|
||||||||||||||||||
செம்மாந்து செயல்படும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் |
||||||||||||||||||
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவன் என்ற முறையிலும் நிறுவனத்தில் நடந்த, நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகள் குறித்துக் கூர்மையாக அறிந்தவன் என்ற முறையிலும் தமிழ்ச் சமூகத்தின் பார்வைக்குச் செம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகள் சிலவற்றை முன்வைக்க விழைகிறேன்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நடுவண் அரசின் கல்வி அமைச்சகத்தின் மொழிப்பிரிவின் கீழ் செயல்பட்டுவரும் தன்னாட்சி நிறுவனம். 2004ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்த பின்னர் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்மொழி மேம்பாட்டுக்கான மையத் திட்டம் (Central Plan Scheme for Classical Tamil) நடுவண் அரசால் அமைக்கப்பெற்று மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம் (CIIL) ஒப்படைக்கப்பட்டது. அதனால் 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது.
2007 ஆகஸ்டு 18ஆம் நாள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பெற்றது. 2008ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் முதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னைக் காமராசர் சாலையிலுள்ள பாலாறு இல்லத்தில் செயல்படத் தொடங்கியது.2011 முதல் 2022 மார்ச் மாதம் வரை தரமணியில் வாடகைக்கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காகச் சென்னைப் பெரும்பாக்கத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட (16.58 ஏக்கர்) இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு 2017ஆம் ஆண்டு மத்திய அரசு 24,65,47,000/- ரூபாய் ஒதுக்கீடு செய்தது. புதிய கட்டடக் கட்டுமானப் பணி மத்திய பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பணிகள் அனைத்தும் முடிவடிந்ததும் 2022 ஜனவரி 12ஆம் நாள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. ஏப்ரல் 2022 முதல் தனது புதிய வளாகத்தில் சிறப்புறச் செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்நிறுவனத்தின் தலைவராக விளங்குவார். ஆட்சிக்குழு, நிதிக்குழு மற்றும் கல்விக்குழுவால் நிறுவனத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கி.பி. 600-க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் எல்லாக் கூறுகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாப்பதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புகளைக் கவனத்தில் கொண்டு பின்வருவனவற்றை முதன்மையான குறிக்கோளாக இந்நிறுவனம் கொண்டுள்ளது.
இந்தியப் பண்பாட்டின் பன்முக இயல்பு பற்றியும், இந்தியப் பண்பாட்டிலும் மரபிலும் தமிழியக் கூறுகளின் பங்களிப்புப் பற்றியும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு ஊக்கமளித்து மேம்படுத்துதல்.
பல்துறை சார்ந்த அறிஞர்களை ஒருங்கிணைத்துத் தமிழின் தொன்மை குறித்து ஆராய்தல்.
தமிழ் பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்தல்.
திராவிட மொழிகளின் வரலாற்று ஒப்பாய்வையும், வரலாற்று முறையில் தமிழ் வழக்காறுகள் குறித்த ஆய்வையும் மேற்கொள்ளுதல்.
41 செவ்வியல் தமிழ் நூல்களையும் உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுதல்.
செவ்வியல் காலத்திற்குட்பட்ட 41 நூல்களையும் சுவடிகள், பழம்பதிப்புகள், உரைமேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளை உருவாக்குதல்.
முதுகலை, முனைவர், முனைவர் பட்ட மேலாய்வு உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் செம்மொழித் தமிழைக் கற்கவும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் வாய்ப்பை உருவாக்குதல்.
கல்வி நிறுவனங்களிடமிருந்தும், தனிநபர்களிடமிருந்தும் செம்மொழித் தமிழாய்வு தொடர்பாகப் பெறப்படும் ஆய்வுத் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தல்.
செம்மொழித் தமிழின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் தேசிய, பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள், பணியரங்குகளை நடத்துதல்; தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களுக்கு அவற்றை நடத்துவதற்குத் தேவையான நிதியுதவி அளித்தல்.
செம்மொழித் தமிழின் சிறப்புகளை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்களைப் பதிப்பிக்க உதவி செய்தல்.
செம்மொழித் தமிழில் முனைவர் பட்டமும், முனைவர் பட்ட மேலாய்வும் மேற்கொள்வோருக்கு உதவித்தொகை வழங்குதல்.
செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியோர்க்கு விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்தல்.
செம்மொழித் தமிழ்க் கல்வியை இந்தியாவிலும் அயல்நாட்டிலும் மேம்படுத்துதல்.
செவ்வியல் நூல்கள் சார்ந்த பழஞ் சுவடிகளையும் பதிப்புகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்தல்.
தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பயின்றுவரும் மொழியாட்சியைப் புரிந்து கொள்ளுதல், விளக்குதல், நயம்பாராட்டுதல் ஆகிய திறன்களைக் கற்போர் அடைய உதவுதல் என்பதனை நோக்கமாகக் கொண்டு இணையவழிச் செம்மொழிக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுதல்.
41 செவ்வியல் நூல்களுக்கான தரவகம் உருவாக்குதல், இலக்கண, இலக்கியக் கல்வி, இயற்கை மொழி ஆகியவற்றிற்குப் பயன்படும் மென்பொருள்களை உருவாக்குதல்.
செம்மொழித் தமிழ் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வழங்கும் மையமாகச் செயல்படுதல்.
இவற்றிற்கேற்ற வகையில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திட்டத்திற்கு வேண்டிய நிதிகளையும் மத்திய அரசு முறையாக வழங்கி வருகின்றன.
நிரந்தர இயக்குநர் நியமனத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள்
செம்மொழி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இந் நிறுவனத்திற்கென நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படாமலேயே கூடுதல் பொறுப்பு என்ற நிலையில் தமிழ்த் துறை அல்லாத பலரையும் மத்திய அரசு நியமித்து வந்தது. இந்நிலையால் ஏராளமான இழப்புகளையும், விமர்சனங்களையும் செம்மொழி நிறுவனம் எதிர்கொண்டது.
இந்த நிலையில் 2020 ஜூன் மாதத்தில் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்களை முழுநேர இயக்குநராக நடுவண் அரசு நியமித்தது.
15.06.2020 அன்று இயக்குநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். செம்மொழி நிறுவனம் முழுநேர, தமிழ்த்துறை சார்ந்த இயக்குநரைப் பெற்று ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் நிறைவுற்றிருக்கின்றன. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் பதிமூன்றுபல ஆண்டுகளாகத் தேக்கமுற்றுக்கிடந்த நிர்வாகப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. ஆய்வுப் பணிகளும் செம்மாந்து நடைபெறும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சீராக நடைபெற்று முடிக்கப்படாமலிருந்த பணிகள் பல இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் முடிக்கப்பட்டுள்ளன.
நிலுவையிலிருந்த 2016-2017 , 2017-2018, 2018-2019 , 2019-2020ஆம் ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டு மத்திய தணிக்கைக் குழு இந்த நான்காண்டு கணக்குகளையும் தணிக்கை செய்து அறிக்கை அளித்தது. இந்தத் தணிக்கை அறிக்கை நடுவண் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
உரிய காலத்தில் கணக்குத் தணிக்கை அறிக்கை சமர்பிக்கப்படாமலிருந்த காரணத்தால் வேண்டிய நிதியைப் பெறமுடியாமல் இருந்தது. ஆனால் இந்த நான்காண்டு தணிக்கை அறிக்கை நடுவண் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின் தேங்கிக் கிடந்த நிதிநிலைமை சீர்செய்யப்பட்டது.
2020-2021 ஆண்டுக்கான 10-ஆவது நிதிக்குழுக் கூட்டம் 26.05.2022 அன்றும், 2021-2022 ஆண்டுக்கான 11-ஆவது 10.11.2022 அன்றும் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமிலிருந்த குறுந்திட்டப் பணிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் ஒளி/ஒலிக் காட்சித் திட்டங்களுக்கான கணக்குகளை விரைவாக முடித்து அந்த அறிக்கை நடுவண் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்றாவது கல்விக்குழு கூட்டம் 09.11.2022 அன்று நடத்தப்பட்டது.
செம்மொழி நிறுவனம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையில் திருக்குறள் இருக்கையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒரு கோடி ரூபாய் வைப்புத்தொகையில் தொல்காப்பியர் இருக்கையும் 2013 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. மூன்றாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு தகுந்த ஒரு பேராசிரியரை நியமனம் செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2017 இல் காலாவதியான ஒப்பந்தம் தற்போது இக்கல்விக்குழுக் கூட்ட முடிவின்படி புதுப்பிக்கப்படவுள்ளது.
மொழிபெயர்ப்புத் திட்டப் பணிகள்
பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் கூறுகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருவதை ஆய்வுலகம் அறியும். இதற்கேற்ற வகையில் பத்து முதன்மைத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் 41 செவ்வியல் தமிழ் நூல்களையும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுதல் என்பது ஒரு பெருந்திட்டமாகும்.
திருக்குறள் மொழிபெயர்ப்புத் திட்டம்
மத்தியக் கல்வி அமைச்சகம் திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டத்தினைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இதன்வழி இந்தி,சமஸ்கிருதம், மலையாளம், உருது, மராத்தி, ஒடியா,படகா,வாக்ரிபோலி, செளாராஷ்டிரா,நேபாளி,அரபி,பாரசீகம்,கெமர் போன்ற மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன, ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் ஏற்கனவே பஞ்சாபி (2012), மணிப்புரி (2012), தெலுங்கு (2014), கன்னடம் (2014), குஜராத்தி (2015) மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளது. 18 ஆங்கில மொழிபெயர்ப்புகளின் தொகுப்பாக (A Compendium of Tirukkuṟaḷ-3 தொகுதிகள்) திருக்குறள் மொழிபெயர்ப்புப் பதிப்பையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகத் தற்பொழுது உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறளைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற நோக்கில் ஐரிஷ், தாய், மலாய்,பர்மீஸ்,சுவிடீஷ்,டேனிஷ்,கொரியன், ஜப்பானிஸ், முதலான 10 அயலக மொழிகளிலும், அஸ்ஸாமி,துளு,போஜ்புரி,சந்தாலி, கொங்கணி, போடோ, சிந்தி, மைதிலி ,மால்டோ முதலான 76 இந்திய மொழிகளிலும் ஆக மொத்தம் 86 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் திட்டத்திற்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் விளம்பரம் வெளியிட்டு உலகம் தழுவிய அளவிலுள்ள மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு, ஆணைகள் வழங்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும் 100 மொழிகளில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம்
தமிழ் இலக்கியத்திற்குப் பௌத்தத்தின் பங்களிப்புகள் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட பிற நன்மைகளை விட மிகவும் மதிப்புமிக்கவை. துரதிர்ஷ்டவசமாக, தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் பல மதிப்புமிக்க பௌத்த படைப்புகள் மீட்க முடியாத அளவிற்கு அழிந்துபோயுள்ளன; மணிமேகலை அவற்றிற்கு விதிவிலக்காகத் தப்பிப் பிழைத்துள்ளது. பௌத்த சமயத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் நாட்டினருக்குத் தமிழில் பௌத்த சமயப் பெரும்காப்பியம் ஒன்றிருப்பதை அறியச் செய்யும் வகையில் பௌத்த சமயம் வழங்கும் நாடுகளிலுள்ள மங்கோலியன், பூடானிஸ்,நேபாளி,திபெத்தியன்,இந்தோனேசியன், சீனம், சிங்களம், தாய், ஜப்பானிஸ்,கொரியன்,கெமர்,வியட்நாமிஸ் உள்ளிட்ட 15 மொழிகளிலும், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, கன்னடம்,பாலி,லடாக்கி,சிக்கிமிஸ்,பெங்காளி ஆகிய 8 மொழிகளிலுமாக 23 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அம்மொழிகளின் விவரம் வருமாறு:
1. மலாய் (மலேசியா)
2. கெமர் (கம்போடியா)
3. இந்தோனேசியா (இந்தோனேசியா)
4. லாவோ (லாவோஸ்)
5. பர்மிஸ் (மியான்மர்)
6. சீனம் – மாண்டரியன் (சீனா)
7. தாய் (தாய்லாந்து)
8. வியட்நாம் (வியட்நாம்)
9. ஜப்பானியர் (ஜப்பான்)
10. மங்கோலியன் (மங்கோலியா)
11. கொரியன் (தென் & வட கொரியா)
12. சோங்கா (பூடான்)
13. சிங்களம் (இலங்கை)
14. நேபாளி (நேபாளம்)
15. திபெத்தியன் (சீனா)
ஐம்பெரும் காப்பியங்களுள் சிலப்பதிகாரத்திற்கு அடுத்த நிலையில் இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலையின் சிறப்பை உலகம் அறியும் வாய்ப்பு இத்திட்டத்தின் மூலமாக வாய்க்கப்பெறும்.
தொல்காப்பிய மொழிபெயர்ப்புத் திட்டம்
தொல்காப்பியம் - முழுமையானதும், தனிச்சிறப்பும், தொன்மையும் வாய்ந்த இலக்கண நூலென்று தலைசிறந்த மேலை மொழியியல் அறிஞர்கள் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற ஒலியனியல் அறிஞரான Daniel Jones அவர்கள் தொல்காப்பியரின் ஒலியனியல் கோட்பாட்டைக் கண்டு மிகவும் வியந்து பாராட்டுகிறார். தலைசிறந்த இந்திய மொழியியல் அறிஞரான A.K. இராமானுஜன் Lnguistics ultimate guru' என்று தொல்காப்பியரைப் புகழ்ந்து போற்றுகிறார்.
இப்படியான நமது பெருமைமிகு இலக்கண நூலான தொல்காப்பியத்தைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் (எழுத்து, சொல்) ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுச் சிறப்பு செய்துள்ளது. உலகின் பிற முன்னணி மொழிகளில் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தைச் செம்மொழி நிறுவனம் தற்பொழுது மேற்கொண்டு வருகிறது. அதற்காக
1. சமஸ்கிருதம் 2. பெங்காலி
3. மராத்தி 4. குஜராத்தி
5. பஞ்சாபி 6. மலையாளம்
7. உருது 8. தெலுங்கு
9. மைதிலி 10. துளு
ஆகிய பத்து இந்திய மொழிகளிலும்,
1. பிரஞ்சு 2. ஜெர்மன்
3. ஸ்பானிஷ் 4. அரபு
5. சீனம் 6. ஜப்பான்
7. மலாய் 8. சிங்களம்
9. ஸ்வீடிஷ் 10. கொரியன்
11. ஹீப்ரு 12. பின்னிஷ்
13. சைபீரியன் 14. ஆஃப்ரிகான்ஸ் 15. ரஷ்யன்
ஆகிய பதினைந்து அயலக மொழிகளிலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க விளம்பரம் வெளியிடப்பட்டு அதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உலகம் தழுவிய அளவிலான அறிஞர்கள் இத்திட்டப் பணியில் ஈடுபட்டுத் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்து வருகின்றனர்.
ஏனையச் செவ்விலக்கிய மொழிபெயர்ப்புகள்
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், சமஸ்கிருதம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கும் மொழிபெயர்க்கும் பணிகள் இத்திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொழிபெயர்ப்பில் தமிழ் மூலம், ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, கலைச்சொல் அகரமுதலி, முதற்குறிப்பகராதி ஆகியவை இடம்பெறும். இந்தச் செம்மொழித் தமிழ் நூல்களின் மொழிபெயர்ப்புத் திட்டத்தை முழுமையாக்கம் செய்யும் வகையில் செவ்வியல் நூல்களை மொழிபெயர்க்க உரிய மொழி வல்லுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற விளம்பரம் வெளியிடப்பட்டன.
இவற்றின் வழியாகப் பல்வேறு அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கன்னட மொழியில் 41 செவ்வியல் தமிழ் நூல்கள்
கன்னட மொழியில் சங்க இலக்கியத்தினைக் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, 2010-2011ஆம் ஆண்டின் நிதிநல்கையில், கன்னடத்தில் சங்க இலக்கியத்தை மொழியாக்கம் செய்யும் திட்டத்திற்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அனுமதி வழங்கியது. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் வழியாகப் பேராசிரியர இரா. சீனிவாசன் ஒருங்கிணைப்பில், பேராசிரியர்கள் தா.கிருஷ்ணமூர்த்தி, கே. மலர்விழி, ஏ. சங்கரி, ஜி. சுப்பிரமணியன், மா. அரங்கசாமி, கே. வனஜா குல்கர்னி, நா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இப்பணியினை மேற்கொண்டனர். இப்பணி நிறைவு செய்யப்பெற்று நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டில் அளிக்கப்பெற்றுள்ளது.
இம்மொழியாக்கம் கிட்டத்தட்ட 8000 பக்கங்களில் ஒன்பது நூல்களாக அச்சிடப்பெற்று இவற்றின் வெளியீட்டு விழா 22.12.2021 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்தியக் கல்வி இணை அமைச்சர் மாண்புமிகு திரு. சுபாஷ் சர்க்கார் அவர்கள் விழாவில் பங்கேற்று மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுச் சிறப்பு செய்தார்.
விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்களும், செம்மொழி நிறுவனத் துணைத் தலைவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்களும் மத்தியக் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சுபாஷ் சர்கார் அவர்கள்:
‘இந்திய கலாசார வரலாற்றில் தமிழ் மொழி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியமும், தமிழ்ப் பண்பாடும் காலத்தின் மாறுபாடுகளைத் தாங்கிப் பல நூற்றாண்டுகளாகச் செழித்து வளர்ந்து வந்துள்ளது’ என்றும், ‘தமிழ்ச் சங்க இலக்கியங்களும், தொல்காப்பியமும் இந்தச் செழுமையும் பெருமையும் வாய்ந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இந்தப் பாரம்பரியத்தை நாடு மிகவும் பெருமைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதுவரை சங்க இலக்கியப் பாடல்கள் ஒருசில மொழிபெயர்க்கப் பெற்றிருந்தன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பெறும் சங்க இலக்கியக் கன்னட மொழிபெயர்ப்பே கன்னடத்தில் வெளிவரும் முழுமையான மொழிபெயர்ப்பு. கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பெற்ற சங்க இலக்கியங்கள் கன்னட உலகில் தமிழ் இலக்கியம் குறித்தப் பரந்துபட்ட பார்வையைத் தோற்றுவிக்கும்.
கன்னடம், தமிழ் மொழியின் உறவு சங்க இலக்கியக் கன்னட மொழிபெயர்ப்பின் வாயிலாக மேம்படும்.
தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியத்தின் தனித்தன்மை, தமிழரின் வாழ்வியல், நாகரிகம், பண்பாடு, கலை, அறிவியல், உளவியல், மானுடவியல், தொல்லியல், நாணயவியல் எனப் பல பரிமாணங்களில் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தின் பெருமை கன்னட உலகில் வெளிப்படும்.
சங்க இலக்கியக் கன்னட மொழிபெயர்ப்பு கன்னடத்தில் இல்லாத அகப்புறக் கோட்பாடுகளைக் கன்னட உலகிற்கு அறிமுகப்படுத்தும். அதுமட்டுமல்லாது தமிழுக்கே உரிய பிற கோட்பாடுகளையும், தமிழின் சொற்சிறப்பினையும் உணர்த்தி நிற்கும்.
தமிழுக்கேயுரிய சங்க இலக்கியக் கலைச்சொற்கள் இம்மொழிபெயர்ப்பின் வழி கன்னட ஆய்வுலகிற்கும், கன்னடமொழியில் சங்க இலக்கியத்தை வாசிக்கும் மாணவர்க்கும், வாசகர்களுக்கும் அறிமுகமாகும்.
கன்னட, தமிழ் மொழி ஒப்பீட்டாய்வு, இருமொழி இலக்கிய ஒப்பீட்டாய்வு, இருமொழி ஒப்பீட்டில் அமையும் பிற ஆய்வுக் களங்கள் என மிகப்பெரிய ஆய்வுத் தளத்தைச் சங்க இலக்கியக் கன்னட மொழிபெயர்ப்பு உருவாக்கித் தரும்.
கன்னடம் பயிலும் மாணவர்களுக்கும், தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் சங்க இலக்கியத்தை வாசிக்கவும், முழுமையாகப் புரிந்துகொள்ளவும் பாடத்திட்டங்கள் உருவாக்கவும் சங்க இலக்கியக் கன்னட மொழிபெயர்ப்புப் பயன்படும்.
பிரெய்லி நூல் பதிப்புத் திட்டம்
செம்மொழி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளுள் பார்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் 41 தமிழ்ச் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.
1.தொல்காப்பியம்
2.நற்றிணை
3.குறுந்தொகை
4.ஐங்குறுநூறு
5.பதிற்றுப்பத்து
6.பரிபாடல்
7.கலித்தொகை
8.அகநானூறு
9.புறநானூறு
10.திருமுருகாற்றுப்படை
11.பொருநராற்றுப்படை
12.சிறுபாணாற்றுப்படை
13.பெரும்பாணாற்றுப்படை
14.முல்லைப்பாட்டு
15.மதுரைக்காஞ்சி
16.நெடுநல்வாடை
17.குறிஞ்சிப்பாட்டு
18.பட்டினப்பாலை
19.மலைபடுகடாம்
20.நாலடியார்
21.நான்மணிக்கடிகை
22.இன்னாநாற்பது
23.இனியவைநாற்பது
24.கார்நாற்பது
25.களவழிநாற்பது
26.ஐந்திணைஐம்பது
27.ஐந்திணைஎழுபது
28.திணைமொழிஐம்பது
29.திணைமாலைநூற்றைம்பது
30.பழமொழி
31.சிறுபஞ்சமூலம்
32.திருக்குறள்
33.திரிகடும்
34.ஆசாரக்கோவை
35.முதுமொழிக்காஞ்சி
36.ஏலாதி
37.கைந்நிலை
38.சிலப்பதிகாரம்
39.மணிமேகலை
40.முத்தொள்ளாயிரம்
41.இறையனார் அகப்பொருள்
42.நன்னூல்
43.புறப்பொருள் வெண்பாமாலை
44.தண்டியலங்காரம்
45.யாப்பருங்கலக்காரிகை
46.நம்பியகப்பொருள்
இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கும். கடந்த மார்ச்சு மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் வரும் டிசம்பர் மாதம் நிறைவுற்றவுடன் அச்சிடப்படும் அனைத்து நூல்களும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு இந்த அரிய திட்டத்தை மதுரை உயர்நீதி மன்ற கிளை மிகவும் பாராட்டியிருந்தது (19.10.2022) குறிப்பிடத்தக்கது.
செம்மொழிப் பயிலரங்குகள்
தமிழியல் ஆய்வுக் களத்தை வளப்படுத்தவும், தமிழியல் ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் பயன்பெறவும் நிறுவன வளாகத்திலேயே பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்த முடிவுசெய்து 2021 மார்ச் மாதம் முதல், ஒரு பயிலரங்கம் 7 நாட்கள் என்ற அளவில் 33 பயிலரங்குகள் இதுவரையில் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தமிழியல் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் என 825 பேர் பயன்பெற்றுள்ளனர். அப்பயிரங்குகளின் விவரம் கீழ்வருமாறு:
1. தொல்காப்பியப் பயிலரங்கம்
2. தமிழ்ச் செவ்விலக்கிய மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்
3. தமிழ்ச் செவ்வியல் நூல்களின் பதிப்பு நெறிமுறைகள்
4. தமிழர் வாய்மொழி மரபுகளும் செம்மொழித் தமிழிலக்கியப் பதிவுகளும்
5. உலக மொழிகளில் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் பெயர்ப்பும் தாக்கமும்
6. தமிழ் அகராதியியல் பயிலரங்கம்
7. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
8. மூலபாட ஆய்வு நெறிமுறைகள்
9. தமிழ்ச் செவ்விலக்கியங்களில் இசைக் கலையும் நாட்டியக் கலையும்
10. தமிழி (தமிழ் – பிராமி) எழுத்துப் பயிலரங்கம்
11. செம்பதிப்பு உருவாக்கத்திற்கு உரைமேற்கோள்களின் பங்களிப்புகள்
12. வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கண ஆய்வு
13. சிலப்பதிகாரம்: மூலம், காலம், சமயச்சார்பு, உரைகள்
14. வரலாற்று நோக்கில் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள்
15. செவ்வியல் தமிழுக்கு அயல்நாட்டாரின் பங்களிப்பு
16. வட்டெழுத்துப் பயிலரங்கம்
17. இக்காலத் தமிழில் தமிழ்ச் செவ்விலக்கிய மொழிக்கூறுகள்
18. திராவிட மொழிகளும் தமிழ் மொழியின் அமைப்பும் – ஒப்பாய்வு
19. தமிழ்ச் செவ்விலக்கணக் கலைச் சொற்கள்
20. தமிழ்ச் செவ்விலக்கியங்கள் – ஓர் உலகளாவிய ஒப்பீட்டாய்வு
21. தமிழிசையின் தொன்மையும் தனித்தன்மையும்
22. தமிழ்ச் செவ்வியல் நூல்களின் அச்சு வரலாறும் ஆவணங்களும்
23. சிந்துவெளி முதல் கீழடி வரையிலான அகழாய்வுகளும் செவ்விலக்கிய வரலாறும்
24. திராவிட மொழிகளில் தமிழ் இலக்கணக் கூறுகள்
25. செவ்வியல் இலக்கண, இலக்கியப் பதிப்புகளில் பாடவேறுபாடுகள்
26. பௌத்த சமயமும் மணிமேகலை மொழிபெயர்ப்புகளும்
27. தமிழ் இலக்கண மரபில் காலந்தோறும் தொடரியல் கோட்பாடுகள்
28. செம்மொழி இலக்கண, இலக்கிய இருவழி (தமிழ் - ஆங்கிலம்; ஆங்கிலம் -
தமிழ்) கலைச்சொல்லாக்கம்
29. செம்பதிப்பு உருவாக்கத்திற்கு யாப்பு,புணர்ச்சி இலக்கணப் பயன்பாடுகள்
30. உலக அற நூல்களில் திருக்குறளின் இடம்
31. சூழலியல் நோக்கில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள்
32. இந்தியப் பண்பாட்டு மொழியியலுக்குச் செவ்வியல் தமிழின் பங்களிப்பு
33. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் – கன்னட மொழிபெயர்ப்பு
அண்மையில் வெளியிடப்பட்ட நிறுவன நூல்கள்
நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே நிறுவன வெளியீடுகள் இருந்தன. அச்சூழல் தற்பொழுது மாறியுள்ளது.
மாத்திற்குக் குறைந்தது ஐந்து நூல்களையேனும் வெளியிடுதல் எனும் நோக்கத்தைக் கொண்டு ஏற்கனவே நிலுவையிலுள்ள நூற்பணிகளையெல்லாம் முடித்து வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதற்குரிய நிதியுதவியையும் மத்திய அரசு வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மூலமாகவும், குறுந்திட்ட ஆய்வுகள் மூலமாகவும் வரப்பெற்றுள்ள செவ்வியல் நூல்களுக்கான மொழிபெயர்ப்புகளையெல்லாம் நூலாக வெளியிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் இந்தி மொழிபெயர்ப்புகள் விரைவில் வெளிவர உள்ளன.
தொல்காப்பியம் – கன்னடம், குறுந்தொகை – பிரெஞ்ச், சிங்களம், நற்றிணை – பிரெஞ்ச், ஐங்குறுநூறு – மலையாளம், நாலடியார் – பிரெஞ்ச் முதலான மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிடுவதற்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
30.08.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கீழ்வரும் 5 நூல்களையும் 5 செய்தி மடல்களையும் 5 ஒளி /ஒலி குறுவட்டுகளையும் வெளியிட்டார்கள். இந்நூல்கள் ஐந்தும் ஏறத்தாழ 5000 பக்கங்கள் கொண்டதாகும்.
1.தொல்காப்பியம் ஆங்கில மொழிபெயர்ப்பு
2.புறநானூறு ஆங்கில மொழிபெயர்ப்பு
3.சிலப்பதிகாரம் ஆங்கில மொழிபெயர்ப்பு
4.மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்பு
5.பத்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு
சங்க நூல்களின் கன்னட மொழிபெயர்பு நூல்களின் வெளியீட்டு விழா 22.12.2021 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்தியக் கல்வி இணை அமைச்சர் மாண்புமிகு திரு. சுபாஷ் சர்க்கார் அவர்கள் விழாவில் பங்கேற்று மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுச் சிறப்பு செய்தார். அந்நூல்களின் விவரம் கீழ்வருமாறு:
1. நற்றிணை – கன்னட மொழிபெயர்ப்பு
2. குறுந்தொகை – கன்னட மொழிபெயர்ப்பு
3. ஐங்குறுநூறு – கன்னட மொழிபெயர்ப்பு
4. பதிற்றுப்பத்து – கன்னட மொழிபெயர்ப்பு
5. பரிபாடல் – கன்னட மொழிபெயர்ப்பு
6. கலித்தொகை – கன்னட மொழிபெயர்ப்பு
7. அகநானூறு – கன்னட மொழிபெயர்ப்பு
8. புறநானூறு – கன்னட மொழிபெயர்ப்பு
9. பத்துப்பாட்டு – கன்னட மொழிபெயர்ப்பு
10. தொல்காப்பியம் – இந்தி மொழிபெயர்ப்பு
17.01.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கீழ்வரும் 8 நூல்களை வெளியிட்டுச் சிறப்புச் செய்தார்கள்.
1. தொல்காப்பிய ஆய்வு
2. தெய்வச்சிலையார் உரைநெறி
3. புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
4. ஐங்குறுநூறு – குறிஞ்சி (செம்பதிப்பு)
5. ஐங்குறுநூறு – பாலை (செம்பதிப்பு)
6. வாய்மொழி வாய்பாட்டு கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம்
7. A Historical Grammar of Tamil: Noun Morphology
8. Dravidian Comparative Grammar-II
மீண்டும் 22.08.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கீழ்வரும் 16 நூல்களை வெளியிட்டுச் சிறப்புச் செய்தார்கள்.
1.உயர்தனிச் செம்மொழி - முன்மொழிந்த மூதறிஞர்கள்
2.சங்க இலக்கிய மக்கட் பெயர்க் களஞ்சியம்
3.தமிழ் நாட்டில் சமணம் (கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை)
4.ஒப்பில் தொல்காப்பியம்
5.செவ்வியல் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு 1288
6.நாலடியார் – தெலுங்கு மொழிபெயர்ப்பு
7.செம்மொழித் தமிழ் இலக்கணக் கலைச்சொற் களஞ்சியம் - எழுத்து
8.செம்மொழித் தமிழ் இலக்கணக் கலைச்சொற் களஞ்சியம் - சொல்
9.செம்மொழித் தமிழ் இலக்கணக் கலைச்சொற் களஞ்சியம் -பொருள்
10.தமிழகப் பாரம்பரிய நெல்வகைச் சொல்லகராதி
11.உ.வே.சா. இலக்கிய அரும்பத அகராதியும் சங்கநூற் சொல்லடைவும்
12.உ.வே.சா. நாட்குறிப்பு
13.Tirukkural as a book of the World
14.Paripāṭal- English Translation
15.Patiṉeṇ Kīḻkkaṇakku Nūlkaḷ - English Translation
16.Comparative Dravidian Grammar –III
இம்மாதம் வெளியிடப்படவுள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள்.
1. மலையாளம் (554 பக்கங்கள்)
2. மராத்தி (434 பக்கங்கள்)
3. உருது (469 பக்கங்கள்)
4. ஒடியா (446 பக்கங்கள்)
5. நேபாளி (540 பக்கங்கள்)
6. அரபி (474 பக்கங்கள்)
7. வாக்ரிபோலி (383 பக்கங்கள்)
8. படுகு (440 பக்கங்கள்)
9. பெர்சியன் (446 பக்கங்கள்)
10. செளராஸ்டிரா (440 பக்கங்கள்)
11. இந்தி (588 பக்கங்கள்)
12. சமஸ்கிருதம் (454 பக்கங்கள்)
13.கெமர் (812 பக்கங்கள்)
மொழிபெயர்ப்பு நூல்கள், ஆய்வு நூல்கள் என 51 நூல்கள் இரண்டு ஆண்டு காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஓரிரு மாதங்களில் மேலும் 30 நூல்களை வெளியிடுவதற்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
செம்மொழிச் செய்தி மடல் வெளியீடுகள்
நிறுவனத்தின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ‘செம்மொழி’ எனும் செய்திமடல் ஆகும். இதற்கு முன்னர் 4 இதழ்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தன. ஏனையவை தொடர்ச்சியாக வெளிவரவேண்டும் என்னும் நோக்கில் நிலுவையிலிருந்த செய்திமடல் பணிகள் முடிக்கப்பட்டுத் தற்பொழுது 10 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் தமிழகத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
செம்மொழி நிறுவன இணையத்தளத்தில் இவைகளை இலவசகாமத் தரவிறக்கும் செய்துகொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இணையவழியாகச் செம்மொழித் தமிழ் நூல்கள்
உலகளாவிய ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடுகள் அனைத்தையும் எளிதில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கிண்டில் (Amazon kindle) பதிப்பாக வெளியிடப்பட்டு வருகின்றன.
செவ்வியல் நூல்களின் முதல் அச்சுப் பதிப்புகள்
செம்மொழித் தமிழுக்கு ஆதாரமாக உள்ள 41 நூல்களின் முதல் அச்சுப் பதிப்புகளை ஆவணப்படுத்திச் செம்மொழித் தமிழாய்வு நிறுவன இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உலகம் தழுவிய தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும் இந்நூல்களைப் பெற்றுப் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தைத் தமிழியல் ஆய்வு மாணவர்கள் மிகவும் பாராட்டி மகிழ்கின்றனர்.
அலைபேசிச் செயலித் திட்டம்
கொண்டுசேர்க்கும் பணியினை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளின் மூலமாக நிறுவனம் வெளியிடும் நூல்கள் அனைத்தையும் அலைபேசிச் செயலி வடிவாக வெளியிடும் திட்டத்தை நிறுவனம் ஆற்றி வருகின்றது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறள், முத்தொள்ளாயிரம், சிலம்பு இசை ஆகிய அலைபேசிச் செயலிகளை உருவாக்கியுள்ளனர். தொல்காப்பியம், நானாற்பது நூல்களுக்கும் செயலி உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏனைய நூல்களுக்கும் படிப்படியாகச் செயலிகள் உருவாக்கப்படும்.
செம்மொழிப் பல்லூடக மையம்
செவ்விலக்கியச் சிறப்புகளை வலையொளி (YouTube) மூலம் பரவச் செய்வதற்குப் புகழும், புலமையும் பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு ஒலி-ஒளியாகக் காட்சிப்படுத்தும் வகையில் ‘செம்மொழிப் பல்லூடக மையம்’ நிறுவன வளாகத்தின் மூன்றாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
செம்மொழி இலக்கண, இலக்கியங்கள் குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை வாய்ந்த அறிஞர்கள் மூலம் ஆய்வுரை வழங்க உயர் தொழில் நுட்ப வசதிகளோடு செம்மொழிப் பல்லூடக மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இணையவழிச் செம்மொழித் தமிழ்க் கல்வித் திட்டம்
உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழியல் ஆய்வாளர்களுக்கும், செவ்வியல் தமிழைக் கற்றுக்கொள்ள உதவும் பொருட்டுச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இணையவழிச் செம்மொழிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
செம்மொழி இலக்கண, இலக்கியங்களைக் காட்சி வழி மூலம் கற்பிப்பதற்கு ஏற்ற உயர்தர ஆய்வகம் நிறுவனத்தின் இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மூலமாகச் சிறந்த தமிழியல் அறிஞர்களைக் கொண்டு உரைகள் நிகழ்த்திப் பதிவுசெய்யப்பட்டு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
செம்மொழித் தமிழ் மின்னூலகம்
செவ்விலக்கியச் சுவடிகளின் அரிய ஓலைச் சுவடிகள், தாட்சுவடிகள், அச்சு நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு செய்வதுடன் தமிழ் ஆய்வாளர் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் நிறுவனத்தின் முதல் தளத்தில் மின் நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் சிதறிக் கிடைக்கும் செவ்விலக்கியச் சிறப்புகளைச் செம்மொழி மின்னூலகத்தில் இணைத்துவிட்டால் யாரும் எந்த நேரமும் சென்று அத்தகவல்களைப் பெற்றுப் பயன்பெற முடியும்.
செம்மொழித் தமிழ் இணைச்சொற் களஞ்சியத் திட்டம்
தமிழுக்கு உள்ள சொல்வளம் மேலை மொழிகளில் இல்லாதிருந்தும் மேலை அறிஞர்கள் பல வகையான அகரமுதலிகளையும் சொற்களஞ்சியங்களையும் தொடர்ந்து தொகுத்தளித்து வருகிறார்கள். முப்பது நூற்றாண்டுகளுக்கு மேலான இலக்கியப் பரப்பைக்கொண்ட தமிழில்தான் முதன் முதலில் சொற்பொருள் தரும் முயற்சியைத் தொல்காப்பியர் தமது உரியியலில் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான நிகண்டுகள் வெளிவந்தன. அகர முதலி என்பது தமிழ் மரபிற்கே உரியது. அப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சியாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ‘இணைச்சொல் களஞ்சியத் திட்டம்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த முணைந்துள்ளது.
செம்மொழி நிறுவனம் தொகுத்துள்ள 2,28,098 சொற்களைக் கொண்டு இப்பணி மேற்கொள்ளப்படும்.
இரண்டாண்டுகளில் முடிக்கும் இலக்கைக் கொண்ட இத்திட்டத்தை மொழியியல் மற்றும் இலக்கணத் துறையும், அகராதியியல் துறையும் இணைந்து மேற்கொள்ளும்.
வருகைதரு பேராசிரியர்கள் வழியாக மேற்கொள்ளப்படும் ஒப்பியல் ஆய்வுத் திட்டம்
செம்மொழித் தமிழின் சிறப்புகளைப் பிற மொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்வதன் வழியாகத் தமிழின் சிறப்பு மேலும் துலக்கமாகப் புலப்படும்.
அந்தவகையில் வெளிநாட்டு அறிஞர்களைச் செம்மொழி நிறுவனத்திற்கு வருகைதரு பேராசிரியர்களாக அழைத்து ஒப்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்த் தாய், தொல்காப்பியர், திருவள்ளுவர் சிலைகள் அமைக்கும் திட்டம்
செம்மொழித் தமிழின் உயர்வையும் சிறப்பையும் போற்றும் அடையாளமாக நிறுவன வளாகத்தில் தமிழ்த்தாய், தொல்காப்பியர், திருவள்ளுவர் சிலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தமிழரும் தன் உயிர் மூச்சாகப் போற்றும் தமிழ் மொழி, பண்பாட்டின் அடையாளமாகவும், கலாச்சார அடையாளச் சின்னமாகவும் உள்ள தமிழ்த்தாயின் சிலை நுழைவு வாயிலின் எதிரே அமைக்கப்படும். வளாகத்தின் நுழைவு வாயிலில் தொல்காப்பியர், திருவள்ளுவர் சிலைகள் அமைக்கப்படும்.
இந்த மூன்று சிலைகளும் ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்டு ஒவ்வொன்றும் 7¾ அடி உயர அளவில் உள்ளவையாகும்.
தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
பணியாளர் நலன் சார்ந்த நற்பணிகள்
பணியாளர் நலம் சார்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகள் புதிய இயக்குநர் பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தினக் கூலிகளாகப் பணியாற்றியவர்களைத் தொகுப்பூதிய நிலைக்கு மாற்றியது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
வழக்குகளைக் காரணம் காட்டி முந்தைய காலத்தில் மறுக்கப்பட்டு வந்த பணியாளர் நல உரிமைகள் பல இப்போது கிடைத்து வருகின்றன.
பணியாளர்களுக்குள் எந்தவிதமான ஊதிய வேறுபாடுகளும் இல்லா நிலை இப்போதுதான் நிலவுகிறது. கடந்த காலங்களில் பல்வேறு ஊதிய முரண்பாடுகளும், பதவி முரண்பாடுகளும் இருந்தன. பல ஆண்டுகளாக நிலவிவந்த ஊதிய முரண்பாட்டைச் சீர்படுத்தப்பட்டுள்ளது.
ரூபாய் 18,000/ - ஊதியம் பெற்றுவந்த பல கல்விப் பணியாளர்கள் தற்பொழுது ரூபாய் 55,000/- ஊதியம் பெறுகின்றனர்.
செம்மொழி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து செயல்படுத்தப்படாமலிருந்த ஊழியர் சேமநல நிதித் திட்டம் (EPF) தற்பொழுதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பணியாளர்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கும் நிர்வாகச் செயல்பாட்டால் தினம் தினம் போராட்டங்கள் நடைபெற்றன; பணியாளர்களின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்தன.
தற்பொழுது அப்படியான போராட்டங்களும், பணியாளர் நலன் புறக்கணிப்புகளும் அறவே இல்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இத்தகைய பலன்களை பெறுபவன் என்ற வகையில் இதனை மகிழ்வோடு பதிவிடுகிறேன்.
செம்மொழி நிறுவனத்தில் 12 புலங்கள் ஏற்படுத்தப்பட்டு அப்புலங்கள் வழியே பேராசிரியர்கள் நியமிக்க விளம்பரப்படுத்தப்பட்டது . அதன் மீது நிறுவனப் பணியாளர்கள் வழக்கு தொடரப்பட்டுத் தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இதனால் நிரந்தரப் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளது.12 புலங்கள் கலைக்கப்படவோ , குறைக்கப்படவோ இல்லை. 7 திட்டங்கள் அடிப்படையில் கல்விப் பணியாளர்களும் , கல்விச்சாராப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
நன்றி: வெங்கடேசன் இராமசாமி |
||||||||||||||||||
by Swathi on 16 Nov 2022 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|