LOGO
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Indian Law) Print Friendly and PDF

அதிகரித்து வரும் மது கடைகள் !! சீரழிந்து வரும் இளைய சமுதாயம் !! மதுக்கடைகளை மூட சட்டம் சொல்வது என்ன ?

சட்டம் சொல்வது


அரசியலமைப்புச் சட்டத்தில் 47-வது ஷரத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் நெறிமுறைக் கொள்கையாகக் கூறப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது இன்றுவரை சாத்தியம் ஆகவில்லை. 1937-ல் கொண்டுவரப்பட்ட மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே தமிழகத்தில் அரசாங்கத்தால் மதுக் கடைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக அரசு நடத்தும் நிறுவனம்தான் தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்). தமிழ்நாட்டில் இன்றைக்கு உள்ள 7,434 சில்லறை விற்பனை மதுக் கடைகளும் இந்நிறுவனத்துடையதுதான். கடந்த ஆண்டு மட்டும் அரசுக்கு கலால் வரி மூலம் வருமானம் ரூ. 23,000 கோடிகள் என்கிறார்கள். எனில், எத்தனை போத்தல்களைக் குடிமகன்கள் காலிசெய்திருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.


மருத்துவம் தவிர மற்றவற்றுக்குத் தடை


1937-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி காலத்தில்தான் முதல் முறையாக மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் மதுக் கடைகள் மூடப்பட்டன. 1950-ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவில், மருத்துவக் காரணங்களைத் தவிர, வேறு எக்காரணத்துக்கும் போதையூட்டும் பானங்கள் பருகுவதைத் தடைசெய்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள `டாஸ்மாக்' மதுக் கடைகள் 2003 தமிழ்நாடு சில்லறை (கடை மற்றும் மதுக்கூடம்) விற்பனை விதிகளின்படிதான் இயங்க வேண்டும். 1937 மதுவிலக்குச் சட்டத்தின் கீழ்தான் இவ்விதிகளும் இயற்றப்பட்டுள்ளன என்பது கொடுமை. மதுவிலக்கு அரசாங்கத்தின் நெறியாளும் கொள்கை என்பதனால், மதுக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது போத்தல்களில் `மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்று லேபிள்களை ஒட்டும்படி அவ்விதிகளில் கூறப்பட்டுள்ளது.


விற்கக் கூடாது, ஆனால் குடிக்கலாம்


2003 விதிகளில் விதி எண் 15-ன் கீழ், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வயதினர் மது அருந்துவதைச் சட்டம் தடை செய்யவில்லை. ஆனால், நடைமுறையில் இக்கடைகள் தங்களது தாராள குணத்தின் மூலம் பள்ளி மாணவர்கள்கூட மதுபோதைக்கு ஆளாகும் வகையில் விற்கின்றன.


காவல் துறையின் புதிய பொறுப்பு


மதுக் கடைகளிலும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுக் கூடங்களிலும் மூக்குமுட்டக் குடித்துவிட்டுக் குடிமகன்கள் போடும் கும்மாளங்களுக்கு அளவில்லை. குடித்துவிட்ட போத்தல்களையும் பிளாஸ்டிக் கோப்பைகளையும் மிஞ்சிப்போன பதார்த்தங்களையும் வீதியிலே வீசிவிட்டுச் செல்வதும், மிதமிஞ்சிய போதையில் சாலையிலேயே வாந்தி எடுத்துச் சரிவதும் அடிக்கடி நடக்கும் தகராறுகளும்... இவற்றைப் பற்றி மக்கள் என்ன புகார் கூறினாலும், காவல் துறை கண்டுகொள்வதில்லை. ஏன்? அந்தக் கடைகளை வருமானம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் புதிய பொறுப்பு காவல் துறைக்குக் கொடுக்கப்பட்டிருப்பதே இதன் காரணம்.


எப்படிச் சாத்தியமாகிறது?


ஆனாலும், மக்கள் போராட்டத்தால், அங்கும் இங்குமாக ஓரிரு கடைகள் இடம் மாற்றப்படும், மூடப்படும் செய்திகளை நாம் பார்க்க முடிகிறது. எப்படிச் சாத்தியமாகிறது இது?


மதுக் கடைகளை எங்கே வைக்கலாம் என்று முடிவு செய்வது மாவட்ட ஆட்சியர். 2003-ல் மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) விதிகள், கடைகளை எவ்விடத்தில் வைப்பது என்பதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி மதுக் கடைகள், வழிபாட்டுத் தலங்களிடமிருந்தும் கல்வி நிலையங்களிடமிருந்தும் குறிப்பிட்ட தூரத்துக்கு வெளியே வைக்கப்பட வேண்டும் என்றும் கடைகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 மீட்டருக்கு வெளியேயும் மற்ற பகுதிகளில் 100 மீட்டருக்கு வெளியேயும் வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், வணிகப் பகுதிகளுக்கு இவ்விதிகள் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.


இவ்விதிகளில் உள்ள கல்வி நிறுவனம் என்பது அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். மதுக் கடைகள், அக்கல்வி நிலையங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட தூரத்தில் இருந்தால், அவற்றை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கலாம். அம்மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.


பொதுஇடங்களில் சட்ட விரோதத் தடைகளோ அல்லது தொந்தரவுகளோ ஏற்பட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மாவட்டக் குற்றவியல் நடுவர், அப்படிப்பட்ட தொந்தரவுகளை நீக்க உத்தரவிடலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளது. இதில் வேதனை என்னவென்றால், மதுக் கடை வைக்க உத்தரவு கொடுப்பவரும் மாவட்ட ஆட்சியரே. தொந்தரவுகளை அகற்ற பிரிவு 133-ன் கீழ் உத்தரவிடும் மாவட்ட நடுவரும் மாவட்ட ஆட்சியரே. எனவே, அவர் அந்தத் தொந்தரவுகளை அகற்ற உத்தரவிடும்வரை காத்திராமல், உயர் நீதிமன்றமே, பொதுமக்களுக்குத் தொந்தரவு அளிக்கும் கடைகளை அகற்ற உத்தரவிட அதிகாரம் உள்ளது.


நெடுஞ்சாலையில் மதுக் கடைகள்


மதுக் கடைகளை வைப்பதனால் தொடர்ந்து சாலை விபத்துகள் நடந்துவருவதனால் நெடுஞ்சாலைகளை ஒட்டி அக்கடைகளை வைப்பது உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான தடையை, பாலு என்றவர் தொடர்ந்த பொதுநல வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அவ்வாறான கடைகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்ற உத்தரவிடப்பட்டது. அதையும் மீறி நெடுஞ்சாலையை ஒட்டி ஏதேனும் மதுக் கடைகள் இருந்தாலோ (அ) அமைக்க முற்பட்டாலோ அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நிவாரணம் கேட்கலாம். இங்கு நெடுஞ்சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை மட்டுமல்ல, மாநில நெடுஞ்சாலைகளையும் இவ்வரையறைக்குள் கொண்டுவரலாம்.


சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், “உள்ளாட்சி அமைப்புகள் மதுக் கடைகள் அமைப்பதுகுறித்து எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கு மாவட்ட ஆட்சியர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் உள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி, சம்பந்தப்பட்ட ஊராட்சி (அ) பேரூராட்சி உறுப்பினர்களை அணுகி, அவர்கள் மூலம் அம்மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.


தங்கள் பகுதியில் உள்ள, சமூகப் பிரச்சினைகளில் ஆர்வமுள்ள வழக்கறிஞர்களை அணுகி வழக்கு போடலாம். இல்லாவிட்டாலும், பொதுநலன் கருதிய வழக்குகள் போடுவதற்குச் சமூக ஆர்வம் கொண்ட வழக்கறிஞர்கள் உண்டு. அவர்களை அணுகி வழக்கு போடவைக்கலாம். தவிர, உயர் நீதிமன்றத்தின் இரு அமர்வுகளிலும் சட்ட உதவிக் குழு செயல்படுகிறது. அக்குழுவை அணுகித் தங்களது வழக்கைப் போடும்படி கேட்டுக்கொண்டால், வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து வழக்குக்கான செலவையும் வழக்கறிஞர் கட்டணத்தையும் அக்குழுவே ஏற்றுக்கொள்ளும். இலவச சட்ட உதவி பெறும் நபருக்கு வருமானத் தகுதி இருக்கிறதா என்பதற்கான விதிகள் உண்டு. ஆனால், பெண்களுக்கும் பட்டியல் இனத்தவருக்கும் அப்படிப்பட்ட வருமான வரையறை இல்லை.


சாட்சியங்களைத் தக்க வகையில் ஆவணப்படுத்தி, மனுக்களை உரிய அதிகாரிகளிடம் அனுப்பிய பின், வக்கீல்களை அணுகி முறையான உயர் நீதிமன்ற அமர்வுகளில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்து, சட்டப்படி மதுக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தலாம்.

by Swathi   on 22 May 2014  6 Comments
Tags: Close Tasmac   How to Close Tasmac   Tasmac Law   Mathu Bana Kadai   மது கடை   மது கடைகளை அகற்ற   மது கடையை ஒழிக்க  
 தொடர்புடையவை-Related Articles
அதிகரித்து வரும் மது கடைகள் !! சீரழிந்து வரும் இளைய சமுதாயம் !! மதுக்கடைகளை மூட சட்டம் சொல்வது என்ன ? அதிகரித்து வரும் மது கடைகள் !! சீரழிந்து வரும் இளைய சமுதாயம் !! மதுக்கடைகளை மூட சட்டம் சொல்வது என்ன ?
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 154 கோடி ரூபாய்க்கு மது விற்பனை !! தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 154 கோடி ரூபாய்க்கு மது விற்பனை !!
கருத்துகள்
12-Nov-2018 14:07:20 வீரமணி.மா said : Report Abuse
எனக்கு ஒரு சராசரி மனிதனின் அடிப்படை சட்ட உரிமைகளை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது. யாராவது எனக்கு உதவ முடியுமா...?
 
16-Jul-2018 12:47:43 ஷண்முகப்ரியா said : Report Abuse
மது கடைகளை மூட நிரந்தரமான வழி எதுவும் இருக்கிறதா. சட்ட படி இதை மூட இன்னும் வேறேனும் வழி இருக்கிறதா. நான் இளைய தலை முறையை சேர்ந்தவள். என் அப்பாவும் என்னை சுற்றி உள்ளவர்களும் இதனால் சீரழிந்துள்ளனர். எனக்கு சட்டம் படிக்க ஆசை. ஏதோ ஒரு காரணத்தால் இன்ஜினியரிங் படித்துவிட்டேன். எனக்கு மற்றம் தேவை. அடுத்தவர்களால் வருமா என தெரியவில்லை அந்த மாற்றம், ஆனால் என்ன மாற வேண்டும். நான் மாற்ற வேண்டும். ஏதேனும் வழி முறை இருந்தால் யாரேனும் கூறுங்கள். எங்கள் தலை முறையை காப்பாற்ற . நன்றியுடன் சண்முகப்ரியா தங்கமணி.
 
30-Aug-2017 17:50:08 ஜெகன்நாத் said : Report Abuse
எனக்கு தோன்றிய யோசனை:: இப்போது ஆதார் கார்டு என்பது அவசியம் .. ஒரு 21( குறிப்பிட்ட) வயது ஆண் ஆதார் கார்டிற்கு மாதம் இவ்வளவு தான் மது என்று கூறினால்.. வரியும் முழுமையாக குறையாது ..... இறப்பும் அதிகமாக நடக்காது....
 
30-Aug-2017 17:38:53 ஜெகன்நாத் said : Report Abuse
மதுவினால் வரும் வரி பணம் அதிகமே. அந்த பணத்தினால் நாடு ஒன்றும் மாறவில்லை . மாறியது என்னமோ சில குடும்பங்கள் சுடுகாடாக..
 
29-Sep-2016 01:14:52 vinoth said : Report Abuse
மக்கள் அதிகாரம் என்ற அமைப்போடு இணைந்து செயல் பட்டால் இனி டாஸ்மாக் கடை கிடையாது
 
18-Jul-2014 04:03:55 ராமமூர்த்தி said : Report Abuse
நல்ல தகவல்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.