|
|||||
திருமுருக கிருபானந்த வாரியார் |
|||||
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் 1906 இல் பிறந்தார். இசை இலக்கியத்தில் வல்லவரான தந்தை, மூன்று வயதிலிருந்தே தன் குழந்தைக்கு இலக்கண இலக்கியங்களை கற்றுத்தந்தார். சிறுவனுக்கு 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றல் கிடைக்கப்பெற்றது. ஒரு முறை தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால் மகனை அனுப்பி வைத்தார். மடைதிறந்த வெள்ளமாக பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோர்அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. முதல் சொற்பொழிவு பெரும் பேரும் புகழும் பெற்றுத்தந்தது. யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் நான்கு ஆண்டுகள் வீணை பயிற்சி பெற்றார். சைவசித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். அபரிவிதமான நினைவாற்றல் படைத்தவர். மிகச்சிறந்த முருக பக்தர். திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவருட்பா உள்ளிட்டவற்றில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாக்களை மனப்பாடமாக அறிந்தவர். சொற்பொழிவின் போது அவற்றை அழகாக இசையோடு இணைந்து பாடுவார். "திருப்புகழ் அமிர்தம்" என்ற மாத இதழை 37 ஆண்டுகளாக நடத்தினார் "சிவனருட் செல்வர்" "கந்தவேல் கருணை" "ராம காவியம்" "மகாபாரதம்" உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நூல்கள் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்" என்ற நூலை எழுதியுள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இவரது நூல்கள் தெளிவாக எளிய நடையில் இலக்கியத்தரம் வாய்ந்தவையாக இருக்கும். சொற்பொழிவுக்கு நடுவே குழந்தைகளிடம் ஆன்மீக கேள்விகள் கேட்பார். சரியாக பதில் சொல்லும் குழந்தைகளுக்கு விபூதி, சிறிய கந்த சஷ்டி கவசம் புத்தகங்களை அன்பு பரிசாகத் தருவார். இதற்காகவே முன் வரிசையில் இடம் பிடிக்க சிறுவர்கள் போட்டி போடுவார்கள். படித்தவர், பாமரர், முதியோர், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிக்கும் படியாக சுவாரசியமாக பேசுவார். பெண்மையை போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறுவார் குழந்தைகளுக்கு தாயின் பெயரை முதல் எழுத்தாக போடவேண்டும் என்பதை முதன் முதலாக கூறியவர் இவர்தான். தியாகராஜ பாகவதரின் "சிவகவி" படத்திற்கு வசனம் எழுதினார். துணைவன், தெய்வம், திருவருள் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். எம்ஜிஆருக்கு "பொன்மனச்செம்மல்" என்ற பெருமைமிகு பட்டத்தைச் சூட்டியது இவர்தான். ஏராளமான கோயில்களில் திருப்பணி நடைபெற உதவியவர். ஆன்மீக அறப் பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். சென்னை தமிழிசை மன்றம் "இசைப்பேரறிஞர்" என்ற பட்டம் வழங்கி பெருமைப்படுத்தி சிறப்பித்தது. தனது வாழ்நாள் முழுதும் ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் பக்தி நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார். பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான். அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடம் செய்திருந்தார், 16 வயதினிலே அவர் தனியாக உபன்யாசமும், மத விளக்க உரையும் கொடுக்கும் அளவு அவருக்கு ஞானம் மிகுந்திருந்தது நிச்சயம் அகில இந்திய அளவு, விவேகானந்தர் அளவு வந்திருக்கவேண்டிய மகான் அவர், ஆனால் முருகன் ஆலயம் நிரம்பிய தமிழகத்திலே தன்னை நிறுத்திகொண்டார் இந்துமதத்தின் கொள்கைகள், உபநிஷத்துகள் உணர கஷ்டம் எனும் நிலையில், பாமர மக்கள் அதை புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய தமிழில் சொன்னவர் அவர். சாந்தமான முகம் , பார்த்தால் வணங்கத்தக்க தோற்றம், அமைதியான மொழி, அழகு தமிழ், வாய்திறந்தால் எம்பெருமான் என தொடங்கும் அந்த கீர்த்தி எல்லாம் இனி யாருக்கும் வாய்க்காதவை. எந்த வாதத்திலும் அவரை வெல்ல முடியாது, எந்த சபையிலும் அவர் தோற்றதுமில்லை. சங்க காலத்திலிருந்து வந்த ஆழ்வார்கள், அடியார்கள், புலவர்கள் வரிசையில் நாம் கண்ட மாபெரும் மனிதர் கிருபானந்தவாரியார் அதில் சந்தேகமே இல்லை அந்த அற்புதமான, அமைதியான, அர்த்தமுள்ள, ஆன்மீக சொற்பொழிவினை இனி கொடுக்க யாருமில்லை முருகன், ராமாயணம், பாரதம் என இந்து மத பாரம்பரியங்களை அவர் விளக்கினால் பசியின்றி, தூக்கமின்றி கேட்டுகொண்டே இருக்கலாம். அவ்வளவு உருக்கமும் அழகும் வாய்ந்த சொற்கள் அவை. இன்று அவர் இல்லாவிட்டாலும் அவரின் பெரும் உழைப்பும் அவரின் பேச்சும், எழுத்தும் என்றும் ஆன்மீக உலகில் நிற்கும், நிலைக்கும். சாட்சாத் முருகபெருமான் அவர் நாவில் இருந்து தமிழ் கொடுத்தான் என்பதை பல இடங்களில் காண முடிந்தது. இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தமிழறிஞர்களில் அவரும் ஒருவர், கண்ணில் ஒற்ற கூடிய அழகு தமிழ் அது... இன்று அவரின் பிறந்த நாள், அந்த ஆன்மீக பெரியவருகு பக்தி அஞ்சலிகள். இந்துமதத்தின் சிறப்புக்களை, பெருந்தன்மையினை பலாச்சுளையினை தேனில் நனைத்து இனிக்க இனிக்க கொடுத்தவர் அவர். முருகபெருமானோடு கலந்துவிட்ட அந்த பக்தனுக்கு மீண்டும் அஞ்சலிகள் "செந்தமிழ் கடல்" "அருள்மொழி அரசு" "திருப்புகழ் ஜோதி" என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது 87வது வயதில் 1993ல் விமான பயணத்தின் போது மறைந்தார். |
|||||
by Swathi on 25 Aug 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|