|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42 |
||||||||
![]() கொட்டாவி என்பது காற்றினை வாய் வழியாக உள்ளே இழுத்து வாய் வழியாகவே வெளித்தள்ளும் ஒரு தானியக்கச் (involuntary) செயலாகும். அதிக சோர்வு, தூக்கம், மன அழுத்தம், அதிக பசி போன்றவை ஏற்படும் சமயங்களில் கொட்டாவி ஏற்படுகிறது. மனதிற்கு விருப்பமில்லா செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதும் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியாது.
கொட்டாவி விடும் போது தாடைகள் முழுமையாக விலகி கண்கள் மூடப்பட்டு செவிப்பறை நீட்சி அடைந்து காற்று உள்ளே சென்று வெளிப்படும்; இந்த செயல் 6 விநாடிகள் வரை நீடிக்கும். பல ஆய்வுகள் இரத்தத்தில் கரியமில வாயுவின் (Carbon – di – oxide) அளவு அதிகமாகி உயிர் வாயு (Oxygen) குறைவதை கொட்டாவி வருவதற்கு காரணமாக கூறுகின்றன. கொட்டாவி விடுவதால் அதிக அளவு உயிர் காற்று உடலுக்குக் கிடைக்கிறது. அதே போன்று கரியமில வாயு வேகமாக வெளியாகிறது. இது சாதாரண மூச்சுக் காற்று இயக்கத்தின் போது (சுவாசத்தின் போது) நிகழ்வதை விட வேகமாகவும் அதிகமாகவும் நிகழும்.
கொட்டாவி நிகழும் போது நாக்கும், தொண்டை தசைகளும், பேச்சுத் தசைகளும் மூச்சு விட பயன்படும் தசைகளும், விழுங்குவதற்க்குரிய தசைகளும் நீட்சியடைந்து இயல்பு நிலைக்கு வருகின்றன. இதனால் அந்தத் தசைகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைத்து புத்துணர்ச்சி அடைகின்றன. கொட்டாவி விடுவதால் நுரையீரல் விரிவடைந்து இதயத் துடிப்பு அதிகமாகி உடல் புத்துணர்ச்சி அடைகிறது. உறக்க நிலையிலிருந்து விழிப்பு நிலை ஏற்படுகின்றது. கொட்டாவி விட்டவுடன் செய்யப்படும் சோம்பல் முறிப்பும் (உடலைத் திருகுதல்) மற்ற உடல் தசைகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். கொட்டாவி விடுவதால் மூளையுடைய இயல்பான சூடு பாதுகாக்கப் படுகிறது. அதோடு உடலின் முழுமையான வெப்பநிலை சீர்படுத்தப் படுகிறது. கொட்டாவி விடுவதால் கபாலத்தின் உள்ளிடம் (Cranial space) விரிவுபடுவதே இதற்கு காரணம். மூளையில் ஏற்படக் கூடிய நரம்பு வேதிப் பொருட்களில் (Neuro transmitters) ஏற்ற இறக்கங்களையும் கொட்டாவி சீர்படுத்து கின்றது.
இந்த நரம்பு வேதிப் பொருட்களின் ஏற்ற இறக்கங்கள் மனதின் செயல்பாடுகளை பாதிக்கும். கவலை காரணமாகவும் உடல் சோர்வு காரணமாகவும் ஏற்படக் கூடிய மனத் தடுமாற்றங்களை கொட்டாவி உடனடியாக சரி செய்கிறது. உடல் சோர்வாகும் போது பிராணவாயுவின் அளவைக் கூட்டி மூளையின் செயல்பாடுகளை இயல்பாக்கி மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுப்பது வெப்பக் காலங்களில் (Summer) கொட்டாவி விடும் போது மூளையின் வெப்ப நிலை குறைகின்றது. இதனால் குளிர்காலத்தை விட வெப்ப காலங்களில் நமக்கு அதிகமாக கொட்டாவி வருகின்றது. எனவே கொட்டாவி வரும் போது அதனை அடக்கக் கூடாது என பன்னெடுங் காலத்திற்கு முன்பே சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
“ கொட்டாவி தனைய டக்கின்
குறுகிடு முகம்பல் லிக்கை
திட்டமாம்; அன்னந் தானும்
செரித்திடா; மேகந் தங்கும்;
வெட்டையிற் பிரமை காட்டி
மேவுந்தும் மற்கு ணங்கள்
அட்டியே யில்லா நோவாம்
அகந்தனக் கிடம தாமே”
இந்தப் பாடல் கொட்டாவியை அடக்கினால் ஏற்படும் துன்பங்களை பட்டியிலிடுகின்றன. கொட்டாவியை அடக்கினால் முகம் வாடும், இளைப்பு குறி உண்டாகும், அளவுப்படி உண்கிற உணவும் செரிக்காது, நீர் நோய் உண்டாகும், அறிவு மங்கல், வயிற்று வலி முதலியவை உண்டாகும்.
கொட்டாவி வரும்போது அதனைத் தடுக்காமல் விடுவதால் மேற்கண்ட நோய்கள் வருவது தடுக்கப்படுவதோடு பல நன்மைகள் உடலுக்குக் கிடைக்கின்றன. |
||||||||
by Swathi on 29 Jun 2015 1 Comments | ||||||||
Tags: kottavi சித்த மருத்துவம் Siddha Maruthuvam கொட்டாவி கொட்டாவியை அடக்கினால் | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|