மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர், சிம்ம முகம் இல்லாமல், சுயரூபத்துடன் சாந்தமான முகத்துடன் இருக்கிறார். எனவே இவர், "அழகிய சிங்கர்' என்றழைக்கப்படுகிறார். வெங்கடேசருக்கு பூஜை செய்தபின்பு, இவருக்கு பூஜை நடக்கிறது.பல்லாண்டுகளுக்கு முன்பு, இத்தலத்தில் சிறியளவில் இருந்த கோயிலில், கோதண்டராமர் சன்னதி மட்டும் இருந்தது.
ஒருசமயம் ராமரை வழிபட்டு வந்த பக்தர் ஒருவரின் கனவில் பிரசன்னமாகிய வெங்கடேசப் பெருமாள், தனக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்பின், இங்கு வெங்கடேசருக்கு கோயில் எழுப்பப்பட்டது. பக்தரின் மனதில் பிரசன்னமாகி, அதன்பின் எழுப்பப்பட்ட கோயில் என்பதால் சுவாமி, "பிரசன்ன வெங்கடேசர்' என்று பெயர் பெற்றார்.இங்கு சுவாமியை பிரதிஷ்டை செய்தபோது, அழகிய சிங்கர் விக்ரகத்தையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். எனவே கோயில், "பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள்' கோயில் என்று அழைக்கப்பெற்றது. |