ராயப்பேட்டை பகுதியில் திருட்டுத் தொழில் செய்து வரும் கூட்டாளிகள் தான் சூர்யா(மாசிலாமணி)வும், பிரேம்ஜி(ஜெட்டு)யும். ஒன்றாக சேர்ந்து திட்டம் தீட்டி எங்காவது ஏமாற்றி கொள்ளையடிப்பது தான் அவர்களின் முழுநேர தொழில். சின்ன சின்ன திருட்டால் திருப்தி அடையாத இவர்கள், அதிக பணத்தை விரும்பி, கஸ்டமஸ் அதிகாரிகள் போல் நடித்து கப்பலில் பணம் வைத்திருக்கும் ஒரு கும்பலிடம் சென்று பணத்தை எடுத்து வந்து விடுகிறார்கள்.
பணத்தை பறிகொடுத்த கும்பல், சூர்யாவை அடையாளம் கண்டுகொள்கிறது. அவன் கஸ்டம்ஸ் அதிகாரி இல்லை என்பதை அறிந்து, அவனை தேடி கண்டுபிடித்து, அவனிடமிருந்து பணத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதற்கிடையில், சூர்யா தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நயன்தாரா மீது காதல் வயப்படுகிறார். நயன்தாரா ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். அவரது வேலையை நிரந்தரம் செய்வதற்காக அவருக்கு 3 1/2 லட்சம் தேவைப்படுகிறது. இதனால் அந்த பணத்தை எப்படியாவது புரட்ட முடிவெடுக்கிறாள். ஒருகட்டத்தில் இதை தெரிந்துகொண்ட சூர்யா, அவளுக்கு உதவி செய்வதாக உறுதிகூறுகிறார். அப்போது, சூர்யாவின் காதலையும் நயன்தாரா ஏற்றுக்கொள்கிறார்.
இந்நிலையில், பணத்தை பறிகொடுத்த கும்பல் சூர்யாவை தேடி கண்டுபிடித்து, தங்கள் இடத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கிறார்கள். ஆனால், சூர்யாவோ தன்னிடம் பணம் இல்லை என்று அவர்களிடம் கூறுகிறார். கடைசியில், அந்த கும்பலிடம் சண்டை போட்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள். சண்டையின் முடிவில், கொள்ளையடித்த பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளாகி இவர்களது கார் சின்னாபின்னாமாகிறது. (அப்ப தான் கதையில ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட்டே வருகிறது).
இவர்களை துரத்தி வந்த கும்பல் சூர்யாவும், பிரேம்ஜியும் இறந்து விட்டதாக நினைந்து திரும்பி செல்கிறது. ஆனால் சூரியாவோ சாகவில்லை, விபத்தில், சூர்யாவுக்கு ஆவிகளைப் பார்த்துப் பேசும் அதிசய சக்தி வந்துவிடுகின்றது. அந்த சக்தியின் மூலமாக அவர் இறந்து போன தன் அப்பாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது தனது குடும்பத்தின் சோகப் பின்னணி தெரிய வர, அதன் பின்னர் சூர்யா செய்யும் அட்டகாசங்கள் தான் மாஸ் படத்தின் மீதி கதை..
சென்னை தமிழன், இலங்கை தமிழன் என இரண்டு வேடங்களில் கலக்கி இருக்கிறார் சூர்யா. படத்தில் கவரும் கதாபாத்திரம் யார் என்றால், அது இலங்கைத் தமிழ் பேசி வரும் சூர்யா(சக்தி) கதாபாத்திரம் தான்.
கதாநாயகியாக வரும் நயன்தாரா படத்தில் அப்ப அப்ப வந்து போகிறாரே தவிர பிரணித்தா வந்த அளவிற்கு கூட அழுத்தமான காட்சிகள் நம்ம நயன்தாராவுக்கு இல்லை..
ஹீரோயினுக்குப் பதிலாக சூர்யாவுடன் படம் முழுவதும் வருகிறார் பிரேம்ஜி.. பிரியாணியை விட இந்த படத்தில் பல காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்.
வழக்கமாக பார்த்திபன்.. ‘குண்டக்க மண்டக்க’ வசனங்களுடன், போலீஸ் கதாப்பாத்திரம் செய்திருக்கிறார். வில்லனாக சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், ஷரத் லோகிதாஸ்வா, ரியாஸ் கான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
இதில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரமும், வசனங்களும் அனைவரையும் கவரும். மொட்டை ராஜேந்திரன், கருணாஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோரும் இப்படத்தில் பேயாக நடித்துள்ளள்ளது படத்திற்கு மற்றொரு பலம் என்றே சொல்லலாம்.
யுவனின் இசையில் பாடல்களில் நான் அவள் இல்லை, பூச்சாண்டி, பிறவி போன்றவை ரசிக்கும் ரகம்.
மொத்தத்தில் மாஸ்... பிரியாணியை விட சூப்பர் பாஸ்...
- ரேவா
|