|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 |
||||||||
![]() உடற்பயிற்சி என்பது கட்டுக்கோப்பான உடலினையும் நல வாழ்வினையும் கொடுக்கக் கூடியது.
நடத்தல், ஓடுதல், நீந்துதல், மிதிவண்டி ஓட்டுதல், நடனமாடுதல், தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்றுதல், படிகள் ஏறி இறங்குதல் இவை எல்லாமே பயிற்சிகள்தான். முன்பு காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடற்பயிற்சிகள் என்று தனியே தேவைப்படவில்லை. ஏர்பிடித்தல், ஏற்றம், உழவுத் தொழில்கள் செய்தல் போன்றவை ஆண்களுக்கு உடற்பயிற்சிகளாக இருந்தன. கிணற்றிலிருந்து நீர் எடுத்தல், நீருடன் குடத்தினை நெடுந்தூரம் எடுத்துச் செல்லல், மாவு அரைத்தல், இடித்தல் போன்றவை பெண்களுக்கு உடற்பயிற்சிகளாக இருந்தன. அக்காலத்தில் பொழுது போக்குகளாக இருந்த பாண்டி ஆட்டம் (ஒரு காலினால் துள்ளித்துள்ளி செல்லல்), கயிறு தாண்டல் (Skipping) போன்றவை உடலிற்கும் மனதிற்குமான பயிற்சிகளாக இருந்தன.
இயந்திரங்களின் பயன்பாடு அதிகமானவுடன் மக்களின் உடல் உழைப்பு குறைந்து விட்டது. தொலைக்காட்சியும் கணிணியும் பொழுது போக்குப் பொருட்களான பின்பு உடற்பயிற்சி வெகுவாக குறைத்து விட்டது.
தற்காலத்தில் இதய நோய்கள், உடல் பருமன், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற தொற்றாத நோய்கள் (Non communicable diseases) அதிகமாகப் பரவியதற்கு உடல் உழைப்பு குன்றியதே முக்கியக் காரணமாகும்.
உடற்பயிற்சியானது இதயம் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்குப் போதுமான இரத்த ஓட்டத்தைச் செலுத்தும். எலும்பு, தசை, மூட்டுக்களுக்கு வலுவூட்டி உடல் நன்னிலையில் இயங்க வழிவகுக்கும்.
முறையான உடற்பயிற்சி என்பது
1. உடலிற்கு மட்டுமல்லாது மனதிற்கும் ஆன்மாவிற்கும் நன்மையுண்டாக்கும். காற்றோட்டமான வெட்டவெளியில் பயிற்சி செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
2. புத்திக் கூர்மையை ஏற்படுத்தும். புதிய சிந்தனைகளைத் தூண்டும்.
3. ஐம் பொறிகளின் (மெய், வாய், கண், மூக்கு, செவி) செயல்களை கூர்மைப்படுத்தும்.
உடற்பயிற்சியின் சில முக்கிய நன்மைகள்
இதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் (Heart and Blood vessels)
உடற்பயிற்சி மாரடைப்பு (Heart attack – Ischemic Heart diseases) ஏற்படுவதைத் தடுக்கும். இதயத்தின் இரத்த ஓட்டம் அதிகமாவது உடலின் பல உறுப்புகளுக்கு நன்மைகளை உண்டாக்கும்.
முறையாகச் செய்யப்படும் பயிற்சியால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுவது பல ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியால் இரத்தக் கொதிப்பு (Hypertension) நோயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். இரத்தக் குழாய்களின் சுருங்கிவிரியும் தன்மை பாதுகாக்கப்படும். இதனால் இரத்தக் குழாய் தடிப்பு (Arteriosclerosis – Thickening and Hardening of Artery and Loss of Elasticity of artery Walls) தடுக்கப்படுகின்றது. இரத்தக் குழாய் தடிப்பே உடல் உறுப்புகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காமல் போவதற்குக் காரணம்.
எலும்புகள் மற்றும் மூட்டுக்கள்
உடற்பயிற்சிகள் எலும்புகளின் கட்டுமானத்தைப் பாதுகாக்கும். எலும்பின் வன்மைக் குறைவு நோய் (Osteoporosis) தற்காலத்தில் அதிகமாவதற்கு உடற்பயிற்சி இல்லாமையே முக்கியக் காரணமாக உள்ளது. வலிமையான எலும்பு மொத்த உடல் உறுதியினைக் காப்பாற்றும்.
மிதமாகச் செய்யப்படும் நடைபயிற்சி, நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் (Cycling), போன்றவற்றால் மூட்டுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் மூட்டுவலி, வாதநோய்கள் வராமல் தடுக்கப்படும். சில விதமான மூட்டு நோய்கள் இருக்கும் போது செய்யப்படும் பயிற்சிகள் நோயின் தாக்கத்தை குறைக்கும். குறிப்பாக கழுத்து மற்றும் இடுப்பு வலிகள் முறையான பயிற்சிகளால் நீங்குகின்றன.
நோய் எதிர்ப்பாற்றல் (Immune System)
மிதமான உடற்பயிற்சி எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதாகப் பல இக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதிர்ப்பாற்றலுக்குக் காரணமான செல்கள் (White cells, Natural killer cells) அதிகமாவதோடு அவற்றின் ஆற்றலும் மேம்படுவதே இதற்குக் காரணம்.
மூளைச் செயல்பாடு
உடற்பயிற்சி நரம்பு செல்களைப் பாதுகாக்கின்றது. மூளை செயல்பாடு மேம்படவும் தெளிவான அறிவு உண்டாகவும் உடற்பயிற்சி செய்தல் அவசியம். இளமையில் செய்யப்படும் பயிற்சிகள் முதுமையில் வரும் நினைவாற்றல் குறைவு நோயினைத் தடுக்கும் (Prevents Dementia – Memory Loss).
காற்றோட்டமான இடத்தில் செய்யக் கூடிய பயிற்சிகள் ஒருவருடைய கற்கும் திறனையும் நுண்ணிய அறிவையும் மேம்படுத்தும்.
மூளையின் நரம்பு வேதிப் பொருட்களின் (Neurotransmitters) செயல்பாடுகளைச் சீராக்கும்.
உடலின் மற்ற உறுப்புகளின் செயல்களோடு மூளை ஒத்து இயங்கி ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு உதவும்.
மன ஆற்றல்
உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும். முறையான உடற்பயிற்சியினால் மனதின் செயல்பாடுகளைச் சீராக்கும் பல உடல் இயங்கியல் நிகழ்வுகள் நடப்பதாக இக்கால ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. குறிப்பாக மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு வேதிப் பொருட்கள் உற்பத்திக்கு உடற்பயிற்சி காரணமாக உள்ளது (Bio-synthesis of endo cannabilloids, Endorphins, Amphetamine). இதனால் நீண்ட ஆயுளும் மகிழ்வான மனமும் கிடைக்கும்.
உறக்கம்
இயல்பான ஆழ்ந்த உறக்கத்திற்கு உடற்பயிற்சி காரணமாக உள்ளது. உறக்கமின்மைக்காக பயன்படுத்தப்படும் பல இக்கால மருந்துகளை விட உடற்பயிற்சி சிறந்தது.
இரவு உணவிற்குப் பின்பாக மெதுவாக நடக்க வேண்டும் எனச் சித்தர் பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது. இதனால் ஏற்படக் கூடிய உடல் இயக்கம் உறக்கத்திற்கு மட்டுமல்லாது போதுமான உடல் நலத்திற்கும் உதவும்.
இவை தவிர பல நோய்கள் உடலைத் தாக்காதவாறு தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.
சில விதமான நோய்கள் குறிப்பாகப் புற்று நோய்கள் வந்த பின்பு செய்யப்படும் பயிற்சிகள் நோயர்களின் வாழ்நாளினை நீட்டிக்கச் செய்யும். அவர்களுக்கு நலமான வாழ்வினை வழங்கும். பல நோய்களில் ஏற்படக் கூடிய உடல் மெலிவினை (Atrophic effects of many diseases) உடற்பயிற்சி தடுக்கும்.
இருந்த போதிலும் அளவிற்கு அதிகமான உடற்பயிற்சியால் சில தீமைகள் உண்டாகும். வயதிற்கு ஏற்ப எந்த அளவிற்கு உடற்பயிற்சி தேவை என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம். |
||||||||
|
||||||||
by Swathi on 31 Aug 2015 0 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam Exercise Benefits Tamil நலம் காக்கும் சித்த மருத்துவம் சித்த மருத்துவம் உடற்பயிற்சி உடற்பயிற்சி என்பது | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|