விண்மீன்கள் அழகானவை. காண்போர் ஆர்வத்தைத் தூண்டுபவை. விண்மீன்களைப் பாடாத கவிஞர்கள் இந்த வையகத்தில் இல்லை. ஆனால், இரு கவிஞர்களின் பார்வையில், விண்மீன்கள் கோபத்தின் கொப்புளமாய் வெடித்திருப்பதைக் காண முடிகிறது.
கம்பரின் பார்வையில், புராணக்கதையோடு இணைந்த அவரது கோபமும், புரட்சிக்கவி பாரதிதாசனின் சமுதாயச் சிந்தனை வெளிப்பாட்டுக் கோபமும் இங்கே விண்மீனாய் கொப்பளிப்பதைக் காண்போம்.
அகலிகை கற்பை, வஞ்சகன் இந்திரன் வஞ்சித்து விட்டான் என்பதை கெüதம முனிவர் அறிந்து, நெஞ்சம் வெதும்பினார். தவப்பலத்தால் அக்கொடியவனுக்குச் சாபமிட்டார். அந்தச் சாபத்தின் காரணமாக, இந்திரன் உடல் முழுவதும் கண்கள் வெடித்தன. அதைப்போல விசும்பின் மேனியிலும் கொப்புளமாய் உருவானதா இந்த விண்மீன்கள்? என்று கம்பர் தம் கற்பனைச் சிறகை புராணக்கதையில் புரவியோட்டுகிறார்.
""பரந்துமீன் அரும்பிய பசலை வானகம் அரந்தைஇல் முனிவான் அறைந்த சாபத்தால் நிரந்தரம் இமைப்பிலா நெடுங்கண் ஈண்டிய புரந்தரன் உருஎனப் பொலிந்தது எங்குமே!''
விசும்பில் பூத்த கொப்புளமாய் உள்ள விண்மீன்களின் தோற்றத்தைப் புரட்சிக்கவி பாரதிதாசன் இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிறார். மண்ணில் உழைத்து வருந்தும் மக்கள் எல்லாம் வறியராம். அவர்கள் உரிமை கேட்டால், அவர்களைத் துச்சமாக நினைத்துத் தொல்லைப்படுத்தும் அற்பர்களுக்குப் பெயர் செல்வராம். பகலெல்லாம் நடக்கும் இந்தப் பரிதாபக் காட்சியை, மேலே இருக்கும் பரந்த வானம் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இவ்வஞ்சகச் செயலைக்காண, நெஞ்சு பொறுக்காது வானகம், இரவு நேரத்தில் மேனியெல்லாம் வெம்மையாகிக் கொதிப்படைந்து கொப்புளங்களாய் வெடித்து விடுகிறது என்ற பொருள் தரும்படி கவி பாடியுள்ளார். அக்கவிதை வருமாறு:
""மண்மீதில் உழைப்பா ரெல்லாம் வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம் இதைத்தான் கண்மீதில் பகலி லெல்லாம் கண்டுகண் டந்திக் குப்பின் விண்மீனாய் கொப்ப ளித்த விரிவானம் பாராய் தம்பி!''
நமக்கெல்லாம் விண்மீன்கள் கண்ணுக்கினிய காட்சியாய் மலர, இவ்விரு கவிஞர்களுக்கு மட்டும் விசும்பின் கொப்புளமாய் தோன்றியுள்ளதைக் காணும்போது இவ்விரு கவிஞர்களுடைய கோபத்தின் வெளிப்பாட்டை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
|