|
||||||||||||||||||
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி) |
||||||||||||||||||
தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவருபவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவருடன் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் நடந்த அறிவுசார் கலந்துரையாடலின் திருக்குறள் சார்ந்த பகுதிகளைச் சென்ற இதழில் பார்த்தோம். தொடர்ச்சியாக அறிவியல், கலை, பண்பாட்டு வளர்ச்சி, தமிழ்க்கல்வியின் தரம், உலகத் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு மொழியைக்கடத்துதல், தமிழ் அறிஞர்களை அடையாளப்படுத்தல், தர்க்கபூர்வமான விவாத முறை என்று தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
வெளிநாடுகளில் வாழும் நம் குழந்தைகளுக்கு குறளிலிருந்து, இலக்கியங்களிலிருந்து அறிவியல் அறிவை எப்படி கதைகள் மூலம் அறிமுகப் படுத்துவது? முதலில் அறிவியல் என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும். அதுபோல அனுபவ அறிதல் மேம்பட்டு வருவதற்கும் அறிவியல் - சயின்ஸ் என்பதற்கும் வேறுபாடு உண்டு.
16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரான்சிஸ் பேகனுக்குப் பிறகு அறிவியல் செயல்பாடு என்ற புதிய சிந்தனைமுறை தொடங்கி வந்தது. அனுபவ அறிவென்பது, 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலின் தூண்கள் மிகப் பெரியவை. 400 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பட்ட மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் கோபுரம் தஞ்சைக் கோயிலைவிட மிகப் பெரியது. ஆனால் அதைத் தாங்கும் தூண்களோ மிகச் சிறியது. நானூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து செய்து சிற்பிகள் எடைப் பரவலாக்கமூலம் சிறிய தூண்களே போதும் என்று கண்டடைகிறார்கள். இது அனுபவ அறிவு.
நம் சிற்பிகளும், வைத்தியர்களும் இவ்வாறு பலவற்றைச் செய்து அறிந்ததைத் தொல் அறிவு என்று சொல்லலாம். ஆனால் அறிவியல் என்பது எடைச் சமன்பாடு என்ற கருதுகோளைச் சென்றடைவது. அந்த கருதுகோளைக் கண்டடைந்துவிட்டால், அதைப்பொதுவில் நிறுவி அனைவரும் அதை ஒரு கொள்கையாக ஏற்றுக்கொண்டால் அது மிக எளிதாக மாறிவரும். நானூறு ஆண்டுகள் தேவைப்படாது. ஆனால் நம்முடைய மரபில் எங்காவது எடைச் சமன்பாடு பற்றி எழுதப்பட்டிருக்கிறதா? சிறிய தூண் போதும் என்று கண்டறிந்துவிட்டார்கள் ஆனால் ஏன் என்று கண்டறியவில்லை. அந்த ஏன் தான் அறிவியல். தியரி (கோட்பாடு)தான் அறிவியல். எகஸ்பரிமென்டேசன் இல்லை. தியரியை முன் வைப்பதும், அதைப் பொய்ப்பித்தலின் வழியாக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும், நிரூபித்தல் வழியாகக் கொள்கையைப் புறவயமாக (அப்ஜக்டிவ்) நிறுவுவதே அறிவியல். இது பதினாறாம் நூற்றாண்டில் உருவானது.
திருக்குறளை எழுதிவிட்ட நம்மால் ஒரு ஸ்குரூவை, வால்வைக் கண்டுபிடிக்க முடியாதா? அதைப்பற்றி திருக்குறளிலேயே எங்காவது கண்டிப்பாக இருக்கும். நல்லா தேடிப்பாரு என்று சொல்வதில் அர்த்தமில்லை. இந்த வகையாகக் கல்வியை அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுத்தீர்களென்றால் 5 -10 வயது வரை கேட்டுக்கொண்டிருப்பார்கள். 12 வயதுக்கு மேல், உங்களை முட்டாள் என்று நினைத்து, பாவம் இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள், கஷ்டப்பட்டிருக்கிறார்கள், பக்தி சார்ந்து ஏதோ சொல்கிறார்கள் என்று மன்னித்து விடுவார்கள். குறள் என்றும் மாறாத கவித்துவத்தை, பேரறத்தை, நீதியைச் சொல்லக்கூடிய நூல் அறிவியலைச் சொல்லக்கூடியதல்ல. நமக்கு மிகப்பெரிய மருத்துவமுறை இருக்கிறது. அனுபவம் சார்ந்தது. தியரி என்ற கருதுகோள் இல்லை. நவீன மருத்துவம் புறவயமாக நீங்கள் நிறுவுவதற்கும், மறுப்பதற்கும் வாய்ப்பு கொடுக்கும்.
அந்த வகையான அறிதல் திருக்குறளில் இல்லை. அதை அறிவியல் நூலாக, மருத்துவ நூலாக முன்னிறுத்துவது தவறான புரிதல்களை உருவாக்கும் அப்படித் தேடிப்போவது தேவையில்லை என்று நினைக்கிறேன்.
மற்ற தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிவியல் அறிவை மருத்துவ அறிவை எப்படி அறிமுகப் படுத்துவது? பொதுவாக நமது அறிவுப்புலத்தில் ஒரு விடுபடல் ஒரு வெட்டு உள்ளது. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் காலனியாதிக்க காலத்திற்கு முன், பெரும்பாலான சிற்பிகள், மருத்துவர்கள், தச்சர்கள் அரசர்களால் பேணப்படாமல் கைவிடப்பட்டு அது அழிந்தது. பின் உ.வே.சா போன்றவர்களால் கண்டடையப்பட்டது. உ.வே.சா இல்லை என்றால் சங்க இலக்கியங்கள் கிடைத்திருக்காது. பல காப்பியங்கள் இன்னும் கிடைக்கவே இல்லை. பல நூல்களில் அப்ஜக்டிவிட்டி என்ற புற வய நிறுவனப்படுத்துதல் இல்லை. மரபாக இருக்கக்கூடிய ஏராளமான மருத்துவ நூல்களில் அதிகாரப்பூர்வமான நூல் எது என்று சொல்லமுடியவில்லை. புகழ்பெற்ற மருத்துவ நூல்களைப் படித்தால் உங்களுக்குத் நகைச்சுவையாக கூட இருக்கும். உதாரணமாகப் போகரின் அகவல் சித்த மருத்துவத்தின் ஆதி நூல் என்று சொல்கிறார்கள். அதில் பத்தில் எட்டு மருத்துவக் குறிப்புகள் தோல் நோயைப் பற்றியது. சோப்பு எப்போது வந்ததோ அப்போதே இல்லாமல் போய்விட்டது நம் மருத்துவம். நாம் அதைப் புகழ்ந்து முன் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. நமது அனுபவ அறிவில் குறைவான அறிதல்களே உள்ளன. அந்தந்தத் துறை சார்ந்த அறிஞர்கள் அதை ஆராய வேண்டும். உதாரணமாகச் சித்த மருத்துவத்தைப்பற்றி இன்றைய நவீன மருத்துவ அறிஞர்கள் புறவயமாக ஆராய்ந்து அதில் என்ன இருக்கு இல்லை என்று பார்க்க வேண்டும். அதை ஒரு நம்பிக்கையாக நம் குழந்தைகளுக்குக் கொண்டுவந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
இங்குள்ள குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க சிரமமாக உள்ளதே. ஏன் சொல்லிக்கொடுக்க வேண்டும்? அவர்கள் எப்படி நூல்களைப் படிக்க வேண்டும்? ஒரு இலக்கியம் படைக்கும் அளவிற்குச் சொல்லி கொடுக்க வேண்டுமா? ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் தெரிந்தால் போதுமா?
நான் குழந்தைகளுக்காகப் பனிமனிதன், வெள்ளிநிலம் என்று இரு நூல்கள் எழுதியிருக்கிறேன். பரவலாக வாசிக்கப்பட்டது. ஆனால் சின்ன குழந்தைகளுக்காகப் புத்தகம் அல்ல. ஏன் எழுதினேன் என்றால் குழந்தைகளுக்குக் கதை எழுதும் மற்ற எழுத்தாளர்கள் நம் குழந்தைகளின் அறிவுத்தளம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. இவர்களோ எட்டாம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவனுக்கு “அண்டரண்ட பட்சியும் குருவியும்“ போன்ற கதைகளைச் சிக்கலான மொழியில் எழுதுகிறார்கள். படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவன் அவஞ்சர்ஸ் படம் பார்க்கிறான். என்னுடைய பனிமனிதன் என்ற நூலில் பரிணாம வளர்ச்சி கொள்கையைப் பற்றி பேசக்கூடியது. வெள்ளி நிலம் மதங்களின் தோற்றம், வளர்ச்சி, உடைவுகள், பிரிவுகள், மறைவைப் பற்றி பேசக்கூடியது. சாகசக் கதை, இமய மலையில் கதை நடப்பதாக இருக்கும். ஒரு வரியில் ஐந்தாறு வார்த்தைகளுக்கு மேல் இருக்காது. எழுவாய் பயனிலை தெளிவாக இருக்கும். வாய்விட்டுப் படித்தால் எளிதில் புரியக்கூடியதாக இருக்கும். அறிவுத்தளத்தில் மேலேயும், மொழியில் கீழேயும், எளிமையாகவும் இருக்கும். ஆனால் அடிப்படையில் தீவிரமான புத்தகம். கலை, அறிவியல் சார்ந்து இருக்கும். பரவலாக வாசிக்கப்படுகிறது.
இரண்டாவதாக ஏன் தமிழ் படிக்க வேண்டும்? அமெரிக்க ஜப்பான் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் நம் குழந்தைகளுக்கு நான் யார்? என்ற சுய அடையாளத்தை (Self Identity) வரையறுத்துக் கொள்வது அவசியமாகிறது. அது சுய பெருமிதம் (Self Esteem) சார்ந்தது. நான் யார் என்பதற்கு ஒரு தெளிவான உயர்ந்த வரையறையை நாம் வைத்திருக்கும்போதுதான் மற்றவரை எதிர்கொள்ள முடியும். இதை எப்படி நம் குழந்தைகளுக்குப் புரிய வைப்பதென்றே தெரியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். அமெரிக்காவில் உள்ள இந்திய குழந்தைகளுக்கு சுய பெருமிதம் இல்லை. அவர்கள் இங்குள்ள குழந்தைகளை பின் தொடர்ந்து செல்ல விரும்புகிறார்கள். ஆனால் கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாவிட்டால் கூட சைவம் சார்ந்து ஒரு பெருமிதம் இருக்கிறது.
ஒரு பத்தாம் வகுப்பு குழந்தைக்குச் சைவ சித்தாந்தத்தைப் பற்றி ஒரு அரைமணி நேரம் உரையாடமுடிகிறது. அது அவர்களுக்கு ஒரு சுய அடையாளத்தை அளிக்கிறது. நான் ஒன்றும் வேர் அற்றவனல்ல எனக்கும் ஒரு மரபிருக்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. 1960-70-80 களில் நவீனக் காலகட்டத்தில் உலக மனிதன் என்ற பெரிய கனவு இருந்தது. அவனுக்கு எந்த வேரும் கிடையாது. நாடும் கிடையாது. அதுபற்றி சுந்தர ராமசாமி தரப்பினரெல்லாம் பெரிய கனவுகளைக் கண்டிருக்கிறார்கள். ஒரு மார்க்சிஸ்ட் கற்பனை பண்ணக்கூடிய மனிதன் அவனே. தற்போதைய பின் நவீனத்துவக் (Post Modern) காலத்தில் அப்படி ஒரு மனிதன் இருக்க முடியாது என்பதே யதார்த்தம். பின் நவீனத்துவ மனிதனுக்கு அவன் யார் என்பது யூதர்களைப் போல, பல்வேறு இன மக்களுக்கு இருப்பதைப் போல ஓர் அடையாளம் தேவைப்படுகிறது. தமிழர்களுக்கு அந்த அடையாளத்தை மொழி, மதம் அளிக்க முடியும். அந்த இரு வேர்களை இழந்தார்கள் என்றால் அடையாளமற்ற மனிதர்களாகி போவார்கள். பெரும்பாலும் வெறும் கன்ஸூமர்களாக, டெக்கீஸாக, கூகுளின் பயனராகவும், முக நூலின் உறுப்பினராகவும் மட்டும் மாறுவார்கள். அந்த அடையாளமின்மையே பெரும் மனச் சோர்வை அளிக்கக்கூடும். ஆகவே தமிழ் அடையாளமாக இருந்தாக வேண்டும்.
இரண்டாவதாக, தமிழையும் சைவத்தையும் வைணவத்தையும் எல்லாம் பிரிக்க முடியாது. வெறும் சைவத்தை மட்டும் கொடுத்தீர்களென்றால் நாளடைவில் சைவம் வெறும் அடையாளமாகப் போகும். ஆகவே இது ஒரு கூட்டு மரபு தான். இன்று தமிழ் நாட்டிலும் தமிழ் படிங்க என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு சிறு நகர் சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களால் கூட தினத்தந்தி வாசிக்க முடியவில்லை. ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர், தமிழ்த்துறை ஆசிரியர் எழுதிய விடுப்பு கடிதத்தைக் காட்டினார். பல பிழைகள் இருந்தன. தமிழில் தற்கொலைக் கடிதங்கள் கூட பிரசுரமாகி இருக்கிறது. ஒருவருடைய ஆத்மாவைப் பிழிந்து வைக்கக்கூடிய கடிதங்கள் தப்புத் தப்பாக எழுதப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு பேர் ஐ.ஏஎஸ். பலர் முக நூலில் இருக்கிறார்கள். ஏன் பலர் புகைப்படத்தை மட்டும் போடுகிறார்கள்? குரங்குப் படத்தைப் போட்டு, குற்றாலத்திற்குப் போனோம் குரங்கைப் பார்த்தோம் என்று நாலு வரி தமிழில் எழுதமுடியவில்லை.
கேரளாவில் சராசரி மலையாளக் கல்வி தரமானதாக இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் நடிகர்களும் அரசியல்வாதிகளும் பிழையின்றி தூய மலையாளத்தில் தெளிவாகப் பேசுவதைக் காணலாம். அப்படி தமிழில் பேச கூடிய பிரபல மனிதர்கள் உங்கள் நினைவுக்கு வருகிறதா? நீயா நானா? போன்ற நிகழ்ச்சிகளில் கல்லூரிகளிலிருந்து நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர்களை அழைத்து வருகிறார்கள். அவர்களோ ஐ மீன், டத் மீன்ஸ், ஆக்சுவலி என்றே பேசுகிறார்கள். இது மிகப் பெரிய வீழ்ச்சி. இதற்கு தீர்வுகள் பெரும் அமைப்புகள், அரசுகள் மட்டுமே கொடுக்க முடியும். தமிழ்க் கல்வி சுவாரஸ்யமாக, மதிப்பு மிக்கதாக உருவாக வேண்டும். தொடரும் ..
|
||||||||||||||||||
by Swathi on 06 Nov 2019 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|