LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

டிசம்பர் மாத -ஆசிரியர் கடிதம்.

அனைவருக்கும் வணக்கம், 

போலிகளின்  இரைச்சலில் உண்மை மௌனமாகிறது.. .. 

போலி மனிதர்களின் இரைச்சலில் உண்மை மனிதர்கள் அமைதியாக இருப்பதும், ஒதுங்கிச் செல்வதும் தொடர்ந்து இந்தத் தமிழ்ச் சமூகத்தின் அவலங்களுக்கு மிகப்பெரிய காரணங்களாக உள்ளது.   திறமையானவர்கள், அறிவார்ந்தவர்கள், சிந்தனைவாதிகள் தங்களை முன்னிறுத்திச் சுயத்தை இழக்கமாட்டார்கள். அவர்கள் எவருடனும் மல்லுக்கட்டித் தன்னை அறிவாளி என்று நிரூபிப்பதையோ, தன்னுடைய சிந்தனை , பங்களிப்பை வெளிக்காட்டிக்கொள்வதையோ விரும்பமாட்டார்கள்.  நல்லவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களிடம் விலைபோகாத சுய சிந்தனையும், சுய கவுரவமும் கொண்டவர்கள். தனக்குப் பிடித்ததை நேர இழப்பையோ, பொருளாதார இழப்பையோ கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து செய்துமுடிப்பவர்கள். எவருடனும் அவ்வளவு எளிதில் இணைந்து சமரசத்துடன் பயணிப்பதை ஏற்கமாட்டார்கள். 

குடித்துவிட்டு ஒருவன் வீதியில் புரண்டு வாய்க்கு வந்ததைப் பேசும்போது, பண்பானவர்கள் எப்படி ஒதுங்கிச் சென்றுவிடுவார்களோ அதுபோல்தான் இதுவும்.  வீதியில் நிதானம் இழந்து சத்தம் போடுபவனிடம் கட்டிப்புரண்டு தன் நிலையை, உயரத்தைக் குறைத்துக்கொள்ளப் பண்பான மனிதர்கள் விரும்புவதில்லை. அதுபோல்தான் போலிகளின் சத்தத்திலும் அதைவிட உரக்கக்  கத்தித் தன்னை வெளிக்காட்ட நல்லவர்கள் விரும்பமாட்டார்கள். 

துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்றும், நடக்கும் வழியில் அசிங்கம் இருந்தால் அதைக் கடந்துபோ என்றும் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாம்.  இதுவே இன்றைய சமூகப் பின்னடைவுக்குக் காரணங்களாகிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆம், நல்லவர்களுக்கு, அறம் சார்ந்தவர்களுக்கு, உண்மையைப் பேசி வாழ்பவர்களுக்கு, தன்மானத்துடன் வாழ்பவர்களுக்கு, நீதியின் கைபிடித்து நடப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போலிகளைக் கொண்டாடும் ஒரு காலக்கட்டத்தில் வாழ்கிறோம்.   

உலகின் உன்னத இலக்கியச் செழுமையைக் கொண்ட தமிழ்ச் சமூகம், உலகப்பொதுமுறையைக்  கொண்டுள்ள தமிழ் மொழியைப் பேசும் நாம், உலகினை அமைதிவழியில் வழிநடத்தப் போதுமான அறம்சார் வாழ்வியல் சித்தாந்தங்களைக் கொண்டுள்ள நாம், இன்று உலகின் உன்னதச் சமூகமாக விளங்குகிறோமா?  சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. 

நம்மாழ்வார்களுக்குக் கிடைக்காத விருதுகள்  யாரைக் கொண்டாட பயன்படுத்தப்படுகிறது என்று சிந்திக்கவேண்டும்.  டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்களை டெப்பாசிட் இழக்கவைத்துத் தோல்வியுறவைக்கும் தேர்தல் களம் உண்மையானவர்களை விரட்டிவிட்டு எவ்விதத் தலைமைப் பண்புள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறது என்பதைச் சிந்திக்கவேண்டும்.    நல்ல மருத்துவர்கள் போலி மருத்துவர்களின் விளம்பரத்தில் தோற்று போகிறார்கள். ஆழ்ந்த சிந்தனை கொண்ட சிறந்த எழுத்தாளர்கள், ஆள் வைத்து எழுதித் தன் பெயர் போட்டுப் புத்தகம் வெளியிடும் பொருளாதாரம் படைத்தவர்களிடம் தோற்றுப்போகிறார்கள்.   வாழ்வில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்ந்து பொருளாதாரம் சேர்த்துக்கொண்டு எப்படி வாழவேண்டும் என்று இளையோருக்கு அறிவுரை சொல்பவர்களிடம் எடுத்துக்காட்டான பெருவாழ்வு வாழும் எளிமையானவர்கள் காணாமல் போகிறார்கள். ஒருவரின் உழைப்பை, சிந்தனையைத் தனதாக  மாற்றும் போலிகளிடம், அறிவார்ந்த சிந்தனையாளர்கள் தள்ளி நிற்கிறார்கள்.

நெஞ்சுரத்துடன் சரி, தவறு என்று உணர்ந்ததைச் சொல்பவர்கள், இடித்துரைப்பவர்கள்,   துதிபாடிகளுக்கு முன்பு காணாமல் போகிறார்கள். கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள், கொள்கையற்ற மாந்தர்களிடம் காணாமல் போகிறார்கள்.  இதுவே தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய பின்னடைவுக்குக் காரணமாக அமைகிறது. சில ஆண்டுகள் உழைத்துப் படித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுபவர்களை, ஒரு லட்சம் ,மூன்று லட்சம்,  ஐந்து லட்சத்திற்குச் சந்தையில் கூவி விற்கும் போலி பல்கலைக்கழகங்களின் சத்தத்தில் காணாமல் போகிறது. 

அடிமை மனோபாவம் கொண்டு,  எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சிந்தனை கொண்ட தனிமனிதன், கூட்டாகச் சேர்ந்து குறிக்கோளற்ற, பண்புகளற்ற ஒரு சமூகத்தை உருவாக்குகிறான்.   தனி மனித அறம் இல்லாத சமூகம் ஒரு தரமற்ற, தலைமைப்பண்பு இல்லாத தனக்குப் பிடித்த ஒருவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கிறது. பின்பு, அது சரியில்லை , இது சரியில்லை என்று புலம்பித் தன்  கண்முன்னே தன் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு எதிரான ஒரு சமூகத்தை உருவாக்கியதை எண்ணி வெம்பித்தவிக்கிறது.

“எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்கிறாய்”.  “விதை ஒன்று போட்டா சுரை ஒன்றா முளைக்கும்?” , “எண்ணம்போல் வாழ்க்கை” என்று பல விதங்களில் நம் முன்னோர் தனிமனிதனின் வாழ்வியலின், அறவாழ்வியலின் மகத்துவத்தைக் கூறிச்சென்றுள்ளார்கள்.  அந்த வகையில் நல்லவற்றைச் சத்தம் போட்டு வரவேற்பது மிக முக்கியம், அதே நேரத்தில் போலிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பதும், கொண்டாடாமல் இருப்பதும், அவர்கள் முக்கியத்துவம் பெற்றுவிடாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.  இந்தச் சமூகத்தின் இன்றைய அவல நிலைக்குத் தனிமனிதர்கள்தான் காரணம். நாம் ஒவ்வொருவரும் மாறும்போது சமூகம் மாறும். சமூகம் மாறும்போது அந்த தரத்திற்கு ஏற்ப நம்மை வழிநடத்தும் தலைமையும், வாழ்வியல் தரமும் உயரும். படிப்பதைச் சித்திப்பவர்களாக, சிந்திப்பதைப் பேசுபவர்களாக, பேசும்படி வாழ்பவர்களாக ஒரு இயல்பான, இணக்கமான வாழ்வை வாழத் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்.   சிஷ்யன் தயாராகும்போது குரு தோன்றுவார் என்பார்கள், நாம் தரமான மனிதராகத் தனிமனித வாழ்வில் உயரும்போது, அதற்கேற்ப எல்லாம் தோன்றும். 

பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் முக்கிய மனிதராக வரும் பலரது உண்மையான முகம் அதே நேர்க்கோட்டில் நடைமுறை வாழ்க்கையில் இருக்கவேண்டியதில்லை.  எனவே, நல்லவர்கள் நல்லவர்களை அடையாளம் கண்டு பேசுங்கள் ,எழுதுங்கள், சமூகம் நல்ல சிந்தனைகளை வரவேற்கவேண்டும். பணம், உயரம் , அரசியல், அதிகாரம், கவர்ச்சி இருக்கிறது என்பதற்காக எவரையும் தூக்கிப்பிடிப்பது நம்மை மட்டுமல்ல, வரும் தலைமுறையையும் தரம் தாழ்த்திக்கொள்ளாமல் இருக்கவேண்டியது அவசியமாகிறது. போலிகளை அடையாளம் காணச் சமூகமும், தனி மனிதர்களும், அமைப்புகளும் போதிய கவனம் செலுத்தவேண்டும்.   மனசாட்சியைப் புறந்தள்ளிப் போலிகளைக் கொண்டாடாதீர்கள். உண்மை அமைதியாகிவிடும். இது நம் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதி.. 

வாழ்க தமிழ்... 

மீண்டும் அடுத்த இதழில்  சந்திப்போம்.

அன்புடன்,

ச.பார்த்தசாரதி, ஆசிரியர்.   

Magazine@ValaiTamil.Com

by Swathi   on 09 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக ஊர்களின் பெயர் காரணம் -  பகுதி 2 தமிழக ஊர்களின் பெயர் காரணம் - பகுதி 2
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.