அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்மறைக் கருத்துகளே சைவத் திருமுறைகளாக வெளிப்பட்டுள்ளன என்பதை, ""நான்மறை நாவன் நற்றமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்'' (1-75-11) என்று திருஞானசம்பந்தப் பெருமானே அருளிச் செய்துள்ள திருப்பாட்டால் அறிந்துகொள்ள முடிகிறது. எப்படியெனில், "தாம் திருவாய் மலர்ந்து அருளிய சொற்கள் அனைத்தும் சிவபெருமானின் திருவாக்கே அன்றி வேறில்லை' என்பதை, "திருஇலம்பையங்கோட்டூர்' பதிகத்தில் ""எனதுரை தனதுரையாக'' என்று பதிகம் முழுவதும் கூறியுள்ளதில் இருந்து தெளிவாகிறது. சிவபெருமான், திருஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்குகளில் நின்று தான் கூறவேண்டுவனவற்றை எல்லாம் ஞானக்குழந்தையின் திருவாக்கின் மூலம் கூறியருளியுள்ளார். எனவேதான் சிவஞான சுவாமிகள், இதை "தேசிகன் வாக்கு' என்றார்.
மேலும், இவை தமிழ்மொழிக்கு இனிமை பயப்பன என்பதும், இத்திருமுறைகளின் துணைகொண்டு தமிழர்கள் பெறற்கரிய பெரும் பேற்றினை எய்துவர் என்பதும் தெளிவாகிறது. தேவாரம், திருவாசகம் ஆகியவை நம்முடைய மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) போக்கும் அருமருந்தாகவும், மந்திரமாகவும் திகழ்கின்றன என்பதை,
ஞானசம்பந்தர் (3-92-1), அப்பரடிகள் (6-65-5), சுந்தரமூர்த்தி சுவாமிகள் (7-57-10), மணிவாசகப் பெருந்தகை (619) ஆகிய நாலவர் பெருமக்களும் அருளியுள்ளனர்.
மந்திரம் என்ற சொல்லுக்கு - (மன்-நினைப்பது; திரம்-காப்பது) நினைப்பவரைக் காப்பது என்று பொருள். மருந்து என்பது உடல் மற்றும் உயிர் நோயையும் போக்கவல்லது. சிவாகமங்களின் சாரமே சைவத் திருமுறைகள் என்பது முடிந்த முடிவு.
ஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்த தேவாரத்தில் உள்ள திருக்கடைக்காப்பில் அரிய பல செய்திகள் அடங்கியுள்ளன என்பதை முன்பே ஒருமுறை கண்டோம். இவர் அருளிச்செய்துள்ள பதிகங்கள் தனிச்சிறப்பு பெற்றதற்குக் காரணம், ஏகபாதம், திருஎழுகூற்றிருக்கை, மாலைமாற்று ஆகிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டுள்ளதுதான்.
திருஏகபாதம்: ஏகபாதம் என்பது, ஏகம்-ஒன்று; பாதம்-அடி. ஏகபாதம்- ஓர் அடி. ஓரடியே அடுத்தடுத்த அடிகளில் பொருள் வேறுபடுமாறு நான்கு முறை மடித்து மடித்து வந்து ஒரு பாடலாக அமைந்திருப்பதால் "ஏகபாதம்' எனப் பெயர் பெற்றது. பன்னிரு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தில் உள்ள தனிச்சிறப்பு, சீர்காழித் திருத்தலத்தின் பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு விளங்குவதுதான். இதில் உள்ள ஐந்தாவது பதிகத்தை மட்டும் காண்போம்.
""சுடர்மணி இமம் ஆளி கைத்தோணி புரத்து அவன்; சுடர்மணி மாளி கைத்தோள் ணிபுரத்தவன்; சுடர்மணி மாளி கைத்தோணி புரத்தவன்; சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்''
முதல் அடி: சுடுகின்ற இடமாகிய மயானத்தை நடமாடும் இடமாகக்கொண்டு, முப்புரங்களையும் எரித்துத் தும்பை மாலையை அணிந்தவன். சுடர்மணி-சூடாமணி; இமம்-ஈமம்; ஆளி-ஆள்பவன்; கைத்தோணி-தும்பை மாலையை அணிந்தவன்; புரத்தவன்-முப்புரம் எரித்தவன். இரண்டாவது அடி: என் உச்சியில் சூடாமணியாய்த் திகழ்பவன்; என்மேல் அன்பு என்னும் மயக்கத்தை உடையவன்; துதிக்கையை உடைய யானையை உருவழித்தவன். சுடர்மணி-சூடாமணி; மாளி-மாலி-மயக்கம்; கைத்தோள்- தோலை உரித்துத் துதிக்கையை உடைய யானையை; ணிபுரத்தவன்- வடிவழித்தவன். மூன்றாம் அடி: சூரியனது களங்கத்தைப் போக்கிய கடலைப்போன்ற பிறவியைப் போக்கும் பொருட்டுத் தெப்பமாக உதவும் பிரணவ மந்திரத்தை, ஆன்மாக்களின் செவியில் போதித்தவன். சுடர்-சூரியன்; மணி-கழுவி; மாளி-கெட்டவன்; கைத்தோணி-தெப்பம்; புரந்தவன்-உபதேசிப்பவன். நான்காம் அடி: இவனே நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ஆவான். சுடர்-விளக்கம்; மணி-நவரத்தினம்; மாளி(கை)-மாளிகை சூழ்ந்த; தோணிபுரம்-திருத்தோணிபுரம். இவ்வாறு, ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம்.
மாலைமாற்று: இது மாலையின் நுனியை மாற்றிப் பிடிப்பதுபோல அமைந்திருக்கும். அதாவது, ஒரு பாடலின் முதல் வரியைத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படித்துக்கொண்டே வந்து, பின்பு அதையே இறுதியிலிருந்து தொடக்கம் வரை மாற்றிப் படித்துவந்தால், அந்த அமைப்பு இரண்டாவது வரியில் இருப்பதைக் காணலாம். இதுவும் சித்திரக்கவி வகையைச் சேர்ந்தது. இவ்வாறு ஒரு மாலையின் நுனியும் இறுதியும் மாறி மாறி அமைந்திருப்பதால், இது "மாலைமாற்றுப் பதிகம்' எனப் பெயர் பெற்றது. இப்பதிகத்தில் பதினொரு பாடல்கள் உள்ளன. ""யாமாமா நீ யாமாமா, யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மா, யாவீ, காமா, காண் நாகா காணா காமா, காழீயா, மா, மாயா நீ மா மாயா'' (பா.1) யாம் ஆமா? - சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள் கடவுள் என்பது பொருந்துமா? நீ ஆம் ஆம்! - நீ ஒருவனே கடவுள் என்பதே பொருந்தும். அதுவே பொருந்தும். மா யாழீ - பெரிய வீணையை வாசிப்பவனே, காமா - அனைவராலும் விரும்பப்படுபவனே, காண் நாகா - யாரும் காணத்தக்கவாறு பாம்புகளை அணிந்திருப்பவனே, காணா காமா - யாரும் காண முடியாதபடி மன்மதனை அழித்தவனே, காழீயா - சீர்காழி எனும் திருத்தலத்தில் உறைபவனே, மா மாயா - திருமகளின் கணவனாகிய திருமாலாகவும் வருபவனே, நீ மா மாயா - கொடிய மாயை என்னும் மயக்கத்திலிருந்து உயிர்களாகிய எங்களை நீ காத்து அருள்வாயாக!
இவ்வாறு அடுத்தடுத்த பாடல் இதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும். இந்தப் பாடலின் மூலம், கடவுளும் உயிரும் ஒன்று என்று கூறும் ஏகான்ம வாதக் கொள்கையை மறுத்துக் கூறியுள்ள ஞானசம்பந்தர், உயிர்கள் என்றும் கடவுளின் முழுமுதல் தன்மையைப் பெறமுடியாது என்னும் சைவசித்தாந்தப் பேருண்மையையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
முதலிலிருந்து முடிவு வரையிலும், முடிவிலிருந்து முதல் வரையிலும் எப்படி மாற்றிப் பார்த்தாலும், ஒரே தன்மையில் இருக்கும் இந்த மாலைமாற்றுப் பதிகத்தில், இறைவனும் (சிவனும்) உயிர்களும் (சீவனும்) பல்வேறு தன்மையினர் என்பதைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளதைப் படித்துத் (முழுவதையும்) தெளிவது சாலச்சிறந்தது.
|