LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF

நான் வாசித்த கடல் கொண்ட காவியம்

நான் வாசித்த கடல் கொண்ட காவியம்

 

      ஆசிரியர் குறிப்பு திருமதி மலர்விழி எம்.ஏ,எம்.எட், முதன்மை கல்வி அலுவலகத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கம் இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் கண்காளிப்பாளராக பணி புரிந்து வருகிறார். தமிழார்வம் மிக்கவர். இவருடைய கடல் கொண்ட காவியம் 33 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.

           நான் வாசித்த "கடல் கொண்ட காவியம்" இரா.மலர்விழி அவர்களால் எழுதப்பட்ட சரித்திர நாவல். இதனை பற்றிய எனது பார்வைகளுக்கு போகு முன் இந்த நாவலுக்கு முன்னுரை வழங்கியிருந்த கவிஞர் பாடலாசிரியர் வாலி அவர்களின் குறிப்புகளிலிருந்து சில

      அந்த வகையிலே திருமதி இரா.மலர்விழி அவர்கள் சரித்திர நாவலை புனைந்த முதல் பெண் எழுத்தாளர்.

      வாசிக்கும் போதே வாசகனையும் கூடவே அழைத்து செல்வதுதான் நல்ல நாவலுக்கு உள்ள தகுதி. அந்த தகுதி மலர்விழியிடம் மிகுதியாகவே இருக்கிறது.

     பேராசிரியர் முனைவர் டி.தியாகராசன் பூம்புகார் கல்லூரி, இவரின் அணிந்துரையில் இருந்து சில வரிகள்:

    பூம்புகார், உறையூர்,கொற்கை,வஞ்சி, முசிறி,இலங்கை,யவனம், சோனகம், என்று வணிகர் இனக் கதையின் களங்கள் நீண்டுள்ளன.

    இரண்டாயிரம் ஆண்டு சிலப்பதிகாரத்திற்கும் பின்னனியில் சேரர், சோழர்,பாண்டியர் வரலாற்று பின்னனியில் உள்ளது.

    சங்க கால, சங்க மருவிய கால அரசியல்-சமூக வரலாற்று பின்புலங்கள், வரலாற்று பின்புலங்கள்-உரிய புனைவு திறன்கள திருமதி மலர்விழி கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.

   சிலப்பதிகாரத்தில் மாதவியின் ஆடற்கலை அதிகமாக பேசப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதினத்தில் மாதவியின் தாயார் சித்திராபதியின் ஆட்டமே அதிகமாக பேசப்பட்டுள்ளது.

   இந்த புதினத்தில் கோவலன், கண்ணகி,சாதாரண பாத்திரங்களாக வந்து போகிறார்கள். அது போல மதுரையை எரிக்காத கண்ணகி, கானல்வரி பாடாத மாதவி, சிலப்பதிகாரத்தை எழுதாத இளாங்கோவடிகள் இவர்களை மிக சாதாரணமாக இந்த புதினத்தில் காணலாம்.

 

எனது பார்வையில்

   வாசகர்களுக்கு (நான் உட்பட) பூம்புகார் என்பது சங்க காலத்தில் ஒரு வணிக துறைமுகம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சிலப்பதிகாரத்தை படித்தவர்களுக்கு அதைப்பற்றிய ஞானமும் அறிவும் நிரம்பவுமே இருக்கும்.

    ஆனால் என்னைப்போன்ற வாசகர்களுக்கு சிலப்பதிகாரம் தோன்றுவதற்கு முன்,  அதாவது கண்ணகியும், கோவலனும் சிறுவர்களாய் இருந்த பொழுது கோவலன் கண்ணகியை திருமணம் செய்து கொள்கிறான்.

    மூன்று இணைபிரியாத நண்பர்களாய் இருந்த செங்கண்ணன், கோவலன், வழுவாமொழி    

       இவர்களில் வழுவாமொழி கண்ணகிக்கு முறை மாப்பிள்ளையாகவும், அவளை திருமணம் செய்ய விருப்பமுடையவனாக இருந்தும் நண்பன் கோவலன் கண்ணகியை விரும்புகிறான் என்று தெரிந்து கோவலனுக்கு விட்டு கொடுத்து விடுகிறான்.  

           அடுத்து படத்தின் மூலம் பூம்புகாருக்கும், முசிறி, கொற்கை,குமரி போன்ற துறைமுகங்களுக்கு அந்நிய நாட்டு வணிகர்கள் கப்பலில் வந்து சென்றிருப்பார்கள் என்பதையும் இந்த புதினத்தில் விளக்கியிருக்கிறார்.(அப்படியானால் போர்த்துகீசியர்கள், பிரஞ்சுகாரர்கள்,பிரிட்டன்வாசிகள், போன்றோர்தான் முதன் முதலில் இந்தியாவிற்கு வணிகம் செய்து வந்தவர்கள் என்பது அடிபட்டு போகிறது.

   ரோபாபுரி, கிரீஸ் (யவனம்) ஏதென்ஸ்,அலெக்ஷ் பட்டணம், பாக்தாத், ஈரான், சோனகம், செங்கல் மேலும் பல நாடுகளை சேர்ந்த வணிகர்கள் மிக சாதாரணமாக கடல்வழியாக வந்து வியாபாரம் செய்து சென்றிருக்கிறார்கள். இங்கிருந்தும் சாதாரண பயணமாக சென்று வந்திருக்கிறார்கள்.

   இதற்காக இவர்கள் கடல்பயணத்துக்கு உகந்ததாக பருவக் காற்றுகளை நம்பி இருக்கிறார்கள்.உதாரணமாக வடகிழக்கு பருவக்காற்று வீசும் போது மெற்கு நோக்கி பயணம் கிளம்புவார்கள்.

 

அடுத்ததாக கரிகால் வளவனின் சந்ததிகளையும், அவர்களால் நடந்த போரை பற்றிய களமே இந்த புதினத்தின் மூலம்.

 

                    கரிகாற் சோழன்(இரு மகன்கள்)

 

பெருநற்கிள்ளி                                       மனக்கிள்ளி

 

நலங்கிள்ளி                        நற்சோனை (மகள்)      நெடுங்கிள்ளி (மகன்)

 

சேட் சென்னி அவனது சகோதரர்கள்   சேரன் செங்குட்டுவன்   பெருநற்கிள்ளி

                                      இளங்கோ

     இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்களாய் வருபவர்கள் கீழ்க்கண்டவர்கள். அதில் இளங்கோ செங்குட்டுவனுக்கு வழி விட்டு துறவறம் பூண்டுவிட்டவர்.

 

சேரன் செங்குட்டுவனின் தாய் வழி உறவு :

 

இமயவர்மன் நெடுஞ்சேரலாதனும் அவன் மனைவி நற்சோனைக்கு பிறந்தவனே சேரன் செங்குட்டுவன். ஆகவே அவன் பெருநற்கிள்ளிக்கு அத்தை புதல்வர்.

 இந்த காரணத்தால் சோழ நாட்டை ஆண்டு வந்த பெருநற்கிள்ளிக்கு சேரன் செங்குட்டுவன் உதவி செய்து பெருநற்கிள்ளியின் தாயாதிகள் (பங்காளிகள்) சேட் சென்னி, மற்றும் அவனது சகோதரகளுடனான போருக்கு உதவி செய்கிறான். இதற்கும் சேட்சென்னியும் அவனது சகோதரர்களும் உறையூரை நிர்வாகம் செய்து வந்து கொண்டிருந்தார்கள். தாங்கள் பெருநற்கிள்ளியால் வஞ்சிக்கப்பட்டு வெறும் நிர்வாகமே மட்டும் பார்க்க வைப்பதாக கருதி உறையூரை வலுப்படுத்தி புகாரிடம் போருக்கு அழைக்கிறார்கள்.

      இதனுடைய மூலம் கரிகாற்சோழனால் ஏற்பட்டது. அவர் மன்னராய் இருக்கும் போது உறையூர் தலை நகரகமாய் இருந்தது, நிர்வாக வசதிக்காக உறையூரை புகாருக்கு மாற்றினார். அதிலிருந்து மன்னரின் அரசாட்சி புகாரிலிருந்துதான் நடந்தது. உறையூரை சேட் சென்னியும் அவனது சகோதரர்களும் கவனித்து வந்தனர். அவர்கள் எப்படியாவது சோழநாட்டுக்கு மன்னனாக வர முயற்சித்தார்கள். அவர்களுக்கு பெரும் தடங்கலாய் இருந்தது சேரன் செங்குட்டுவனின் (தாய் மாமனாக) பெருநற்கிள்ளிக்கு உதவியாக இருந்ததுதான்.

    இதற்கு இணையாக பொன்னம்பலனாதர்,அவர்து மனைவி அவரது புதல்வன் வழுவாமொழி மற்றும் இரு புதல்விகள், செங்கண்ணன் என்னும் கதாபாத்திரம் கதை முழுக்க மன்னரின் நம்பிக்கைக்கு உரிய ஒற்றனாகவும், பொன்னம்பல நாதரின் புதல்விக்கு மணாளனாகவும் வருகிறான். அதைவிட வழுவாமொழிக்கும், கோவலனுக்கும், மற்றும் வண்ணமுத்து என்னும் நண்பன் பரதவ குலம் (மீனவர்) உற்ற நண்பனாகவும் இருக்கிறான். வண்ணமுத்துவின் தங்கை சங்கினியை வழுவாமொழி விரும்புகிறான். அவன் கோவலனுக்காக கண்ணகியை விட்டு கொடுத்து மனம் சோர்ந்து காணப்படும் பொழுது சங்கினியின் அன்பும் பாசமும் அவள் மீது அன்பு கொள்ள வைக்கிறது.

     இப்படி இந்த கதை மன்னர்களுக்குள் நடைபெற்ற நிகழ்வுகளுக்குள் புகுந்து நம் எண்ணங்களுடன் சங்க கால நிகழ்ச்சிகளுடன் பயணிக்கிறது.

கதைக்குள் நுழைவோம்.

 

     வழுவாமொழி கூலவாணிகரிடம் ஐயா உங்களுடன் நானும் சேர நாடு வந்து இளங்கோவடிகளை காண விரும்புகிறேன்.

      இப்பொழுது உன்னை அழைத்து செல்ல முடியாது வழுவா, காரணம் அவரை பார்க்க ஏராளமான புலவர்கள் வந்து போவார்கள். அப்படி போய் வருபவர்களை அவரால் நினைவு கொள்ள முடியாது, அப்படி அவரை சந்திக்க விரும்பினால் நீயும் ஏதாவது சாதிக்க முயற்சி செய், அதன் பிறகு அவரை சந்திக்க உன்னை கூட்டி செல்கிறேன்.

    உண்மைதான் ஐயா ஒத்துகொள்கிரேன் தலையசைத்தான் வழுவா மொழி. உடனிருந்த செங்கண்ணன் ஐயா என் நண்பனின் மனதில் நல்ல்தொரு வித்தை ஊன்றியுள்ளீர்கள், கண்டிப்பாய் ஏதாவது சாதித்து இளங்கோவடிகளை சந்திக்க உங்களுடன் வருவான் என்றான்.

   சிறிது மெளனம், அது சரி கோவலனை எங்கே பார்க்க முடியவில்லை, திருமணம் ஆனபின்னால் அவனை சந்திக்கவே முடியவில்லை. நீங்கள் மூவரும்தானே ஒன்றாய் இருப்பீர்கள்?

இரண்டு நாட்களுக்கு முன் அவரை மருவூர்பாக்கத்தில் சந்தித்தேன்.அதன் பிறகு சந்திக்க முடியவில்லை.

அவன் திருமணத்தில் உங்களுக்கு சந்தோஷம்தானே?

இந்த கேள்வி வழுவாமொழியின் முகத்தை இருளடைய செய்தது.

      வழுவாமொழி அவன் தந்தையாரின் பெரிய பெரிய மரக்கலங்கள், நின்று கொண்டிருக்க, அதிலிருந்து பணியாளர்கள்  அரிசி மூட்டை மூட்டைகளாக கலத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். வழுவாமொழி அதனை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தான். பண்டப்பொதிகள் முழுவதும் ஏற்றப்பட்டபிறகு கணக்கர் பண்டங்களின் விபரம், மதிப்பு இவைகளை ஓலையில் எழுதி வழுவாமொழியிடம் காட்டினார். அவனும் தன்னிடமிருந்த ஓலைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விட்டு அவரிடம் திரும்ப கொடுத்தான். புறப்பட தயார்தானே? ஆயிற்று கிளம்பிவிடுவோம், வானிலை சரியாயிருந்தால் நான்கே நாட்களில் கொற்கையை அடைந்து விடுவோம்.

 

      கொற்கை மாணிக்கசோழியருக்கு தந்தையார் எழுதி கொடுத்த ஓலையும் ஒப்பந்த சீட்டும் பத்திரமாக இருக்கிறதல்லவா? இருக்கிறது கணக்கர் தலையாட்டவும், ஒப்பந்தப்படி பண்டப்பொதிகளை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள், அவைகள் சோனகத்தின் அங்காடிகளிலும் அரண்மனைகளிலும் பெரும் வரவேற்பு கிடைக்கும். ஆனால்  சில்லறையாக விற்பனை செய்ய வேண்டாம். நமக்கு பழக்கமான சோனக வணிகர்களிடமே விற்று விட்டு தரம் மிக்க குதிரைகளாக வாங்கி கொள்ளுங்கள்.

 

       எங்கே நகுலர்? அவர்தான் குதிரைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்.

 

      இதோ இருக்கிறேன், அவர் முன்னால் வரவும் வரும்போது குதிரைகளை ஏற்றி வரும்படி நம் கலங்களை மாற்றிக்கொள்ளமுடியுமல்லவா?

     தாராளமாக செய்து கொள்ளமுடியும் என்று விளக்கினான். நல்லது பல தேவைகளுக்கான குதிரைகள் வாங்குவது போல தெரிய வேண்டுமே தவிர சோழமன்னர் நம்மிடம் கேட்டு கொண்டபடி போர் குதிரைகளை வாங்கி வருவதாக யாருக்கும் தெரிய கூடாது..இந்த பணியை மன்னர் நம்மிடம் இரகசியமாக ஒப்படைத்திருக்கிறார்.புரிகிறதா?

 

    புரிகிறது. பிற தமிழ் வணிகர்களிடமும் எச்சரிக்கையாக இருப்போம்.

வியாபார பணிகள் முடிந்து ஓய்வுக்காக சோலைபக்கம் வருகிறான்.

 

     உறக்கத்திற்குள் போகும் முன் நான்கைந்து பேரால் தாக்கப்பட்டு அவனை தூக்கி கொண்டு ஓடுகிறார்கள்.அதற்குள் அங்கிருந்த பரதவ குல இளைஞர்கள் ஓடி வந்து விடுகிறார்கள். வழுவாமொழியை அங்கேயே விட்டு விட்டு தாக்கியவர்கள் ஒடி விடுகிறார்கள். வழுவாமொழிக்கு நல்ல காயம் ஏற்பட பரதவ குல வைத்தியர் வீட்டுக்கு அவனை கொண்டு போகிறார்கள். வண்ணமுத்துவின் வீடு அது. அங்குதான் அவன் தங்கை சங்கினி வழுவா மொழிக்கு அறிமுகமாகிறாள். அதற்குள் நண்பன் செங்கண்ணன் வந்து சிவிகையில் அவனை அவன் வீட்டிற்கு அனுப்பி விடுகிறான்.

     அடுத்த நிகழ்ச்சியாக வழுவாமொழியின் சகோதரிகள் அமுதமொழி, பொற்கொடி இருவரும் சாத்தனார் கோயிலுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார்கள். தங்களது தோழியான மதி ஒளியிடம், அத்தை மகள் கண்ணகி அங்கு வருவதாக சொன்னாளா?

 

      இல்லை நான் போகும் பொழுது கோவலர் வெளியே சென்றிருந்தார். அவரது தந்தை பெருமளவு சொத்துக்களை கோவலரது பெயருக்கே கொடுத்து அவர்கள் இருவரும் தனியாக வசிக்க மாளிகையும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாராம்..ஆமாம், அத்தை அன்று வீட்டுக்கு வரும் பொழுது அவர்களது மகள் கண்ணகி தனியாக கோவலனுடன் வசிக்கிறாள் என்று சொன்னார்கள். அதனால் கோயிலுக்கு வருவதாக இருந்தாலும் கோவலனுடன்தான் வருவதாக கூறினாள்.

 

    பட்டினப்பாக்கத்து வீதிகளில் வெற்றிலை விற்கும் பாசவர்களும், சாம்பிராணி முதலிய மணப்பொருட்களை விற்கும் வாசவர்கள் கடைகளும் நிறைந்திருந்தது. பட்டினப்பாக்க தேரோடும் வீதிகளையும், நெடிய கடை தெருக்களையும், கடந்து ஒதுக்கு புறமான ஒரு கோயிலில் இவர்களின் சிவிகை சென்று நின்றது.

   

       இறைவனை கும்பிட்டு விட்டு வெளியே வர இவர்களது சிவிகையை காணவில்லை. அது மட்டுமல்ல இவர்களுடன் வந்திருந்த காவலர்களுக்கும் வேறு ஒரு கூட்டத்திற்கும் வாள் சண்டை நடைபெற்று கொண்டிருந்தது. சிவிகைக்கு காவலாய் வந்தவர்கள் ஓய்ந்து போன வேளையில் அங்கு வந்த செங்கண்ணன், எதிரிகளை சண்டையிட்டு விரட்டி விட்டு அமுதமொழியையும், பொற்கொடியையும் பத்திரமாக சிவிகை ஏற்றி அனுப்பினான்.

     இதன் மூலம் வழுவாமொழியின் சகோதரி அமுதவல்லியின் நட்பு செங்கண்னனுக்கு கிடைத்தது

     செங்கண்னன் அரசு பயணமாக உறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தான். அந்த பாதை எப்பொழுதும், குதிரைகளாலும், சிவிகைகளாலும் பயணப்பட்டு பரபரப்பாக காணப்படும். சற்று தொலைவு சென்றவுடன் தண்ணீர் தாகம் எடுக்கவும் பக்கத்தில் இருந்த சோலையின் அருகில் இருந்த ஓடைக்கு சென்று தண்ணீரை குடித்து விட்டு சற்று இளைப்பாற சோலையின் ஓரம் உட்காரலாம் என்று நினைத்தவன் இரண்டு மூன்று குதிரைகள் வரும் குளம்படி சத்தம் கேட்கவும் சட்டென்று சோலைக்குள் தன் குதிரையை நுழைத்து மறைந்து கொண்டான்.

     வந்தவர்களில் ஒருவன் தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறியவுடன் மற்றவன் சீக்கிரம் குடித்து விட்டு வா என்றான். இவன் குதியையை விட்டு இறங்கி போய் தண்ணீரை குடித்து விட்டு வருவதற்குள் காத்திருந்தவன் வேகமாய் குதிரையை தட்டி விட இவன் ஓடி வந்து அவனது குதிரையில் ஏறி பின்னாலேயே பறந்தான், அவன் இடையில் இருந்து ஒரு ஓலை கீழே விழுந்தது தெரியாமலே.

   ஓலையை பிரித்து பார்த்த செங்கண்ணன் அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதனை புரிந்து கொண்டான். ஒன்பது புலித்தலைகள் ஒன்றாய் இருப்பது போல் முத்திரை இடப்பட்டிருந்தது.

   காலஞ்சென்ற சோழ மன்னர் நெடுங்கிள்ளியின் புதல்வர் பெருநற்கிள்ளிக்கு அரச பட்டம் சூட்டி அரியணை ஏற்றி சில மாதங்களே ஆகிறது. சேர மன்னர் செங்குட்டுவரே தன் மாமனின் புதல்வருக்கு முன்னிருந்து சூட்டுவித்தார், அப்போதே சோழ மன்னர் நலங்கிள்ளி வழி வந்த சேட்சென்னி முதலிய சோழ இளவரசர்கள் ஒன்பது பேர் எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். ஆயினும் அப்போது அவர்களை அமைதிப்படுத்தி அவர்களுக்கு இளவரசு பட்டம் சூட்டி உறையூரையும் அதை சுற்றி இருக்கும் ஊர்களையும் ஆட்சி செய்து வர ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஆனால் அது இப்பொழுது சில காலமாய் நாட்டை கைப்பற்ற சூழ்ச்சிகளாய் வலம் வந்து கொண்டிருக்கிறது.

   செங்கண்ணன் ஓலையில் கண்டபடி சூழ்ச்சிக்காரர்களின் கூட்டத்தில் இரகசியமாய் மறைவிடத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்தான்.

     அதற்கு பின் நிறைய சூழ்ச்சிகள், சேரனின் சமாதானம், இவைகள் எதுவுமே சேட் சென்னியின் மனத்தை மாற்ற முடியவில்லை. பெரு நற்கிள்ளியின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர், அவரும் அவரது சகோதரர்கள் ஒன்பது பேரும். வேறு வழியின்றி பெருநற்கிள்ளியின் சோழர் படைகளும் சேரநாட்டு படையும் இணைந்து உறையூரை நோக்கி படை எடுத்தன.

 

போரின் வர்ணனை

   கோட்டையின் உச்சியிலிருந்து போர் முரசங்கள் அதிர்ந்தன. சங்குகள் பூம், பூம், என்று முழங்கின. பறைகள் அதிர்ந்தன. மந்திர அல்லது தந்திர வித்தியையோ முழு ஆயுத பாணிகளான வீரர்கள் எண்ணிலடங்காது மதில் மேல் தோன்றினர்.வேலும் அம்பும் வானையும் மண்ணையும் இணைப்பது போல மழையாக பொழிந்தன.வளைவிற் பொறிகள் தாமே வளைந்து அம்புகளை சரம் சரமாக ஓயாது விடுத்தன. கொப்பறைகள் கொதிக்க காய்ச்சிய எண்ணெயையும் உலோக குழம்பையும் கவிழ்த்து கொட்டின.மதில் மேல் ஏற முயன்ற வீரர்களிங் கைகளை கை பெயர் ஊசிகள்பதம் பார்த்தன. "ஆண்டலை அடுப்பு பொறிகள்" செய்த வேலையால் நூறு நூறு வீரர்களின் தலைகள் மாயமாய் மறைந்தன. தீயை உமிழ்ந்து வந்த பந்தங்கள் யானைகளின் கண்களை குறி பார்த்தன.

   சேர படையில் பெரும் குழப்பம் சூடு பொறுக்க மாட்டாமல் பிளிறிய யானைகளும் வேல்களாலும், அம்புகளாலும் தாக்கப்பட்ட மற்ற யானைகளும் திருப்பிக்கொண்டு ஓடின. அதே தருணத்தில் பெரும் ஓசையுடன் திறக்கப்பட்ட கோட்டை கதவுகள் உள்ளிருந்து அணையை உடைத்துக்கொண்டு வரும் வெள்ளம் போல் வீரர் கூட்டம் திமு திமுவெனு வெளியே வந்தது. மன்னர் சேட் சென்னி வாழ்க, உறையூர் வெல்க, வெற்றி வேல் வீர வேல் ஆயிரம் பதினாயிரம் வீரர்களின் வாழ்த்தொலி முழங்க நடுவில் பட்டத்து யானை ஒன்றில் வீற்றபடி மார்பில் அத்தி மாலை புரண்டசைய சேட்சென்னி அமர்ந்து வீரரகளுக்கு கட்டளையிட்டு கொண்டிருந்தார்.

   துவங்கி விட்டது கடும் போர். துவக்கத்திலேயே வீரக்கனல் பறந்தது.ஆற்றில் அனல் தகித்தது. அந்த வெம்மையை கண்டு அந்த ஆதவனும் நடுங்கினான்,

    யானைகளின் மீதிருந்தோர் வாளோடு வாள் வீசி போரிட்ட போது எழுந்த ஓங்கார ஒலிகளும்,ஒளி வீச்சுக்களும் மஞ்சு சூழ் குன்றுகள் மேல் எழும் இடியையும் மின்னலையும் ஒத்திருந்தது.

   சேரர் படையில் ஏற்பட்டிருந்த குழப்பத்தை பயன்படுத்தி சேட் சென்னி வெகு வேகமாய் முன்னேறினான்.

  மாபெரும் போர்க்கலங்களை கண்ட சேர சேனாதிபதி வில்லவன் கோதையே அவர்கலுடைய வெங்கனலுக்கு ஆற்ற மாட்டாது திணறினான். மித மிஞ்சிய யானைப்படைகள் கலைந்து சிதறாது போர் முகப்படுத்துவதே பெரும் பாடாக இருந்தது. காலாட்படைகளோ சேட் சென்னியின் புயலாய் சீறிப்பாயும் புரவிப்படைகளின் குளம்புகளில் மோதி மிதிபட்டன.

    என்ன? திக்கெல்லாம் நடுங்க வீரப்புகழ் பரப்பிய சேரப்படை பின் வாங்குவதா? முன்னேறி சென்று பகைவர்களை ஓட ஓட விரட்டி பிடித்து நசுக்கி எறிந்தல்லவா அதற்கு பழக்கம்.

   வில்லவன் கோதைக்கு பொறுக்கவில்லை. சினமும் சீற்றமும் கொப்பளிக்க தன் யானையை திருப்பி திருப்பி களத்தில் சுற்றி படைத்தலைவர்களுக்கு உற்சாகமூட்டினான். தவறாமல் எதிர்த்து நின்று எதிர்த்து தாக்கும்படி வீரர்களுக்கு கட்டளையிட்டான்.அவனை கண்ட வீரர்கள் உற்சாகமடைந்து எதிர் தாக்குதலை நடத்தினர்.

   அதற்குள் பெரும் படையுடன் சேர மன்னர் செங்குட்டுவன் வர போர் மிக உக்கிரமடைந்தது. உறையூருக்கு மேற்கே அரை காத தூரத்தில் "நேரிவாயல்" என்ற இடத்தில் பரந்த பொட்டல் வெளியில் போர் உச்ச கட்டத்தை அடைந்தது.

         இந்த இடைபட்ட காலத்தில் செங்கண்ணன் மிக திறமையாக சேட் சென்னியின் உதவிக்கு வர இருந்த இடும்பலின் படைகளை தாமதப்படுத்தி அவர்கள் பின்புறமாக வந்து தாக்குவதை தவிர்க்க வைத்தான். சேரன் செங்குட்டுவன் வில்லவன் கோதையுடன் ஆலோசனை செய்து ஒரு படையை பிரித்து இடும்பலின் படையை நேராக எதிர் கொள்ள கிளம்பியது.

      சேட் சென்னியின் படைகள் தளர ஆரம்பித்தன. அதை விட அவர்களுக்கு உதவியாக வந்த இடும்பில் படைகளை சேர நாட்டு படைகளிடமிருந்து பிரிந்த படை வில்லவன் கோதையின் தலைமையில் தோற்கடித்து விட்டன. இந்த செய்தி மேலும் சேட் சென்னியின் படைகளை சோர்வடைய செய்து விட்டது.

 

     இந்த நிலைமையில் சேட் சென்னியின் வாளை தட்டி விட்டு நிராயுதபாக்கினார். சேரர் படைகள் சேட் சென்னியை கைது செய்தன. அடுத்து சேட் சென்னி செய்த அதிர்ச்சியான செயல் சுற்றி இருந்த ஒரு சேர நாட்டு வீரனின் வாளை பிடுங்கி தன் நெஞ்சில் பாய்ச்சிக்கொண்டான். அடுத்தடுத்து ஒவ்வொரு சேட்சென்னியின் சகோதரர்கள் தங்களுக்கு தாங்களே வாளை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டனர்.

   செங்குட்டுவர் அதிர்ந்து விட்டார். சேட் சென்னியயை எப்பொழுதுமே பெரும் வீரனாகவே மதித்து வந்தார்..

    போர் எல்லாம் ஓய்ந்து பெருநற்கிள்ளிக்கு மீண்டும் ஒரு முடி சூட்டு விழாவை நடத்தி அரியனையில் அமரவைத்தனர் அங்கிருந்த பெரியோர்கள்.

 

         அடுத்து வழுவாமொழியின் குடும்பத்தில் அவனது தந்தையையையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய நடந்த முயற்சி செங்கண்ணனால் முறியடிக்கப் பட்டு தப்பி வந்தாலும் பொய்யாமொழிக்காக அவன் மீது எறிய பட்ட கத்தியை சங்கினி தன் மார்பில் வாங்கி கொண்டாள்.

     சங்கினி என்னால்தானே உனக்கு இந்த நிலைமை. என்னை காப்பாற்றத்தானே நீ இந்த கொடுமையை ஏற்றுக்கொண்டாய்.அங்கேயே மலை போல் நான் இருந்தும் நீ இந்நிலைக்கு ஆக வேண்டியதாகி விட்டதே சங்கினி.

  அதற்காக வருந்தாதீர்கள்.இந்த உயிர் தங்களுக்கு தீங்கு நேராமல் தடுக்க பயன்பட்டதே. அதை விட வேறு என்ன வேண்டும்.?

அய்யோ சங்கினி அப்படி சொல்லாதே நீ நிச்சயமாக பிழைத்து நலமாகி விடுவாய். பிறகு நாமிருவரும் மணந்து கொண்டு இந்த இனிமையான பூம்புகாரில் நீண்ட நெடுங்காலமாக வாழ்வோம். நீதான் என் வாழ்க்கையில் ஒளி ஊட்டும் விளக்காக இருப்பாய்.

   இந்த சோகமான நிலையின் முத்திரை போல் சங்கினியின் இதழ்களில் ஒரு மெலிதான முறுவல் அரும்பியது.

    என் வாழ்வின் கடைசி தருணத்தில் தங்கள் திருவாயினால் இந்த சொற்களை கொண்டு வந்ததே போதும்.தங்களை பிரிந்து செல்வது துன்பமாக இருந்தாலும் இந்த நிலை என்னோடு போயிற்றே என்ற ஆறுதலோடு நிம்மதியாக போகின்றேன்.

   அய்யா இந்த கணத்தில் என் நெஞ்சில்;இருக்கும் ஆசை ஒன்றே ஒன்றுதான்.

சொல் சங்கினி என்னவென்று உடனே சொல். மடியிலிருந்து அவள் தலையை தூக்கி கையில் தாங்கினான்.

 

    உயிர் போகும் தறுவாயில் இதய பூர்வமாக ஆசைப்படுவது அடுத்த பிறவியில் நிச்சயம் நிறைவேறும், என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்த பிறவியிலும் தங்கள் நெஞ்சில் அன்பை பெற்றவளாக நானே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    சங்கினி இது தவமிருந்து பெறும் வரமல்லவா ! உன்னை கண்டது முதல் என் இதயத்தில் தோன்றி நிலைத்து விட்ட எண்ணத்தை தன் நீ இப்போது கூறினாய்.

நம் விருப்பம் நிச்சயமாக நிறைவேறும்.

 

   சங்கினிக்கு மூச்சு விடுவது சிரமமாயிற்று. இதய துடிப்பு மெதுவாக அடங்குவது போல தோன்றியது. சங்கினியின் விரல்கள் வழுவாமொழியின் கரங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டன.முகத்தில் நிறைவான அமைதியான புன்னகை மலர்ந்தது.அதுவே அவளது இறுதி புன்னகையாகி முகத்தில் நிறைந்து உறைந்தது.

    சங்கினி இறந்து விட்டாள் என்றோ, அங்கே கிடப்பது வெறும் சடலம்தான் என்றோ நம்ப முடியவில்லை. ஆனால் உண்மை என்ன ? படுத்தவள் எழப்போவதில்லை.

 

      இருபத்தெட்டு நாட்கள் காவிரிபூபட்டிணத்தில் இந்திர விழா கோலகலாமாக நடந்து கொண்டிருந்தது. சற்று தொலைவில் கண்ணகி தன் கணவன் கோவலுடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். கணவனுடன் இந்திர விழாவிற்கு வந்திருக்கிறாள்.

 

     வழுவாமொழியின் சகோதரி அமுதமொழி செங்கண்ணனுடன் வந்திருந்தவள் கண்ணகியை கண்டவுடன் ஓடி சென்று அவள் கையை பிடித்து கொண்டாள். ஒதுங்கி சென்ற கோவலன் செங்கண்ணனிடம் பேச ஆரம்பித்து விட்டான்.

 

    கண்ணகி அமுதமொழியிடம் நாம் சந்தித்து எவ்வளவு நாட்களாகி விட்டது. எங்கள் திருமணத்திற்கு கூட நீ வரவில்லை.

     எனக்கே அது பற்றி வருத்தமாக இருக்கிறது. அன்னை என்னையும், பொற் கொடியையும் இன்னொரு நாள் உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறினார். ஆம் மாமன், அத்தை எல்லோரும் நலமா?

கண்ணகி எல்லோரும் நலமாய் இருக்கிறார்கள் என்று சொல்லிக்  கொண்டிருக்கும் போது

 

     கோவலன் செங்கண்ணனிடம் நீ, நான் வழுவாமொழி மூவரும் இணை பிரியாத நண்பர்களாக இருந்தோம். அதை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். இந்த பூம்புகாரின் நாளங்கடி வீதிகளிலும், கடற்கரை மணல் வெளிகளிலும் நாம் ஒன்றாக கவலையின்றி திரிந்திருக்கிறோம். அதையெல்லாம் அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

நீயும் வழுவாமொழியும் இப்பவும் ஒன்றாகத்தான் சுற்றுகிறீர்களா? அவன் என்னை பற்றி ஏதாவது உரையாடுவானா?

 

   சில சமயங்களில் நான் கேட்டதுண்டு ஏன் இப்படி இருக்கிறாய் என்று, எதுவும் பதில் சொல்ல மாட்டான்.

    அவன் சொல்ல மாட்டான், எனக்கு கருணையுள்லவன், பெருங்குணக் கொண்டவன் என்று எல்லோரும் சொல்வதுண்டு. ஆனால் வழுவாமொழியின் உயர் பண்புக்கு இதுவெல்லாம் ஈடாகாது.

 

     எனக்கும் கண்ணகிக்கும் திருமணமாகும் முன்னர் வழுவாமொழிக்கு அவளை திருமணம் செய்யும் எண்ணம் இருந்தது. அவனுக்கு முறைப்பெண் வேறு. இருந்தும்

கண்ணகியின் பால் நான் கொண்டிருந்த ஆர்வத்தை அறிந்ததுமே தன் இதயத்திலிருந்த அவளது எண்ணத்தை துடைத்து எறிந்து விட்டான். அதிலிருந்து எங்களிடையே இருந்த நெருக்கம் குறைந்து ஒரு திரை போல் விழுந்து விட்டது.

 

    இவர்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது அந்த வழியாக முண்டனம் செய்த தலையும் காவி உடையுமாக சமணத்துறவியின் கோலத்தில் வந்து கொண்டிருந்தது வேறு யாருமல்ல வழுவாமொழிதான்.

   சங்கினியை அடக்கம் செய்த இடத்தில் அங்கிருந்த அகல் விளக்கை தூண்டி விட்டு கீழே மணற்பரப்பை மறைத்து விழுந்து கிடந்த புன்னை மலர்களை தம் இரு கரங்களாலும் திரட்டி எடுத்து அதன் முன்னால் தூவினார். அதன் பின்னர் திரும்பி அந்த கூடாரத்தை தாண்டி நடந்து போவதை செங்கண்ணன், அமுதமொழி, கண்ணகி, கோவலன் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

    வழுவாமொழி பூம்புகார் வந்திருந்த புலவர் சாத்தனாருடன் வஞ்சி மாநகர் செல்கிறார். அவரை அழைத்து செல்ல தடையொன்றும் சொல்லவில்லை புலவர் சாத்தனார்.

இனி அவர் இளங்கோவடிகளுடன் குணவாயிற் கோட்டத்திலேயே இருப்பார். அவரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம்,தத்துவம்,சமயம் எல்லாவற்றையும் கற்று தேர்ச்சியடைவார்.

I read KadalKonda Kavyam
by Dhamotharan.S   on 20 Sep 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.