|
|||||
"வேர்களைத் தேடி" பண்பாட்டுப் பயணத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் |
|||||
![]() மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான "வேர்களைத் தேடி" பண்பாட்டுப் பயணத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாள்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தொடக்கவிழாவில் கலந்துகொண்டு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்கள், பயணத்தைத் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றி பங்கேற்பாளர்களை வாழ்த்தினார்.
விழாவில் அரங்கேற்றப்பட்ட மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பறையாட்டம் போன்ற பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு நமது பண்பாட்டின் வளமையை முதல் நாளிலேயே பறைசாற்றின.
பின்னர், அனைவரும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நிறைவாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரை சந்தித்த பங்கேற்பாளர்கள், அவர்களோடு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
14 நாடுகளைச் சேர்ந்த 99 தமிழ் நெஞ்சங்களின் தமிழ்நாட்டுப் பயணம் இனிதே தொடங்கியது.
இரண்டாம் நாள்
பல்லவர் தேசமான மாமல்லபுரத்தில் "வேர்களைத் தேடி" பயணத்தின் இரண்டாம் நாள் கலைநயத்துடன் தொடங்கியது. கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐம்பெரும் இரதங்கள் என யுனெஸ்கோ சின்னங்களின் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்த பங்கேற்பாளர்கள், பின்னர் சிற்பங்கள் உயிர்பெறும் கலைக்கூடத்தில் அதன் நுட்பங்களையும் நேரடியாகக் கண்டறிந்தனர்.
இரவில் ஒலித்த பறையிசையின் தாளத்திற்கேற்ப, பல்லவர் காலத்துக் கதைகளை நெஞ்சில் ஏந்தியபடி இரண்டாம் நாள் இனிதே நிறைவடைந்தது.
மூன்றாம் நாள்
காலனித்துவக் காலத்தின் அழகியலைத் தாங்கி நிற்கும் புதுச்சேரியின் பிரெஞ்சு வீதிகளிலும், பாறை கடற்கரையிலும் (Rock Beach) தொடங்கிய "வேர்களைத் தேடி" மூன்றாம் நாள் பயணம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலையாத்திக் காடுகளான பிச்சாவரத்தின் அடர்ந்த பசுமைக்குள் பயணமாகத் தொடர்ந்தது.
ஒருபுறம் பிரெஞ்சு காலனித்துவத்தின் மிச்சங்கள், மறுபுறம் இயற்கையின் பிரம்மாண்டம் என மாறுபட்ட அனுபவங்களைச் சுமந்து, பங்கேற்பாளர்கள் சிதம்பரத்தில் தங்கள் நாளை நிறைவு செய்தனர்.
நான்காம் நாள்
தில்லை நடராஜர் கோயிலில் நடராஜப் பெருமானை தரிசித்து "வேர்களைத் தேடி" பங்கேற்பாளர்கள் தங்கள் நான்காம் நாள் பயணத்தைத் தொடங்கினர்.
கோயில்களில் ஒலிக்கும் மங்கல இசையின் மூலத்தைத் தேடி, நாதஸ்வரம் செய்யும் கலைஞர்களைச் சந்தித்து, பின்னர் கும்பகோணத்தில் நடைபெற்ற தவில்-நாதஸ்வர இசை நிகழ்ச்சியில் மெய்மறந்தனர்.
பிற்காலச் சோழர்களின் சிற்பக் கலைக்குச் சான்றாக விளங்கும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தரிசனத்துடன், கலைகளின் பிறப்பிடமான கும்பகோணத்தில் இந்நாள் நிறைவுற்றது.
ஐந்தாம் நாள்
வேர்களைத்தேடி சோழர்களின் தலைநகரான தஞ்சாவூரில், "வேர்களைத் தேடி" பயணத்தின் ஐந்தாம் நாள் அறிவுப்பூர்வமாகவும் கலைநயத்துடனும் அமைந்தது.
பங்கேற்பாளர்கள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஓலைச்சுவடிகள் பயிலரங்கில் கலந்துகொண்டு தமிழின் தொன்மையான எழுத்து மரபைக் கண்டறிந்தனர்.
பின்னர், மாமன்னன் ராஜராஜனின் ஆயிரமாண்டு காலக் கனவுச் சின்னமான தஞ்சை பெரிய கோயிலின் கட்டடக்கலை பிரம்மாண்டத்திலும், அதன் கம்பீரத்திலும் மூழ்கி வியந்து, சோழ தேசத்தின் பெருமைகளை எடுத்துரைத்த பாரம்பரிய நடன நிகழ்வோடு தங்கள் நாளை நிறைவு செய்தனர்.
|
|||||
by hemavathi on 07 Aug 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|