LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

நேர்மை என்பது இவ்வளவுதான்..!

நேர்மை என்பது இவ்வளவுதான்..!

            அலுவலகத்திலிருந்து அன்று மாலை பணி முடித்து எல்லோரும் வீட்டுக்கு கிளம்பும்போது மேலாளர் அறிவித்த அறிவிப்பால் அரண்டு போனார்கள். எல்லோர் மனதுக்குள்ளும் சட்டென கவலை வந்து கவ்விக்கொண்டது.

           இவர்களுக்கே இப்படி எனும்போது மேலாளருக்கு எப்படி இருக்கும்? அவரது தனிப்பட்ட “கணினியில்” மாலை ஐந்து மணிக்கு வந்த ஈ- மெயில் செய்திதான் இவர்களை இப்படி கிலி கொள்ள செய்து விட்டது.

         நாளை அடுத்த மறு நாள் உங்கள் அலுவலகத்தின் அனைத்து கோப்புக்களையும், அதற்கு நீங்கள் எடுத்த முடிவுகளையும், மற்றும் மேற்கொண்டு உங்கள் அலுவலகம் செய்து கொண்டிருக்கும் அனைத்து பணி விவரங்களையும் நாங்கள் அன்று அனுப்பி வைக்கும் “படிவத்தில்” பதிவில் ஏற்ற வேண்டும்.

     அதற்காக உங்களுக்கு கொடுக்கும் நேரம் இரண்டு நாள். இரண்டாம் நாள் மாலை அனைத்து இணைப்பும் மூடி வைக்கப்படும். அதன் பின் நீங்கள் பதிவு ஏற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் சரி பார்க்க தலைமை அலுவலகத்தி லிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் நீங்கள் பதிவில் ஏற்றிய அனைத்தும் உண்மையா என உங்களது கோப்புக்களையும் சரி பார்ப்பார்கள். அது போல உங்கள் அலுவலகத்தின் அனைத்து பணிகளையும் சோதனை செய்வார்கள்.

         “இவ்வளவுதான் அந்த செய்தி தெரிவித்திருந்தது. யார் வருவார்கள்? எப்பொழுது வருவார்கள் என எதுவுமே குறிப்பிட படவில்லை.

         மேலாளர் பதட்டத்துடன் அனைத்து பணியாளர்களையும் தனது அறைக்கே அழைத்து இந்த ஈ- மெயில் வந்த செய்தியை காண்பித்து நாளையில இருந்து உங்க டேபில்ல இருக்கற எல்லா “பைலையும்” பக்காவா ரெடி பண்ணி வச்சுக்குங்க. அதுக்கு அடுத்த நாள் எல்லா “டீடெயில்சையும்” நாம் அவங்க ஓபன் பண்ணி கொடுக்கற “பார்மேட்டுல” பதிவு பண்ணிடணும். புரியுதா? நாளையில இருந்து ஒருத்தரும் அஞ்சு மணிக்கு கிளம்பறேன்னு சொல்ல கூடாது, இராத்திரியானாலும் அவங்கவங்க பைலை எல்லாம் “கிளியர்” பண்ணிட்டுதான் இங்கிருந்து வீட்டுக்கு கிளம்பணும்.

      நாளைக்கு மறு நாள் “டூர்” போவதற்காக ஏற்கனவே லீவு கேட்டிருந்த அம்சவேணி ஆடிப்போனாள். “ஐயோ லீவு கொடுப்பார்களா? மேலாளர் முன்னாடி எப்படி போய் நின்னு லீவு கேக்கறது? மனதுக்குள் மருண்டாள். அதை விட கிளார்க் கோதண்டம் பதறித்தான் போனார். ஏற்கனவே அவரது மேசையில் இருந்து ஒவ்வொரு கோப்பும் அடுத்த மேசைக்கு போவதற்கே நீண்ட நாள் பிடிக்கும். இந்த லட்சணத்தில் நாளை ஒரு நாளில் அவரது மேசையில் குவிந்து கிடக்கும் கோப்புக்களை எல்லாம் எப்படி பதிவில் ஏற்றுவது?

     எப்பொழுதும் வந்திருக்கும் வருமானத்தை மனதுக்குள் கணக்கு போட்டபடி கலகலப்பாய் அலுவலகத்தை விட்டு கிளம்பி செல்லும் அனைவரின் முகங்களில் வெளியில் சொல்ல முடியாத “கிலி” ஏற்பட்டிருந்தது. அதனால் ஒருவர் முகத்தை ஒருவர் கவலையுடன் பார்த்தபடி அங்கிருந்து ஒவ்வொருவராக கிளம்பினர்.

       “மேலாளர்” மனைவியிடம் அன்று மாலை ‘திரைப்படம்’ ஒன்றிற்கு செல்வதற்காக திட்டமிட்டு மனைவியை வீட்டில் தயாராய் இருக்க சொல்லி சற்று முன்னர்தான் போன் செய்திருந்தார். இந்த செய்தி வந்த பின்னால் எப்படி வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்து கொண்டு ஆசையாய் போய் படம் பார்க்க முடியும்? அதுவும் இரண்டு நாளில் அத்தனை கோப்புக்களை பதிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது..!

       அவருக்கு கீழே இருந்த இரு அதிகாரிகளின் நிலைமையும் சிக்கலாகத்தான் இருந்தது. சார் இப்ப என்ன பண்ணறது? மேலாளரை பார்த்து கேட்டனர். அவர் அது இருக்கட்டும் முதல்ல, என் சம்சாரத்துகிட்ட பேசி சமாதானப்படுத்திட்டு வர்றேன், அருகில் இருந்த பாத்ரூமுக்குள் போனை கையில் எடுத்தபடியே நுழைந்து கொண்டார். காரணம் மனைவியின் ஏச்சு பேச்சுக்களை இந்த இருவரும் கேட்டு விட்டால் நாளை அவர்கள் எப்படி மதிப்பார்கள்?

      இரவு முழுக்க அவர்கள் நாளை என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடுதலிலும், பேசி பேசி பொழுதை ஓட்டியபடி விடியற்காலை இரண்டு மணி வரை உட்கார்ந்திருந்தார்கள். மேலாளர் இதற்கு மேல் வீட்டிற்கு போனால் ஏமாற்றத்தில் இருக்கும் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்னும் பயத்தில் இரவு அங்கேயே படுத்து கொண்டார்.

            அந்த அலுவலகம், அரசு சார்ந்த நிறுவனம், கட்டுமானம் கட்டுவதற்காக வரும் கோப்புக்களை சரி பார்த்து அனுமதி அளிக்கும் அலுவலகம். கிட்டத்தட்ட நிறைய ஏஜண்டுகள், மற்றும் கையூட்டுக்கள் அதிகமாக புழங்கி கொண்டிருக்கும் அலுவலகம் கூட.

      “நன்கு கவனிக்கப்பட்ட” கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு வரும் ‘கோப்புக்கள்’ ஒவ்வொரு மேசையை தாண்டி ‘முயல்’ வேகத்தில் தாவி பறக்கும். “எல்லாம் முடிந்த” பின்னால்தான் கவனிக்கப்படும் என அறிவிக்கும் ‘கோப்புக்கள்’ கூட அதன் பின்னால் செல்லும். “எந்த கவனிப்பும்” இன்றி வந்து குவியும்’ கோப்புக்கள்’ ஏதோ ஒரு ‘சாக்கு வைத்து’ அவரவரவர் மேசைகளில் தஞ்சமடையும். மேற்கொண்டு அங்கிருந்து நகர ‘அந்த கோப்புக்கு’ உரியவர் வந்து பார்த்து அவர்கள் கேட்கும் சந்தேகங்களை தெளிவு படுத்திய பின்னரே அங்கிருந்து அடுத்த மேசைக்கு நகரும். ‘தெளிவு’ என்பதனை இந்த கதை படிக்கும் வாசகர்கள் தங்களுக்குள் தோன்றும் எண்ணங்களை வைத்து பொருத்தி கொள்ளலாம்.

        இவையெல்லாம் விட ‘ஒரு கோப்பு’ ஏதேனும் ‘வில்லங்கமிருந்தால்’ போய் அந்த ‘இடத்தை’ பார்த்து அதன் பின் ‘சரி செய்ய’ வைத்து பின் ‘கோப்பை’ அடுத்த மேசைக்கு அனுப்புவார்கள். அந்த செலவுகள் அனுமதி வேண்டி விண்ணப்பம் கொடுத்திருப்பவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும்.

         அன்று இரவு அந்த அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த பனிரெண்டு பேர் இரவு முழுக்க தூக்கமில்லாமல் இருந்தனர். ஒரே  ஒருவரை தவிர. அவர்தான் அலுவலக உதவியாளர் ஐயப்பன். இவர்கள் அளவுக்கு வருமானத்தை பார்க்கா விட்டாலும் நூறு இருநூறு நாளொன்றுக்கு வந்து விடும். என்றாலும் மற்றவர்களுக்கு செல்லும் தொகையை பார்க்க பார்க்க, மனசு என்னமோ சட்டியில் வெடித்த கடுகு போல பதறும், ஆனாலும் என்ன செய்வது? அவர்கள் மேசையில் உட்கார்ந்து கோப்புக்களை படிப்பவர்கள். இவர் அதை  அங்கும் இங்கும் எடுத்து செல்லும் ஏவலாள்தானே..! அன்று இரவு அவர் மனம் சந்தோசமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, மாட்டினீங்களா?..மனம் கொக்கரிக்க, சந்தோசத்தில் தூக்கம் வராமல் தடுமாறினாலும் கடைசியில் தூங்கித்தான் போனார்.

        மறு நாள் காலை ஏழு மணிக்கு ஆரம்பித்த இவர்களின் கோப்புக்களை சரி பார்க்கும் ஓட்டம், அடுத்த நாள், அதற்கடுத்த நாள், இரவு பனிரெண்டுக்குத்தான் ‘கோப்புக்களாக” அவர்கள் அனுப்பி இருந்த படிவத்தில் பதிவேற்றி முடிக்க முடிந்தது. எப்படியோ ஒரு வேலை முடிந்தது என்னும் நிம்மதியில் அவரவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

        இவர்கள் பதிவேற்றிய மூன்றாம் நாள் திடீரென உள் நுழைந்த இருவர் அதுவும் பெண்கள் தாங்கள்தான் சோதனைக்கு வந்தவர்கள் என அறிவிக்க,அனைவரும் அரண்டு போனார்கள்.

         முதலில் “மேலாளரை” தனியாக உட்கார வைத்து “பதிவேற்றி” வைத்திருந்த அனைத்து “கோப்புக்களை” காட்டி கேள்விகளாக கேட்டு துளைத்து, அவர் களைத்து ஓய்ந்து அடங்கிய பின் அவருக்கு கீழ் இருந்த இரு அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

     இப்படியாக இவர்களிடம் விசாரனை நடந்து கொண்டிருக்க வெளியில் இருந்த மற்ற ஊழியர்கள் பாத்ரூமுக்கும் மேசைக்கும்  போய் வருவதுமாக  இருந்தார்கள்.  இருந்தாலும் ஒருவருக்கொருவர் தான் பயப்படவில்லை என்பதை போல காட்ட சிரிப்பது போல் காட்டி உள்ளுக்குள் இருந்த பயத்தை மறைத்து கொண்டிருந்தனர்.

     ஒவ்வொரு பணியாளராக அழைத்து அவர்களிடம் பதிவேற்றியிருந்த கோப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் காரணம் கேட்டு இதில் உங்களுக்கு பங்கு எவ்வளவு கிடைத்தது? என்று வெளிப்படையாகவே கேட்டு அரள வைத்தனர். அதைவிட ஆச்சர்யம் அவர்கள் தனியாக அலுவலக உதவியாளர் ஐயப்பனிடம் தங்களின் உணவையும் மற்ற தேவைகளையும் சொந்த செலவிலேயே செய்து கொண்டதை பார்க்க, அனைவருக்குமே வேர்த்து விறுவிறுத்து போனது

     இரண்டு நாட்களாக வந்தவர்கள் இவர்கள் அனைவரையும் கேள்வி மேல் கேட்டு அழ வைத்து எப்படியோ இரண்டாவது நாள் இரவு தங்களது சோதனைகளை முடித்தனர்.

     எல்லாம் முடிந்து அவர்கள் கிளம்பும்போது  ‘மேலாளர்’ உள்ளுக்குள் பயத்துடன் வெளியே ‘தைரியசாலி’ போல, காட்டி கொண்டு பயத்துடன் இரண்டு உறைகளை அவர்களிடம் கொடுத்தார். ‘உறையின் கனம் பருமனை’ வைத்து  பெரிய தொகைதான் என தெரிந்தது.

       அவர்கள் இருவரும் அதை ‘கையால் கூட தொடாமல்’ , எதுவும் சொல்லாம லேயே அங்கிருந்து கிளம்பியதை பார்த்து கொண்டிருந்த பணியாளர்கள் “இந்த காலத்துல இப்படியுமா இருக்கறாங்க? எனும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நின்று கொண்டிருந்தனர்.

       மறு நாள் அலுவலகத்தில், “ஆடிட்” செய்வதற்காக  வந்தவர்களின் நேர்மை பற்றி  கேலியும் கிண்டலும் செய்தபடி தங்களுக்கு தோன்றியதை பேசி (கீழ்த்தரமாக) இரசித்து கொண்டிருந்தார்கள் அங்கிருந்த ஆண் பெண் ஊழியர்கள் அனைவரும்.

     சும்மாவா சொன்னார்கள் பழமொழி “தண்ணியே உடம்புக்கு காட்டாதவன் ஊர்ல தலைக்கு குளிச்சுட்டு போனா”

"Straight Policy" is just this thought of people
by Dhamotharan.S   on 24 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தியானம் தியானம்- ஒரு “பத்தி” (பாரா) கதை தியானம் தியானம்- ஒரு “பத்தி” (பாரா) கதை
இறுதி இறுதி
உறவுகளோடு உறவாக உறவுகளோடு உறவாக
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.