|
||||||||||
பண்பாடு |
||||||||||
தண்ணீரின் கதவுதனைத் திறந்து கொண்டு தன்தலையை மீன்களெல்லாம் காட்டல் போன்று கண்ணீரின் முகத்தோடே பெண்க ளின்று கதவுக்குப் பின்னாலே நின்று! நெஞ்சில் பன்னீரின் கனவுகளில் பார்க்க வந்தோன் பதிலுக்காய் ஏங்குகின்றாள்! அவனோ சொல்லில் பொன்னீரின் மேலெண்ணம் பதித்துப் பண்புப் பொற்கதவைத் திறக்காமல் மூடி கொண்டான் !
பெண்மனத்தில் நெருப்பள்ளிப் போட்டு வாயால் பேசுகின்றோம் பண்பாட்டுப் பாட்டு! சங்க வெண்பாட்டில் களவொழுக்கம் கற்பு என்ற வெளிப்பாட்டில் விலைபேசிப் பெண்ணைக் கேட்கும் பண்பாட்டைப் படித்ததுண்டா ? பெண்ணைப் பெற்றோர் படும்பாட்டை நினைத்தீரோ? திரும ணத்தைக் கண்ணிரண்டின் சங்கமத்தில் நடத்த லன்றிக் கண்ணீரில் நடத்துவதா நற்பண் பாடு !
கடல்நீரில் கலந்திருக்கும் உப்பு! பாட்டு கற்பனையில் கலந்திருக்கும்! நீயும் நானும் உடல்நீரில் கலந்திட்டோம் நெஞ்சில் அன்பாம் உயிர்நீரில் கலந்திட்டோம் என்றே சொல்லிக் குடித்தனத்தை நடத்திவந்த நாளில் பெண்ணின் உயிர்மூச்சு நின்றுவிட அடுத்த நாளே மடலவிழ்ந்த மற்றொருத்தி கையைப் பற்றி மனைவாழ்க்கை நடத்துதற்கே தொடங்கி விட்டான் !
கட்டிலிலே அணைத்திருந்த கணவன் காலன் கயிற்றாலே கதைமுடிந்த பின்னே நெற்றிப் பொட்டிழந்து கார்கூந்தல் பூவி ழந்து பொலிவிழந்த முகத்தோடா வாழ வேண்டும் ? எட்டிநின்றே இளமையினைத் தீய்க்க வேண்டும் எனும்மிந்தக் கொடுமையினை நாட்டி லின்றும் கட்டிவைத்தே பெண்ணடிமை பேணு கின்ற கயவர்காள் பண்பாடு இதுவா சொல்வீர்!
ஒருவனுக்கு ஒருத்தியெனும் உயர்பண் பாடு ஒருதலையாய்ப் போவதுவோ? மெய்யை நீக்கி எழுத்தெண்ணல் பாட்டுவிதி ! பாவை மெய்யை எண்ணாமல் போடுவதோ கைம்பெண் நீதி விருந்தளிக்கும் பண்பாட்டில் பருவத்தையேன் ஒதுக்கிவைக்க எண்ணவேண்டும் ! தவறு செய்ய இருட்பாதை திறப்பதுவோ? புதிய வாழ்வு இருவருக்கும் தருவதுவே நற்பண் பாடு !
போர்மீது ஆசைவைத்தார் வீரர்! நல்ல புகழ்மீது ஆசைவைத்தார் புலவர்! நன்செய் ஏர்மீது ஆசைவைத்தார் உழவர்! ஓங்க அறிவியலில் ஆசைவைத்தார் அறிஞர்! தொண்டர் ஊர்மீது ஆசைவைத்தார் ! இளைஞர் இன்று உதவாத நாகரீக மேலை நாட்டு சீர்மீது ஆசைவைத்தார் சீர ழந்தார் சிறப்பான பண்பாட்டை மறந்து நின்றார் !
உடல்மூடி உறுப்புகளின் உருவை மூடி முகம்மூடும் மஞ்சளினால் முறுவல் பூத்து நடைபயிலும் நற்பணியில் நடந்து வந்தால் நாமெல்லாம் கரம்கூப்பி வணங்கத் தோன்றும் இடைதெரிய இருபந்து மேல்கீழ் ஆட ஈர்க்கின்ற ஒப்பனையில் மேனி காட்ட உடையாதோ உள்ளந்தான் தவறு செய்ய உந்தாதோ ! தமிழ்பண்பை மறந்த தாலே !
இயல்விழித்தால் இலக்கியங்கள் தோன்றும் ! நூலின் இதழ்விரித்துப் படித்தால்தான் அறிவு தோன்றும் கயல்விழிக்கே ஏங்குகின்ற நெஞ்சில் நல்ல கல்விதனைத் தந்தால்தான் ஒழுக்கம் தோன்றும் வயல்விழிக்க உழைப்புதனைக் கூட்ட வேண்டும் வழிதவறித் தடுமாறும் இளைஞர் கூட்டப் புயல்விழிக்குப் பண்பாட்டுப் பக்கு வத்தைப் புகுத்திவிட்டால் புதுக்குமுகம் தோன்றி டாதோ !
குயில்கூவும் இடந்தன்னில் கூகை நின்றே குரலெடுத்தல் போலின்று யாழின் மேலாம் மயிற்றோகை மழலையர்வாய்த் தேனோ சையோ மம்மியென்னும் அவலத்தால் தமிழின் மேன்மை உயிர்பிரிந்த உடலாக மொழித னக்கு முதல்வாரா எழுத்தாகப் போன திங்கே தமிழ்மொழிதான் சாகுமென்றால் கட்டிக் காத்த தமிழ்ப்பண்பும் செத்துவிடும் அறிவீர் நன்றாய் !
தண்ணீரில் வாழ்கின்ற மீனோ அந்தத் தண்ணீரில் சாவதுபோல் தமிழும் சொந்த மண்ணினிலே தாழ்வதற்குத் தமிழன் தானே காரணமாய் நிற்கின்றான் ! பற்று இன்றேல் இன்தமிழும் இன்மையாகும் தமிழன் இல்லை இலக்கியங்கள் பேசுகின்ற பண்பா டில்லை எண்ணிடுவீர் எழுந்திடுவீர் தமிழைக் காக்க ஏற்றிடுவோம் தமிழ்பண்பை வாழ்வோம் நன்றாய் !
- பாவலர் கருமலைத்தமிழாழன் |
||||||||||
by Swathi on 24 Oct 2014 5 Comments | ||||||||||
Tags: Tamilar Panpadu Panpadu Panpadu Kavithai பண்பாடு பண்பாடு கவிதை தமிழர் பண்பாடு | ||||||||||
|
கருத்துகள் | |||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|