|
||||||||||||||||||
இறுதி |
||||||||||||||||||
வண்டி வாகனங்கள் சென்று கொண்டிருந்த பாதையை தாண்டி எதிரில் இருந்த பேக்கரியில் அந்த பெண் கையேந்தி எதோ கேட்டு கொண்டிருந்த தையும், அதற்கு டீயை ஆற்றியபடியே கடைக்காரர் அந்த பெண்ணிடம் கோபமாக பேசி கொண்டிருப்பதையும் பார்த்து கொண்டிருந்தான் சென்னியப்பன். என்ன கேட்டு கொண்டிருப்பாள்? என்பதை அம்மாவை கொண்டு வந்து இங்கு சேர்த்த ஒரு மாதமாக பார்த்து கொண்டுதானே இருக்கிறான். அந்த பெண்ணுக்கு ஏதாவது கொடுக்கலாம் என்றுதான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறான். ஆனால் அவனிடம் இருக்கும் சொச்ச ரூபாயும் இன்னும் எத்தனை நாள் இந்த நகரத்தில் செலவுக்கு தாங்கும் என்னும் நிலையில், அவனால் பார்த்து கொண்டு மட்டும்தான் இருக்க முடிந்தது. வெயில் காத்திரமாக இருந்தது. இந்த மருத்துவமனையின் முன்புறம் இருந்த மூன்று மரங்களின் அடியில் இவனைப்போல சுற்றி வர குந்த வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் நிறைய பேர். அவரவர்களுக்கு அவரவர்களின் கவலை, பொண்டாட்டியை உள்ளே மருத்துவமனையில் சேர்த்திருப்பவர்கள், கணவனை சேர்த்து விட்டு வெளியே காத்திருக்கும் மனைவி..எல்லா முகங்களிலும் காணப்பட்ட வெறுமை, ஏழ்மை, இதற்கு மேல் என்ன? கேகும் தோற்றம், கையில் இருக்கும் பண இருப்பு குறைய குறைய அவர்களின் உள்ளத்தில் தங்கும் திகில்..! அரசு மருத்துவமனைதான், ஆனாலும் ஒவ்வொன்றுக்கும் ஐந்து பத்து திணித்தாலன்றி அணுவளவும் அசையமாட்டேனெங்கிறது. கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டியவர்கள் இப்படி திடீரென உடம்புக்கு வந்து மருத்துவமனையில் படுத்து கொள்ள, கூட இருப்பவர்கள் படும் சிரமங்கள், இவர்களின் வருமானமும் போய், கையிருப்போ கடனிருப்போ கரைந்து போவது,….வேறு என்ன செய்வது? தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போக முடியுமா? ஒரு நாள் கூட தாக்குபிடிக்க முடியுமா இவர்களால்? ஐந்தோ பத்தோ அழுது தொலைத்தாலும் நோயாளியை படுக்க வைத்து இரண்டு மூன்று வேளைகளில் டாக்டரும் நர்சுகளும் வந்து பார்த்து செல்கிறார்களே ! இதுவே இவர்களுக்கு பெரும் வரமாக நினைத்து மனதை சமனப்படுத்தி கொள்ள வேண்டியதுதான். சென்னியப்பன்..சென்னியப்பன்.. வெளியே நின்றபடி மருத்துவ உடுப்பு அணிந்த ஆள் கத்தி கொண்டிருந்ததை ஓரிரு நிமிட்னகள் சென்ற பின்பு தான் இவனால் உணர முடிந்தது. குந்த வைத்து உட்கார்ந்தவன் சட்டெனெ எழுந்து ஓடிவந்தான். எழும்போது ஏற்கனவே கிழிந்திருந்த அவனதுலுங்கி மேலும் “டர்” என கிழிபடும் சத்தம் கேட்டாலும் அவனால் அதை செட்டை செய்யமுடியவில்லை. உன்னைய கூப்பிடறாங்கய்யா, மருத்துவ ஊழியன் எதிரில் கையை கட்டி நின்றவனிடம், அலட்சியமாய் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். மனதுக்குள் பெரும் திகில் வர அடித்து பிடித்து அம்மா படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலை நோக்கி ஓடினான். வரும்போதே அம்மா கட்டிலில் அமைதியாய் படுத்திருப்பதை பார்த்தவனுக்கு மனதில் திகில அப்பிக்கொள்ள.. சட்டென அவனிடம் நர்ஸ் ஒருத்தி உன் அம்மா முடிஞ்சிட்டாங்கய்யா, ஆளுங்க வந்து எடுத்துடுவாங்க, சீக்கிரம் ஊருக்கு கொண்டு போற வழிய பாரு.. அம்மா..இறந்து விட்டாளா? எப்படியும் இறந்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லியிருந்தும் ஒரு மாதம் தாங்கிய நம்பிக்கையில் இருந்தவனுக்கு..! டவுன் பஸ்ஸில் சென்றால் மூன்றாவது நிறுத்தம்தான், அதற்கே ஆம்புலன்ஸ் கேட்ட தொகை ஆயிரத்துக்கு மேல். என்ன செய்வது? உடலை சுற்றி அங்கங்கு தொட்டு பார்த்து மன கணக்கு போட்டு பார்த்தவன் இருந்தால் இருநூறு முந்நூறு தேறும், அவ்வளவுதான், இப்பொழுது அம்மாவை எப்படி கொண்டு போவது? அம்மவின் அருகில் சென்று அவளை தொட்டு தடவி பார்த்தான். இவன் பிறந்ததில் இருந்தே அம்மாவை இதே கோலத்தில்தான் பார்க்கிறான், கவர்ன்மெண்டு ஸ்கூலில் இவனை விட்டு விட்டு தோட்ட வேலைக்கு போனது முதல்..அதுவும் மதியம் சோறு அவனுக்கு கிடைக்கும் என்னும் நம்பிக்கையில். ஒரு கையை மட்டும் இறுக்கி மூடியபடி இருந்ததை பார்த்தவன் மெல்ல அந்த கையை பிரிக்க முயற்சி செய்தான். சிரமபட்டு பிரித்தவன் அதிர்ந்து நின்றான். கசங்கிய ரூபாய் தாள் ஒன்று மெல்லிய சிவப்பாய் தெரிந்தது. மனதுக்குள் பரபரப்புடன் அதை பிரித்தான், இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்று..! பக்கத்து கட்டிலில் படுத்திருந்த பெரியவர் அங்கிருந்தபடியே சொன்னார், என்னமோ தெரியலைப்பா, படுத்து முணங்கிட்டிருந்த உங்கம்மா சட்டுனு எந்திரிச்சு தலைமாட்டுல இருந்த பைக்குள்ள கைய விட்டு என்னமோ தேடிகிட்டிருந்தா, என்னமா தேடுறேன்னேன், எந்திருக்கவே முடியாம கிடந்தவ எப்படி இவ்வளோ வேகமா எந்திரிச்சி பையை துழாவுறாளேன்னு எனக்கு ஆச்சர்யம். நான் கிளம்பறேன், பையன் கஸ்டபடக்கூடாதுன்னு மட்டும் சொன்னா, அதுவும் உளறி உளறி சொல்லிட்டு பையை கீழே தள்ளிட்டு அப்படியே கையை இறுக்கி பிடிச்சாப்படி படுத்தவதான்…சொல்லிக்கொண்டிருந்தார், சென்னியப்பன் கண்ணில் நீர் வழிந்தபடி கேட்டு கொண்டிருந்தான். |
||||||||||||||||||
Last | ||||||||||||||||||
by Dhamotharan.S on 29 Jun 2024 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|