|
||||||||
தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர். |
||||||||
கண்களுக்கு விருந்து படைக்கும் நமது தேனி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களுக்குப் பஞ்சமில்லை. அந்த வகையில் தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் அளவற்ற செழிப்பையும், அழகையும் பெற்று, இயற்கை அன்னை தந்த ஒரு வரப் பிரசாதம் தான் தமிழகத்தின் 'குட்டி காஷ்மீர்' என அழைக்கப்படும் போடிமெட்டு மலைவாசஸ்தலம்.
காஷ்மீரை மிஞ்சும் அழகுடன், இதமான வானிலையுடன், குளிர்ந்த காற்றும், இயற்கையின் அளவற்ற செழிப்பும், ஏலக்காய், பழ தோட்டங்களின் நறுமணமும், நீர்வீழ்ச்சிகளின் இனிமையான ஓசை, கொட்டக் குடி ஆற்றின் சுத்தமான தண்ணீரும், உலகின் மிக அழகான சூரிய உதயம், ஜீப் சவாரி, மலையேற்றம் என தன்னைத் தேடி வருபவர்களுக்குப் பல அனுபவங்களைத் தர எண்ணிக்கையற்ற சுற்றுலாத் தலங்களைத் தன்னுள் அடக்கி, நமது தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் 'குட்டி காஷ்மீர்' என அழைக்கப்படும் இந்த அழகிய மலைவாசஸ்தலத்தை பற்றித் தான் இங்கு உங்களுக்குச் சொல்ல இருக்கிறோம்.
தேனி மாவட்டத்தில் போடி மெட்டு:
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும். இது கேரளா மற்றும் தமிழக எல்லைக்கு அருகில் மூணாறு-மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வித்தியாசமான மலைவாசஸ்தலத்திற்கு, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள போடி மெட்டுக்கு சுற்றுலா செல்லுங்கள்.
இந்த அழகிய மலைவாசஸ்தலம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அற்புதமான மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் வழியில் 43 கிமீ தொலைவில் இந்த அமைதியான சிறிய நகரம் அமைந்துள்ளது. போடி என்றழைக்கப்படும் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். அதன் அழகு காரணமாக, இது 'குட்டி காஷ்மீர்' என அழைக்கப்படுகிறது.
இந்த மலைவாசஸ்தலம் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. ஏனெனில் இங்கு அடர்ந்த மரங்கள் நிறைந்த மலைச்சரிவுகள், மூடுபனியில் நனைந்த மலைகள், புத்துணர்ச்சியூட்டும் மலைக் காற்று மற்றும் அழகான இதமான வானிலை ஆகியவை அழகின் இலக்கணமாக உள்ளது.
இப்பகுதி காபி, ஏலக்காய் மற்றும் பல பழங்களின் தோட்டங்களால் மணம் வீசுகிறது. இது தாவரங்கள், பல அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளின் தாயகமாகவும் உள்ளது.
இங்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் நீண்ட தூரம் நடந்து சுற்றுப்புறத்தின் அழகில் திளைக்கலாம். போடி மெட்டுவில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள புலியருவி அருவிக்கும் நீங்கள் பயணம் செய்யலாம். இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். மேலும் குரங்கணி மலையேற்றம், வீரபாண்டி ரிவர் வியூ பாயிண்ட் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்.
அடுத்துச் செல்ல வேண்டிய இடம் போடி தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமான கொழுக்குமலை. இது உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டங்களின் தாயகமாகும். இங்கு விளையும் தேயிலை அதிக உயரத்தில் இருப்பதால் ஒரு சிறப்புச் சுவை மற்றும் புத்துணர்ச்சியைக் கொண்டுள்ளது. கொழுக்குமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,130 அடி (2,170 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு உதயமாகும் சூரியனைக் காணவே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் போடிநாயக்கனூரை தேடி வருகிறது. இந்த சூரிய உதயத்தைக் காணக் கண்கள் இரண்டு போதாது. அவ்வளவு அழகு.
மேலும் போடி மெட்டுக்கு அருகாமையில் தான் கொடைக்கானல் மற்றும் மூணாறு மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்கள் உள்ளன. தேக்கடி, இடுக்கி மற்றும் மறையூர் ஆகிய இடங்களுக்கும் நீங்கள் செல்லலாம். |
||||||||
by Kumar on 27 Mar 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|