உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையத்தை தங்கு தடையின்றி பயன்படுத்தும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கிவரும் எம்டிஐஎப்(Media Development Investment Fund (MDIF)) என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை ஏற்படுத்த உள்ளது.
இதற்காக அந்த நிறுவனம் "அவுட்டர் நெட்" விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி இந்த வசதியை உருவாக்க உள்ளது. அவுட்டர் நெட் என்னும் ஒரு புது வகை இணைய வசதியை எம்டிஐஎப் கம்பெனியினர் உருவாக்கியுள்ளனர். இது தற்போது சோதனை நிலையில் உள்ளது. அதாவது "கியூப்ஸாட்" என்னும் சிறு சிறு விண்கலங்கள் விண்வெளிக்கு அனுப்பபட்டு கம்பியில்லா இணைய வசதியை தோற்றுவிக்கும். இதன் மூலம் உலகத்தின் எந்த மூலையிலும் இலவச இன்டெர்நெட் பெற முடியும்.
மேலும் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் இணைய இணைப்பு கொடுக்க வெறும் 100 சிறிய கியூப்ஸாட்கள் தான் தேவையாம். இதன் மூலம் பூமியில் உள்ள எந்தவொரு பகுதிக்கும் இணைய வசதி கிடைக்கும். இதில் எந்த தடங்கலும் இருக்காது .ஏன் எனில் இது ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அதிக செலவு,தடங்கல்களால் இன்று வரை அதிக மக்கள் இணைய இணைப்பு பெற இயலாமல் உள்ளனர். ஆனால்,இந்த சோதனை மட்டும் வெற்றி அடைந்தால் துணை கருவிகள் மூலம் எளிதாக நாம் இணைய வசதியை பெற முடியும்.
இந்த புதிய தொழில் நுட்பத்தை நிறுவுவதற்காக எம்டிஐஎப் நிறுவனம் இதற்கான வேலைகளில் விரைவாக ஈடுபட்டு வருகிறது. வரும் ஏப்ரலில் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்க உள்ளன.
|