LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தமிழ் ஆள; தமிழ் பேசு.. (வித்யாசாகர்)

ஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இதலாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும் நம்மிடையே இப்போதெல்லாம் எண்ணற்றோருக்கு உண்டு.

என்றாலும் மொழி வளர்ச்சி, வாழ்வுநிலை, சுற்றத்தார் பொருத்து மொழியும் பல மாறுதலுக்கிணங்க தானே திரிந்தும் கலந்தும் விடுகிறது. எனவே எதையும் முற்றிலும் தமிழில்லை என்று அகற்றிவிடலாமா? அல்லது தனித்தமிழ் அல்ல என்று ஒதுக்கலாமா? எல்லாம் தமிழ்தான் ஆயினும் கலப்புத்தமிழ் இல்லையா என்று வருந்தியே நகர்வதா???

இதலாம் சமஸ்கிருத, ஹிந்தி மற்றும் பிற மொழிச் சொற்கள் அல்லது பிற மொழிக் கலாச்சாரத்தால் வந்த சேர்ப்புகள் இல்லையா ? என்றாலும், அனைத்து மொழிக்குமே தாய் ‘நம் ஆதி மொழி’ தமிழ் தான் என்பதிலும் எண்ணற்றோருக்கு உலகளவில் மாற்றுக் கருத்தில்லையே.

எனவே இதலாம் தமிழுக்கு பிறமொழிகளிடமிருந்து வந்துள்ளது என்பதை விட, தமிழிலிருந்து தான் பிற மொழிகள் வந்துள்ளன என்பதை உலகமே இதோ மெல்ல மெல்ல ஏற்று வருகிறது. இவ்வருட கனடா ஜப்பான் லண்டன் அமெரிக்கா வளைகுடா நாடுகள் என உலகளாவிய பல பொங்கல் தினக் கொண்டாட்டங்களும் அதற்கொரு சான்று.

என்றாலும் குழந்தைகளுக்கு பெயரிடுகையில், விளக்கமளிக்க அவசியமற்றவாறு தனித்தமிழில் மிக அழகாக எவ்வித சார்புமற்று வைக்கலாம். வெண்ணிலா, அறிவு, செல்வன், மதிநிறை, குறள், அருவி, மல்லி.. என்றெல்லாம்.

வெள்ளைக்காரர்கள் இப்படித்தான் அவர்கள் மொழிக்கு நிறைவாக, ஸ்டவ், ஸ்ட்ரீட், ட்ரீ, ஸ்டீல், கேவ், மூன், கேட், ஃபிஷ், ஜாஸ்மின், காட் என்றெல்லாம் வைக்கிறார்கள்.

நாம் கூட முன்பு இப்படியெல்லாம் வைத்திருந்தோம்; சிவப்பு, செவளை, கருப்பு, தேனு, அடுப்பு, பறி, சூரியன், சந்திரன் என்றெல்லாம் நிறைவாக நம் சொல்லினிக்க மொழியினிக்க வைத்திருந்தோம்.

ஏனென்றால் பெயர் என்பது ஒருவரை அழைக்க, குறிப்பிட என்றாலும் வாழ்நாள் முழுவதும் வெற்றி வெற்றி என்று அழைப்பதொரு போற்றுதலும் இல்லையா? தாத்தா போல வரவேண்டும், பாட்டி போல இருக்க வேண்டும், சூரியனைப்பொல ஒளிர வேண்டும், அருவி போல நிறைய வேண்டும் என பலவாறு எண்ணற்ற மேற்கோள்கள், எதிர்ப்பார்ப்புகள், நன்னெறி கொண்ட சிந்தனைகள், மொழிச் சீர் கொண்ட சொற்கள், பழவகைகள், தவிர நேர்மறை எண்ணங்கள் புக, வர, வளர என பல ஆழப் பார்வை பெயர் வைக்கையில் உள்நிறைவதுண்டு.

இடையே கூட ஒரு குழந்தைக்கு ‘மதிநிறைச் செல்வன்’ என்று வைத்தோம், அவர்கள் வீட்டில் மதி என்றழைக்கிறார்கள், அழைக்க ஏதுவாக இருக்குமென்று.

அப்படி மதி, குயில், அகில், முகில், குறல், வெள்ளி, வாணி, அருள், மணி, சுடர், பாரி, ஓரி, நீதி, கொடை, தனம், அன்பு, நதி, மணி, முத்து, மரகதம், பவளம், குழலி, எழிலி, குறளி, வெண்பா என எண்ணற்ற அழகிய தமிழ் சொற்கள் பெயர்கள் மிகச் சிறப்பாக நம்மிடையே உண்டு அவைகளையெல்லாம் நாம் பார்த்து பார்த்து வைத்து பழக பழக மேலுள்ள கலப்புவகைப் பெயர்களின் மீதான ஆசை தானே ஒழியும். பின் பழக்கமும் அங்ஙனம் மெல்ல மாறிவிடும்.

பிறமொழி புகுதலை தடுத்து நிறுத்துகையில் தான் நம் மொழியின் வளம் மிகப் பெருகும். இது நமது தமிழுக்கென்று மட்டுமல்ல அவரவர் தாய்மொழிக்கும் பொருந்தும்.

வெறுமனே, ஒரு எண்ண பறிமாற்றம் தானே மொழி என்றெண்ணக்கூடாது. தகவலறிவிக்கத் தானே என்று விட்டுவிடலாகாது தமிழை நம்மால். மொழி தான் நிலத்தை பிரிக்கிறது என்பார் ஐயா கவிஞர் வைரமுத்து.

அங்ஙனம் நிலம் பிரிகையில் இனம் மாறிவிடுமோ எனும் நெடிய பதட்டம் இருக்கிறது. சான்றுகளை நாம் பல மாநிலப் பிரிவுகளின் வழியே கண்டுதான் வருகிறோம். அன்று நாம் சேர்ந்து கட்டிய நதியிலிருந்து வரும் தண்ணீரின்று மொழிவாரியாக பிரிக்கப்படுகிறது.

ஆக, இனம் மாறிக்கொண்டால் பழக்கவழக்கங்கள் சிதையும். அல்லாது, வெற்றிக் குவிப்புகள் இடம் மாறிவிடும். வரலாறு பிழையாக பிழையாக பேசப் புறப்பட்டு விடுவர் பலர். எண்ணற்ற குழப்பங்கள் மொழி திரிவதால் காலமாற்றங்களிடையே நிகழ்ந்துவிடும்.

எனவே மொழிமீது அக்கறை கொள்ளுங்கள். அவரவர் மொழிமீது அவரவர் அக்கறை கொள்ளுங்கள். தெலுங்கு பேச சந்தர்ப்பமோ, ஹிந்தி பேச சூழலோ, ஆங்கிலம் பேச கட்டாயமோ இருப்பின் அங்கே கசடற பேசுவோம். பேச பயிற்சி எடுப்போம்.

பல மொழி கற்றுக்கொள்வது பல மனிதர்களை புரிய அணுக ஏற்க மறுக்க வாதிட சொல்லித்தர வணிகம் செய்ய தேவைப்படும். பிற மொழிகளை கற்றல் என்பது திறனைக் கூட்டும். அவர்களின் பண்பாடு, வரலாறு உயர் குறிப்புகள் என அனைத்தையும் அறியலாம் தவறில்லை.

ஆனால் எவ்வாறு அம்மொழிகளைக் கற்று மிக நேர்த்தியாகப் பேசுகிறோமோ; அங்ஙனம் நம் மொழியையும் அதன் செழுமையோடு பேசுவதும் உச்சரிப்பதும் எழுதுவதும் பகிர்வதும் இன்றியமையாத ஒன்றாகும். எம்மொழியும் செறிவோடு பேசுகையில் கேட்கையில் அழகு தாம்.

ஆயினும் நமக்கு நமது தமிழ் மிகச் சிறப்பான ஒன்றாகும். மூப்பு நிறைந்த நமது மொழியை பிற மொழிகளைக் கலந்து சிதைப்பது நல்ல அறிவன்று. நீங்களே அதை தனித்து தமிழில் பேச பேச முற்றிலும் உணர்வீர்கள்.

எனவே முதலில் நேரம் சொல்வதில், வழி சொல்வதில், பெயரிடுவதில், தொழில் துவங்குவதிலிருந்து துவங்குங்கள். இவைகள் தான் இன்றைய முழுச் சான்றுகள் நாம் நமது அழகு தமிழை சிதைத்துவிட்டோம் என்பதற்கு.

எனவே அங்கிருந்து துவங்கி எங்கும் நிறைந்த மொழி யெம் தமிழை ஒரு தமிழரின் மரபு அறிய, மறம் உணர்த்த, மாண்பு நிலைக்க தூக்கி பிடித்திருப்போம். தவறில்லை. மெல்ல மெல்ல வெறியின்றி குழப்பம் விடுத்து தெள்ளு தமிழில் பேசி நமக்குள் நாம் மகிழ்வோமே உறவுகளே.

தவறாக எண்ணாதீர்கள், இதலாம் என் அறிவிற்கு பட்டது. எல்லாம் சரியென்றில்லை. பிற கருத்துக்களும் அமையலாம். அவரவர் கருத்தை நான் ஏற்க தயார் எனினும் தமிழ் நம் மூலம் என்பதை எல்லோருமே அறிகிறோம், பிறகதை அழகுற பேசுவதற்கு, பெயர் சூட்டுவதற்கு தமிழை எப்போதும் நம் இனியதொரு அடையாளமாக வைத்திருப்பதற்கு தயங்குவானேன்.

குறைந்த பட்சம் வீட்டில் பிறமொழி கலப்பின்றி பேச முயலுங்கள். நண்பர்களோடு உறவினர்களோடு அக்கம்பக்கம் பளசுகையில் தூய தமிழ்பேசி பழகுங்கள். குழந்தைகள் நம்மிடம் பேசுகையில், குழந்தைகளிடம் நாம் பேசுகையில், குழந்தைகள் பிறரிடம் பேசிப் புழங்குகையில் பிறமொழி கலவாமல் பேசச் சொல்லிக்கொடுங்கள்.

குழந்தைகள் நம் வரம். தமிழ் அவர்களுக்கு நாம் தரும் வரம். அதை உடைக்காது தருவோமே? எனக்கு நம்பிக்கையுண்டு; இப்போதெல்லாம் நம் மக்கள் மிக அறிவாக செறிவாக பாரம்பரியம் கெடாது வாழத்துவங்கி விட்டனர். எனவே தமிழையும் அழகாக உணர்வோடு சேர்த்து கலப்பின்றி பேசி மகிழ்வரென்று எனக்கு பெரிய நம்பிக்கையுண்டு.

என்றாலும் ஒன்று உண்மை. மொழி சார்ந்து நாமெல்லாம் சிந்திக்க பழகிவிட்டோம். இனி; நம் காதுகளில் பேசக்கேட்கும் பேசப்படும் தமிழும் மேலும் இனித்துவிடும் என்பது சத்தியம்.

அதற்கு நன்றி. வணக்கம். வாழ்க!!

வித்யாசாகர்
vidhyasagar1976@gmail.com

by Swathi   on 18 Jan 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
25-Jan-2019 02:49:15 இறையரசன்.பா. said : Report Abuse
தமிழ் ஆள வேண்டும் என்றால் தமிழ் பேச வேண்டும் என்று படைப்பாளர் வித்யாசாகர் கூறியுள்ளார். கலப்படம் என்பது மொழிக்கும் கேடே! பிற மொழிக் கலப்பின்றி நல்ல தமிழில் பேச முடியும்; பிற மொழிக்கலப்பிருந்தாலதான் பேச முடியும் என்னும் நிலையில் உள்ள மொழிகள் வேண்டுமானால் கடன் வாங்கலாம். இனிய நல்ல தூய தமிழ்ப் பெயர்கள் இருக்கும்போது பிற மொழிப் பெயர்கள் ஏன்? தமிழர்கள் தம் அடையாளத்தை இழக்காமல் இருக்கக் குழந்தைகளுக்குச் சூட்டும் நற்றமிழ்ப் பெயர்கள் உதவும். கம்போடியப் பெண்களின் பெயர்களில் பொன், மேகலை என்பன, அவர்களுக்கும் தமிழுக்கும் உள்ள மரபு இனத் தொடர்பை நிலைநாட்டுகிறது. தமிழ்ப் பெயர் சூட்டுவோம்; இன வரலாறும் பண்பாடும் காப்போம்!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.