நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிய காலத்தில் மலர்ந்த நேயப்பண்பை விட இக்காலச் சூழலில் மனிதன் மற்ற உயிர்களையும் தன்னையும் நேசிக்கும் பண்பு தேய்மானத்தை நோக்கியும், தனது வளர்நிலையில் சிக்கலையும் எதிர்நோக்கி உள்ளது. தொய்வடையும் தோழமை உணர்வான நேயப்பண்பை சட்டத்தையும், அதிகாரத்தையும், பணபலத்தையும் கொண்டு வலுப்படுத்த முடியாது. இழந்து கொண்டிருக்கும் ஒழுக்கங்களையும் மனித விழுமியங்களையும் மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும். மீட்டுருவாக்கத்தின் அடிப்படை என்பது உயர்ந்த பண்புகளை வலியுறுத்தும் பண்டைய நூல்களை திருப்பிப் பார்த்து உள்ளப்புனைத்தலாகும். இந்த அடிப்படையில் வாழ்வியல் இயங்கியல் பொருண்மையைக் கொண்ட வள்ளுவத்தில் பொதிந்துள்ள மனிதநேயச் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டும், செத்துக் கொண்டிருக்கும் உயிரின் மேன்மைக்குச் செழுமை சேர்க்கும் வண்ணமாக இக்கட்டுரை உதிக்கின்றது. மனித நேயம் என்பது தேடிக் கொண்டிருக்கும் அதே சமயம் உயரப் பிடித்து ஒலிக்க வேண்டிய வார்த்தையாகத் தான் உள்ளது. மனமே நேயத்தின் அடிப்படை என்றாலும் அடுத்த அறிவைத் தேடும் மனம் தனது சுயத்தை, முழுமையை மெல்ல மெல்ல தனக்குத் தெரியாமலேயே இழந்து கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை. நேசிப்பிற்கான கருத்துருவாக்கம் வேறு வேறு பரிமாணங்களையும், பரினாமங்களையும், பெற்று விட்டதே இந்த பின்னடைவிற்கான காரணம்.
* அறிவியலின் அசுர வளர்ச்சியும், அதன் வழியாக நிகழ்ந்து வரும் பண்பாட்டின் வீழ்ச்சியும்.
* நாகரீகம் என்ற பெயரில் மனிதனைப் பழிவாங்கும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனநிலை பரவிக் கிடத்தல்.
* நேசம் தன்னிலை திரிந்து பாசம், பற்று என்ற நிலை கடந்து பற்று வெறியாகி வெறியுடன் சுற்றித் திரியும் இந்தக் கலாச்சார சீரழிவுதான் பண்பாட்டின் உச்சம் என்று கருதும் நிலை.
என்ற மேற்கண்ட செயல்நிலைகளைத் தோழமை தொய்வடையக்காரணமாகக் கொள்ளலாம். இந்த எதிர்முரணான நிகழ்வின் மூலாதாரம் வாழ்வியல் உயர்விழுமியங்களை மதிக்கவும், போற்றவும், வளர்க்கவும் தவறிவிட்டோம் என்பதின் ஈவு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேயத்தின் அடிப்படை:
மெல்லிய உணர்வின் பிணைத்தல், எந்தவொரு புறத்தோற்ற பிணைப்புகளாலும் பொருத்தப்படாமல் அகக்கட்டுமானங்களோடு மனித மனத்தோடு தொடர்புடைய ஒரு மெல்லிய உணர்வின் உச்சம் என்று சொல்லலாம். இந்த நேயத்தின் களனான மனம் - காதல், நட்பு, ஜ“வகாருண்யம் போன்ற அன்புடன் கலந்த பல பகிர்மானங்களைக் கொண்டுள்ளது. எனக்கொண்டோமானால், இதன் முழுமைக்கும், செழுமைக்கும் வள்ளுவத்தில் ஏராளமான இடம் உண்டு.
அன்பு:
ஏதோ ஒரு வகையில் உறவு முறையை புதுப்பித்தும், புதிதாக உருவாக்கவும் எல்லா வகையான கொள்கலனுக்கும் இடையீடாக இருப்பதுதான் அன்பு, எப்படி உணர்வது? எப்படி உள்வாங்குவது? என்ற கேள்வி விரும்பியவர் மீது பொருளையும், நேரத்தையும் விரயமாக்கும் விதமாக அன்பை உணர்ந்து கொள்ளவும் அடையாளப்படுத்தவும் முடியும். தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என்ற தொடரமைப்பில் குடும்பமாக இருக்கும் இல்வாழ்க்கையே சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருகின்றது. இந்த இல்வாழ்வின் பயன் அன்பும் அறனும் உட்கூறுகளாக இருப்பதேயாகும் என்று வள்ளுவம் (குறள் 45) குறிப்பிடுகின்றது. பயத்துடன் மனித நிலைக்குமேல் பார்க்கும் கடவுட் கோட்பாட்டைத் தவிர்த்துப் பாசத்துடன், அன்புடன் வணங்கும் கணவன்மீது கொள்ளும் அன்பே நேயத்தின் முழுமையாகும் என்பதை வள்ளுவம் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் (குறள் 55) என்று பதிவு செய்துள்ளது. பெறுதற்கரிய இந்த உடலும் உயிரும் இயைந்த மனித வாழ்வு அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்துவதற்கேயாகும் (குறள் 73). எல்லோருக்கும் சொந்தப்படுத்துவது அன்பு (குறள் 72), அறம் செய்து வாழும் வாழ்க்கைக்கு அன்பே அடிப்படை (குறள் 6) என்றெல்லாம் அன்பின் உச்சம் பரந்து விரிந்து கிடக்கின்றது. பண்பாட்டு விழுமியங்களுக்கும், அன்பு அடிப்படையானது என்பது குறள் கூறும் செய்தியாகும். இந்த அன்பு தான் நேயத்தின் அடிப்படை, இந்நிலை மாறும்போது அன்பின் பன்முகம் பழுதடைந்தும் நேயம் காய்ந்து போகின்றது.
''அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பில்லா தவர்'' (997)
இங்குக் குறிப்பிடும் மக்கட்பண்பு என்பதுவும் தோழமை, நேய உணர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
நட்பு:
வேறு வேறு தளங்களில் சிதறிக் கிடக்கும் மனிதச் சமூகத்தைப் பிணைத்துப் பார்ப்பது நட்பு எனும் நந்தவனமே
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் (குறள். 785)
உணர்ச்சிதான் நட்பின் வலிமையாகக் கருதப்படுகின்றது. இந்த வலிமையே நட்பின் அடையாளமாகவும் வெளிக் கொணரப்படுகின்றது. இவ்வுலகம் இன்றளவும் தழைத்திருக்கின்றது என்றால் சிலக் கூறுகளில் ஒன்றான நட்பின் பலம் என்றே கருதலாம். மன உணர்வின் மிகப் பெரிய பாலமாக அமைவதே கேண்மை நெறி. இந்த நட்பைப் பகிர்ந்து கொள்ளும்போது வெறுமனே மகிழ்வதற்காக மட்டுமல்லாமல், தவறு நேரும்போது மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு என்று (784) நட்பின் விசாலத்தை வள்ளுவம் குறிப்பிடுகின்றது. நட்பின் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் போது உடுக்கை இழந்தவன் கைபோலவே (788) எனறு குறிப்பிடுகின்றார். உடுக்கப்பட்ட உடை நழுவுமானால் எந்த உத்தரவுமின்றி கை சென்று உடைபற்றிக் கொள்ளும். இது போன்று யாருடைய அனுமதியுமின்றி உதவுதல் என்பது தான் நட்பின் பலம் என்றும், உண்மை என்றும் கொள்ள முடியும். மற்றவரைப் பற்றிச் சிந்தித்தல், மற்றவர்மீது அக்கறைக் கொள்ளுதல் என்ற தன்மையே மனிதநேயத்தின் மகத்துவமாகும். நட்பின் ஆழத்தையும் அகலத்தையும் குறிப்பிடும் பொழுது விசம் கூட நட்பிற்கு இனிமை தரும் என்கிறார் வள்ளுவர்.
''பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரீகம் வேண்டு பவர்'' (580)
இதே கருத்தை நற்றிணை
''முந்தை இருந்து நட்டோர் கெடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரீகர்'' (நற் 355)
என வலியுறுத்துகின்றது. உள்ளன்போடு கொண்ட கேண்மையின் வளமை எப்போதும் தோற்றுப் போவதில்லை.
காதல்:
காதல் என்ற புனிதம் இல்லையென்றால் மனித மனம் என்றோ மீண்டும் விலங்கின் தன்மையை ஏற்றிருக்கும். காதல் என்கின்ற சொல் குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளும் போதுதான் தவறானதாகவும், இழிவானதாகவும், கருத்தில் கொள்ளப்படுகின்றது. சமூகத்தால் மிக உணர்வாகக் கருதப்படுவதும் உயர்த்திப் பேசப்படுவதும் மனிதர்களிடையே உட்பிணைப்பை ஏற்படுத்துவதும், நேயத்தை மேன்மையுறச் செய்வதும் காதல் என்கின்ற நேசிக்கும் பண்பு தான். இந்தக் காதலை வள்ளுவரை விட மென்மையாகவும், அதே சமயம் ஆழமாகவும் வேறு எவரும் குறிப்பிடவில்லை என்றே கருதலாம். காதலின் வளர்நிலையில் காலையில் அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் இந்நோய் (1227) என்று மலர் மலர்வதைப் போல மென்மையாகவும் உடலில் ஏற்படும் நோய் போன்று மனதிற்கு ஏற்படுமாறு மிளிர்வதாக, வள்ளுவர் குறிப்பிடுகின்றார். காதலின் மென்மையைப் பற்றிக் குறிப்பிடும்போது மலரினும் மெல்லியது (1289) என்று பதிவு செய்கின்றார். இந்த மென்மையான உணர்வின் அடிப்படையிலேயே, அதிர்வுகளிலேயே நேசிப்பும், காதலின் உயிர்ப்பும் அடங்கியிருக்கின்றது. காதலின் வலிமையைப் பற்றிக் கூறும்போது உடம்பிற்குக் கள் குடிப்பதினால் மயக்கம் வரும், ஆனால் காதலியின் நினைவோடு கலப்பதினாலும், கண்களால் காண்பதினாலுமே கள் போன்ற மயக்கம் தரும் வலிமை கொண்டது காதல் உணர்வு (குறள் 1281) அணங்கு கொல் ஆய்மயில் குறள் 1081. யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் குறள் 1094. என்ற மன நேசிப்பிற்குப் பெரும் பங்காற்றுவது காதல். சாதி, மதம், இனம், மொழி என்ற குறுகிய எல்லைக் கடந்து மனித நேயத்தை வளர்க்கும் மாபெரும் சக்தி காதல் எனவே தான் பாரதி காதல் செய்வீர் உலகத்தீரே எனக் காதலின் வழியாக நேயத்தை வலுப்படுத்துகின்றார். வாலிப நெஞ்சங்களைப் பிணைப்பதோடு, மகன் - தயார். மகன் - தந்தை. விலங்கு - மனிதன். மனிதன் - தாவரங்கள், மனிதன் - பறவை என உயிரினத் தளங்களுக்கு நீண்டு செல்லும்போது தான் காதலின் பலம் பெருகி நேசிப்பு விரிகின்றது.
ஜ“வகாருண்யம்:
அன்பு என்னும் தாயும் அருள் என்னும் சேயும் இருந்தால் மட்டுமே ஜ“வகாருண்யத்தைப் போற்ற முடியும் (குறள் 757). அனைத்து உயிர்கள் மீதும் அன்பைச் செலுத்தும் நிலை, அது ஈகையாக, கருணையாக, பரிவாக, பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுத்திகழும். அன்பையும், அருளையும் கொடுத்து நேசிக்கும் பண்பைக் கொண்டவனே மனிதன். மற்ற உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும் மனப்பக்குவம்தான் இன்னும் மனிதனைத் தன் நிலையிலிருந்து தாளாமல் மனிதனாகவே அடையாளப்படுத்துகின்றது. தம் பெற்றோர்களையே முதியோர் இல்லத்தில் சேர்க்கும் இந்தத் தலைமுறையினருக்கு வள்ளுவத்தை முழுப்பொருளாழத்துடன் கற்றுக்கொடுப்பது சமூகத்தேவையாகும். வகுப்பறை மட்டுமல்லாமல் வெளிப்புறச் சூழலிலும் வள்ளுவம் ஒலிக்கும் வகைசெய்யும் கட்டாயச் சூழலை உருவாக்குவதே மனிதநேயத்தை மலரச் செய்வதற்கான முதற்படியாகும்.
நேய மறுமலர்ச்சிக்கான வழியைச் சொன்ன வள்ளுவர், வெறுமனே போற்றும்படியான ஒழுக்க நிலைகளைக் கடைபிடிப்பதோ தவறுகளைத் தட்டிக்கேட்கும் மற்றொரு நிலையும் நேயப் பாதுகாப்பாகக் கொள்ள முடியும். தோழமை உணர்வு, நேயப்பண்பு சாயும் போது தாங்கிப் பிடித்துக் கொள்வதினால் அவ்வப்போது நேசிப்பு காப்பாற்றப்படுகின்றது. தழைக்கின்றதா? செழிக்கின்றதா? என்றால் இல்லையென்று தான் சொல்ல முடியும். நமக்கென்ன என்று ஒதுங்கிச் செல்லும் சுயநலமும், கொடுமைகளைக் கண்டு பொறுத்துக்கொள்ளும், கோழைத்தனங்களுமே நேசத்தளவின் செழுமை இன்மைக்கு ஏதுவாகக் கருதலாம். இதுபோன்று தவறு நடக்கும்போது தட்டிக் கேட்டு தோழமையை வளர்த்துக் கொள்ள வள்ளுவத்தில் வழிமுறைகள் காணப்படுகின்றன. மற்ற மனிதர்களின் சுக துக்கங்களையும் உள்வாங்கிக் கொள்வது மட்டுமல்லாமல் அதனைத் தனதாக்கிக் கொண்டு உணர்தல் வேண்டும். இதுவே தன்மையும் மற்ற உயிர்களையும் பேணிப் பாதுகாக்கும் பண்பாகக் கொள்ளப்படுகின்றது. ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் (214) என்று குறிப்பிடுவதும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றது. அஞ்சுவதற்கு அஞ்சல் வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடுவது (428) அஞ்சக் கூடாததற்கு அஞ்ச வேண்டாம் என்பதை வலியுறுத்தவே, இந்த பொருளாழத்தை முன் வைக்கின்றார். மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கும் துணிச்சல் (784) அனைவருக்கும் இயல்பாக மிளிர வேண்டுமென்பதே மனித நேய மிளிர்வின் அடையாளமாக இருக்கும். பிறர்பழி எப்பொழுது தன்பழியாக மதிக்கப்படுகின்றதோ அப்பொழுது காயமாகும் நேயம் கூட செழிப்புறும். இதில் மேலோர் கீழோர் என்பவர்கள் இல்லை. உயர்வு தாழ்வு கிடையாது. எந்தப்புற அளவுகோலும் மனிதத்திற்கான முழுமையை தீர்மானிப்பதில்லை. எனவே தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (972) என்று வள்ளுவம் அழுத்தமாகக் குறிப்பிடுகின்றது. இதுபோன்று தோழமை உணர்வு, நேய உணர்வு தொடர்ந்து மிளிர்வதற்கு அடிப்படை பண்புகளை மக்கள் யாருடைய திணிப்புமின்றி இயல்பாக உள்வாங்கிக் கொண்டு செயலாக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்பதை வள்ளுவம் பதிவு செய்துள்ளது.
மனித நேயத்திற்கான முழுமையான கருத்தாழத்தை, செறிவாகப் பதிவு செய்ததோடு பல ஒழுக்கநெறிகள் எப்போதும் உயரிய மதிப்புகளைக் காத்து நிற்க வேண்டுமென்பதற்காக மேற்கண்ட பல உயர்பண்புகளையும் வள்ளுவம் பதிவு செய்துள்ளது. இருண்ட காலத்தில் வெளிவந்த வள்ளுவத்தில் நேசிப்பு செழுமையடைந்ததற்குச் சில அடிப்படைகளை கூறமுடியும்.
* சங்க காலத்திலும் அதற்கு முந்தையக் காலத்திலும் மனித உயிர்கள் மலிவாக எடுக்கப்பட்டதன் விளையாக மனிதன் நேசிக்கவும், உயர்பண்புகளை நிலைநிறுத்தவும், உயர் விழுமியங்களை மேன்மையடையச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
* இயற்கையோடு வாழ்ந்து, நேசித்த மனிதன் தன்னையும், தன்னைப் போன்ற பிற உயிர்களையும் நேசித்ததாலேயே நேயப் பண்பு வலுப்பெற்றிருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கருத்தாழமும் மனிதப் பண்பின் பன்முகங்களையும் நேசத்தின் ஊற்றுக்களையும் தன்னுள் அடக்கி உயர் விழுமியங்களை உள்கட்டுமானமாக்கி, இயங்கியல் பொருண்மையோடு இயங்கி வருகின்றது வள்ளுவம், மனிதகுலத்திற்குப் பெரும் வெளியையும், ஜ“வ ஒளியையும் கொடுத்த வள்ளுவத்தின் காலம் இருண்ட காலம் என்பதை விட பொற்காலம் என்று சொல்வது சாலப் பொருத்தமாக அமையும்.
|