|
|||||
மனிதர்களின் வாழ்க்கை போக்கை மூன்று வகையாக வகைப்படுத்தலாம்? |
|||||
நாம் எந்தவகை என்பதை சுயபரிசோதனை செய்வதற்கு.
மனிதர்களின் வாழ்க்கை போக்கை மூன்று வகையாக வகைப்படுத்தலாம்:
1. பிறந்தோம் - வாழ்ந்தோம் - மறந்தோம் என்று சுயத் தேவைகளுக்காக வாழ்ந்து செல்பவர்கள்.குடும்பம், வேலை, பொருள் ஈட்டுவது, தன்னை சுற்றி வெளியில் பார்க்காமல் சுயத் தேவைகளை முதன்மைப்படுத்தி வாழ்ந்து விடைபெறுவது. சமூகத்திலிருந்து எடுப்பவர்கள், கொடுப்பவர்கள் அல்ல. இவர்கள் மறைவு குடும்ப அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2. எதுவும் செய்யாமல் வாழ்வதைவிட ஏதாவது செய்வோம் என்று கிடைத்ததை, பிடித்ததை தன் தேவைகள் தாண்டி மொழி,இனம், மனிதம் ,சமூகம் என்று தனக்குப் பிடித்ததை, புரிந்ததை செய்பவர்கள். இவர்களிடம் இலக்கு தெளிவாக இருக்காது. செய்யும் செயல்கள் நிலைத்து நிற்காது. இருப்பினும் குறுகியகால விளைவை ஏற்படுத்தும், தேவைகளை சரிசெய்யும். இவர்களிடம் திடமான திட்டம், விளைவு சார்ந்த தெளிவு இருக்காது. இவர்களது செயல்பாடு தனித்தனியாக உதிரியாக இருக்கும், அடுத்தவர்களுடன் ஒருங்கிணைந்தோ, ஒருங்கிணைத்தோ செயல்படமாட்டார்கள். அவ்வப்போது தோன்றுவதை அந்த காலக்கட்டத்தில் செய்பவர்கள், இந்தப் பணியை, இந்த செயலை முழுமையாகச் செய்வேன் என்றில்லாமல் படிக்கும் நூல்கள், பார்க்கும் மனிதர்கள், சந்திக்கும் வாழ்வியல் சவால்களுக்கு ஏற்ப புதுப்புது செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் நிறைவுடன் மேலோட்டமாகப் பயணிப்பவர்கள். பெரிய விளைவுகள் இருக்காது, அடையாளம் உருவாகாது. கிடைத்த பொதுவாழ்க்கையை சரியாக உணராமல் பொது நோக்கைவிட,தன்னலத்துடன் வாழ்ந்துவிடுவார்கள். இப்படி ஒரு மனிதர் சிந்திக்கவில்லையென்றால் இது நடந்திருக்காது என்று சமூகம் நினைவில் கொள்ளும் நிலைத்த செயல்பாடுககளாக இவர்களது பங்களிப்புகள் அமையாது. இவர்கள் மறைவுக்குப் பின் சமூகம் சில நாட்கள் பேசும். குடும்பம் கவலைகொள்ளும். சில நாட்களில், மாதங்களில் இவர்கள் விட்டுச் சென்ற செயல்விளைவுகளைத் தேடி எதுவும் இல்லாமல் சமூகம் இவர்களை மறந்துபோகும்.
3. எவரும் செய்யாததை, செய்யத் துணியாததை, எவருக்கும் புரியாத புதிய சிந்தனைகளை தேடி, ஆய்வு செய்து செய்பவர்கள். in between lines என்பதை படிக்கத் தெரிந்தவர்கள், கண்டுபிடிப்புகளை, சமூகம் அதிகம் பயனுறும் செயல்பாடுகளை, முழுமையாகவோ, ஏற்கனவே பலர் ஆங்காங்கே பகுதிகளாக செய்தவர்களை ஒருங்கிணைத்து, தொலைநோக்கு சிந்தனையுடன், விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கில் பயனுள்ள செயலாகத் தொகுப்பவர்கள், தான் பயணிக்கும் ஏற்கனவே இருக்கும் இயக்கங்கங்களை , அமைப்புகளை கேள்விகேட்டு இலக்குகளை விளைவுகளை நோக்கி கூர்மைப்படுத்துவார்கள். புதிய சிந்தனைகளுடன் , புதிய இயக்கங்களை உருவாக்கி விளைவுகளை தன் காலத்திற்குள் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உடையவர்கள். மனிதனாய் பிறந்ததற்கு சில ஆழமான அடையாளங்களை, பங்களிப்புகளை விட்டுச் செல்லவேண்டும் என்று திட்டமிட்டு உழைப்பவர்கள், அடுத்தவர்கள் பாராட்டுகளை, புகழ்ச்சிகளை, விருதுகளை கவனத்தில் கொள்ளாமல் தன் இலக்கின் கவனம் செலுத்துபபவர்கள். விருது, விழா, பொன்னாடை, புகழ்ச்சி, தன்முனைப்பு என்று ஆர்வம் இல்லாமல், முகத்தை வெளிக்காட்ட விரும்பாமல் காரியத்தில் கவனம் செலுத்துபர்கள். நூறு நூல்கள் நூல்கள் எழுதுவதைவிட, நூறு மேடைகளில் பேசுவதைவிட, நடைமுறை சார்ந்து களத்தில் விளைவை ஏற்படுத்தும் ஒரு செயல் உயர்ந்தது என்று உணர்ந்தவர்கள். அதிகம் வாசிப்பவர்கள், மனிதர்களை நேசித்து உரையாடலை விருப்புபவர்கள். இரசித்து வாழவேண்டும் என்று நினைப்பவர்கள். மண்ணின்மேல், மரப்பின்மேல், மொழியின் மேல், இனத்தின் மேல், மனிதகுலத்தின் மேல், இயக்கையின்மேல் பேரன்பு செலுத்துபவர்கள். செயல்வீரர்கள். தியாகம் செய்பவர்கள். இழப்புகளை சந்திப்பவர்கள். குடும்பம்- குழந்தை-பொருளாதாரம் என்று இயல்பான சுயற்சியிலிருந்து மாற்றி சிந்திப்பவர்கள். நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு , குடும்பத்தோடு சேர்ந்து நின்று சமூகத்திற்காக நிற்பவர்கள். தன்னலமற்ற தலைமைப்பண்புடன் இருப்பார்கள். இவர்கள் மறைவு சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்பம் இவரின் வாழ்க்கையால் பெருமையடையும். வரலாற்றில் இடம்பெறுவார்கள். குடும்பத்திற்கு வெளியே சமூகம் இவரது, எழுத்தை, பேச்சை ஆய்வு செய்து இவரை எடுத்துக்கொண்டு பயணிக்கும். அவர் ஏற்படுத்திய செயல் தாக்கங்கள், புது முயற்சிகளை அடுத்தடுத்த நிலைக்கு அடுத்த தலைமுறை கொண்டுசெல்வார்கள். வழிகாட்டியாகத் தலைவர்களாகக் ஏற்றுக்கொண்டு வழிநடப்பார்கள். வரலாறு இவர்களை பதிவுசெய்துகொள்ளும்.
ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். ஒவ்வொருவரிடமும் சில சிறப்புத் தன்மைகள் உண்டு. பிறக்கும்போதே சில இயல்புகளுடன் மனிதன் பிறக்கிறான். அவன் குடும்ப சூழல், சமூக சூழல், சந்திக்கும் மனிதர்கள், படிக்கும் நூல்கள், எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சூழல்களைப்பொறுத்து அனுபவங்களை கொள்முதல் செய்கிறான். ஒரு கருங்கல்லாக பிறக்கும் மனிதன், அவன் கையில் உளியெடுத்து, சுத்தியல் கொண்டு தன்னைச் செய்துக்கிக்கொள்ளும் முயற்சியை, இரசனையைப் பொறுத்து அவன் சிற்பமாகிறான். அந்த முயற்சி கல்லாகவே நின்றுபோகிறது சிலருக்கும், சிலருக்கு கால்வாசி சிற்பமாக, மீதம் கல்லாக வாழ்க்கை முடிந்துபோகிறது, சிலருக்கு அழகான சிற்பத்தை பெருமுயற்சி செய்து செதுக்கிக்கொண்டு, தன்னையே தானே ரசித்து வாழ்ந்து விடைபெறுகிறான்.
முதல் நிலை என்பது தாழ்வானதல்ல. பிறக்கும்போதே அனைவரும் 3ம் நிலையில் இயல்பான ஆற்றலும், உணர்ந்து வளர்த்துக்கொள்ளவேண்டிய ஆற்றலும் இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. தலைவர்கள் பிறக்கிறார்களா , உருவாகிறார்களா என்பதுபோன்ற கேள்வி இது. இந்தப் படிநிலைகளை உணர்ந்துகொள்ளுதல் அவசியம். முதல் நிலையிலிருந்து மூன்றாவது நிலைக்கு முன்னோக்கி நகர்வது இலட்சியமாக இருக்கவேண்டும். அவரவர் நிலைக்கு ஏற்ப மற்றவர்களை மதிக்கவேண்டியதும், பணிந்து, அறிவைப் போற்றி கற்றுக்கொள்ளவேண்டியதும், பயனுள்ள வாழ்வை அமைத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டியதும் அவசியமாகிறது.
|
|||||
| by Swathi on 05 Dec 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|