LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

அமெரிக்காவில் சாதி தவிர்ப்போம் ..

-இலக்கியன்

அமெரிக்காவில் இந்தக் கட்டுரை எழுதவேண்டியதன் அவசியம் என்ன?   தமிழகமும், ஒட்டுமொத்த தமிழினமும் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டடத்தில் பயணித்து வருகிறது .. இதுவரை நம் அடையாளம், நம் மொழி, நம் இனத்தின் வளர்ச்சி என்று அனைத்தும் பல்வேறு தடைகளைச் சந்தித்து வந்த நிலை மாறி, இன்று தமிழ்ச் சமூகம் படித்து, பொருளாதாரத்தில் சிறிது வளர்ச்சியுற்று, நாம் யார், நம் அடையாளம் என்ன, வரலாறு என்ன? உலகை வழிநடத்திய நம் முன்னோர் அறிவும், சங்க இலக்கியம் காட்டும் நம் அறக் கோட்பாடுகளும் எங்கே மழுங்கடிக்கப்பட்டது? என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இன்று தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சாதி கடந்து  “தமிழர்கள்” என்ற ஒற்றை அடையாளத்துடன் நாம் கை கோர்த்து  நிற்பது நம் தமிழினத்தின் வளர்ச்சிக்கு அவசியமில்லையா? .

 

சாதி பாகுபாடு என்பது  நாம் உணர்வற்று, உரிமையற்று, ஒடுக்கப்பட்டு  இருந்த காலகட்டத்தில் நம்மீது திணிக்கப்பட்ட முறையாகும். சங்ககாலத்தில் சாதி இல்லை. தமிழர்களின் நாகரிகமும், பண்பாடும் ஓங்கி இருந்த காலகட்டத்தில் சாதி இல்லை. இடையில் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையான சாதியை இன்று படித்து, பகுத்தறிவு சிந்தனை பெற்ற, அறிவார்ந்த சமூகம்  தலையில் தூக்கி தொடரவேண்டுமா? தமிழினமாக நம்மை அடையாளம் காணவேண்டியது அவசியமில்லையா?

 

அமெரிக்காவில் இது குறித்து பேசவேண்டியது இன்றைய அவசியம் என்ற நிலை வரக் காரணம், அமெரிக்காவில் ஆங்காங்கே சாதிக்குழுக்கள் சந்திப்புகள்  நடத்துவதைக் காணும்போது, இது நம் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதா? என்று சிந்திக்கவேண்டிய  அவசியம் ஏற்படுகிறது. நன்கு படித்து முன்னேறிய நாம், தமிழகத்தில் உள்ள மக்களுக்கும், நம் குழந்தைகளுக்கும் ஒரு உதாரணமாக விளங்கி, அவர்களுக்கு வளமான தமிழ் வாழ்வியல் சூழலை உருவாக்கவேண்டியது அவசியமில்லையா?.  இது அமெரிக்காவில் நம் எதிர்கால வளர்ச்சிக்கு, தமிழர்களின் ஒற்றுமைக்குப் பயன்படுமா அல்லது இங்கும் நமக்குள் சிறு குழுக்களாக இயங்குவது அவசியமா என்பதை நாம் சிந்திக்கவேண்டும். இதுகுறித்து வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்படவேண்டும். இதன் தீமைகள், எதிர்கால விளைவுகள் குறித்து தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.

 

சாதிகள் இன்று நவீனப்படுத்தப்பட்டு,  இணையதளம், வாட்ஸ்சப் , முகநூல், நேரடி சந்திப்புகள், தன்னார்வ அமைப்பாகப் பதிவு செய்து இயங்குதல், சாதி சங்க தேர்தல்கள், சாதி சார்ந்த கலை நிகழ்வுகள் என்று அனைத்தும் அமெரிக்காவில் ஆங்காங்கே நடந்துவருவதை நாம் அறிவோம். தமிழ்ச்சங்க பொறுப்பில் இருக்கும்போது இவற்றின் நோக்கம், தேவை என்ன என்று அறிந்துகொள்ள முயன்றிருக்கிறேன் .  அவை பெரும்பாலும்,


1. அயலகத்தில் வசிக்கும் நமக்கு நம் சாதி மக்கள் ஒரு பாதுகாப்பு என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். பிறப்பு, இறப்பு மற்றும் அனைத்து வாழ்வியல் நிகழ்வுக்கும் அவர்களுக்குள் ஒரு குழுவாக, நெருக்கமாக,உணர்வுடன், உறவுகளாக உதவிக்கொள்ளப் பயன்படுவதாக நினைக்கிறார்கள்.

 

 2. திருமணம் செய்துகொள்ள, குழந்தைகளுக்குச் சரியான ஆண்-பெண் துணையைத் தேடுவது அமெரிக்காவில் சிக்கலாக இருப்பதாலும், இந்தியரலாதவர்களை மணந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், அதே சமூகத்தில் திருமணம் செய்துகொள்ள உதவுவதாக சிலர் நினைக்கிறார்கள்.

 

 3. சில சாதிக்கென்று சில வாழ்வியல் பழக்கவழக்கங்கள் இருப்பதால், அதை அப்படியே தமிழகத்தில் உள்ளதுபோல் இங்கும் சாமி கும்பிடுதல், சிறப்பு நாட்களில் பழக்கவழக்கங்களை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றிற்கு இந்தக் குழு பயன்படுவதாகக் கூறுகிறார்கள்.

 

 4. தீபாவளி, பொங்கல் சந்திப்புகள், பூங்காக்களில் சந்திப்புகள், நட்சத்திர விடுதிகளில் சந்திப்புகள் என்று பல சந்திப்புகள் தொடர்ந்து நடந்துவருவது தமிழகத்திலிருந்து விலகி வாழ்கிறோம் என்ற தனிமை வாழ்விலிருந்து விடுவிப்பதாகவும் ஒரு பார்வை இருக்கிறது. உறவுகள் அறுகில்  இல்லாத நிலையில் தங்களுக்கென்று ஒரு குழு இருப்பது வசதியாக உள்ளது என்றும் பார்க்கப்படுகிறது.

 

 5. தொழில் உதவி, வேலைதேடுதல், தாயகத்திலிருந்து பொருள்களை எடுத்துவர, ஆபத்துக் காலத்தில் உதவிக்கொள்ள உதவுகிறது என்ற பார்வையும் இருக்கிறது .


இவை ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்தால் இதற்கு சாதி என்ற ஒரு தனிக்குழுவாக இயங்கவேண்டிய தேவையில்லை என்பதும் “தமிழ்ச்சங்கம்” என்ற ஒரு மிகப்பெரிய அமைப்பு மூலம் “தமிழர்” என்ற ஒற்றுமையில் நம் வாழ்வியல் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்துகொள்ள முடியும் என்பதும் விளங்கும். இதைப் புரியவைக்க முயற்சிப்பதும், தமிழர் என்ற ஒன்றை அடையாளத்துடன் நாம் வாழவேண்டும் என்பதை வலியுறுத்துவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.   பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் அதிகம் வசிக்காத காலங்களில், தமிழர்களுக்கென்று வலுவான அமைப்புகளோ, பொருளாதார வசதியோ இல்லாத காலக்கட்டங்களில் இருந்த நிலை இன்று இல்லை.  இன்று தமிழ்ச்சங்கங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து மக்களின் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. அது தமிழர்களான ஒவ்வொருவரது சங்கம். நம் சக்தியையும், சிந்தனைகளையும், உங்கள் பகுதி தமிழ்ச்சங்கத்திற்கு வழங்குவது அதை மேலும் வலிமைப்படுத்தும். தமிழ்ச்சங்கங்கள் ஒரு ஆண்டிற்குக் குறைந்தது ஐந்து மிகப்பெரிய நிகழ்வுகளை நடத்திவருகிறது. பேரவை அமெரிக்கா முழுதும் உள்ள தமிழர்களுக்கு திருமணத் தொடர்பை ஏற்படுத்த பேரவை விழாவில் பல ஆண்டுகளாக நடத்திவருகிறது. இதைத் தமிழ்ச்சங்கங்களும் தங்கள் மாகாணங்களில் செய்யமுடியும். வாழ்வியல் உதவியாகட்டும், அல்லது தொழில் உதவி, வேலை, என்று அனைத்திற்கும் தன்னார்வக் குழுக்கள் அமைத்து தமிழ்ச்சங்கத்தின் ஒத்துழைப்புடன் செயல்பட முடியும். நூறு , இருநூறு பேர் என்றில்லாமல் ஆயிரம், இரண்டாயிரம் மக்களுடன் இணைந்து இந்த விடயங்களைச் செய்யமுடியும். உதவி பெற முடியும். நட்பு பாராட்ட முடியும். 


இன்றைய நிலையில் தமிழ்ச்சமூகம் சாதியை விட்டு வெளியில் வந்து நம் மொழி, இசை, மருத்துவம், வாழ்வியல் விழுமியங்கள், ஆன்மீகம் என்று அனைத்தையும் தூசு தட்டி, அதில் படிந்துள்ள படிமங்களை , மாசுகளை அகற்றி தமிழர் அடையாளத்தை மறுகட்டுமானம் செய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளது. நம் மொழியை ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிடமிருந்து காக்க மீண்டும் தனித்தமிழ் இயக்கம் தொடங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  இந்த காலக்கட்டத்தில் சிறு குழுக்களாகவோ, சாதி படிநிலைகளாகவோ இயங்குவது தமிழர்களுக்கு மீண்டும் ஒரு வரலாற்றுப் பின்னடைவைத் தரும். இன்று தமிழ் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகள் சாதியாக எதிர்கொள்ள முடியாது. தமிழராக மட்டுமே சந்தித்து வென்றெடுக்க முடியும்.


ஒரு சில சாதிகள் குழுக்களாக இயங்குவது அந்தச் சிந்தனை இல்லாத  மற்றவர்களையும் அதுகுறித்து சிந்திக்கத் தூண்டும், இது தவறில்லை என்ற சிந்தனையையும் உருவாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்ப்பள்ளிகளும், தமிழ்ச்சங்கங்களும் பூத்துக் குலுங்கும் இந்த காலகட்டத்தில், முழு நேர வேலையை பார்த்துக்கொண்டு, குழந்தை குடும்பத்தை பார்த்துக்கொண்டு, உருவாக்கியுள்ள தமிழ், தன்னார்வ அமைப்புகளை நடத்துவதற்கே நேரமில்லை, போதிய சக்தியில்லை என்ற நிலையில், இன்னொரு குழு, அவசியமா என்பதை சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது.


அவசர உதவிகள் முதல், அனைத்து தேவைகளுக்கும் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக இருப்பது நம் தமிழ்ச்சங்கங்கள், எத்தனையோ அவசர உதவிகளுக்கு நம் தூதரங்களை அணுகி பல உதவிகளை மக்களுக்கு தமிழ்ச்சங்கம் பெற்றுத்தருகிறது. இந்த நிலையில்,

 

சாதிகள் இல்லையடி பாப்பா;

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”  

 

என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து,

 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்  

நிற்க அதற்குத் தக 

 

என்பதை மனதில் நிறுத்தி,  நம் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு முன்னுதாரணமான  வாழ்வை  தமிழராக முன்னெடுப்போம். அமெரிக்காவில் சாதி தவிர்த்து  தமிழர்களாய், நம் மரபு போற்றும் வாழ்க்கையை வாழ்ந்து, ஏற்றத்தாழ்வுகளற்ற சமூககத்தை நமக்காகவும், நம் சந்ததிகளுக்காகவும் கட்டியமைப்போம்.


by Swathi   on 21 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக ஊர்களின் பெயர் காரணம் -  பகுதி 2 தமிழக ஊர்களின் பெயர் காரணம் - பகுதி 2
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.