் தலைநகரான காவிரி பூம்பட்டினத்தை விவரிக்கிறார். அங்கே 'வெள்ளிடை மன்றங்கள்' என்ற கடைகள் இருந்தன. ஆச்சரியம் என்னவென்றால் அவைதான் நாம் தற்போது காணும் நவீன பல்பொருள் அங்காடி(supermarket). இந்த சிலப்பதிகாரப் பாடலைப் பாருங்கள் "வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்துக் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலுங் கருத்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய வாகிக் கட்போர் உளரெனிற் கடுப்ப தலையேற்றிக் கொட்பி னல்லது கொடுத்த லீயாது உள்ளுநர்ப் பனிக்கும் வெள்இடை மன்றமும்" வெள்ளிடை மன்றங்களில் பொருட்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டுப் பொதி பொதியாகக்கட்டி வைக்கப்பட்டிருக்கும். எந்த காவலுமில்லை. காவிரிபூம்பட்டினத்தில் வாழ்ந்தவர்கள் செல்வச் செழிப்பால் திளைத்ததால் களவு இல்லை, களவுஎண்ணமுமில்லை. அப்படி எவரேனும் களவு என்று கனவு கண்டால் கூடஅவரை நடுங்கும்படி செய்துவிடும் இவ்வெள்ளிடை மன்றம். இப்பொழுது புரிகிறதா நாம் எப்படி இருந்தோமென?. வெளிநாட்டில் வாழ்பவர்கள் அறிவார்கள் இங்கே எவரேனும் தும்மினால் அருகிலிருப்பவர்கள் அவரை வாழ்த்துவது வழக்கம். சிலர் ஆங்கிலத்தில் “Bless you “என்பார்கள், சிலர் யெர்மானிய மொழியில் “Gesundheit” எனபார்கள். வெளிநாடு வந்தபோது ஆகா என்ன ஆச்சரியம் எவ்வளவு நல்ல பண்பு என பெருமிதம் ஏற்பட்டது. இதிலே வியப்பு என்னவென்றால் தும்மினால் நம் இதயம் சில நொடிகள் ஓய்வெடுக்கும் என்று கூறுவர். நம் மரபு பல்லாயிரம் வருடங்கள் பழமையானதல்லவா, ஆகவே நம்மிடம் இது போன்ற பழக்கம் உண்டா என்று தேடினால் ஐயன் வள்ளுவன் 1312வது குறட்பாவில் கூறுவதைக் கண்டவுடன் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நீங்களே காணுங்கள் "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து" இந்த குறட்பாவின் பொருள் இதுதான்: தலைவி தலைவனிடம் ஊடல் கொண்டிருந்த போது அவர் வேண்டும் என்றே தும்மினார் நான் அவரை " நீடு வாழ்க" என்பேன் என்று நினைத்து. இவற்றை இன்னும் நம் மூத்தோர் கடைப்பிடிக்க நாம் கண்டிருப்போம். ஆக நம்மிடம் தொன்று தொட்டே மிக உயரிய பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. இவற்றை உணர்ந்து உள்ளம் களித்துப் பெருமிதம் கொண்டு உயர் வாழ்வு வாழ நம் இலக்கியங்களைக் கற்கவேண்டியது ஒவ்வொரு தமிழருக்கும் தலையாயக் கடமை. உங்கள் வாழ்வையே உன்னதமாக மாற்றும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. அனைவரும் தேந்தமிழ் இலக்கியங்கள் பல கற்று, பயன்பெற்று, பேரும் புகழுடன் நீடு வாழ்க!! |
||||||||||||||||||
by Swathi on 14 Oct 2019 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|