|
||||||||||
சங்ககாலமும் பெருங்கற்காலப் பண்பாடும் |
||||||||||
சங்க இலக்கியங்கள் கூறுகின்ற சமுதாய அமைப்பிற்கும், பெருங்கற்கால சமுதாயத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி ஆய்வு செய்வது இந்த ஆய்வின் நோக்கம். சங்க இலக்கியங்கள், தொல்லியல் களஆய்வுகள், அகழாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், சமூக மானிடவியல் கோட்பாடுகளை ஆதாராங்களாகக் கொண்டும், வரலாற்றியல் பொருள் முதல்வாத பார்வையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சங்ககால இலக்கியங்களில் உள்ள செய்திகளை தொல்லியல் ஆய்வுகளின் மூலம் ஒப்பு நோக்கும் போது பல புதிய விபரங்கள் வெளிபடுகின்றன. தமிழகத்தில் நாடோடி வாழக்கை, கால்நடைவளர்ப்பு, இனக்குழு வாழ்க்கை, வேளிர்களின் தோற்றம் போன்ற வளர்ச்சி நிலைகளைக் கடந்து அரசு உருவாக்கம் ஏற்பட்டது என்பதைப் பற்றிப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய மாற்றங்கள் அல்லது வளர்ச்சி நிலைகளின் எச்சங்கள் இலக்கியங்களிலும் தொல்லியல் சான்றுகளிலும் காணப்படுகின்றன. தொல்லியல் சான்றுகள் மிருகங்களுடன் மிருகங்கலாகக் காட்டில் திரிந்த கற்கால மக்கள் படிப்படியாக வளர்ந்து பெருங்கற்கால பண்பாட்டை அடைந்தனர் என்பது தற்போது செய்யப்பட்ட அகழாய்வுகள் உறுதிபடுத்துகின்றன. இதனால் தமிழகத் தொல்பழங்கால வரலாற்றில் கற்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம் ஆகியவற்றின் வளர்ச்சியடைந்த காலமே பெருங்கற்கால பண்பாடு என்பதும் இதனுடைய அடுத்த வளர்சியே தமிழர் நாகரிகம் என்பதும் உண்மை. பையம்பள்ளி. மல்லப்பாடி, மயிலாடும்பறை ஆகிய இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் நுண்கற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம் ஆகியன ஒரே இடத்தில் கிடைத்துள்ளன. இதைப் போன்று திருத்தங்கல் அகழாய்வில் நுண்கற்காலமும் அதைத் தொடர்ந்து புதிய கற்காலமும் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கற்காலத்திலிருந்து பெருங்கற்காலம் வரையில் தொடர்ச்சியான வளர்ச்சி கட்டங்கள் இருந்தன என்பதைத் தற்போது செய்யப்பட்டுள்ள அகழாய்வுகள் உறுதிபடுத்துகின்றன. குடியும் குடியமைப்பும் ஆதிச் சமுதாய அமைப்பில் இனக்குழுக்களின் அமைப்பே (Tribes) உலகெங்கும் உள்ள நாடுகளில் காணப்படுகின்றது. சங்க இலக்கியம் தமிழகத்தில் இருந்த இனக்குழுக்களைத் திணைகளின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளன. இவை இயற்கையமைப்பை அடிப்படையாகக் கொண்டவை. இப்பாகுபாடு மானிடவியல் மற்றும் சமூகவியல் விளக்கங்களுக்குப் பொருந்தி வருவதை இத்துறை அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். 'குடி' என்பது சமுதாயத்தின் அடிப்படைக் கூறு. இதனால் அக்குடி 'தொல்குடி' என்றும் அழைக்கப்பட்டது. சங்ககால தமிழகத்தில் குடிஆட்சி உடைந்து "வேளிர்"," வேந்தர் ஆட்சி“ உருவாகிக்கொண்டிருந்தது. இதனால் சங்க இலக்கியத்தில் குடிகளைப் பற்றிப் பல பாடல்களில் பாடப்பட்டுள்ளன. இவை சங்ககாலத்திலும் அதற்கு முன்பும் குடியமைப்புகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்ள உதவுகின்றன. பல சங்ககாலப் பாடல்கள் தன்னைக் சுற்றியிருந்த குடிகளை வென்று தலைவனாக மாறினான் என்பதைக் கூறுகின்றன. மேலும் பெண்கொடுத்து, பெண் வாங்குகின்ற முறையிலும் பல குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தன. இதிலும் வலிமை பொருந்தியக் குழு மற்றக் குழுக்களை ஆளும் அதிகாரம் பெற்றது. இனக்குழு அமைப்பாக இருந்ததால் தனிமனிதனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமல் குழுவிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது என்பதை குலக்குறியை முன்வைப்பதிலிருந்து தெரிகின்றது. பல குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணையும் போது ஒரு குடியிலுள்ள சில சிறப்பியல்புகள் மற்றக் குடிகள் எடுத்துக் கொள்கின்றன. இது ஒரு கலாச்சார பறிமாற்றம் என்றுக் கூறலாம். இத்தகையப் பறிமாற்றங்களால் பல புதிய தொழில் நுட்பங்கள் வளர்ந்தன அல்லது பெருகின. இதனால் நாடோடியாக இருந்த இனக்குழு மக்கள் பண்பாட்டு என்ற நிலைக்கு வளர்ந்தனர். பல இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்திருந்தன என்பதை பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்ளின் அமைப்பிலிருந்து தெரிந்துக் கொள்ளமுடிகின்றது. ஜவ்வாது மலையில் கீழ்செப்பிலி என்ற இடத்தில் சுமார் 300 பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் காணப்படுக்கின்றன. இக் கல்திட்டைகளை மூன்று வகைகள் காணப்படுகின்றன. முதல் வகைக் கல்லறை சிறிய கற்களை ஒன்றின் மீது ஒன்றை அடுக்கி, ஒரு பக்கம் நுழைவாயில் போன்று வாயில் விட்டு அதன் மேல் மூடுகல்லைக் கொண்டு மூடியுள்ளனர். பல சிறிய கல்லறைகளை உள்ளடக்கியப் பெரியக் கல்லறையாக இது கணப்படுகின்றது. இத்தகைய அமைப்பில் ஏழுக்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. இதனால் இதை ஒவ்வொன்றும் ஒரு குடியின் கல்லறையாகக் கொண்டால் ஏழு சகோதரக் குடிகள் இப்பகுதியில் இருந்தன என்று கொள்ளலாம். இவற்றில் ஒரு கல்லறை மட்டும் பெரிய அளவுடையதாக இருப்பதால் இதை இக்குழுவின் தலைமைக் குடியின் கல்லறையாகக் கொள்ளலாம். இரண்டாவது வகைக் கல்லறைகள் என்பது மூன்று பலகைக் கற்களை மூன்று பக்கங்களில் நிறுத்தி கிழக்குப் பக்கம் வாயில் போன்ற அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. இது மற்றொரு வகைக் கல்லறையாகும். இந்த அமைப்புடைய கல்லறைகள் மட்டும் தனிப் பகுதியில் காணப்படுகின்றன. இது மற்றொரு இனக்குழுவின் கல்லறையாகும். மூன்றாவது வகைக் கல்லறைகள் என்பது நான்கு பலகைக் கற்களை நான்கு பக்கங்களில் நிறுத்தி மூடு கல் ஒன்றைக் கொண்டு மூடி கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாயில் பகுதி என்பது இல்லை. இதற்குப் பதிலாக இடுதுளை கிழக்கு பக்கமுள்ள பலகைக் கல்லில் காணப்படுகின்றது. மூன்று வகையான இடுதுளைகள் இங்கு உள்ளன. வட்டம், 'U ' வடிவம், பானை வடிவம் ஆகிய மூன்று வடிவங்கள் மூன்று இனக்குழுக்களின் கல்லறைகளாக இருக்கலாம். ஆவிவழிபாடு தொல்பழங்காலத்தில் வாழ்ந்த இனக்குழு மக்களிடையில் பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டும் புனிதமானதாகக் கருதப்பட்ட நிகழ்வுகள் என்றும் இது வளமையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் நம்பினர். இனக்குழு சமுதாயத்தில் ஒருவர் உயிர் நீத்தால் அவருடைய உயிர் அல்லது ஆவி மட்டும் பிரிந்து செல்கின்றது என்றும், உடல் இங்குள்ளதால் அதை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் எண்ணம் தோன்றியதால், ஈமச்சின்னங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் புதிய கற்காலத்திற்குப் பின் வந்த பெருங்கற்கால சமுதாயத்தில் இந்த வழக்கம் முக்கியமான அங்கமாக வளர்ச்சி பெற்றது. தொல்பழங்கால மக்களிடையில் ஆவி வழிபாடு முதன்மையான வழிபாடாகக் கருதப்பட்டது. உலகிலுள்ள பல நாடுகளில் இந்த ஆவிவழிபாடு இருந்ததற்கானச் சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மானிடவில் ஆய்வாளர் எட்வர் பர்னட் டெய்லர் என்பவர் “சமயங்களின் தோற்றம் ஆவி வழிபாட்டிலிருந்து தோன்றியது" என்று கூறுகின்றார். இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு இதன் அடிப்படையில் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களும் உடல், உயிர் பற்றிப் பல பாடல்களில் பேசுகின்றன. புறநானூற்றுப் பாடல் ஒன்று கரந்தைப் போரில் உயிர் நீத்த வீரனின் உடலிலிருந்த ஆவிப் பிரிந்து சென்றது என்பதைப் பாம்பு தன் தோலை உரித்துவிட்டுச் செல்வது போன்று உடம்பை விட்டு ஆவி சென்றது என்றுக் கூறுகின்றது. பல சங்கப் பாடல்களில் வீரசுவர்க்கம், மேல் உலகம், மறுமை உலகம் போன்ற சொற்கள் கணப்படுகின்றன. நடுகல் என்பது வீரமரணம் எய்தியவர்களுக்கு எடுக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்றும், அதை வழிபடவேண்டும் என்றும், அதில் வீரனின் உருவமும், பீடும் எழுதியுள்ளன என்றும் புறநானூறு, தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை போன்றன கூறுகின்றன. உடல் அழியக்கூடியது. ஆவிஅழிவற்றது. உயிர் உடலைவிட்டுப் பிரிந்த பின்னர் இறப்பின்றி இருக்கும் போது அது உறைவதற்கு ஓர் இடம் வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கல்லறைகள் உருவாக்கப்பட்டன. இக்கல்லறைகள் பூமியின் கீழ்ப் பகுதியிலிருந்தாலும், மேல் பகுதியிலிருந்தாலும் ஆவி கல்லறையின் உட்பகுதியில் சென்று தங்குவதற்கும், சென்று வருவதற்கும் இடுதுளை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சில கல்லறைகளில் மூன்று பக்கங்கள் மூடப்பட்டு ஒரு புறம் மட்டும் திறந்த நிலையில் இடுதுளையாக அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் கல்லறையின் ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள கற்பலகையை உடைத்து இடுதுளை உருவாக்கப்பட்டது. பின்னர் கிழக்கு பக்கம் இடுதுளை இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை உருவானது. இதன் அடுத்த வளர்ச்சி நிலையாக பல வடிவங்களில் இடுதுளைகள் உருவாக்கப்பட்டன. வட்டம், “U" வடிவம், அம்புமுனை வடிவம், நீண்ட செவ்வகம், பானை வடிவம், சாவிதுவார வடிவம் போன்று பல வடிவங்களில் இடுதுளைகள் காணப்படுகின்றன. கல்லறையின் அமைப்பில் இடுதுளைக்கும், படையல் பொருட்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டன. கல்லறையிலுள்ள இடுதுளை, வாயில் பகுதி, முதல் கல்வட்டத்திலுள்ள இடுதுளை, இரண்டாம் கல்வட்டத்திலுள்ள இடுதுளை ஆகியன ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. பெரும்பாலன இடுதுளைகள் கிழக்கு நோக்கிக் காணப்படுகின்றன. இவை ஆவி வழிபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்புகின்றன. இரட்டைக் கல்லறை அல்லது மூன்று கல்லறைகள் உள்ளவற்றில் ஒவ்வொரு கல்லறைக்கும் தனித்தனியாக இடுதுளைகள் உள்ளன. அடுக்கு நிலைக் கல்லறைகளில் ஒரு கற்பலகையில் இரண்டு இடுதுளைகள் காணப்படுகின்றன. அதாவது அடுக்கு நிலைக் கல்லறையிலுள்ள அனைத்து இடுதுளைகளும் கிழக்குப் பக்கமுள்ள இடுதுளையுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது அதன் நோக்கம். இதனால் கிழக்குப் பக்கம் வாயிலிலுள்ள இடுதுளை வழியாகக் சென்றால் கல்லறையிலுள்ள எல்லா அறைகளுக்கும் செல்லும் அமைப்பில் இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வீடுகளில் மையவாசல் வழியாகச் சென்றால் எல்லா அறைகளுக்கும் செல்லுமாறு வாயில்கள் அமைக்கப்படுவது போன்று இதுவும் அமைந்துள்ளது. இதனால் இடுதுளை என்பது ஆவி கல்லறையின் உள்ளே சென்று வருவதற்காக அமைக்கப்பட்டது என்பது தெளிவு. கடவுள் வழிபாடு என்பது "ஆவி வழிபாடு" என்ற நிலையிலிருந்து வளர்ந்து "பல கடவுள் வழிபாடாக" மாறியது. பல கடவுள் வழிபாடு என்ற நிலை மேலும் வளர்ந்து "ஒரு கடவுள் வழிபாடு" என்ற முப்படிவரிசையில் ஒரு நேர்கோட்டில் மாற்றம் பெற்றது என்பது மானிடவில் ஆய்வாளர் எட்வர் பர்னட் டெய்லரின் ஒரு வழிப்படிமலர்ச்சிக் (Unilinear evoulution) கோட்பாடாகும். தென்னிந்தியக் தெய்வங்களைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட டபிள்யூ. டி. எல்மோர் என்பவர் இறந்தவர்களின் ஆவியே திராவிடத் தெய்வங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். மேற்கண்ட ஆய்வுகளையும், தொல்லியல் அகழாய்வுகளையும் இணைத்து நோக்கும் போது முன்னோர் வழிபாடே ஆவி வழிபாடாக மாறியது என்பதும் இந்த வழிபாடே பின்னர் கிராம தெய்வ வழிபாடாகவும், சிறு தெய்வ வழிபாடாகவும் வளர்ந்தது என்பதும் புலப்படும். தாய்த்தெய்வ வழிபாடு: இனக்குழு சமுதாயத்தில் அவர்களின் உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகளின் அடிப்படையில் தெய்வ நம்பிக்கைகள் உருவானது. தொல்பழங்காலத்தில் இயற்கையின் சீற்றத்தினைக் கண்டு அஞ்சி வழிபட்டனர். இனக்குழு அமைப்பாக மாறிய போது வளமை, இனவிருத்தி போன்றன பெருகியதால் சடங்குகள் உருவாக்கப்பட்டன. சமுதாயத்தின் அமைப்புமுறை, கால்நடை வளர்ப்பு போன்றன வளர்ந்ததால் தெய்வ வழிபாட்டில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய மாற்றங்களால் பெருங்கற்காலத்தில் (இரும்புக் காலம்) ஆவி வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு, குலக்குறிவழிபாடு போன்றனவும் இவற்றிற்கான சடங்குகளும் உருவாக்கப்பட்டன. இவற்றில் தாய்த்தெயவ வழிபாடு குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியத்தில் தாய்த்தெயவ வழிபாடு பரவலாகப் பேசப்படுகின்றது. ஆண் தெய்வங்களைக் காட்டிலும் பெண் தெய்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் பெண்தெய்வங்கள் அரமகளீர், தேவப் பெண்கள், பாவை, கொல்லிப் பாவை, அணங்கு, கொற்றவை, பழையோள் போன்று பல பெயர்களில் பேசப்படுகின்றன. ஆற்றல் வாய்ந்த செயல்கள் அனைத்தும் பெண் தெய்வமான அணங்குடன் இணைத்தனர். முருகனை 'அணங்குடை முருகன் கோட்டம்', என்றும் மழையை 'மழை யணங்கு' என்றும் இலக்கைத் தாக்கும் அம்பை 'அணங்குடை பகழி' என்றும் அரச கட்டிலை 'அணங்குடை கட்டில்’ என்றும் போர்முரசை ‘அணங்குடை முரசு ' என்றும் போர்க்களத்தை 'அணங்கரும் பறந்தலை' என்றும் வீட்டு நிலையை 'அணங்குடை நெடுநிலை' என்றும் எல்லாவற்றையும் பெண் தெய்வத்தின் வடிவத்தில் பார்த்தனர். மனத இனவிருத்தியின் இரகசியம் தெரியாத காலத்தில் பெண் இனவிருத்தியின் தெய்வம் என்று முதன்மைபடுத்தப்பட்டாள். பூமியில் உயிருள்ளவை, உயிர் அற்றவை ஆகிய இரண்டிற்கும் தாய் "ஜகன்மாதா" அல்லது ஒரே தாய் என்ற நம்பிக்கை இதை இடிப்படையாக்க் கொண்டு உருவானது. தமிழகத்தில் மட்டுமின்றி உலகிலுள்ள பல நாடுகளிலும் இத்தகைய நிலையே இருந்தது. பயிர்த் தொழில் வளர்ச்சியடைந்த காலத்தில் சமுதாயத்தின் வளமைக்கு பூமியே கருபொருளாகக் கருதப்பட்டது. இதனால் பெண்ணையும் மண்ணையும் ஒன்றாகக் கருதினர். பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டிலும் பெண் முக்கியமான பங்கு வகிக்கின்றாள். அதனால் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் முதன்முதலில் பெண் தெயவச் சிற்பங்கள் நடப்பட்டன. வடஆர்க்காடு மாவட்டத்தில் மோட்டூர் மற்றும் உடையா நத்தம் ஆகிய இடங்களில் மனித சாயல் கொண்ட கற்சிற்பங்கள் நடப்பட்டுள்ளன. இவை ஸ்ரீவத்சத்தைப் போன்ற அமைப்புடையனவாக உள்ளன. இதை ஆதித் தாய்த் தெய்வம் என்று கருதுகின்றனர். தாழி வகையைச் சார்ந்த ஈமச்சின்னங்கள் பெண் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை, கோவை, கரூர், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கண்டெக்கப்பட்ட தாழிகளில் பெண்ணின் உருவம் உருவகப் படுத்தப்பட்டுள்ளன. பெண்ணை தாழியாகப் பாவித்து இவை உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு தாழிகள் ஒன்றில் தாழியின் மேல்பகுதியில் பெண்ணின் மார்பகங்கள் இரண்டு காட்டப்பட்டுள்ளன. இதன் கீழ்ப்பகுதியில் மூன்று கோடுகள் தாழியின் கீழ்ப் பகுதி வரை செல்கின்றன. இது தாழியை பெண்ணின் உருவமாகக் காட்ட முற்பட்டச் செயலின் வெளிபாடாகும். மற்றொரு தாழியின் மேல் பகுதியில் நின்ற நிலையில் ஒரு தாய்த் தெய்வமும் அதன் அருகில் கம்பு அல்லது கரும்பு போன்ற செடி ஒன்றும், அதன் மேல் கொக்கு ஒன்று அமர்ந்த நிலையிலும், இவற்றின் இடது பக்கத்தில் மான் ஒன்றும், அதன் கீழ்ப் பகுதயில் உடும்பு ஒன்றும் புடைப்பு உருவங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இவை இனவிருத்தியின் எச்சம் என்பது தெளிவு. தற்போது ஆந்திர மாநிலத்தில் கோதாவரிக்கு அருகிலும், கம்மம் மாவட்டத்திற்கு அருகிலும் மூன்று தாய்த்தெய்வ உருவங்கள் பெருங்கற்காலச் சின்னங்களில் கண்டெக்கப்பட்டுள்ளன. குத்துக்கல் வடிவத்திலுள்ள அக் கல்லில் பெண்ணின் மார்பகங்கள் இரண்டு புடைப்புச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. மற்ற இரண்டு குத்துக்கற்களின் மேல் பகுதியில் இரண்டு பள்ளங்களும், கீழ்ப்பகுதியில் ஒரு பள்ளமும் காணப்படுகின்றன. இவை பெண்ணின் உருவங்கள் என்று தொல்லியல் ஆய்வாளர் கே.பி. ராவ் அவர்கள் கூறுகிறார். மேற்கண்டவற்றால் பெருங்கற்கால ஈமச் சின்னங்களுக்கும் தாய்த்தெய்வத்திற்கும் தொடர்பு உள்ளது என்பது தெளிவாகின்றது. இதனால் பிறப்பும், இறப்பும் பெண்தொய்வத்துடன் தொடர்பு படுத்தப்பட்டன. இதிலிருந்து பெருங்கற்கால சமுதாயத்தில் இறந்த மனிதனின் ஆவிக்கு மறுபிறவி உண்டென்ற நம்பிக்கையும், இதற்காக மீண்டும் பிறந்த இடமான தாய்த்தெய்வத்தை ஆவி சென்றடையும் என்ற நம்பிக்கையும் வளர்ந்தன என்பது தெளிவாகின்றது. இதனுடைய வளர்ச்சி நிலையாக பிறந்த மனிதன் வளர்ந்து, இறந்த பின் மீண்டும் பிறந்த இடத்திற்கே செல்கிறார். அங்கிருந்து மீண்டும் மறுபிறவி எடுக்கின்றார் என்ற பிற்காலத் தத்துவத்தின் தொடக்கம் பெருங்கற்காலத்தில் உருவானது என்று கூறலாம். கட்டடக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும் பெருங்கற்காலச் சமுதாயத்தில் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் தொடங்கியது என்றால் அது மிகையாகாது. கற்கால மக்கள் இயற்கையாகக் கிடைத்தக் கற்களைத் தட்டிச் சில்லுகளை உடைத்துக் கற்களுக்கு உருவம் கொடுத்தக் காலத்தில் அல்லது கற்கருவிகளாக உருவாக்கிய போதே சிற்பக்கலை தொடங்கிவிட்டது என்று கூறலாம். ஆனால் சிற்பக்கலை என்ற வளர்ச்சி அக்காலத்தில் இல்லை என்றாலும் கற்களைக் கொண்டு ஒரு வகையான உருவத்தினை செய்யும் நுட்பம் தெரிந்திருந்தனர் எனலாம். புதியகற்கால மக்கள் கற்களைக் கொண்டு வீடுகளைக் கட்டினர். மரக் கம்புகளை நட்டு அதன் மேல் புல்லால் கூரை வேய்ந்தனர். மூங்கிலைப் பிண்ணி, அதன் மேல் சாம்பல் கலந்த மண்ணைப் பூசி சுவராகப் பயன்படுத்தினர். இவ்வாறு வீடுகளைக் கட்டத் தெரிந்தக் காலமே கட்டடக் கலையின் தோற்றம் அல்லது தொடக்கம் என்று கூறலாம். இத்தகைய சுவரைக் கொண்டுள்ள வீடுகளை இன்றும் பல மலை வாழ் மக்களின் ஊர்களில் காணலாம். புறநானூற்றுப் பாடலில் 'புல் வேய் குரம்பைக் குடிதொறும்' என்பதிலிருந்து புல்லால் வேய்ந்த சிறிய குடியிருப்புகள் இருந்தன என்றும், மலைப்படுகாடமில் அகன்ற ஊரில் கழிகளை நிறுத்தி புல் வேய்ந்த குசைகள் இருக்கும் பகுதி என்றும் வருகின்றன. ஊரைப் பற்றிக் குறிப்பிடும் போது சிற்றூர், பேரூர், மூதூர் போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் இருப்பதைக் காணமுடிகின்றது. ஊர் இருக்கைகளைக் குறிப்பிடும் போது மற்றவற்றைக் காட்டிலும் நகர் என்ற சொல் அதிக அளவில் இடம் பொற்றுள்ளது. மணிமேகலையில் மகதநாட்டு கைவினைஞரும், மராட்டிய நாட்டு கம்மாளரும், அவந்தி நாட்டுக் கொல்லரும், யவன நாட்டுத் தச்சரும், தமிழ் நாட்டு கைவினைஞரும் இணைந்து கட்டியக் கட்டடங்களைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. மாளிகைகள், மண்டபங்கள், மதில்கள் போனறன கட்டப்பட்டிருந்தன என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. பெருங்கற்கால மக்கள் வாழ்விடங்களைக் காட்டிலும் ஈமச்சின்னங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளனர். தரையில் குழியைத் தோண்டி, நான்கு பக்கங்களில் நான்கு பலகைக் கற்களை நிறுத்தி, அடிப்பகுதியிலும், மேல் பகுதியிலும் ஒவ்வொரு பலகைக் கல்லை வைத்துக் கல்லறை உருவாக்கப்பட்டது. பலகைக் கற்கள் சாயாமல் இருக்க தாங்கும் கற்கள், தாங்கு சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒரு பலகைக் கல்லை மற்றொரு பலகைக் கல்லுடன் இணைத்தது 'ஸ்வஸ்திக்' அமைப்புடைய கல்லறைகளும் உருவாக்கப்பட்டன. இரட்டைக் கல்லறை, கல்லறையச் சுற்றிலும் கற்களை வட்டவடிவில் நிறுத்தியுள்ள அமைப்பு போன்றன கட்டடக்கலையின் தொடக்கமாக் கூறலாம். பரந்த பாறையின் மேல் பலகைக் கற்களை 'ஸ்வஸ்திக்' அமைப்பில் நிறுத்தி கல்லறை உருவாக்கப்பட்டது. இதைச் சுற்றிலும் பலகைக் கற்களை நிறுத்தி, அவை சாய்ந்துவிடமால் இருக்க சிறியக் கற்களை அடுக்கி சுவர் எழுப்பப்பட்டது. இரண்டு கல் வட்டங்கள் ஒன்றையடுத்து ஒன்று வட்டவடிவில் அமைக்கப்பட்டன. இரட்டைக் கல்லறை, கல்லறையச் சுற்றிலும் கற்களை வட்டவடிவில் நிறுத்தியுள்ள அமைப்பு போன்றன கட்டடக்கலையின் தொடக்கமாக் கூறலாம். கல்லறையிலுள்ள இடுதுளை, அதன் முன்னுள்ள வாயில், அதற்கு முன்னர் உள்ள முதல் கல்வட்டம், அதையடுத்துள்ள இரண்டாம் கல்வட்டம் ஆகியவற்றிலுள்ள இடுதுளைகள் ஒரே நேர்கோட்டிலும், கிழக்கு நோக்கியும் காணப்படுகின்றன. இவை தற்போதைய கோயில்களின் அமைப்பை ஒத்திருக்கின்றன என்று கூறலாம். கோயில்கள் இதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன என்றால் அது மிகையாகாது. மேலும் பெளத்த ஸ்தூபிகளும் வட்டவடிவில் உள்ளன என்பது குறிப்பிதக்கது.
நன்றி : முனைவர் தி. சுப்பிரமணியன் |
||||||||||
by Swathi on 19 Nov 2014 0 Comments | ||||||||||
Tags: Sanga Kaalam Panpaadu சங்ககாலம் பண்பாடு தெய்வ வழிபாடு ஆவிவழிபாடு | ||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|