|
|||||
ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு. |
|||||
தமிழக ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, ராமேஸ்வரம். இந்த இடம் மிகவும் புண்ணியம் வாய்ந்த தளமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் புராணங்களில் ஒன்றான ராமாயணத்துடன் இந்த இடம் தொடர்புடையதாக இருப்பது மேலும் சிறப்பை சேர்க்கிறது.
ராமாயணப் போரில் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை போக்குவதற்காக ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணன் இங்கே சிவலிங்கத்தை நிறுவினார்கள் என்பது புராணம். ராமேஸ்வரம் கோவிலில் மொத்தம் 22 தீர்த்த கிணறுகள் இருக்கின்றன. இவற்றில் குளித்தால் எல்லாப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்.
ராமேஸ்வரத்தில் தங்கச்சிமடம் என்னும் இடத்தில் அமைந்திருப்பது தான் வில்லூண்டி தீர்த்தக்கிணறு.
இந்தக் கிணற்றைப் பார்ப்பதற்காகக் கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை தருகிறார்கள். அதற்கான முக்கிய காரணம், கடலுக்கு மிக அருகே அமைந்திருக்கும் இந்தத் தீர்த்த கிணற்றில் உள்ள தண்ணீரானது சாதாரணமாக நம் வீட்டில் குடிக்கக் கூடிய நன்னீர் போன்றே இருக்குமாம். அதுமட்டுமில்லாமல் சுவையாக இருக்கிறது என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
இது எப்படிச் சாத்தியம்? கடலுக்கு அருகில் உள்ள நீர் உப்புக் கரிக்காமல் சுவையாக இருப்பது எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு குட்டிக் கதை.
தீர்த்த கிணறுகள்
அதாவது ராமாயணத்தில், ராமர் போர் முடிந்த பிறகு சீதையை அழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் வருகிறார். அப்படி வரும்போது சீதைக்கு தாகம் எடுக்கிறது. அதனால் ராமரிடம் குடிக்க நீர் வேண்டும் என்று கேட்கிறார். ராமரோ உடனே தனது வில்லை எடுத்து ஒரு இடத்தில் ஊன்றுகிறார். அவர் வில்லை ஊன்றிய இடத்திலிருந்து நீரூற்று வந்தது. அந்த நீரைக் குடித்து சீதை தனது தாகத்தை போக்கிக்கொண்டார் என்பது வரலாறு. அப்படி ராமர் வில் ஊன்றி பிறந்ததால், இந்த நீரூற்றிற்கு வில்லூண்டி தீர்த்தம் என்று பெயர் வந்தது.
இந்த அதிசயக் கிணற்றைப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தைத் தேடி வருகிறார்கள். தவிர ஆன்மீக ரீதியாகவும் இங்கே பக்தர்கள் வந்து இந்த நன்னீரை வாங்கி சுவைத்துப் பார்த்துவிட்டு அதிசயித்துப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ராமேஸ்வரம் வரும் பொழுது கண்டிப்பாக இந்த அதிசயக் கிணற்றை ஒருமுறை வந்து பார்த்துவிட்டுச் செல்வது சிறந்ததாகும். |
|||||
by Kumar on 07 Apr 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|