|
||||||||||||||||||
தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை |
||||||||||||||||||
![]() முனைவர் இரா.இராஜேஸ்வரன் முன்னுரை: சமயம் என்பது மானிட சமுதாயத்தை நல்வழியில் வாழ வழிகாட்டும் தன்மை உடையதாகும். உலமெல்லாம் ஒரே சமயம் என்ற நிலை இல்லாமல், இந்து சமயம், கிறித்துவ சமயம், இசுலாம் சமயம், பௌத்த சமயம், சமண சமயம் என்று பலவாறாக உள்ளன. எல்லா சமயத்திற்கும் அடிப்படையானது இறை நம்பிக்கை. "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்....' என்ற திருமூலரின் கருத்தின் மூலம் "அன்பே சிவம்' (Love is God) என்கிற தாரக மந்திரமே சைவ சமயத்தின் ஆணிவேர், இந்தச் சமயக் கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், போன்றவற்றை பரப்பும் மனிதனிடம் செல்லவும் மொழி என்கிற கருவி தேவைப்படுகிறது.
ஒரு மொழியை வளப்படுத்தும் திறமை, ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. மொழி வளம் பெறும் போது சிந்தனையும், அறிவும் வளம் பெறும். பின்னர் அது வலுப்படும். பல்வேறு மொழிகள் இருப்பினும் தமிழ்மொழி எந்த வகையில் சைவ சமயத்திற்கு தொண்டாற்றியுள்ளது என்பதை மட்டுமே ஆய்வதே கட்டுரையாளரின் நோக்கமாகும்.
சைவ சமயத்தின் தொன்மை: சமயம் ஒரு தத்துவம்; ஒரு மதக்கோட்பாடு; ஒரு வாழ்வியல் நெறி. சமயம் பற்றிக் காந்தியடிகள் குறிப்பிடுகையில் "சமயம் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது' என உறுதியுடன் மொழிகின்றார். அந்தளவுக்குச் சமயம் மானுட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சமயங்கள் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாகும். சமயங்களிடையே சடங்குகள், வழிபாட்டு முறை போன்றவைகள் மாறுபட்டாலும், அடிப்படையில் சமயக்கொள்கை ஒன்றே எனக் கருதலாம். உலகில் இன்று கிறித்துவம், இசுலாம் சமயங்களுக்கு அடுத்ததாக இந்து சமயம் (சனாதன தர்மம்) உலகம் முழுவதும் பரவியுள்ளது.
சைவம், வைணவம் என இரு பிரிவுகளை கொண்ட இந்து சமயம் உலகில் தோன்றிய பழமையான சமயம் ஆகும். அதில் குறிப்பாக சைவ சமயம் தொன்மை வாய்ந்தது எனக் கூறலாம். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு போன்ற நூல்களில் சிவனைப் பற்றிய செய்திகள் பல உள்ளன. புறநானூற்றில்
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன்
எனச் சிவபெருமானைப் பற்றி ஒளவையார் கூறியுள்ளார். தமிழ் இலக்கியங்களில் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்....' என சிவபெருமானைப் பிறவா யாக்கைப் பெரியோனாக இளங்கோவடிகள் கூறியுள்ளார். சைவ சமயம் சிவனோடு தொடர்புடையது. இச்சமயமே உலகில் தோன்றிய முதற்சமயம் ஆகும்.
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவளச் சடைமுடித் தாமரை யானே!
என்று திருமந்திரத்தின்படி சைவத்தின் முழுமுதற்கடவுள் சிவபெருமான் ஆவான். "சைவ சமயமே சமயம்' என்று தொடங்கும் தாயுமானவரின் தமிழ்ப்பாடல் சைவ சமயத்தின் மாண்பை உலகெங்கும் பறைசாற்றுவதாக அமைகிறது. "சைவத்தின்மேற் சமயம் வேறில்ø ல அதில் சார் சிமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் வேறில்லை' என்று சைவ எல்லப்ப நாவலர் குறிப்பிட்டுள்ளது சிந்திக்கத்தக்கது.
சிந்துவெளி நாகரிக காலத்தின்போதே சிவலிங்க வழிபாடு இருந்தமையை நிரூபிக்க சிந்துவெளி அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த பொருட்களில் சிவலிங்கமும் ஒன்றாகும். மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியின்போது பண்டைய காலத் தமிழ் எழுத்துகள் பல கிடைத்துள்ளன.
சிவலிங்க வழிபாடு என்பது நம் பாரத நாட்டில் மட்டுமேயன்றி எகிப்து, சிரியா, பாரசீகம், ஆப்பிரிக்கா, திபெத்து, அமெரிக்கா, சுமத்ரா, ஜாவா தீவுகள் போன்ற உலகின் பல பகுதிகளிலும் ஒரு கால கட்டத்தில் பரவியிருந்தது என்பதை மேலைநாட்டு வரலாற்று அறிஞர்கள் எச்.எம்.வெஸ்ட்ராப், இ.டி.டெய்லர் ஆகியோர் தங்களின் நூலில் விளக்கியுள்ளனர். அதே போன்று இலங்கைக்கும், சைவ சமயத்திற்கும் மிக நெடிய வரலாற்றுத் தொடர்பு உண்டு. இராமேசுவரம், திருக்கேதீசுவரம், கோணேசுவரம், முன்னேசுவரம், நகுலேசுவரம் போன்ற சிவாலயங்கள் புரதானப் பெருமையும், சிறப்பும் பெற்றவை. இவற்றில் இராமேஸ்வரம் தவிர்த்து மற்ற ஏனைய நான்கும் இலங்கையில் உள்ளன.
தமிழ்க் கடவுளான முருகன் தமிழர் தம் தெய்வம் என்பதற்குக் கீழ்கண்ட சங்கநூல்களே சான்றாகும்.
"மணிமயில் உயரின மாறா வென்றிப் பிணிமுக வூர்தி ஒண்செய் யோனும்' (புறநானூறு) "முருகு ஒத்தியே முன்னியது முடிந்தலின்' (புறநானூறு) "முருகன் அன்ன சீற்றத்து....' (அகநானூறு) "முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்' (பெருநாராற்றுப்படை)
முருகப்பெருமானும் தமிழும் வேறில்லை. முருகனே தமிழ்; தமிழே முருகன். சங்க காலத்திலேயே தமிழகத்தில் இந்து சமயம், சமண சமயம், பௌத்த சமயம் போன்ற மூன்று சமயங்கள் தோன்றின. இந்த காலகட்டம் சைவ சமயத்திற்கு ஓர் இருண்ட காலம் என்றே கூறலாம். காரணம் சமண சமயத்தையே களப்பிரர்கள் ஆதரித்து வந்தனர். அதன் பின்னர், சமய குரவர்களின் வருகையால், சைவப்பயிர் செழுமையாக வளர்ந்தது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் போன்ற மன்னர்கள் சைவ நெறியைச் சிறப்பாக வளர்த்தனர். ஏழாம் நூற்றாண்டில் சைவ நெறிக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என கூறலாம். காரணம், இந்தக் காலத்தில்தான் இறைவனின் தூதர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற நால்வர்கள் தோன்றிக் காலத்திற்கும் அழியாத அரிய செயல்களை செய்தனர். இவர்களால் சைவமும் வளர்ந்தது. தமிழும் வளர்ந்தது. பின்னர்த் தென்னிந்தியாவில் (கேரளா) தோன்றிய ஆதிசங்ககரரால் சைவ சமயம் தழைத்தோங்கியது. இந்து மத வழிபாட்டைக் காணபத்தியம் (கணபதி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), சௌரம் (சூரியன் வழிபாடு), வைணவம் (திருமால் வழிபாடு), சைவம் (சிவன் வழிபாடு) என ஆறு வகையாகப் பிரித்து இறையின்பம் பெற வழிகாட்டினார். "ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும்....' என்கிற பெரிய புராணம் மற்றும் "அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வலர் பொருளாய்' என்கிற சிவஞான சித்தியார் பாடல் மூலம் நாம் அறியலாம். ஆதிசங்கரர் தமது வேதாந்தக் கொள்கையான அத்வைதத்தைப் போதித்து, அதைத் தொடர்ந்து நிலைநாட்டவும், இந்தியாவில் சிருங்கேரி, பூரி, பத்ரி, துவாரகை போன்ற புண்ணிய தலங்களில் திருமடங்களை நிறுவினார்.
பின்னர்ச் சைவ சமயம் சற்று நிலைகுன்றிய நிலையில் இருந்தபோது அருளாளர்கள் தோன்றி ஆதீனங்கள் (சைவத்திருமடம்) மூலம் சமயத்தை காத்தனர். புராணங்கள் பதினெட்டு, சித்தர்கள் பதினெண்மர் போன்று சைவ ஆதீனங்கள் பதினெட்டு ஆகும். இவற்றைச் "சுத்த சைவ பதினெண் ஆதினங்கள்' என்றும் கூறுவர். இவற்றில் முதலில் தோன்றியது திருவாவடுதுறை ஆதீனம், அடுத்துத் தோன்றியது தருமபுர ஆதீனம் ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் இந்து மதத்திற்கு சுவாமி விவேகானந்தர் மூலம் இளம் ரத்தம் செலுத்தப்பட்டது எனக் கூறலாம்.
சைவ சித்தாந்த தத்துவத்தை விளக்கும் திருமந்திரம் பதி, பசு, பாசம் என்னும் மூன்றை வலியுறுத்துகிறது.
"பதிபசு எனப்பகர் மூன்றில் பதியினைப் போல்பசு பாசம் அனாதி பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம் பதி அணுகில் பசுபாசம் நிலாவே'
ஆன்மாவைப் பசுவாகவும், இறைவனைப் (சிவன்) பதியாகவும், அவனை அடைவதற்குப் பாசத்தை விடுவதுவும் இந்தத் தத்துவ விளக்கம், தமிழ்நாட்டில் சைவ சமயம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருத் தொண்டினால் புத்துயிர் பெற்று நன்கு வளர்ந்தது.
தமிழ் மொழியின் பங்களிப்பு: தகவல் பரிமாற்றத்திற்கு மொழி அவசியம். மனிதன் தோன்றிய காலம் முதலே மொழி எனும் கருவி நடைமுறையில் இருந்தது. மனித உறவுக்கு ஒரு பாலமாக அமைவது மொழி ஆகும். ஒரு சமுதாயத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, இலக்கியம் போன்ற அனைத்தும் மொழியைச் சார்ந்தே அமைகிறது. உயிருக்கும், இறைவனுக்கும் உள்ள தொடர்பை அறிவதற்கு மொழி அவசியம் தேவைப்படுகிறது.
சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது தமிழ்மொழியும் சமற்கிருதமும் ஆகும். தமிழ் அறிஞர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி இதுபற்றிக் கூறுகையில், "தமிழும் சமற்கிருதமும் இந்திய பண்பாட்டின் இரு தூண்கள்' எனத் தனது ஆழ்ந்த அனுபவத்தின் முதிர்ச்சியால் தெரிவிக்கிறார். தமிழும், வடமொழியும் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தமிழாராய்ச்சி அறிஞர் க.வெள்ளைவாரணனார் தெரிவிக்கிறார்.
"மன்னுமா மலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்று வித்தருளியும்'
எனும் திருவாசக வரிகள் மூலம் தமிழ்மொழியின் இலக்கணத்தைச் சிவபெருமான் முதன்முதலில் அகத்திய மாமுனிக்கு உபதேசித்தோர் என்பதை அறியலாம்.
மேலைநாட்டு மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீன மொழிகளுக்கு நிகரான பழமையும், சிறப்பும் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி....' என்கிற சிறப்பு தமிழ்மொழிக்கே உண்டு. சைவ சமயம் தழைக்க அரும்பாடுபட்ட சமய அருளாளர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், சேக்கிழார், அருணகிரிநாதர், குமரகுருபரர், இராமலிங்க அடிகளார் மற்றும் பல சிவனடியார்களின் வழிவழியாக வந்து இறைவன் மீது தெய்வத் தமிழால் பாடியருளினார்கள். சுந்தரர், "இறைவன் தமிழை ஒத்தவன்' என்றும், நாவுக்கரசர், "பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்' என்றும், "தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' என்றும், சேக்கிழார் "ஞாலமளந்த மேன்மைத் தெய்வத்தமிழ்' என்றும் இறைவனைத் தமிழாகவே போற்றியுள்ளார்கள்.
தமிழில் சைவ சமயத்தின் தோத்திரப் பாடல்களை அருளிச் செய்தவர்கள் திருஞான சம்பந்தர் முதல் சேக்கிழார் வரை உள்ள சமயக்குரவர்கள் ஆவர். அவை பன்னிரண்டு திருமுறைகளாக வகுக்கப் பெற்று தொகுக்கப் பெற்றன. இவற்றை "பன்னிரு திருமுறை' என அழைப்பார். இவை முதலாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப் பெற்றன.
"தோடுடைய செவியன் விடையேறியோர்தூ வெண்மதிசூடிக் காடுடைய கடலைந் பொடிபூசி என்னுள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமா புரமேவிய பொம்மாள் இவனன்றே!
என்று தொடங்கும் முதலாம் திருமுறை (1469 பாடல்கள்), இரண்டாம் திருமுறை (1331 பாடல்கள்), மூன்றாம் திருமுறை (1358 பாடல்கள்), யாவும் திருஞான சம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்கள் ஆகும். நான்காம் திருமுறை (1070 பாடல்கள்), ஐந்தாம் திருமுறை (1015 பாடல்கள்) மற்றும் ஆறாம் திருமுறை (981 பாடல்கள்) அனைத்தும் திருநாவுக்கரசர் அருளிய தேவார பாடல்கள் ஆகும்.
"பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூ ரருட்டுறையுள் அத்தா உனக் காளாய்இனி அல்லேன் எனலாமே'
என்று தொடங்கும் ஏழாம் திருமுறை (1025 பாடல்கள்) சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் ஆகும். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருகோவையார் ஆகும். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை; பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரம்; பதினோராந் திருமுறை திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார் போன்றோர் முதல் நம்பியாண்டார் நம்பி வரை பன்னிருவர் பாடிய திருப்பாடல்கள்; பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் பெருமான் அருளிய "திருத்தொண்டர் புராணம்'; 12 திருமுறைகளில் சுமார் 18 ஆயிரம் பாடல்கள் உள்ளன. அவை இறைவனை அடையச் செய்யும் தோத்திரப் பாடல்கள் ஆகும்.
திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, உண்மை நெறி விளக்கம் மற்றும் சங்கற்ப நிராகரணம் என்னும் பதினான்கு சாத்திர நூல்கள் சைவ இறை நெறியை உணர்த்தும் நூல்கள் ஆகும்.
தமிழைப் போற்றி, தமிழ் வழியே சைவ சமயத்தைப் பரப்பச் செய்த தவச் சான்றோர்களால் செந்தமிழும் வளர்ந்தது; சிவநெறியும் வளர்ந்தது.
முடிவுரை: இவ்வாறு உயர்தனிச் செம்மொழியாகிய தமிழும், சைவமும் சிறப்புடன் பொலிவு பெற சைவச் சான்றோர்கள் பலர் பாடுபட்டுள்ளனர். தமிழர்கள் சைவத்தையும், தமிழையும் இரு விழிகளாய்ப் போற்றிக் காத்து வருகிறார்கள். சனாதன தர்மம் எனும் இந்து மதத்தின் உயிர்நாடியாகச் சைவசமயம் விளங்குவது போலச் சைவசமயத்தின் உயிர்நாடியாகச் செந்தமிழ் விளங்குகிறது. கிறித்தவர்களுக்கு பைபிள் புனித நூல் (Holy Book) போல, இசுலாமியர்களுக்குத் திருக்குர் ஆன் புனிதநூல் போல, சைவர்களுக்குச் சமயக்குரவர் அருளிய தேவாரம் புனித நூல் என்றே கூறலாம்.
"தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' |
||||||||||||||||||
by uma on 21 Sep 2012 3 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|