பிறப்பும் படைப்புகளும்: ஆரூர் பாஸ்கர் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் திருவாரூர் மாவட்டத்திலேயே வளர்ந்தார். எனவே தன் பெயரையும் தன் ஊர்ப் பெயருடன் சேர்த்து ஆரூர் பாஸ்கர் எனச் சேர்த்துக் கொண்டார். தற்போது அமெரிக்காவில் ஃபிளோரிட மாகாணத்தில் வசித்து வருகிறார். இவரின் முதல் இலக்கியப் படைப்பு ‘என் ஜன்னல் வழிப் பார்வையில்’ என்ற கவிதைத் தொகுப்பு நூலே ஆகும். பிறகுப் பங்களா கொட்டா. வனநாயகன். இர்மா அந்த ஆறு நாட்கள் போன்ற புதினங்களையும் படைத்துள்ளார்.
அனைத்தையும் அறிய வைக்கும் அனுபவம்: தமிழராய் பிறந்த அனைவருக்குமே தமிழார்வம் உண்டு. ஆனால் தமிழராய் பிறந்த அனைவரும் இலக்கியங்களைப் படைப்பதில்லை. பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்கிறவர்கள் தொழில் ரீதியாகவும். பொருளாதார ரீதியாகவும். மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஒருத்தரே எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று விட முடியாது. ஆனால் தான் கண்ட அல்லது கேட்ட அல்லது அனுபவித்த அனுபவங்களைப் படைப்பாக மாற்றும் போது அதைப் படிக்கின்ற அனைவரும் அந்த அனுபவத்தைப் பெறுகிறார்கள். இவ்வாறாகத் திரு. ஆரூர் பாஸ்கர் சந்திக்க நேர்ந்த அனுபவங்களே அவரை எழுதும் படித் தூண்டியதாகக் கூறுகிறார். ஒருத்தர் வாழ்க்கையை இன்னொருத்தர் வாழ்ந்து விட முடியாது. ஆனால் அதை இலக்கியமாகப் படைக்கும் போது அனைவரும் அதைப் புதுமையான ஓர் அனுபவத்தைப் பெறுகின்றனர் என்கிறார் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்கள்.
கவிதையா. புதினமா? கவிதை என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு. உள்ள ஓட்டத்தை வார்த்தைகளாக வடிவம் கொடுப்பது கவிதை. திரு. ஆர் பாஸ்கர் அவர்கள் கவிதைகளில் தான் தனது முதல் பயணத்தைத் தொடங்கினார். இருப்பினும் புதினத்திலும் தடம் பதித்தார். எல்லா எழுத்தாளர்களுக்கு உள்ளேயும் ஓர் கவிஞன் வாழ்கிறான் என்கிறார் இவர். மேலும் தான் தன்னை கவிஞன் என்று கூறிக் கொள்வதையே பெருமையாகவும் கருதுகிறார் இது இவருக்கும் கவிதைக்குமான நெருக்கத்தைக் காட்டுகிறது.
வாசகர் வட்டம்: எந்த ஒரு எழுத்தாளனுக்கும் வாசகர் அளிக்கும் பின்னூட்டம் என்பது உற்சாக மருந்து போன்றது எனலாம். முந்தைய தலைமுறை பின்னூட்டத்தைக் கடிதம் போட்டுக் களிப்பைப் பகிர்ந்து கொண்டது. இணையத்தின் இந்த தலைமுறை புலனத்தில் புன்னகை செய்கிறது. ஆனால் இன்றைய தலைமுறையினரிடையே வாசிப்பு என்ற பழக்கம் மிக மிகக் குறைந்து விட்டது. ஆனால் படைப்பாளிகள் குறையவில்லை என்கிறார் இவர். படைப்பாளிகள் படைத்துக் கொண்டே இருக்கும் வரை தமிழுக்கு அழிவு இல்லை என்கிறார்.
சமூகப்பணி: திரு. ஆரூர் பாஸ்கர் அவர்கள் இலக்கிய பணி மட்டுமல்லாது சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார். சிறகுகள் கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பையும். தமிழ்ச்சரம் என்ற இணையதள அமைப்பையும் நிறுவிப் பல சமூகப்பணிகளைச் செய்து வருகிறார். ஒரு மனிதனுக்கு வாழ்வில் கடைசி நம்பிக்கையாக விளங்குவது படிப்பு மட்டுமே எனக் கூறும் இவர் படிப்பில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஊக்கத் தொகை வழங்கி வருகிறார். மேலும் வலைப்பூக்களின் வழி தமிழில் எழுதுவோரை ஊக்குவிக்க தமிழ்ச்சரம் என்ற மென்பொருளை நிர்வகித்து வருகிறார். ‘தமிழ் ஒரு உலகமொழி’ என்பதை மக்கள் அறியாமல் உள்ளனர். அதனை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால் தமிழ் சார்ந்த வளர்ச்சி பணிகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்.
பெற்றோரும் வாசிக்க வேண்டும்… இன்றைய தலைமுறையினரிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது. காரணம் கைப்பேசி அனைவர் கைகளிலும் தவழ்கிறது. எத்தனை சிறந்த மென்பொருட்கள் வந்தாலும் புத்தகங்கள் வாசிப்பே புதிய சிந்தனையைத் தூண்டும் என்கிறார் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்கள். வாசிப்பு பழக்கத்தில் பெற்றோர்களின் பங்கு மிக இன்றியமையாதது என்கிறார். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தைத் தூண்ட தாங்களும் அவர்கள் முன் புத்தக வாசிப்பைத் தொடங்க வேண்டும் என்கிறார்.
அமெரிக்காவில் தமிழார்வம்: அமெரிக்காவில் தமிழை விருப்ப மொழியாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவற்றினால் அதிகமாகும் தமிழார்வம் என்பது குறைவாகவேக் காணப்படுகிறது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அமெரிக்காவிலிருந்தாலும் தமிழ் வாசகர்கள் அமெரிக்காவில் குறைவாகவேக் காணப்படுவதாகத் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்கள் கூறுகிறார். இருப்பினும் வரவேற்பு உலகளாவியதாக் காணப்படுவதாகக் கூறுகிறார். தமிழர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களாக இருந்தாலும் தங்களுடைய குழந்தைகளுக்கு 5 வயது வரையாவது தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என இவர் கேட்டுக் கொள்கிறார்.
கல்வி முறை: தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக சி.பி.எஸ்... கல்விமுறை. ஆங்கில வழிக்கல்வி முறை. தமிழ் வழிக்கல்வி ஆகிய கல்வி முறைகளே காணப்படுகிறது. ஆனால் இன்று தமிழ் வழிக்கல்வியில் கற்போரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவு தமிழ்நாட்டில் நம்மை அறியாமலே தமிழ் படிக்கத் தெரியாத. தமிழ் பேசத் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில் தமிழார்வத்தைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடையேத் தூண்ட வேண்டும்.
வளர்ந்த வரும் எழுத்தாளர்கள்: இன்றையத் தலைமுறையில் படைப்பாளிகள் அதிகமாகக் காணப்படுகின்றனர். இலக்கியங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. தமிழ் நாட்டைக் காட்டிலும் ஈழத் தமிழர்களின் எழுத்து செழுமையாகக் காணப்படுவதாக இவர் கூறுகிறார். மறைந்த வார்த்தைகளையும் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார். இன்னும் 50 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ் மொழி இருக்கத் தான் போகிறது. எனவே வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் நம்பிக்கையைக் கைவிடாமல் படைப்புகளை அளித்துக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறார். மேலும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று சில குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் கூற முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த புத்தகங்கள் தமிழ் மொழியில் உள்ளன என்று கூறுகிறார்.
|