LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

பச்சை ரோஜா

ஏற்காடு இளங்கோ 

ரோஜா என்பது உலகின் மிகப் பிரபலமான தாவரங்களில் ஒன்றாகும். பண்டிகை மற்றும் அலங்காரங்களில் ரோஜா மலர்கள் அதிகளவில் பயன்படுகிறது. இது தனிப்பட்ட அழகு வாய்ந்தது. அனைவரையும் கவரும் விதத்தில் வண்ணமும், வாசனையும் கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் ரோஜா செடிகளை தங்கள் வீட்டில் வளர்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

 

ஒரு பூங்கா என்றால் அங்கு ரோஜா தாவரங்கள் இல்லாமல் இருக்காது. அப்படியே ரோஜா செடியோ, ரோஜா பூவோ இல்லை என்றால் பார்வையாளர்கள் விரக்தியாகப் பேசுவார்கள். பல்வேறு பூங்காக்களில், ரோஜா தோட்டம் என்கிற தனிப்பகுதியே காணப்படும். அதில் பலவிதமான, பல்வேறு நிறங்களில் ரோஜா பூக்கள் மலர்ந்திருப்பதைக் கண்டு மக்கள் மகிழ்வார்கள்.



செடி

ரோஜா செடிகள் 20 செ.மீ முதல் 1 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை. குட்டை ரகங்கள் 20 – 30 செ.மீ உயரம் மட்டுமே வளரும். இவற்றில் கொடி ரோஜாக்களும் உண்டு. ரோஜா (Rosa) என்னும் பேரினத்தில் 300 சிற்றினங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலப்பினங்களும் உள்ளது. இவை ரோசேசி (Rosaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். ரோஜா செடியில் வளைந்த கொக்கி போன்ற முட்கள் உள்ளன. பெரும்பாலான ரோஜா இனத்தின் தாயகம் ஆசியா ஆகும். சில இனங்களின் பிறப்பிடமாக ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகள் உள்ளன. இருப்பினும் டாக்ரோஸ் போன்ற சில காட்டு இனங்கள் ஆர்க்டிக் வரை பரவலாக உள்ளன.

 

ரோஜாக்களின் வேர்கள் மண்ணில் ஆழமாகச் செல்லாது. வருடம் முழுவதும் பூக்கும். சில இனங்களில் மட்டுமே கனிகள் தோன்றும். அதன் உள்ளே 6 முதல் 150 விதைகள் காணப்படும். கலப்பினங்களில் கனிகள் தோன்றாது. ஆகவே ரோஜா செடிகளைத் துண்டுகளாக நறுக்கியும், பதியம் போட்டும் நாற்றுகளை உருவாக்குகிறார்கள். மேலும் ஒட்டு முறையிலும் நாற்றுகளைத் தயார் செய்கின்றனர். ரோஜா தாவரங்களைப் பராமரிப்பது எளிது. ஒரு அழகுத் தாவரமாக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரமாகவும் இது விளங்குகிறது.



சீன ரோஜா

ரோஜாக்கள் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவில் வளர்க்கப்பட்டு வந்தன. இன்றைக்கு சுமார் 35000க்கும் மேற்பட்ட சாகுபடி ரகங்கள் உள்ளன. நவீன ரோஜா சாகுபடியானது 10 க்கும் குறைவான இனங்களில் இருந்தே நிறுவப்பட்டன. இதில் சீன இனங்களும் அடங்கும். சீனாவின் பழைய இனங்கள் உயர்ந்த அலங்கார மலர்களாகவும், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் மதிப்பு கொண்டவையாகவும் உள்ளன. அவை முக்கியமான ரோஜா மூலவுயிர் (Germplasms) வளத்தைக் கொண்டுள்ளது.

 

ரோசா சைனான்சிஸ் (Rosa chinensis) என்பது இதன் தாவரவியல் பெயராகும். இது மிகவும் பழைய ரோசா இனமாகும். இதுவே மீண்டும், மீண்டும் பூக்கும் குணம் கொண்டது. மலர்கள் வாசனை உடையவை. மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெற்றுள்ளது. ஆகவே இதை இனப்பெருக்கத் திட்டங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.



பச்சை ரோஜா

பல வண்ணங்கள் கொண்ட ரோஜா மலர்கள் உள்ளன. இவற்றில் பச்சை ரோஜா (Green Rose) என்கிற ஒரு ரோஜாவும் உண்டு. பச்சை ரோஜா என்பது மிகவும் அரிதானது. இது மற்ற ரோஜாக்களைப் போன்றதே. இதன் மொட்டுகள் மற்ற ரோஜாவின் மொட்டுகளைப் போலவே இருக்கும். ஆனால் மொட்டு வெடித்தவுடன் பூவானது முழுக்க, முழுக்க பச்சையாகவே காணப்படும். இதழ்கள் அனைத்தும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன.

 

ஒருவர் பச்சை ரோஜாவின் அருகில் சென்றால் அவருக்கு அச்செடியில் பூக்கள் இருப்பது தெரியாது இலைகளுக்கு இடையே பூக்களும் பச்சை நிறமாக இருப்பதால் பூ எது என்று தெரியாது. நன்கு உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே பூக்கள் கண்களுக்குத் தெரியும். பல வண்ணங்களில் ரோஜா மலர்களைப் பார்த்துப் பழகிய நமக்குப் பச்சை நிறத்தில் ரோஜாப்பூ என்றவுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

 

வரலாறு:

பச்சை ரோஜாவுக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. இது 1743 ஆம் ஆண்டில்தான் முதன் முதலாகத் தோன்றியது. இது உண்மையான ரோஜாதான். இது மற்ற இனம் மற்றும் கலப்பின வகையைப் போன்றதே. ஆனால் இது 18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பயிரிடப்படவில்லை. இது ஒற்றை இதழ்கள் அல்லது காட்டு ரோஜாக்களுடன் நெருங்கிய தொடர்புடைய, ஒரு பழமையான ரோஜாவிலிருந்தே தோன்றியது. ஆனால் மற்ற வகை ரோஜாக்களின் பூக்களிலிருந்து இது மாறுபட்டுள்ளது. இதற்கு அல்லி இதழ்கள் கிடையாது. இதற்குப் புற இதழ்கள் மட்டுமே உள்ளன. புற இதழ்கள் ஒன்றன் மீது ஒன்றாக வட்ட வடிவில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பச்சை நிறம் கொண்டவை.

 

இதைப் பார்க்கும்போது நமக்கு ஏமாற்றமாகக் கூட இருக்கும். ஆனால் இதன் மூலம் நாம் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். பூக்கள் அதாவது பூக்கும் தாவரங்கள் சுமார் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. பூக்கள் என்பவை அக்காலத்தில் இலைகளின் மாற்றத்தால் (Modified) தோன்றியவை ஆகும். அதாவது இலைகள் பூ இதழாகவும், இலைக் காம்பு, பூவின் காம்பாகவும் பரிணாமத்தில் மாற்றம் அடைந்தன. அச்சமயத்தில் பூக்கள் யாவும் பச்சை நிறத்திலேயே இருந்தன. பிறகு இதழ்களானது வண்ணங்களைத் தேர்வு செய்தன. பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடப்பதற்காகவே இதழ்கள் வண்ணமாக மாறின. இது தாவரங்களுக்கு நன்மை பயக்கும் பண்பாகும். உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கான இயற்கை தேர்வு (Natural selection) இதுவாகும்.

 

ரோஜா பூக்கள் வண்ணமயமாக இல்லை என்றால் அத்தோட்டம் அழகானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு ரோஜா தோட்டம் முழுவதும் பச்சை ரோஜாக்களாக இருந்தால் நாம் அதை விரும்பி ரசிக்க மாட்டோம். ஆனால் இந்தப் பச்சை ரோஜா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று திகைப்பூட்டும் பல வண்ண மலர்கள் படிப்படியாகப் பச்சை நிறத்திலிருந்து மாற்றம் அடைந்தன (Mutated) என்பதைக் காட்டுகிறது. அவை பூச்சிகள், பறவைகள், மற்றும் பிற மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமான உயிரினங்கள், தங்களைத் தவிர்க்க முடியாத வகையில் இலைகளை வண்ணமயமாக மாற்றியமைத்தன. இப்படி மாறுவதற்குச் சில கோடி ஆண்டுகள் ஆயின. இது பூக்களில் நடந்த பரிணாமம் எனலாம்.

 

ஓல்ட் ப்ளஷ்

பச்சை ரோஜாவானது அதன் சந்ததியான ஓல்ட் ப்ளஷ் (Old Blush) என்பதிலிருந்தது வந்தது. அதாவது ஓல்ட் பளஷ்  மேற்கத்திய உலகில் காணப்படுகிறது. இது ஐரோப்பாவிற்கு வந்த முதல் ரோஜாவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1752 ஆம் ஆண்டில் டென்மார்க் மற்றும் 1793 இல் இங்கிலாந்திலும் பயிரிடப்பட்டது. இதன் தோற்றத்தைக் கண்டறிந்தால் அது ரோசா சைனென்சிஸில் இருந்தே உருவானது எனத் தெரிகிறது.

 

ஆய்வு

ஒட்டுதல் பரிசோதனை மற்றும் நுண்ணோக்கி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஆர்.என்.ஏ பரிசோதனையும் நடந்தது. அப்போது ஓல்ட் ப்ளஷ் மற்றும் பச்சை ரோஜா இரண்டிற்கும் மரபணுக்களில் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஹோமோலோஜ்களே (Homologs) பூக்களின் துவக்கம் மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மரபணுக்களில் தூண்டுதலை ஏற்படுத்தியன என்பதைக் கண்டனர். மேலும் பச்சை ரோஜாவின் ஒவ்வொரு அடுக்கிலும் மரபணுக்கள் சோதனையைச் செய்தனர். ஏபிசிஇ மலர் உறுப்பு அடையாள மரபணுக்களின் மாற்றியமைக்கப்பட்ட வெளிப்பாடுதான் பச்சை ரோஜா ஆகும். இது பைலோடி பினோடைப்புடன் (Phllody phenotype) தொடர்புடையது. பைலோடி (Phllody) என்பது அசாதாரணமான குணம் கொண்ட மலர். இதில் இலை போன்ற கட்டமைப்புகள் பூ உறுப்புகளைச் சுழல் வடிவமாக மாற்றும்.

 

பச்சை ரோஜா வளர்ப்பு

பச்சை ரோஜா என்பது ஒரு சாகுபடி (Cultiver) வகையாகும். இதன் தாவரவியல் பெயர் ரோசா சைனென்சிஸ் விரிடி ஃப்ளோரா என்பதாகும். தற்போது ரோசா விரிடிஃப்ளோரா (Rosa viridiflora) என்றே அழைக்கின்றனர். 1743 ஆம் ஆண்டில் தோன்றியது என்றாலும் 1768 இல்தான் பச்சை ரோஜா பற்றிய தகவல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1830 ஆம் ஆண்டில் பெம்பிரிட்ஜ் மற்றும் ஹாரிசன் என்ற பிரிட்டிஷ் நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்டது. உலகின் பல பகுதிக்கும் பரவியது. நண்பர் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குச் சென்றது. இது ஓரினச் சேர்க்கை (Asexual) தாவரமாகும். மகரந்தம் கிடையாது. ஆகவே இதைக் கலப்பினம் செய்ய முடியாது. மனிதர்களின் கருனையால் துண்டுகளாக நறுக்கி வளர்க்கப்படுகின்றன.

 

செடியானது 2 முதல் 5 அடி உயரம் வளரும். வருடம் முழுவதும் பூக்கும். பூக்களில் அல்லி இதழ்கள் (Petals) கிடையாது. புற இதழ்கள் (Sepals) ஒன்று சேர்ந்து பூவாக மாறியுள்ளன. புற இதழ்களை புல்லி வட்டம் (Calyx) தாங்கிப் பிடித்துள்ளது. மேலும் மகரந்தத்தாள், சூலகம் போன்றவையும் கிடையாது. பூக்கள் ஆப்பிள் பச்சை நிறமானவை. நன்கு முற்றிய நிலையில் பச்சை நிறத்திலிருந்து வெண்கல (Bronze) நிறத்திற்கு உள்புற இதழ்கள் மாறுகின்றன.  இதிலிருந்து காரமான மிளகுத்தூள் வாசனை வெளிப்படுகிறது. இப்பூக்கள் 30 நாட்கள் வரை வாடாமல் இருக்கின்றன.

 

சீனா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பச்சை ரோஜா வளர்க்கப்பட்டு வருகிறது. இச்செடிக்கு எளிதில் நோய் வராது. ஆகவே வீடுகளிலும் வளர்க்கலாம்.



by Swathi   on 10 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.