LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

அவரவர்களின் யதார்த்தம்

அவரவர்களின் யதார்த்தம்

            அப்பொழுதுதான் பார்த்தாள் சுலோச்சனா, பேச்சியின் கழுத்தின் பின் புறம் சிறிய காயம், என்ன பேச்சி உன் கழுத்துக்கு பின்னாடி காயம்?

    கட்டிலின் அடியில் இருந்த குப்பையை குனிந்தபடியே விளக்குமாறால் வெளியேற்றியபடியே கூட்டி கொண்டிருந்த பேச்சி தலையை வெளியே நிமிர்த்தி,  தன் கையை பின் புறம் கொண்டு போய் தொட்டு பார்த்து சட்டென வெட்கமானாள்.

     அது ஒண்ணுமில்லீங்க நிலவுல இருந்த “கொண்டி” பின்னாடி சாயும்போது கிழிச்சிடுச்சு, சொல்லும்போதே “பொய்தான்” என்பதை அவள் முகம் காட்டியது.

     ம்..ம்..புரிந்து கொண்டது போல் சொன்ன சுலோச்சனா, இதை முடிச்சுட்டு பாத்திரம் கழுவி வச்சுட்டு கிளம்பிடு. நான் இப்ப வெளியே போறேன், போகும்போது கதவை பூட்டிட்டு எப்பவும் வைக்கிற இடத்தில வச்சிடு, மளமளவென தன்னுடைய உடையலங்காரத்தை கண்ணாடியில் பார்த்தவள் அங்கும் இங்கும் தன் உடலை திருப்பி கண்ணாடியில் பார்த்து தன்னை சரி படுத்தி கொண்டாள்.

     வெளியே வந்தவள் “லிப்டுக்கு” செல்வதற்காக நடக்க ஆரம்பித்தாள். இவளது “பிளாட்” ஒன்பதாவது மாடியில் இருக்கிறது. நடக்க, நடக்க வலது கையில் கட்டியிருந்த “வெளி நாட்டு வாட்சில்” மணி பார்த்தாள். ஒன்பதரையை காட்டியது. பத்துமணிக்கு சுமித்ராவை அவள் வீட்டில் தயாராய் இருக்க சொல்லியிருந்தாள். இருவரும் ஒரு விழாவுக்கு போவதற்கு திட்டமிட்டிருந்தார்கள்.

       கீழ் தளத்துக்கு வந்தவள் கார் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு வந்தாள். தனது காரை காம்பவுண்டை தாண்டி மெயின் ரோட்டில் ஓட்டி செல்லும்போது அவளுக்கு “பேச்சியின்” அந்த வெட்கப்பட்ட முகம் ஞாபகம் வந்தது.

       இருந்தால் ‘பேச்சிக்கும்’ தன்னுடைய வயதுதான் இருக்கும், அல்லது தன்னை விட ஒரு வயசு அதிகமாக,முப்பத்தி அஞ்சு அல்லது ஆறு இருக்கலாம். இப்பொழுதும் அவளுக்கு சட்டென வந்த வெட்கம். தனக்கு வருமா?

      கணவனுடன் காமம் கலந்த நாட்கள் எனும் போது வருடத்தில் குறிப்பிட்ட அந்த ஒரு மாதம் மட்டுமே கிடைத்து கொண்டிருக்கும் இந்த ஏழு வருடங்களில் மற்ற மாதங்கள் எல்லாம் அவனில்லாமல் ஒரு வெறுமையாய் தன்னை கட்டுப்படுத்தி அதில் அவன் அனுப்பும் வருமானத்தை எண்ணியபடி தன்னை தேற்றி கொள்ள பழகி கொண்டாள். அதனால் இந்த விசயம் அவளை பொறுத்த வரையில் “மரத்து போக செய்த,அல்லது மறந்து போன” விசயமாகி விட்டது.

      இப்பொழுது தேவைப்படுவது “ஒரு தோழமை” அதுவும் உரிமையுடன் சண்டை போட தோழனாக கணவன் அருகில் இருந்தால் நன்றாய் இருக்கும் என நினைக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால்..!

     துபாயிலிருந்து போன வருடம் வந்த மயில்வாகனன் அன்று இரவு சுலோச்சனாவுடன் தனித்து இருந்த பொழுது மனம் விட்டு சொன்னான். “போதும்னு” ஆயிடுச்சு இந்த மாதிரி “வருசத்துக்கு ஒருக்கா” வந்துட்டு ஒரு மாசம் உன் கூட இருந்துட்டு மறுபடி இயந்திரமா பதினோரு மாசம் அங்க போயி உழைக்கறது.  அடுத்த வருசம் இங்க வந்துடலாமுன்னு இருக்கேன். அங்க என் ரூம்ல உதவிக்கு ஆள் இல்லாம நானே சமைச்சு சாப்பிட்டு, என்னால இப்பவெல்லாம் முடியறதில்லை.

      அதுவரை இருந்த இன்ப நினைவுகளில் இருந்து சட்டென இறங்கி போன சுலோச்சனா “ஏங்க இந்த வயசுல இப்படி பேசறீங்க? நாப்பது கூட இன்னும் “டச்” பண்ணலை. இப்ப சம்பாரிக்காம அப்புறம் ஐம்பதுக்கு மேல சம்பாதிக்க முடியுமா?

     தன் மனைவி தன்னுடைய புலம்பலை கேட்டவுடன் சட்டென மனம் இரங்கி “பரவாயில்லை நீங்க இங்கேயே வந்துடுங்க” இங்க “ஏதேவொரு வேலை கிடைக்காமயா போகப்போகுது” இப்படி சொல்வாள் என எதிர்பார்த்த மயில் வாகனன் சட்டென உறைந்து போனான்.

      அதுவரை இருவரும் ஒருவரை ஒரு அன்பால் கட்டி போட்டிருப்பது போல பேசிய பேச்சுக்கள் அனைத்தும் உண்மையா? அல்லது வெறும் உணர்ச்சிகளில் வெளி வந்த பேச்சுக்களா? புரியவில்லை. அருகில் படுத்திருந்த மனைவியை ஒரு தரம் பார்த்தவனுக்கு அந்த நிலையில் ஒரு உண்மை புரிந்தது. “யதார்த்தம் என்பது கொடுரமானது”.

      “அவள் பேசியது யதார்த்தம்”, ஏனென்றால் இவனது வருமானத்தை நம்பி மூன்று இடங்களில் இடம் வாங்கி போட்டு கட்டிக்கொண்டிருக்கும் வீடு, அது போக மாத, மாத முதலீடு, ஒரே பையனை மிகப்பெரிய கல்வி நிறுவனம் ஒன்றில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்து கொண்டிருக்கும் செலவு. மற்றும் கார், போக்குவரத்து இத்யாதி இத்யாதி..அனைத்தும் இவனது ஒவ்வொரு வருட பதினோரு மாத தனிமையும் உழைப்பு தரும் பயன். ஒன்றும் பேசாமல் தூங்க முயற்சித்தான்.

    காலையில்தான் சுலோச்சனாவுக்கு ஒரு யோசனை உதித்தது, ஏங்க வீட்டுல சமைக்கறதுக்கு, துவைக்கறது, வீட்டை கிளீனா வச்சுக்கறது இதுக்கெல்லாம் இங்கிருந்தே ஒரு ஆம்பளை ஆளை ஏற்பாடு பண்ணி உங்ககிட்ட அனுப்பி வச்சா போதுமா?

      அவனுக்கும் இது நல்ல யோசனையாகத்தான் தென்பட்டது. நல்லாத்தான் இருக்கு, ஆனா வர்றவன் ஏடாகூடமான ஆளா இருக்க கூடாது, அப்புறம் அங்க எல்லாம் எந்த வம்பு தும்பு செஞ்சாலும் இரண்டு பேரும் சேர்ந்து கம்பி எண்ணனும், அதனால வர்றவன் நல்லவனா இருக்கனும்.

      அந்த கவலைய என் கிட்ட விடுங்க, நான் ஏற்பாடு பண்ணறேன். சுலபமாக சொல்லி விட்டாள். ஆனால் ஆள் மட்டும் மூன்று மாதமாக கிடைக்கவில்லை. இதோ இந்த சுமித்ராவிடம் கூட சொல்லியிருந்தாள் “எங்க சுலோச்சனா நல்ல ஆளு கிடைக்கறது ரொம்ப கஷ்டம், அதை விட அவனை நம்பி அனுப்பி வச்சு அதுக்கப்புறம் உங்க வீட்டுக்காரருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஆயிடுச்சுன்னா அப்புறம் உன் முகத்தை எப்படி பார்க்கறது? 

     சுமித்ராவின் பங்களா வந்து விட்டது, அதோ பள பளக்கும் உடையில்  தயாராய் இருக்கிறாள். அவளின் கணவன் கூட “அபுதாபியில்” இஞ்சீனியராக இருக்கிறார். நானாவது ஏழு வருசம், அவளுடைய கணவன் பதினைஞ்சு வருசமாக இருக்கிறான். இரண்டு மகன்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்த பின்னால் அவளுக்கும் என்ன வேலை?  கணவன் இப்படி சலித்து கொண்டதை சொல்லி துபாயில இருக்கற கணவன் வீட்டுக்கு ஒரு வேலைக்காரன் கிடைக்குமா? என்று கேட்டபொழுதுதான் அவள் சொன்னாள் எதுக்கு நமக்கு இந்த வம்பு, என் வீட்டுக்காரரு இத்தனை வருசமா அங்கதான் இருக்கறாரு, நல்லா சமைக்கறாரு, சந்தோசமாகத்தான் இருக்கறாரு. உன் வீட்டுக்காரரை பேசாம இருக்க சொல்லு.

       மறு நாள் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தவள் எதிரில் நின்றிருந்த பேச்சியை பார்த்ததும் அதிர்ந்து விட்டாள். என்னாச்சு பேச்சி ஏன் முகம் எல்லாம் வீங்கியிருக்கு? வீட்டுக்குள் நுழைய வழி விட்டவாறு கேட்டாள்.

        அதை ஏம்மா கேக்கறே? இந்த கட்டையில போறவன் ஒரு இடத்துல ஒழுங்கா வேலைக்கு போறதில்லை, எங்க போனாலும் “ரூல்ஸ் ரைட்ஸ்னு” பேசிகிட்டு வேலைய வேணாம் போன்னு வந்துடறான். ஏய்யா இப்படி இருக்கே?  நமக்கு இரண்டு புள்ளைங்க “ஸ்கோலுக்கு போகுது” அதுங்களுக்கு நல்ல சட்டை, சொக்காய் தச்சு கொடுக்காண்டமான்னுதான் கேட்டேன், அதுக்கு அந்த எடுபட்ட ஆளு போட்டு அடிச்சுட்டான், மூக்கை சிந்தினாள்.

     விட்டால் அழுது விடுவாளோ என்னும் பயத்தில் “சரி சரி போய் வேலைய பாரு” காப்பி வேணா போட்டு தாறேன், குடிச்சிட்டு வேலைய பாரு, சொல்லிக்கொண்டே சமையலைறக்குள் சென்றாள்.

     “றொம்ப டாங்ஸ்” சொன்ன பேச்சி மள மளவென விளக்குமாறை வைத்த இடத்திற்கு சென்று எடுத்து கொண்டாள்.

      காப்பியை ஊதி ஊதி வேகமாக குடித்து முடித்து  வேலையை ஆரம்பித்த பேச்சியை கவனித்தபடியே சோபாவில் உட்கார்ந்து கொண்டு காப்பி குடித்த சுலோச்சனாவுக்கு சட்டென இந்த யோசனை உதித்தது. ஏன் பேச்சியம்மாவின் கணவனையே தனது கணவனின் இடத்துக்கு அனுப்ப கூடாது? அவனும் எங்கோ சமையல்காரனாகத்தான் சென்று கொண்டிருப்பதாக ஒரு முறை பேச்சி சொல்லியிருக்கிறாள்.

      எல்லா வேலைகளையும் முடித்து விட்டு நான் கிளம்பட்டுமா? கேட்ட பேச்சியை இங்க வா பேச்சி உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்.

    வியப்பாய் விழிகளை உயர்த்தியபடி அருகில் வந்த பேச்சியம்மா என்ன கேளுங்கம்மா?

    இல்லை உன்னோட வீட்டுக்காரனை துபாயில இருக்கற என்னோட வீட்டுக்காரரு வீட்டுக்கு சமையல்காரனா அனுப்பிச்சா போய் வேலை செய்வானா?

     துபாயிக்கா? அது எங்க இருக்கு வெளி நாடுங்களா?

    ஆமா நல்ல சம்பளம் கொடுப்பாங்க, நல்லா வசதி ஆயிடலாம், இப்ப இருக்கற என்னைய மாதிரி பெரிய வீட்டுக்கு குடி போகலாம், என்ன உன் வீட்டுக்காரன் பொறுமையா அஞ்சாறு வருசம் அங்க வேலை செய்யணும்.

     அப்ப வூட்டுக்கு எப்ப வருவாரு?

     எங்க வீட்டுக்காரரு வர்ற மாதிரிதான், வருசத்துக்கு ஒருக்கா ஒரு மாசம் லீவு கொடுப்பாங்க.

     சட்டென முகம் கறுத்து போனது பேச்சிக்கு “வேணாங்கம்மா அந்த வீணா போனவன் இங்கனயே எங்காவது வேலை செஞ்சுகிட்டிருந்தா போதும், குழந்தைங்க எல்லாம் அது மூஞ்சிய பார்க்காம ஏங்கி போயிடும். அப்படித்தான் வேலைக்கு போலியின்னா கூட என்னா நானு சம்பாரிக்கறனில்லை, கஞ்சியோ கூலோ குடிச்சுட்டு கண்ணு முன்னாடி இருக்கட்டும்.

     என்ன இப்படி சொல்றே? வசதி கூடுமில்லை.

     வசதி என்னங்கம்மா வசதி..! இருக்கறதை வச்சி வாழ தெரியாதவனுக்குத்தான் வசதி வேணும். எங்களுக்கு என்னா? மூணு நேரம் சோறோ கஞ்சியோ, குழந்தைங்களுக்கு டவுசர் சட்டை, என் வூட்டுக்காரனுக்கும், எனக்கும் மானத்தை மறைக்க துணிமணி. இது போதுங்கம்மா, நானு வரட்டுங்களா? ரொம்ப டாங்க்ஸ்ம்மா என் வூட்டுக்காரனை பத்தி விசாரிச்சதுக்கு.

    “ஓ“ இது பேச்சியின் யதார்த்தம்” கேட்டு கொண்டிருந்த சுலோச்சனா விக்கித்து நின்றாள்.

difference opinions
by Dhamotharan.S   on 18 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தியானம் தியானம்- ஒரு “பத்தி” (பாரா) கதை தியானம் தியானம்- ஒரு “பத்தி” (பாரா) கதை
இறுதி இறுதி
உறவுகளோடு உறவாக உறவுகளோடு உறவாக
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.